Wednesday, November 10, 2010

கமல் கலைஞர் சந்திப்பும் மஞ்சள் சால்வையும்

எப்போவுமே சீரியஸா எழுதுறதுனால ஒரு சேஞ்சுக்கு இந்த பதிவு,,
சும்மா ஜாலிக்குத் தான், யாரும் சீரியஸ் ஆகாதீங்க...











Friday, November 5, 2010

ரஜினி என்னும் சாதாரண மனிதரின் பேட்டி



தனியார் தொலைக்காட்சிகள் வந்து இந்த பதினைந்து ஆண்டுகளில் அமிதாப் முதல் அனுஷ்கா அத்தனை பேரும் பல சேனல்களில் திரும்பிய பக்கமெல்லாம் பல பேட்டிகளில் தோன்றும் காலத்தில், தனிப்பட்ட முறையில் எந்த தொலைக்காட்சிக்கும் பேட்டி தருவதில்லை (தொன்னூறுகளில் தூர்தர்ஷன் தவிர ) என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருந்த சூப்பர் ஸ்டார், சன் நிறுவனத்திற்கு கொடுத்த வாக்கிற்காக முதல் முறையாக ஒரு தனிப்பட்ட பேட்டியை இந்த தீபாவளி விருந்தாகக் கொடுத்தார்.

கரன் ஜோஹார் போன்றவர்களுக்கும், வட இந்திய மீடியா ஜாம்பவான்களுக்கும் கூட கிடைக்காத மாபெரும் வாய்ப்பு சன் டிவியின் விஜய்சாரதிக்கு கிடைத்தது. படம் சம்பந்தப் பட்ட பேட்டியாகவே இது அமைந்ததால் பெரும்பாலும் கேள்விகள் எந்திரன் சார்ந்ததாகவே இருந்தன.

எந்திரன் தயாரிப்பாளர்கள், படத்தின் வெற்றி சாதனைகள், தமிழ் திரையுலகின் மைல்கல் என்ற எல்லாவற்றையும் தாண்டி, ரஜினி என்ற சாதாரண மனிதரின் பேச்சாகவே இந்த நிகழ்வு முழுதும் இருந்தது.

எந்திரனில்
என் திறன் மட்டும் இல்லை
இது
எம் திறன்
என்று
சொல்லாமல் சொன்னார் சூப்பர் ஸ்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு முன் "எந்திரன் உருவான விதம்" மட்டும் ஒளிபரப்பாகவில்லை என்றால், இந்த மனிதர் பட்ட கஷ்டம் வெளியே தெரியாமலே இருந்திருக்கும்.. அவராக வாயைத் திறந்திருக்க மாட்டார். விஷயம் தெரியாதவர்கள் எல்லாம் ரஜினியும் எந்திரன் டீமும் பட்ட கஷ்டங்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடியாமலே போயிருந்திருக்கும்.

எல்லாம் கிராபிக்ஸ், கிராபிக்ஸ் என்று சொல்லிவிட்டு ரஜினி ஒன்றுமே செய்யாதது போல் பேசி வந்த அனைவரின் வாய்க்கும் ஒரு நவ்டால் பூட்டு (நன்றி கிரி. சிங்கப்பூர்) போடப்பட்டு விட்டது. அதற்காக சன் டிவிக்கு ஒரு நன்றி.

உடல் ரீதியாக தலைவர் எவ்வளவு கஷ்டப் பட்டிருக்கிறார் என்பது இப்போதுதான் தெரிந்தது. உடம்பெல்லாம் வலிக்கிறது என்று தன்னிடம் குறிப்பிட்டதாக சில நாட்களுக்கு முன் வைரமுத்து கூறியபோது அவ்வளவாக நமக்குப் புரியவில்லை. இப்பொழுதுதான் அந்த வலி நமக்கு தெரிந்தது. சும்மா இப்படி அப்படி என்று ஸ்டைல் மட்டுமே காட்டிக் கைதட்டலை பெற முடிந்த ஒரு மாபெரும் கலைஞன் இப்படி தன்னை வருத்திக் கொண்டதைப் பார்த்த போது அவரது தொழில் பக்தியும், கடும் உழைப்பும் கண்கலங்கச் செய்தது. அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு இவர் அத்தியாவசியப் பாடம் என்று உணரச் செய்தது.

சூப்பர்ஸ்டார் "எல்லா புகழும் இறைவனுக்கே " என்று கூறி ஆரம்பித்த உடன் , விஜய் சாரதி இது ஏ.ஆர். ரகுமான் சொன்னதைப் பின்பற்றியா என்று கேட்டதற்கு சற்றும் தயங்காமல் "ஆமாம்" என்று சொல்லி சிரித்தார் ரஜினி. ரஜினி ரசிகர்கள் அல்லாதவர்களைக் கூட டி.வி முன் நிமிர்ந்து உட்கார வைத்த நேர்மையான பதில் அது!

