பால வித்யாலயா (the school for young deaf children)
பள்ளிக்கு வாழ்த்துப் பா
சமர்ப்பணம்
பால வித்யாலயா
இது -
பால வித்யாலயா மட்டும் அல்ல
பல பாலர்களை
சமூகக் கடலின்
அக்கரையில் இருக்கும்
பல நூறு வித்யாலயங்களுக்குக்
கொண்டு சேர்க்கும்
பாலமாகவே விளங்கும்
'பால' வித்யாலயாவும் தான் !
பல நெருக்கடிகளில்
கழுத்துவரை வெள்ளம் வரினும்
தொய்வின்றித்
தெய்வக் குழந்தைகளைத்
தோளில் சுமப்பதால்
தோழ வித்யாலயாவும் தான் !
பெற்றவர்கள்
நாங்கள் - மீண்டும்
பிள்ளைகள் போல்
பள்ளி வந்தோம் !
பல வருடம்
வயது குறைந்து
பிள்ளைகளுடன்
துள்ளி வந்தோம் !
அள்ளக்குறையா அன்பை
ஆசிரியர் தம்
உறவில் கண்டோம் !
இது என்ன விந்தை ?
கருணை என்பது மட்டும்
என்றுமே வற்றாத
ஜீவ நதியாய் விளங்குகிறதே !
மூழ்கிக் குளித்து
முத்தெடுத்து
முன்னும் பின்னும் நீச்சலிட்டு
நெஞ்சு நிமிர்த்தித் தலை துவட்டி
எந்த நீச்சலுக்கும்
எதிர் நீச்சலுக்கும் தயாராகி
நன்றி சொல்லி நகர்கின்றன
கால்கள் !
படித்துறையில் - அடுத்துப்
பாடம்படிக்கத்
தயாராய் - இன்னும்
சில நூறு கால்கள் !
சில பிஞ்சுகள்
பயம் அறியாதவை !
சில பிஞ்சுகளோ
பயம் தவிர
வேறெதுவும் அறியாதவை !
அந்த நதி
என்றைக்கும்
பிஞ்சுகளைப் பயப்படுத்துவதில்லை !
நெஞ்சில் நிறைத்து
அன்பு பாராட்டியது !
வாயுள்ள ஜீவன்களாய்
மாற்றி
வாய்மையே வெல்லும் என
வரி வரியாய்ப்
போதித்தது !
இன்னும் பயம் தொலைக்க,
எங்கள் அலைகளைக் கூட
பெயரிட்டுக்
கூப்பிட்டுக் கொள்ளேன் என்று
ஆசையுடன்
அனுமதி தந்தது !
அலைகளும் கரைகளும்
ஒன்றாய்க் கயிறு பிடித்து
எங்காவது பார்த்திருக்கிறீர்களா?
இங்கு பார்க்கலாம் !
தெளிந்த நீரோடை போல்
தூய நீராய் ஓடுகையில் - இங்கே
மனச் சேற்றுக்கு
என்றுமே வழியில்லை !
ஒரே இடத்தில்
சுற்றி அமுக்கும்
சுழல் ஓட்டம்
இங்கு இல்லவே இல்லை !
நினைத்துப் பார்க்கிறோம் !
மருத்துவர்கள்
உம் பிள்ளையின்
செவியில் கேட்கும் திறன்
குறைவு என்று
சொன்ன போது,
அந்தச் சத்தம்
இடி போல் விழுந்தது
எங்கள் காதுகளில் !
ஆனால்
மின்னல்போல்
ஒரு வெளிச்சக் கீற்று
இருளுக்கு நடுவே
முதன் முதலாய்
தென்பட்டது
பால வித்யாலயாவின்
பரிவான
பார்வை பட்ட போது !
அந்த
முதல் நாளை
எவராலும்
மறக்க முடியாது !
ஏற்கனவே
பூத்துக் குலுங்கும்
சோலைகளைப் பார்த்த பின்பு
நமது குறுஞ்செடியும்
துளிர்க்குமென்னும்
நம்பிக்கை விதை
நெஞ்சில் முளைத்தது !
சோலையில் இடம்
வேண்டுமானால், உன்
சொகுசை மற ! - முதலில்
உன் செடியை உணர்
என்று சொல்லப்பட்டது !
காலை நான் நீரிட்டால்
மாலை நீ நீரிடு என்று
கரிசனத்துடன்
கட்டளை இட்டது !
