Friday, August 14, 2009

சும்மாவா கிடைத்தது சுதந்திரம்? (பகுதி 3)


ஒரு நாளில் கிடைத்ததா
உன்னத சுதந்திரம்?
இல்லை நண்பா ..
இதற்காக நாம் இழந்தது
இரண்டு நூற்றண்டுக்கும் மேல்!

வலிமையால் மட்டுமல்ல
பலர் அனுபவித்த
வலியால் வந்த
விடுதலை இது !

இவர்களின்
இரத்தமே பாசனமானதால்
செம்மண்ணான
சமவெளிகள் ஏராளம் !

அவர்கள் இழந்த
மூச்சினால் தான்
நம்மால் இன்று
சுதந்திரக் காற்றைச்
சுவாசிக்க முடிகிறது !

நண்பர்களே
நாம் இனி எந்த
அந்நிய ஆதிக்கத்துக்கும்
அடிபணியத் தேவையில்லை !
எந்த அந்நியருக்குமெதிராக
கொடிபிடிக்கத் தேவையில்லை !

ஆனால் இன்றோ -
செம்மல்கள் வாங்கித் தந்த
சுதந்திரம்
செம்மறிகளிடம்!

உயிரையும் உடைமையும்
தியாகம் செய்தவர்களின்
வாரிசுகள்
இருக்குமிடம் தெரியாது !
ஆனால்
உண்டு கொழுத்த
ஊழல் பெருச்சாளிகள்
ஊர்வலமாய் !

அரசியல் மட்டுமல்ல
அதிகார வர்க்கமும் -
அன்னியரைக் காட்டிலும்
அந்நியமாய் !

கடமையைச் செய்யவே
கையூட்டு கேட்கும்
அற்ப அரசியல்
ஆலவிருட்சமாய் !

நேர்மையும் - கடமையும்
கூட்டு நுண் நோக்கியில்
மட்டுமே
காணத்தக்க அதிசயமாய் !

ஜன நாயகம்
பண நாயகமாகிப்
பல ஆண்டுகள் கழிந்து
பாமரன்
இன்னமும் பட்டினியில் !

புரியாத புள்ளி விவரங்கள்
புயல் போன்ற இலவசங்களால்
மறைக்கப்படுகின்றன !

தொலைநோக்கு இல்லா
தலைவர்கள் பின்னே
தொண்டர்கள் பல கோடி !

இந்நிலை மாறும் நாள்
என்னாளோ -
அந்நாள்தான்
பொக்கைக் கிழவரின்
புன்னகைச் சிரிப்பைப்
புதிதாய்க்
காணும் நாள் !

அந்நாள் தான்
அதர்மம் அடியோடு அழிந்து
தர்மம் தலையெடுக்கும்
தளிர் நாள் !
தன்னலமற்ற வழியில்
அணிவகுக்கும்
அருமை நாள் !

வேறுபாடு தொலைக்கும்
விடியல் நாள் !
சிங்க நாதம் முழங்கப் போகும்
சரித்திரப் பொன்னாள் !

நண்பர்களே -
நாம்தான் இத்தேசத்தை
தாங்க வேண்டிய
தூண்கள் !
இப்பாரத நாட்டின்
அஸ்திவாரம் மிகப்
பலமானது !
காலத்தால் வந்த
கரையான்கள்
கரைந்து போகும் நாள்
வெகு தொலைவில் இல்லை !

அந்நாளை நோக்கி
நடை கொள்வோம் !
அதற்கெதிரான
தடை வெல்வோம் !

மனதில் உறுதி கொள்வோம்
மறு வாழ்வு பெறுவோம்!
வாழ்க பாரதம் !
வாழ்க வையகம் !


(நிறைந்தது )
படங்கள் : இணையம்

Tuesday, August 11, 2009

சும்மாவா கிடைத்தது சுதந்திரம்?(பகுதி 2)

















இன்னோர் இடம் !

அங்கே ஓர்
தனவந்தர் ....
குணவந்தரும் கூட !

அவருக்குச் சொந்தமாய்
உண்டு
அலை ஏறும் கப்பல்கள்
ரெண்டு !

அவரால் அன்னியர்க்கு
மிக நட்டம் !
அதனால் போட்டார்கள்
ஒரு திட்டம் !

சேர்ந்து வியாபாரம் செய்ய
பேரம் பேசினர் !
அவரோ
தேய்ந்து போயினும்
தீவழி மறுத்தனர் !

அந்நியருடன்
வாணிபமும் செய்வதற்கில்லை
அற வழியிலிருந்து
அணு அளவும் நகர்வதுமில்லை என
சூளுரைத்தார் சொக்கத்தங்கம் !

