Wednesday, July 22, 2009

நான் சொன்ன பிறந்தநாள் வாழ்த்து













எனக்காகப் பிறந்தவளே!
எனக்குள்ளே இருப்பவளே!

உனக்கு மட்டும் ஏனடி
இத்தனை பளபளப்பு?
உனக்கு வாழ்த்து சொல்ல ஏனடி
இத்தனை குறுகுறுப்பு?

நீ பிறந்த இந்நாளின்
பிரகாசத்தினால் வருடத்தின்
மற்ற 364 நாட்களும்
மறைக்கப்பட்டு விட்டன!

நான் நினைக்கிறேன் -
உன்னைப் படைத்த அன்று மட்டும்
அந்த பிரம்மன் ஓவர் டைம்
செய்து இருப்பான் என்று!

நீ

பிறந்த நாள் துணி எடுக்க
கடைக்குச் செல்லும்போது
வேண்டாமென்று சொல்லவாவது - நீ
தம்மைத் தொட்டு தூக்க மாட்டாயா என்று
துணிகள் எல்லாமே ஏங்குகின்றன..

நீ

தம் பக்கம் திரும்பப் போவதில்லையே
என்ற ஏக்கத்தில் - தம்
பிறப்பை எண்ணி எண்ணி
நொந்து கொள்கின்றன -
ஜென்ட்ஸ் வாட்சுகள்.....

தாம் தேய்ந்து விட்டால் - உன்
கால்களை விட்டுப் பிரிய வேண்டுமே என்றெண்ணி
தேயாமலே நடக்கின்றன
உன் கால் செருப்புக்கள்!

நீ

வளைஎடுக்க கடைக்குச் செல்லும்போது
உன் கை அளவு சேரா வளையல் எல்லாம்
ஏக்கப் பெருமூச்சுடன்
வெளிநடப்பு செய்கின்றன.....

உனக்கு மெலிதான சங்கிலிதான் பிடிக்குமென்பதால்
தமக்கு சேதாரம் ஆனாலும் பரவாயில்லை என்று
தம்மைத் தாமே தேய்த்துக் கொள்கின்றன -
தடிமனான சங்கிலிகள்.....

இப்படி உயிரற்ற பொருட்கள் கூட
உன்னால் உயிர் பெறும்போது -
உயிருள்ள நான் எம்மாத்திரம்?

என்னால் முடிந்தது -

ஹாப்பி பர்த் டே.......

அன்புடன்

ஈ. ரா

பி. கு.: இது ஏதோஉணர்ச்சி வசப்பட்டு எழுதியது... எனவே இதைப் படித்து விட்டு பந்தா காட்டவோ, பிகு பண்ணவோ வேண்டாமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்!

Wednesday, July 15, 2009

கல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்



















வெள்ளைக் கதருக்குள்
கறுப்பாய்
ஒரு
பச்சைத் தமிழன் .

நீ
கல்விச்சாலையில்
கற்றது கைமண் அளவு
ஆனால்
கல்வி சாதனையில்
கடந்தது கடல் அளவு.

விருது நகரின் விழுது
வெள்ளந்தி மனது.

நீ
சம்சாரக் கடலில்
மூழ்காத
கட்டைப் பிரம்மச்சாரி.
உன்னிடம்
பந்தமும் இல்லை
பந்தாவும் இல்லை.

நீ
ஏழைக் குழந்தைகளுக்குக்
கூட்டானவன்
ஆனால்
ஏட்டுச் சுரைக்காய்களுக்கு
வேட்டானவன்.

பலமான அணைகளைப்
பரிசாகத் தந்தவன் - பல
பாலங்கள் கட்டத்
தானே
பாலமாய் இருந்தவன்.


அறம் பேசிய
உன் வாய்
புறம் பேசியதில்லை
அடுக்கு மொழி தெரியா
உன் நாக்கு என்றும்
தடம் புரண்டதில்லை.

வெட்டும் துண்டும் உன்
வார்த்தையில் மட்டும்தான்
வாழ்க்கையில் இல்லை.

நீ செவிக்கும் வயிற்றுக்கும்
சேர்ந்தே ஈய்ந்தவன்
சமுக நீதிக்கே
சருகாய்த் தேய்ந்தவன்.

உன்னிடம்
வார்த்தை ஜாலமும் கிடையாது
உனக்கு
வாரி சுருட்டவும் தெரியாது.

நீ
விடியலுக்கு வித்து
கல்விக் கதிரவன்
என்பதைக்
காலத்தே கண்ட
தொலை நோக்கி.

நீ
கையூட்டு பெறும்
அரசியல்வாதிகள்
தொடக்கூடாத
கையேடு.

நீ
நான்கு வேட்டி மட்டுமே
சொத்தாய்க் கொண்ட
நல்லவன்
நாடாளும் வித்தையில்
கரை கண்ட
வல்லவன்.

நீ
ஒரு நாளும்
தலை தாழ்ந்ததில்லை
அதனால்தானோ என்னவோ
உம்மைத் தோற்கடித்த நாங்கள்
இன்னமும்
தலை நிமிரவே இல்லை !!

Tuesday, July 7, 2009

எனது திருமணத்தை வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி..
















இறையருள் கூடித் தமிழுடன் கலந்து
உயிர் மெய்யாகி உலகை ரசித்திட
அன்பு என்னும் ஆய்தம் ஏந்தி
அடியவர் நங்கள் அடிஎடுக்கிறோம்!
தளிர் நடை பயிலும் சிறியவர் எம்தம்
பிழைகளை எல்லாம் மழலையாய் கொள்வீர்!

நாங்கள் -

குறுகிய எண்ணம் எனும் குறில் தவிர்த்து
அறத்திலும் திறத்திலும் நெடிலாய் நிமிர்ந்திட
ஒற்றும் குற்றும் ஒதுக்கியே தள்ளி
இரட்டைக் கிளவியாய் என்றும் வாழ்ந்திட
வையத்தில் உயர் உத்தமர் நும் தம்
வாழ்த்தினை எமக்குத் துணையாய்த் தருவீர் !

உணர்வும் ஆக்கமும்

மகா - ஈ ரா