முடியுமா என்ற
மலைப்புடன்
முதல் குவளை நீரைச்
சேர்ந்தே ஊற்றினோம் !
நாட்கள் நகர்ந்தன !
நாளொரு மேனி
பொழுதொரு வண்ணம் என்பார்கள் !
உண்மைதான் !
இந்தச் செடிக்கு
நாளொரு பாடம் -
பொழுதொரு செயல்முறை
என
போதிக்கப்பட்டது !
அப் போதனை
செடிகளுக்கு மட்டுமல்ல
கொண்டு வந்த
விவசாயிகளுக்கும்
சேர்ந்தே கூடத்தான் !
சில காலத்திலேயே
பதியனிடப்பட்ட மலர்ச்செடிகளைப்
பக்குவமாய்த்
துளிர்க்கச் செய்தீர் !
வேர்களை
சோர்வு, தன்னிரக்கம் , சுயமின்மை
என்னும் பூச்சிகள் அண்டாவண்ணம்
'கண்டிப்பு ' என்னும்
பூச்சு செய்தீர் !
வேண்டு மட்டும்
விலைமதிப்பில்லா
அறிவு ஒளியை
விலை இல்லாமலேயே
விரும்பித் தந்தீர் !
இந்தச் செடிகளில்
இனி எத்தனையெத்தனை
நல்ல உள்ளங்கள்
எத்தனை முறை
நீரூற்றினாலும்
நீங்கள் ஊற்றிய
நன்னீரின் ஈரப்பதம்
நாளும் குறையாது !
ஏன் தெரியுமா ?
நீரை உறிஞ்சும்
வித்தை என்பதையே
நீர்தானே
இச்செடிகளுக்குக்
கற்றுத் தந்தீர் !
தட்டிக் கொடுத்து
வளர்த்த பிள்ளையை
கட்டிக் கொடுத்து
அனுப்பும்
தந்தையும் தாயும்
கண் கலங்க -
பெற்றவரைப் பிரிந்து செல்லும்
பிள்ளைகள் போல
இங்கே
பெற்றவர்களே
பிள்ளைகளாய் மாறி
நிற்கிறோம் !
எடுத்த கைகள்
வணங்கிச் செல்லவோ
விழி துடைக்கவோ
என்று புரியாமல்
ஏக்கத்துடன் நிற்கிறோம் !
அம்மா -
உங்கள் ஓட்டம்
அசாதாரணமானது!
ஓய்வென்பதே
ஒருபோதும் அறியாதது!
விருட்சமாய் வளர்ந்து நீங்கள்
தோட்டமாய், தோப்பாய்
ஏன்
அடர்காடாய்
உலகெங்கும்
நிறையட்டும்!
ஓசை மட்டுமே
எழுப்பிக் கொண்டிருக்கும்
குருவிகளும் குயில்களும்
சிட்டுக்களும் வண்ணத்துப் பூச்சிகளும்
வார்த்தைச் சத்தங்களையும்
தங்கள்
சந்தங்களில் சேர்க்கட்டும் !
இவைகளின் குரல்கள்
ஒன்றாய் மேலெழும்பி
விண்ணை முட்டட்டும் !
இறைவன் - இவ்
விளையாட்டை
முற்றிலும் நிறுத்தும்வரை
இப்புவியில் நும் பணி
சிறக்கட்டும் !
சொன்னதை சொல்லுமாம்
கிளிப்பிள்ளை என்பார்கள் !
சொல்லிச் சொல்லி
எங்கள் கிளிப் பிள்ளைகளை
சுயமாகவும்
சொல்ல வைத்த பெருமை
சுடராக ஒளிரட்டும் !
சமுதாயமே !
"ஐயோ !,சத்தம் போடாதீர்கள் !
என் பிள்ளை எழுந்திடுவான் "
என்று சிறு ஊசிச் சத்தத்திற்கும்
புலம்பித் தீர்க்கும்
தாய்மாரையே நீ
கண்டிருப்பாய் !
"ஐயா ! ஏதாவது ஒரு
சத்தம் கேட்டு என் பிள்ளை
எழுந்திருக்காதா?" என்று
ஒவ்வொரு நாளும்
தூங்காமல் ஏங்கிய
தாய்மாரை உனக்குத் தெரியுமா ?
கிலுகிலுப்பையையும் டமாரத்தையும்
வெறும் அசையும் பொருளாய்
மட்டுமே பாவிக்கும்
மணிகளின் மன வலி தெரியுமா ?