கூடியது உதவாக்கரை
கோர்ட்டு !
இந்த தமிழனுக்கு
என்ன நெஞ்சழுத்தம் !
நமக்குப் போட்டியாக
இவன் கப்பல் விடுவதா ?

"அடையுங்கள் சிறையில் ! - அவன்
மனம் திருந்தும் வரையில் ! "
என்று கர்ஜிக்கிறான்
பரங்கி அநீதிபதி!

நம் தமிழரோ துவளவில்லை!
தீர்ப்பு கேட்டு அழுகவில்லை !
சிரித்துக் கொண்டே
சென்றார் சிறைக்கு - சின்னஞ்
சிறிய அறைக்கு !

கோடானு கோடி சொத்துக்களின்
கோமான் -
சீமையிலே கப்பல் விட்ட
சீமான் -
சிறையிலே கிடந்தார் ! - இருட்டு
அறையிலே இருந்தார்!

அத்துடன் நின்றதா
ஆணவக்காரர்களின் கொட்டம்?
இல்லை ! - இல்லவே இல்லை !
மாடு இழுக்கும்
செக்கைப் பார்த்தார்கள்!
இதை
மனிதன் இழுத்தால் என்ன என்று
மனதிலே நினைத்தார்கள்!

கூப்பிடு அவனை என்றார்கள் !
குனிந்து நிற்கச் சொன்னார்கள் !
நெஞ்சிலே உரத்துடன்
நின்றார் நம் தமிழர்!

மாணிக்கம் போன்ற மேதையை
மாடு போலப் பூட்டினார்கள்!
கப்பலோட்டிய கனவானைச்
செக்கிலேற்றிச் சிரித்தார்கள் !

ஐயகோ !
சிங்கம் நிகர் சிதம்பரனார்
செக்கினை இழுத்தார்!
அந்தக் காட்சி -
செக்குக்கே பொறுக்காமல்
கண்ணீரை விட்டது - எண்ணெயாக !
ஆம்!
கண்ணீரை விட்டது - எண்ணெயாக !

ஐயனே...

நீர் விட்ட மூச்சால்
எமக்கு பேச்சுரிமை கிடைத்தது....
உன் கரங்கள் காப்புக்
காய்ந்ததால்
எம் கரங்கள் எழுதிட உரிமை கிடைத்தது...

வருங்காலம் வாழ்ந்திட
தம் காலத்தையே
அர்ப்பணித்த நும் வாழ்க்கை
ஞாலத்தின் மாணப் பெரிதே!!!!!!!!

.... பகுதி மூன்று விரைவில்

Monday, August 10, 2009

சும்மாவா கிடைத்தது சுதந்திரம் ? (பகுதி 1)














அன்றொரு நாள் !

திருப்பூரிலே ஒருவன் ! - அகவை
இருபத்தெட்டே ஆன இளைஞன் !
தந்தை இறந்து சில நாட்களே ஆன சோகம் !
கைக்குழந்தையுடன் இளம் மனைவி !

அந்த வாலிபனுக்குச்
செய்தியொன்று வருகிறது!

தோழா நமது தேசத்திற்கு
நாசம் விளைவிக்கும்
மோசக்கார வெள்ளையர்களை
விரட்டியடிக்க கொடிப் போராட்டம் என்று !

அந்த இளைஞன் சிறிதும்
அஞ்சவில்லை !
வரமாட்டேன் என்று
கெஞ்சவில்லை !

சட்ட மறுப்பைக் காட்டிடச்
சட்டெனப் புறப்பட்டான் !
மனைவியைப் பார்க்கவில்லை !
மக்களையும் பார்க்கவில்லை !

"எங்கே நண்பர்கள்?
வாருங்கள் செல்வோம் ! - வஞ்சக
வெள்ளையனை வெல்வோம் ! "
என்று கூறி
தேசத்தின் சின்னமாம்
தேசியக் கொடியைத்
தோளிலே ஏந்திக் கொண்டு
தெருவிலே நடக்கின்றான் !

திரும்பிப் பார்த்தால்
அவன் பின்னே ஆயிரம் பேர்!
அத்தனை பேரும் தம்
கையிலே கொடிக்கம்புகளுடன் !

அவரவர் தோளிலே
கொடியினை ஏந்தி
அந்த வீரன் தலைமையிலே
கூடுகிறார்கள் ! -
கோபத்துடன் கூவுகிறார்கள் !

"ஒண்ட வந்தவனே
ஓடிப்போ !
ஓடிப்போ ! ஓடிப்போ ! ! "

"விடுதலை செய் விடுலை செய் !
காந்தியாரை விடுதலை செய் ! "

"பாரத தேசம் எங்களுக்கே
எங்களுக்கே எங்களுக்கே !