தான் இந்த படத்திற்காக பட்ட சிரமங்கள் குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளவே இல்லை சூப்பர் ஸ்டார். உதாரணமாக இரண்டு மணி நேரம் மேக்கப் போட்டதை பற்றி குறிப்பிட்ட போது, மேக் அப் வுமன் பானு, ஜஸ்ட் ரெண்டு மணி நேரத்தில் முடித்து விடுவார் என்று பாராட்டினார்.

சில காட்சிகளைப் பற்றி விஜய்சாரதி புகழ்ந்தபோது, "நைஸ் இல்ல?, நல்லா இருந்தது இல்ல? என்று ஒரு குழந்தை போல ரஜினி மகிழ்ந்தது உண்மையாக இருந்தது.

அவரது பல பதில்கள் சுவாரஸ்யத்தின் உச்சம் என்றால் மிகையல்ல.

முதலில் ஷங்கர் தன்னை வில்லனாக மட்டும் நடிக்க கூப்பிடுகிறார் போலும் என்று நினைத்து பின்னர் ஹீரோ ரோபோவே நீங்கள்தான் என்ற போது "இந்த வயதில் என்னால் நடிக்க முடியுமா ?" என்று தான் கேட்டதாக அவர் வெளிப்படையாக கூறிய போது எல்லோரும் அசந்து போயிருப்பார்கள். இந்த மனிதருக்குத்தான் எத்தனை நெஞ்சுரம்? தன்னோடு நடித்த ஐஸ்வர்யா ராய்க்கு நன்றி தெரிவித்ததாகட்டும், படம் பார்க்கும் மற்றவர்களை நாம் கஷ்டப் படுத்தக்கூடாது என்று யோசித்ததாகக் கூறியதாகட்டும், ரஜினி எந்த அளவிற்கு தன்னை மிகச் சாதாரணனாக நினைக்கிறார் என்பதை தெளிவாகக் காட்டியது. இத்தனைக்கும் ஐஸ்வர்யா ராயின் முந்தைய தமிழ் படங்கள் எதுவும் மிகப் பெரிய வெற்றியைப் பெறவில்லை. (அவரது முந்தைய ஜோடிகள், பிரசாந்த், பிரகாஷ் ராஜ், அப்பாஸ் (கொஞ்சூண்டு மம்முட்டி), பிருதிவிராஜ் ஆகியோர் ).

ஷங்கர் ஷங்கர் ஷங்கர்...இதுதான் ரஜினி அதிகமாக உச்சரித்த வார்த்தை! ஒரு புதுமுக நடிகர் எப்படி இயக்குனருக்கு பயந்து, மரியாதை செலுத்தி பேசுவார்களோ அதை விட பல மடங்கு அதிகமாக ஷங்கரை புகழ்ந்து தனக்கு இதில் மிகச் சிறிய பங்கு இருப்பதாகவே கூறினார்.

படத்தின் ஹை லைட்டான "மே மே " காட்சியைக்கூட தன்னை விட ஷங்கர் நன்றாக செய்வார் என்று அவர் கூறிய போது நான் ஒரு நிமிடம் ஸ்டன் ஆகிவிட்டேன். எனக்கு தெரிந்து மற்ற எந்த பெரிய நடிகர்களும் இந்த அளவிற்கு தன் இயக்குநர்களைப் பற்றி பேசி பார்த்ததேயில்லை. இத்தனைக்கும் ஒரு படம் வெற்றி பெற்றால் திரும்பிய சேனல்களில் எல்லாம் சோபாவில் உட்கார்ந்து கொண்டு நம் ரிமோட்டின் சாபத்தை வாங்கி இருப்பார்கள். இவரோ படம் வெளியாகி அனைத்து சாதனைகளும் படைத்த பிறகு வந்து அமைதியாகப் பேசுகிறார்.

ஒரு டென்ஷனான காட்சியை முடித்தவுடன், கேரவனுக்கு அவசரமாக சென்று ஒரு டீய சாப்பிட்டுட்டு தம் அடிச்சுட்டு வந்தேன் என்று அவர் அசால்ட்டாக சொல்லி விட்டு உடனேயே ஐயோ சொல்லலாமா என்று நாக்கை கடித்து ஒரு எக்ஸ்ப்ரச்ஷனுடன் சிரித்துக் கொண்டே சைடில் கேமராவைப் பார்த்தாரே... அப்போது குளோபல் ஸ்டார் எல்லாம் தெரியவில்லை, சாதாரணமாக ஒரு பெயிண்டரோ, கார்பெண்டரோ, நம் சக நண்ப ஊழியரோ நம்முடன் பேசியதாகத் தான் தெரிந்தது. அடுத்த நிமிடம், விஜய்சாரதி நீங்கள் ஏன் இப்போது படங்களில் சிகரெட் பிடிப்பதில்லை என்று கேட்ட போது, அதான் பிடிக்கக் கூடாது என்று சொல்லி விட்டார்களே, இட்ஸ் குட் என்றார்.. (கடவுளே, தலைவர் சீக்கிரம் இதை குறைத்து கொண்டு நல்ல ஆயுளுடன் ஆரோக்கியமாக நீண்ட நாள் இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டேன்) .