"Early Invention" என்று ஒன்று
தேவை என்பதை
"Early" யாகவே invent செய்த
இப்பள்ளி
அரை நூற்றாண்டை நெருங்கி
ஆதரவு தந்தது !
'அம்மா என்று அழைக்காத
உயிரில்லையே' என்ற
வார்த்தை பொய்த்து விடுமோ
என்று ஏங்கிக் கிடக்கையில்
மூன்று வயதில்
"அம்மா! " என்று அந்த
உயிர் அழைத்தது !
பல அம்மாக்களுக்கு
அப்போதுதான்
உயிரே வந்தது !
அப்பிள்ளை -
ஒருவரிப் பாடம் முடித்தது !
ஆத்திச் சூடி மொத்தம்
முடித்த உணர்வு
அத்தாய்க்கு !
அப்பிள்ளை -
இரு வரிப் பாடம் முடித்தது !
1330 குறள் அனைத்தும் படித்த
உணர்வு அத்தாய்க்கு !
அப்பிள்ளை -
மூன்று வரிப் பாடம் முத்தாய் முடித்தது !
திரிகடுகம் முற்றும் முடித்த
உணர்வு அத்தாய்க்கு !
அப்பிள்ளை -
நான்கு வரிப் பாடம் முடித்தது !
நாலடியாரை நயம்படப் படித்த
உணர்வு அத்தாய்க்கு !
அப்பிள்ளை -
ஐந்து வரிப்பாடம் முடித்தது !
ஐம்பெருங்காப்பியம் அனைத்தும்
கரைத்துக் குடித்த உணர்வு
அத்தாய்க்கு !
மிகைப்படுத்தவில்லை !
அம்மா என்று அழைக்கவே
அத்தனை காலம் எடுத்த பிள்ளை
இத்துனை முன்னேற்றம் கண்டால்
இதை விட வேறென்ன வேண்டும் ?
'கற்றது கை மண் அளவு' என்பார்கள் !
கை மண்ணை வைத்துக் கூட
கற்றுக் கொடுக்க முடியும் என்று
என்றாவது நினைத்திருக்கிறீர்களா ?
நின்றால் பாடம் நடந்தால் பாடம்
அமர்ந்தால் பாடம் உண்டால் பாடம்
உறக்கம் பாடம் என்று
சொல்லப்பட்ட போது
இது என்ன
பாடாய் இருக்கிறதே என்று
முதலில் நினைத்தோர்
இம்முறை
வெற்றிப் பாட்டாய்
ஒலிக்கத் தொடங்கிய பின்தான்
அதன்
அருமை உணர்ந்தோர் !
ஒரு கல்விச் சாலை செய்தல்
ஆயிரம் ஆலயம் செய்தலுக்கு ஒப்பாம் !
இங்கோ
ஆயிரமாயிரம் கல்விச்சாலைகளுக்கு
ஈடு - ஒரு
பால வித்யாலயா என்றால்
சற்றும் மிகையல்ல !
உங்கள் பாடங்கள் -
வண்ணங்கள் பற்றி மட்டுமல்ல !
வளர்ச்சியைப் பற்றியும் தான் !
உங்கள் பாடங்கள் -
வடிவங்கள் பற்றி மட்டுமல்ல !
விடிவுகளை ப் பற்றியும் தான் !
உங்கள் பாடங்கள் -
இலக்கங்கள் பற்றி மட்டுமல்ல !
அடைய வேண்டிய
இலக்குகள் பற்றியும் தான் !
உங்கள் பாடங்கள் -
எழுத்துக்கள் பற்றி மட்டுமல்ல !
மீண்டும் மீண்டும் துவளாமல்
எழுதுவது பற்றியும் தான் !
உங்கள் பாடங்கள்
வார்த்தைகள் - வாக்கியங்கள் பற்றி மட்டுமல்ல !
வாழ்க்கையைப் பற்றியும்தான் !
நீங்கள் கொடுத்திடும்
படிப்பினை
படிப்பு இணை அற்றது !
நீங்கள் காட்டிடும்
அக்கறை -
எக்கறையும் இல்லாதது !
நீங்கள் செய்திடும்
தொண்டு -
இவ்வுலகம்
கண்டு இராதது !
'நான் - நாளை
ஆசிரியையிடம் சொல்லிவிடுவேன்'
என்று
பிள்ளைகள்
பெற்றோரைச் செல்லமாய்
மிரட்டிப் பார்த்திருக்கிறீர்களா ?