வியாபாரிக்கு இடமில்லை !
வெளியே போடா வெறும் பிள்ளை! "

விண்ணை முட்டின
வீர முழக்கங்கள் !
கொடிகளை ஏற்றுகிறார்கள் !
கொண்டாட்டம் போடுகிறார்கள் !

வருகிறான் வெள்ளைத்துரை -
வெறிகொண்ட ஊளையுடன் !

"கொடிகளை கீழே விடச்
சொல்லுங்கள் ! -
இல்லையேல் அவர்களைக்
கொல்லுங்கள் !!

அவனோடு வந்த
அடிமைப்பட்டாளம்
அடித்து நொறுக்குகிறது
அத்தனை பேரையும் !

கும்பிலிக் கூட்டத்தினர்
கொட்டமடிக்கிறார்கள் !
பெண்டிரையும் பெரியோரையும்
சிறுவரையும் கூடச்
சிதறடிக்கிறார்கள் !

கயவர்கள் கம்பினைச் சுழட்ட
கால்கள் பல முறிந்தன !
தடியர்கள் தடிகளை வீசிட
தலைகள் பல உடைந்தன !

இளைஞர் கூட்டம்
இடிக்கவில்லை ! - வெள்ளைத்
துரையைத் திருப்பி
அடிக்கவில்லை !
ஆங்கிலேயனை
மதிக்கவில்லை ! - அன்னைக்
கொடியை சிறிதும்
மடிக்கவில்லை !

அஞ்சாமல் எதிர்கொண்டனர்
அவர்கள் !

எம் உயிரே போனாலும்
எதிரிகளிடம் தரமாட்டோம்
என்றபடி
ஏந்தியிருந்தனர் கொடிகளையே !

கெட்டவர்களின் கோபம்
கட்டுக்கடங்கவில்லை !

"தலை மேலே தடியால் அடியுங்கள் !
தடுப்போரின்
தலைகளையே கிள்ளி எறியுங்கள் !"
ஆவேசமாய் உத்தரவிடுகிறான்
ஆங்கிலேயத் துரை !

முதலிலே நிற்கும் - நம்
இளைஞனின்
முதுகிலே விழுகிறது முதல் அடி !
ஒரு வெள்ளை மிருகம் அவன்
கைகளை உடைக்கிறது ..
மற்றொன்று அவன் கால்களை !

இளைஞன் சிறிதும் அழவில்லை !
இங்குமங்கும் விழவில்லை !
பிடியைச் சற்றும் விடவுமில்லை
கொடியும் கீழே விழவுமில்லை !

உச்சத்தில் வெறியேற
ஒரு வெள்ளை விலங்கு
அவன் தலையிலே
தடியினால் பலம் கொண்டு
தாக்குகிறது!

தடையேதும் இல்லாததால்
தலை கீழே சாய்கிறது !

உயிர்போகும் நேரத்திலே கூட
அவன் உதடுகள் உச்சரித்தது -

" வந்தே மாதரம் ! வந்தே மாதரம்!
வந்தே மாதரம் ! வந்தே மாதரம் ! "

அவனல்லவோ மனிதன் !
அவனல்லவோ வீரன் !
அவனல்லவோ இளைஞன் !
அவனல்லவோ இந்தியன் !
அவனல்லவோ குமரன் !
திருப்பூரின் குமரன் !
தேசபக்தியின் சிகரம் !

அவனுடைய பக்தியிலே
ஆயிரத்தில் ஒரு பங்கேனும்
நம்மிடம் இருந்தால் போதும்
நம் நாடு பிழைக்கும்;
நல்லோர் நினைவுகள் தழைக்கும் !
ஜெய்ஹிந்த் !

- ஈ ரா

ஆடி அட்டகாசம்



ஒவ்வோராண்டும் ஆடி மாதம் வந்தால் போதும், அம்மன் பெயரால் வசூல் வேட்டையும் காதைப் பிளக்கும் ஒலிபெருக்கிகளும் மக்களை அச்சத்துக்குள்ளாக்குகின்றன. தேர்வுக்குப் படிக்கும் மாணவர்கள், வயதானவர்கள், நோயாளிகள் ஆகியோரைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் அதிகாலை முதல் இரவு வரை தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் பாடல்களை ஒலிபரப்பி மக்களைத் தொடர்ந்து அவதிக்குள்ளாக்குகிறார்கள்.

