ரஜினியும் எந்திரப் பயணமும்
நான் சில நேரங்களில் யோசித்ததுண்டு, என்னடா இந்த மனுஷனுக்கு இந்த நாட்டுல தலைக்கு மேல ஏகப்பட்ட வேலை இருக்கே, ஆனா இவரு பாட்டுக்கு எந்திரன் அது இதுன்னு எல்லாம் போயிட்டு இருக்காரே; எப்போதான் இங்கே நேரடியா வந்து நம்ம எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரோ? அப்படின்னு..
ஆனால் இப்பொழுது ஒவ்வொன்றாக நடக்குற விஷயங்களை பார்க்கும்போது அவர் செய்வது எல்லாம் எவ்வளவு தெளிவான விஷயம் என்று தெரிகிறது.. தான் இருக்கும் துறையில் முதலில் நல்ல விதமாக மிகச்சிறந்த சாதனையை செய்து தன்னை நிரூபித்து அதன் பிறகே அடுத்த இடத்துக்கு நகர வேண்டும் என்று முடிவெடுத்திருப்பதை உணர முடிகிறது..
அவர் ஒரு சாதனையை செய்தால் அதை அவர்தான் முறியடிக்க முடியும் என்ற நிலை எப்போதோ தோன்றி விட்ட பிறகும், இன்னும் அந்த உயரத்தை எவ்வளவு மேல உயர தூக்கி வைக்க முடியுமோ அவ்வளவு உயரத்தில் வைத்து விட்டு, அடுத்த வேலையைப் பார்க்கலாம் என்று நினைக்கிறார் என்பது தெரிகிறது...
ஒரு தமிழ் நடிகர், தமிழ் சினிமாவில் இத்தனை ஆண்டுகள் நம்பர் ஒன் ஆக வீற்று இருப்பதே பெரிய விஷயம்.. வட இந்தியாவிலும் வாகை சூடியாகி விட்டது.. வெளி நாடுகளிலும் மாபெரும் வரவேற்ப்பை ருசித்தாகிவிட்டது... இன்னும் என்ன பாக்கி என்று நினைத்த போது, இல்லை இது மட்டும் இல்லை.. "நான் இருக்கும் தமிழ் சினிமாவை எப்பாடு பட்டாவது சிகரத்தில் ஏற்றி, ஹாலிவுட்டை திரும்பி பார்க்க வைப்பேன் என்ற உள் மன லட்சியத்தில்தான் இந்த பயணத்தை தொடங்கி இருக்கிறார் (இதில் கவனிக்க வேண்டிய விஷயம், இதை அவர் ஒருபோதும் வாயால் சொல்லிக் கொண்டதே இல்லை)...
ஒரு மனிதன், தான் செய்யும் வேலையில் முதலிடம் பெற்று, பிறரை அரவணைத்து, தான் முதலில் கரடு முரடான பாதையை துணிச்சலுடன் தாண்டி தனக்கு பின்னால் வரும் தலைமுறைக்கு வழிகாட்டியாக இருந்து அவர்களுக்கு ஒரு இலகுவான வழியை ஏற்படுத்தி விட்டு ஒன்றுமே தெரியாத சாதாரண வழிப்போக்கன் போல் அமைதியாக அமர்ந்து மற்றவர்களை மகிழ்ச்சியுடன் பார்க்கும் பக்குவம் எல்லோருக்கும் வருவதில்லை... ஆனால் அவன் போட்டுக்கொடுத்த ராஜபாட்டையை பயன்படுத்தி சுகமான யாத்திரையை மேற்கொண்ட, அல்லது மேற்கொள்ளப் போகும் பல யாத்ரிகர்கள் இதற்க்கு வேர்வை சிந்தியவனை நன்றியுடன் நினைத்தால்தான் அவர்களால் செல்லும் இடத்துக்கு ஒழுங்காய்ப் போய்ச்சேர முடியும்..
மற்றவர்கள் பணத்தை பணயமாக வைக்கலாம்... ஆனால் இந்த மனிதன் ஒவ்வொரு முறையும் இத்தனை வருட உழைப்பையும், பேரையும் பணயமாக வைக்கிறான்..
மற்றவர்கள் திமிராக நடந்து அதல பாதாளத்தில் விழும்போதும், சில நேரங்களில் கை கொடுக்க வந்தவர்களையும் சேர்த்து இழுத்துக் கொண்டு விழும்போதும் சாதாரணமாக பார்க்கும் வஞ்சக உலகம், இந்த நல்ல மனிதன் அடுத்தவனை காப்பாற்ற கைகொடுக்கும் போது சற்றே கால் பிசகி துடிக்கும் போது கை கொட்டி சிரிக்கிறது...
பார்க்கின்ற பார்வையாளர்களான நமக்கு வலிக்கிற போதும், இந்த மனிதன், கை கொட்டி சிரிப்பதையும், கை தட்டி பாராட்டுவதையும் ஒன்றாகப் பார்க்கும் பக்குவம் பெற்று விட்டான்..
ஒன்று நிச்சயம்.... இந்த பயணத்திலும் அவன் நிச்சயம் தடைகளைத்தாண்டி தடம் பதிக்கப் போகிறான்..
நாம் மென்மேலும் வேறு விடைகளை வேண்டி வடம் பிடிக்க போகிறோம்...
அன்புடன்
ஈ ரா