நாங்கள் பார்த்திருக்கிறோம் !
தலைமை ஆசிரியை
அக்கறையுடன் தவறுகளைச்
சுட்டிக் காட்டும் போது
தரை நோக்கிப்
பயந்து நிற்கும்
தாய்மாரையும் தந்தைமாரையும்
கண்டிருக்கிறீர்களா ?
இங்கு காண்பீர்கள் !
விவரம் புரியாத வயதில்
ஆசிரியரின் உறவை விட
விவரம் புரிந்த பின்
விதிவசத்தால் ஏற்பட்ட
உறவு - வரமாகும் என்பதை
உணர்ந்தோம் !
தெய்வம் கை விட்டதோ என்று
மாதாவும் பிதாவும் கை பிசைந்த போது
கை கொடுக்கத் துணையாய் வந்த
குரு ! - நீங்கள்
எந்நாளும் இப்பிள்ளைகட்குத்
தெய்வத்தின்
உரு !
ஐந்தில் வளையாதது
ஐம்பதில் வளையாது என்பர் !
அதுபோல்
ஐந்தில் கேட்காதது
ஐம்பதில் கேட்பது கடினமென
உணர்த்தி
ஐந்திலேயே அனைத்தும்
கேட்க வைத்தீர் !
தோளுக்கு மிஞ்சினால் மட்டும்
தோழன் அல்ல !
தோளில் சுமக்கும் வயதிலும் கூட
இப் பிள்ளைகள்
தோழர்களே என்று
தொலைநோக்குடன்
கள்ளமில்லாப்
பிள்ளை நட்பை
பிசைந்து அளித்தீர் !
எம் பிள்ளைகள் இன்று
கேட்பதற்கும் பேசுவதற்கும்
Hearing Aid ஐ விட
உங்கள்
Hearing Aim தான்
முக்கிய காரணி என்பதை
நாளும் மறவோம் !
எதுவுமே புரியாமல்
நச்சரித்த பிள்ளைகளை
நயமாய்
உச்சரிக்கும் பிள்ளைகளாய்
மாற்றியவர் நீவிர் !
சிறுதுளி பெருவெள்ளம் என்பர் !
மொழிவளம் என்னும்
பெருவெள்ளச் சாரத்தை
சின்னஞ்சிறு காதுகளுக்கு
ஏற்றார் போல்
புதியதோர் புனல் கொண்டு
சிறுதுளியாய் மாற்றிப்
புகட்டியவர் நீவிர் !
இசைக்கு மொழி தேவையில்லை என்பர் !
எம் பிள்ளைகளின்
மொழியே எமக்கு இசையென
ஆன நிகழ்வு
வெளியார்க்குப் புரியாது !
கடவுளைக் கண்டவர்
விண்டிலர்;
விண்டவர்
கண்டிலர் என்பர் !
இங்கோ...
கண்டவர் விண்டுவர்;
விண்டவர் நிச்சயம் கண்டவர்தாம்
என்றுணர்ந்தோம் !
சேர்ந்து வடம் பிடிக்க
இந்தத் தேர்
நகர்கிறது மெதுவாய் ..
இனி
ராஜ பாட்டையில்
வேகமெடுக்கும் என்ற
நம்பிக்கையில்
பயணம் தொடர்கிறது !
வருங்காலத்தில்
இப்பிள்ளைகளுக்கு
வானம் வசப்படட்டும் !
எல்லைகள் - இனி
இல்லாது போகட்டும் !
கதிரவன்
விடியலுக்கு வித்திடுவது போல்
இப்பள்ளி
விடியலையே
இறைவனுக்குப்
படையலாக்கட்டும் !
எதிர்காலத்தில்
எம் பிள்ளைகள்
எம்மொழியிலும் பேசும்
ஒவ்வொரு வார்த்தையும்
நாளும் உரக்க ஒலிக்கும்
உமக்கு
'நன்றி ' என்னும்
ஒரே பொருளுடன் மட்டும் !
ஆனால் -
நிச்சயம்
'நன்றி' என்னும்
வார்த்தையே
நாணம் கொள்ளும்
இச்சேவைக்கு
நான் - ஈடா? என்று ..
வாழ்க பால வித்யாலயா !
வாழ்க பால வித்யாலயா !
அன்புடன்
ஈ. . ரா
(அபிராமி அப்பா )
28-3-2016
9790902334