Saturday, June 6, 2009

"குழல் கொடுமை - யாழ் கொடுமை"















குழல் கொடுமை யாழ் கொடுமை என்பர்
தம்மக்கள் குரல் மறையக் காண்கின்றவர்!

ஆண்மை இருக்கும் இறையே -
இனியாவது நாங்கள்
இறையாண்மைக்கு இரையாகாமல் காப்பாய்!

அன்றோ ஒரு காலம் உண்டு!
வனம் எல்லாம் வனப்புடனே நின்று!
இன்றும் ஒரு ஞாலம் உண்டு
இனம் மரிக்கக் காணாமல் கண்டு!

ஒன்பதுதான் கிடைத்தது - இனி
ஓய்வெடுக்கப் போகலாம்!
இருபத்தெட்டு கிடைத்தது - இனி
இலாக்காக்கள் கேட்கலாம்!
ஒன்றுமே கிடைக்கவில்லை - இனி
ஒப்பாரி வைக்க வேண்டாம்!
தனியாகவே வந்துவிட்டோம்- இனி
தமிழாவது மண்ணாவது?

பாவிகளா -
ஆதிமனிதனைப் போல்
அர்த்தமில்லா ஊளையோடே
இருந்து இருக்கலாம்!

பாழாய்ப்போன மொழியை நம்பாத
ஊமை சகோதரர்களே
உண்மையிலேயே உங்களைப்
பார்த்துப் பொறாமைப் படுகிறோம்!

நாங்கள் இப்போதெல்லாம்
வருத்தப்பட்டு பாரம் சுமப்பது இல்லை!
உயிரும், உற்றார் உடல்களும்
என்றைக்காவது பாரமாகுமா என்ன?

நாங்கள் இப்போதெல்லாம்
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
என்று நினைப்பது இல்லை! - ஒருவேளை
ஏதாவது நன்றாகவே நடந்தாலும்
அதைப் பார்ப்பதற்கு நாங்கள்
இருக்கப் போவதுமில்லை!

நாங்கள் இப்போதெல்லாம்
மேற்கு நோக்கி புனிதம் தேடி
யாத்திரிப்பதில்லை! - ஏனெனில்
எங்கள் வழி நெடுகிலும்
மனிதம் மண்ணுக்கு உள்ளேதான்
மலையாகக் கிடக்கிறது!

அழுத பிள்ளை பால் குடிக்குமாம்
உங்கள் ஊரில்! - இங்கோ
குழந்தைகள் அழுவது -
அம்மா நான் உயிரோடு இருக்கிறேன்
என்று உணர்த்திடவே!

பல நூறு ஆண்டுகள் முன்
போரிலே வென்ற மன்னர்
பகை நாட்டின் வயல் அழித்து
வெள்ளெருக்கும் ஆமணக்கும்
விதை விதைத்து - கோவேறு
கழுதைகளால் உழுதிட்டு
கடுஞ்சினத்தை தீர்ப்பனராம்!

இன்றும் பாவி மக்கள்
போரென்ற பேரினிலே
பார் முழுக்கப் பார்த்திடவே
இரு நாட்டின் இனம் அழித்து
ஈயத்தை இதயத்தில்
விதை விதைத்து - ஈனப்
பன்றிகளால் உழுதிட்டு
உயிர் அறுவடை செய்கின்றார்!

வாழ்க உங்கள்
விஞ்ஞான விவசாயம்!
வளர்க உங்கள்
நவீன யுகப் புரட்சி!

சங்க காலம் தொட்டு வரும்
சண்டை காலம் முடியவில்லை!
எங்க காலம் போயாச்சு! - எம்
பிள்ளையாச்சும் பிழைக்குமா?

எங்களுக்கு எல்லாம் ஒரே ஒரு
அற்ப மகிழ்ச்சி! -
இத்தலைமுறையில் யாருமிங்கே
வாழ்ந்து கெட்டவர் இல்லை!
நாங்களெல்லாம் - ஒரு நாள் கூட
நிம்மதியாக வாழாமலே கெட்டுவிட்டோம்!


---
அன்பு இல்லாத

ஈ ரா

தேவையில்லை














சில நேரங்களில் சில மனிதர்களை நினைத்தால் ஆத்திரமாக வரும்....அவர்களுக்காக இது....

போலிச் சிரிப்பு
தேவையில்லை!

வலுக்கட்டாயமாக
வரவழைத்துக்கொண்ட
வாய்ப்புன்னகை
தேவையில்லை!

கட்டித் தழுவி அரவணைக்கும்
கள்ளமுள்ள அன்பு
தேவையில்லை!

பத்துப் பேர் முன் பாராட்டி - பின்
புறம் பேசத்
தேவையில்லை!

மொத்தத்தில் எனக்கு உங்கள்
வாழ்த்தும் தேவையில்லை!
வைதலும் தேவையில்லை!

Thursday, June 4, 2009

தவறான பாடம்

சில நேரங்களில் நாம் எழுதியதே நேரடியாகவோ அல்லது சற்று ஒத்த நடையிலோ வேறு சிலராலும் எழுதப்பட்டு இருக்கக் கூடும்...

கீழே உள்ள வரிகள் பல ஆண்டுகளுக்கு முன் நான் எழுதியவை...

"தவறான பாடம்"


நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும்போது
ஆசிரியை தவறாகக் கற்றுக் கொடுத்து விட்டார்..
கண் பார்க்கும் - வாய் பேசும் என்று

ஆனால் -
இதென்னடி விந்தை ?

உன் கண்ணே பேசுகிறது?