Tuesday, July 28, 2015

புதிய தலைமுறைக்குப் பொறுப்பான போதிமரம் !
எதிர்க்கலாம் என்று எவரும்
நினைக்க முடியாத எங்கள் கலாம்.

நீர்
விதைகளையும் விழுதுகளையும் கோடிக்கணக்கில்
விட்டுச் சென்ற ஆல மரம்..

புதிய தலைமுறைக்குப் பொறுப்பான போதிமரம் !

இத் தேசத்தின் ஸ்தூலம் மறைந்த ஸ்தல விருட்சம் !

 நீர்
விழுந்து விடவில்லை !
விட்டுச் செல்ல மனம் இன்றி
வீற்றிருக்கின்றீர் இதயங்களில் ..

நீர்
தாடி மீசையோ மழுக்கிய தலையோ
தலை மறைப்போ காவியோ வெள்ளுடையோ மட்டும்
கொண்டிராத கொள்கை ஞானி !

மரங்கள் மறைகின்றனவே என்று நாங்கள்
கன்னத்தில் கை வைத்து புலம்ப மட்டுமே செய்தோம்..
நீரோ
உம் கைகளுக்குள் விதைகளை கொண்டு சென்று
செல்லும் வழி எல்லாம் தூவிச் சென்றீர் !

நீர்
புலம்பியதே இல்லை ! - ஏனெனில் 
உம் கண்களுக்கு எதிர்காலம் எப்போதுமே புலனானது ! 

நாங்கள் தொலைந்ததையே தேடிக் கொண்டிருந்த போது -
நீர்
தொலைவில் புதிதாய் அதையே கண்டு கொடுத்தீர்!

நீர்
அணு சக்தியை உள்ளே வைத்திருந்தும்
அன்பு சக்தியால் எங்களை ஆட்கொண்டீர்!

எப்பொழுதுமே
உம் புன்னகையின் கவர்ச்சி
முதல் முறை முகம் பார்க்கும் 
குழந்தையின் சிரிப்பைப் போலே
 கள்ளங்கபடமற்றது !

 நீர்
உம் கனவுகளை
மற்றவர் உறக்கத்திலும்
தோன்றச் செய்த
விந்தை விஞ்ஞானி !

அரசியலை நினைத்து நாங்கள் நொந்த போது
நீரோ
இதுதான் இன்றைய 'அரசு இயல்' என்று அதை
இயல்பாக எடுத்துக் கொண்டீர் !

சமூகக் கால்வாய் நாறுகிறதே என்று
நாங்கள் கவலைப்பட்ட போது 
தூரத்தே தெரிந்த இளைஞர் கூட்டமென்னும்
காட்டு வெள்ளம் ஒருநாள் பாதை தேடி
புது நீராய்ப் பாயும் என்று நீர்
பொறுமையாய் நம்பி இருந்தீர் !

நீர்
நவீன இந்தியாவின் சிற்பி !
உம்மால் மட்டுமே இச்சிலையை வடிக்க முடியாதென
உணர்ந்து
கோடி உளிகளை
குழந்தைகள் கையில் கொடுத்தீர் ! 

உம்மை தந்தை என்றோ மாமா என்றோ
தாத்தா என்றோ நாங்கள் அடையாளம் காட்ட மாட்டோம்!
ஏனெனில்

நீர் எல்லா வயதினருக்கும் தோழனாவீர் !

உம் தலையில் எல்லா தலைமுறைக்கும்
தகவல் தகைந்து கிடந்தது!

அரசன் ஆட்சி செய்ய வேண்டியது
மண்ணை அல்ல மனங்களை என்பதை 
நீர் முற்றிலும் உணர்ந்தவர் !

முடிந்தவன் சாதிக்கிறான்
முடியாதவன் போதிக்கிறான்
என்பது பழமொழி .. ஆனால்
நீரோ 
சாதிக்கவும் செய்தீர்
போதிக்கவும் செய்தீர்..!

நீர் மதச்சார்பற்றவர் கிடையவே கிடையாது!
எல்லா மதத்தவற்கும் சார்பானவர் !

இன்றுதான் புத்தர் சிரித்தாரோ ? -
நீர் மீண்டும் அவரிடமே வந்து விட்டீர் என்று !!

இன்றுதான் இயேசு பிரான் கைகளை நீட்டினாரோ - உம்மை வாரி அரவணைக்க ?

இன்றுதான் இறைவன் சற்றே நகர்ந்து அமர்ந்தாரோ? - 
உமக்கும் இடமளிக்க?

நாங்கள் தவிக்கவில்லை !

நீர் உயர்ந்தவர்- அங்கேயே இரும் !!

மை லார்ட் ! இவர் எங்கள் கட்சிக்காரர் என்று
உலகமே உம்பக்கம் சாட்சி சொல்கிறது!!

இன்றுதான் தேசத்தையே
தேசியக்கொடி மூடியதைப் பார்க்கிறோம் !

உம் இதயம் இந்தியா இந்தியா
என்றே துடித்தது இறுதி வரை !

நீர் பிற நாடுகளையும்
புற நானூற்றைப் பேச வைத்தீர் !

நீர் திரும்பிய இடமெல்லாம்
திருக்குறளை திகட்டாமல் அளித்தீர் !

ஐயா
உம்மை மறத்தமிழன் என்றோ முதல் குடிமகன் என்றோ
ஆசான் என்றோ விஞ்ஞானி என்றோ கவிஞர் என்றோ
ஒரு கூட்டுக்குள் அடைக்க முடியாது !

 நீர்
பிரபஞ்சம் முழுதும் நிறைந்த பிரயாணி !

 நீர்
 வழிப்போக்கனாய் மட்டும் வாழாமல் 
செல்லும் வழியெல்லாம் புதிதாய்ச்
 செப்பனிட்டுக் கொண்டே சென்றவர் !

ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது !
ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாற்ற மட்டுமே முடியும் !

நீரோ பேராற்றல் !
நீரின்றி அமையாது உலகு !
நீர் நாங்களாக மாறி விட்டீர் !

உம் பயணத்தைத் தொடரும் -
எம் கனவுகளிலும் செயல்களிலும் !!!

 ஜெய் ஹிந்த் !! ஜெய் ஹிந்த் !! ​​

​​​​​​​​​​ உணர்வும் ஆக்கமும் --- ஈ. ரா. என்னும் சாமானியன் ! 9790902334