ஒவ்வொரு நடிகருக்கும் அவர் கடைசியாக நடித்த படம் தான் அளவுகோல். அது சரியாகப் போகவில்லை என்றால் மதிப்பில்லை. தான் இருப்பதால் மட்டுமே ஒரு படம் வெற்றி பெற்று விடாது. சிறந்த இயக்குனர், பாடல்கள், தொழில் நுட்பம் எல்லாம் அமைந்தால் தான் ஒரு படம் வெற்றி பெறும். ஒரு படத்தின் வெற்றிக்கு அறுபது சதவீதம் திட்டமிடுதலும், நூறு சதவீதம் ஆண்டவன் அருளும் தான் காரணம் என்று கூறிய சூப்பர் ஸ்டார் ஹைலைட்டாக என்றைக்கும் வெற்றி மட்டுமே நிரந்தரமானதல்ல, இப்போது எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது அதனால் புகழ் கிடைத்திருக்கிறது, அடுத்த படம் சரியாக போகவில்லை என்றால் அவ்வளவுதான் என்று கூறியபோது அவர் எந்த அளவிற்கு நிதானமாக இருக்கிறார் என்று தெரிந்தது.

தசாவதாரத்தில் கமல் பத்து வேடங்களில் நடித்ததற்கு முன் தான் மூன்று வேடங்களில் நடித்தது ஒன்றுமே இல்லை என்று அவர் சொன்ன போது, அவர் பெருந்தன்மையை நினைத்து வியந்தேன் . தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தன் நண்பர் கமலை புகழ்ந்து பேசுவதில் ஆகட்டும் தன் படக் காட்சிகளில் கமல் பற்றிய வசனம் வைப்பதில் ஆகட்டும் (முத்து - பெரிய கமலஹாசன் என்று நினைப்பு, சிவாஜி - சும்மா கமலஹாசன் மாதிரி ஆகறேன் பாரு, எந்திரன் - கமலஹாசன் போன் நம்பர் தான் எல்லோருக்கும் தெரியுமே) தான் எந்த அளவிற்கு கமலை நேசிக்கிறேன் என்று சூப்பர் ஸ்டார் நிரூபித்து வருகிறார். இந்த அளவு உண்மையாக ஈகோ இல்லாமல் வேறு யாராவது இருக்க முடியுமா என்று தெரியவில்லை.

தன் வேகம் தான் தனக்கு பாலச்சந்தரிடம் வாய்ப்பு வாங்கித் தந்தது என்று சொல்லி விட்டு தான் கண்டக்டராக இருந்தபோது கூட வேகமாக டிக்கெட் கொடுப்பேன் என்று தன் பழைய வாழ்க்கையை நினைவு கூர்ந்தபோது, என்ன என்றே சொல்லத் தெரியாத ஒரு உணர்வு மனதில் தோன்றி ஒரு நெகிழ்ச்சி ஏற்பட்டதை மறுக்க முடியாது!

சூப்பர் ஸ்டாரிடம் ஒரு கதை சொல்லுமாறு கேட்ட போது, ஒரு அரசன் எப்படி ஐந்தாண்டுகளில் புதிய அரசாங்கத்தை உருவாக்கி மரணத்தில் இருந்து தப்பினான் என்று நம் நண்பர் சுந்தர் பகிர்ந்த கதையைக் கூறி ஆச்சர்யப்படுத்தினார். வாழ்த்துக்கள் சுந்தர்!

மதம் என்பது ஒரு வழி, ஆனால் அதை விட ஆன்மிகம் மிக முக்கியமானது.. எல்லாவற்றையும் விட அது மிகவும் கடினமானது... குரு அருள் இருந்தால் மட்டுமே அதை அடைய முடியும் என்று மிகத் தெளிவாக அவர் கூறிய போதும் தியானம் ஒரு அமைதி நிலையையும், தெளிவான முடிவெடுக்க உதவியையும் தரும் என்று சொன்ன போதும், உண்மையான ரசிகர்களுக்கு இதை விட ஒரு வழிகாட்டுதலைத் தர முடியாது என்பது புரிந்தது.

பேட்டி எடுத்தவரிடம் ரொம்ப ஆழமான கேள்விகளைக் கேட்கிறீர்கள்.. ஆன்மீகத்தில் நான் முதல் படியைத்தான் வைத்திருக்கிறேன்.. அது மாபெரும் பயணம் என்று சொன்ன போது இந்த மனிதர் நிச்சயம் அந்த லட்சியத்தை அடைவார் என்று தோன்றியது.

உண்மையில் மனதிற்கு மிகவும் நிறைவாக இருந்தது. ஹேப்பி திவாளி சூப்பர் ஸ்டார்.