புனல் ஒலிபெருக்கி தடை செய்யப்பட்டு இருந்தும், ஒலியின் அளவு குறித்த வரைமுறைகள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் அறிவிக்கப்பட்டிருந்தும் இதைப் பற்றி யாரும் சட்டை செய்வதில்லை. தொடர்ந்து மூன்று நான்கு நாட்கள் இடைவெளியின்றி பாடல்களைப் போட்டு விட்டு, அது போதாதென்று நள்ளிரவு வரை சினிமா இசைக்கச்சேரிகளையும் நடத்தி அதையும் தவறாது ஒலிபரப்புகிறார்கள். கலை நிகழ்ச்சி என்ற பெயரில் சில இடங்களில் குருவி குடைந்த கொய்யாப் பழம் போன்ற ஆபாச நடனங்களும் இந்த திருவிழாவில் அடக்கம்..

ஒவ்வோர் ஊரிலும் பெரிய மனிதர்களே கோயில் விஷங்களில் நேரடியாக ஈடுபடுவதாலும், திடீர் பக்தி முரட்டு இளைஞர்களால் கோயில்கள் சூழப்படுவதாலும் யாரும் இந்த அவலத்தை எதிர்ப்பதில்லை; மனதிற்குள் புழுங்கி வெளியே சிரிக்கிறார்கள்.


இன்றைய பாடலாசிரியர்களும், கேசட் வெளியீட்டாளர்களும், பாடகர்களும் கைக்கு வந்தவற்றை எல்லாம் எழுதி வாய்க்கு வந்தவற்றைப் பாடி பேரிரைச்சல் கொண்ட இசைக்கருவிகளைப் பயன்படுத்தி கடவுளையும் பக்தியையும் கொச்சைப் படுத்தி காசு பார்க்கிறார்கள்.


சில இடங்களில் ஒரே பகுதியில் இரண்டு மூன்று கோயில்கள் இருந்தால் அப்பகுதிவாசிகள் தொலைந்தார்கள் என்றே கொள்ளலாம். ஒவ்வொரு வாரமும் ஒரு கோயில்காரர்கள் ஒலிபெருக்கி மூலம் தங்கள் கடமையைக் கண்ணும்கருத்துமாகச் செய்து மக்களைத் துன்புறுத்துவதை தடையின்றி நடத்துகிறார்கள். கோயில்கள் மட்டுமன்றி கிறிஸ்தவ ஆலயங்களும் மசூதிகளும் கூட இந்த போட்டியில் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று மல்லுகட்டுகிறார்கள்...

மற்ற விஷயங்களுக்கு எல்லாம் பேருக்காகவாவது ஏதாவது நடவடிக்கை எடுக்கும் அரசாங்கமும் காவல் துறையும், அரசியல் கட்சிகளும் இது குறித்து தெரிந்திருந்தும் ஏதும் செய்வதில்லை; ஏனெனில் தேர்தல் காலங்களில் அவர்களும் இதைத்தானே செய்கிறார்கள்.


உச்ச பட்ச இரைச்சலே இங்கு இசையாகிறது; உண்மையிலேயே அம்மனை நெஞ்சாரத் தொழுது கூழ் வார்க்கும் பக்தர்கள் கூட இந்த இரைச்சலுக்குத் தங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டு சகித்துக் கொள்ள தயாராகி விட்டார்கள்.. பூனைக்கு மணி கட்ட யாரும் இல்லாததால் தவறு என்று தெரிந்திருந்தும் இந்நிகழ்வு தடையின்றி தொடர்கிறது..

(பி. கு. நான் முன்பு இருந்த ஏரியாவில் இதே பிரச்சினைகளுக்காக விழாக்குழுவினரிடம் (????) மல்லுக்கட்டி, கெஞ்சி - மிஞ்சி கொஞ்சம் சவுண்டை குறைத்துக் கொள்ளுமாறு செய்தேன்...இப்போ இருக்கும் பகுதியில் சமீப காலம் வரை புது கோயில் எதுவும் உருவாகவில்லை; விரைவில் யாராவது புண்ணியவான் ஆட்டையைப் போடுவான் என்று நினைக்கிறேன்)

Friday, August 7, 2009

கான்வென்ட் பிள்ளை - ஒரு தங்கிலிஷ் கவிதை (!)














தலை சீவி
தளுக்காய் பவுடர் வைத்து
ஹை கலர் யுநிபார்ம்மில்
காலர் பட்டன் போட்டு
டை கட்டி
பெல்ட் இறுக்கி
ஷூ மாட்டி
லேஸ் முடித்து
டிபன் பாக்ஸ்யில்
பிரட்டும் வெண்ணையும்
பிச்லரியும் வைத்து
செல்லப் பிள்ளையை
சீருந்தில் ஏற்றி
ஸ்கூலுக்கு அனுப்பினால் -
பையன்
பத்து மணியில் இருந்து
வெளியே முட்டி போட்டானாம்
ஹோம் வொர்க் செய்யவில்லை என்று..!