Saturday, April 2, 2016

பால வித்யாலயா (the school for young deaf children) பள்ளிக்கு வாழ்த்துப் பா

பால வித்யாலயா (the school for young deaf children)
பள்ளிக்கு வாழ்த்துப் பா 



சமர்ப்பணம் 

பால வித்யாலயா 
இது -
பால வித்யாலயா மட்டும் அல்ல 
பல பாலர்களை 
சமூகக் கடலின் 
அக்கரையில் இருக்கும் 
பல நூறு வித்யாலயங்களுக்குக் 
கொண்டு சேர்க்கும் 
பாலமாகவே விளங்கும் 
'பால' வித்யாலயாவும் தான் !

பல நெருக்கடிகளில் 
கழுத்துவரை வெள்ளம் வரினும் 
தொய்வின்றித் 
தெய்வக் குழந்தைகளைத் 
தோளில்  சுமப்பதால் 
தோழ வித்யாலயாவும் தான் !

பெற்றவர்கள் 
நாங்கள் - மீண்டும் 
பிள்ளைகள் போல் 
பள்ளி வந்தோம் !

பல வருடம் 
வயது குறைந்து 
பிள்ளைகளுடன் 
துள்ளி வந்தோம் !

அள்ளக்குறையா அன்பை 
ஆசிரியர் தம் 
உறவில் கண்டோம் !

இது என்ன விந்தை ?
கருணை என்பது மட்டும் 
என்றுமே வற்றாத 
ஜீவ நதியாய் விளங்குகிறதே !

மூழ்கிக் குளித்து 
முத்தெடுத்து 
முன்னும் பின்னும் நீச்சலிட்டு 
நெஞ்சு நிமிர்த்தித் தலை துவட்டி 
எந்த நீச்சலுக்கும் 
எதிர் நீச்சலுக்கும்  தயாராகி 
நன்றி சொல்லி நகர்கின்றன 
கால்கள் !

படித்துறையில் - அடுத்துப் 
பாடம்படிக்கத் 
தயாராய் - இன்னும் 
சில நூறு கால்கள் !

சில பிஞ்சுகள் 
பயம் அறியாதவை !
சில பிஞ்சுகளோ 
பயம் தவிர 
வேறெதுவும் அறியாதவை !

அந்த நதி 
என்றைக்கும் 
பிஞ்சுகளைப் பயப்படுத்துவதில்லை !

நெஞ்சில் நிறைத்து 
அன்பு பாராட்டியது !

வாயுள்ள ஜீவன்களாய் 
மாற்றி 
வாய்மையே வெல்லும் என 
வரி வரியாய்ப் 
போதித்தது !

இன்னும் பயம் தொலைக்க,
எங்கள் அலைகளைக் கூட 
பெயரிட்டுக் 
கூப்பிட்டுக் கொள்ளேன் என்று 
ஆசையுடன் 
அனுமதி தந்தது !

அலைகளும் கரைகளும் 
ஒன்றாய்க்  கயிறு பிடித்து 
எங்காவது பார்த்திருக்கிறீர்களா?
இங்கு பார்க்கலாம் !

தெளிந்த நீரோடை போல் 
தூய நீராய் ஓடுகையில் - இங்கே 
மனச் சேற்றுக்கு 
என்றுமே வழியில்லை ! 

ஒரே இடத்தில் 
சுற்றி அமுக்கும் 
சுழல் ஓட்டம்
இங்கு  இல்லவே இல்லை !

நினைத்துப் பார்க்கிறோம் !
மருத்துவர்கள் 
உம்  பிள்ளையின் 
செவியில் கேட்கும் திறன் 
குறைவு என்று 
சொன்ன போது, 
அந்தச் சத்தம் 
இடி போல் விழுந்தது 
எங்கள் காதுகளில் !

ஆனால் 

மின்னல்போல் 
ஒரு வெளிச்சக் கீற்று 
இருளுக்கு நடுவே 
முதன் முதலாய் 
தென்பட்டது 
பால வித்யாலயாவின் 
பரிவான 
பார்வை பட்ட போது !

அந்த 
முதல் நாளை 
எவராலும் 
மறக்க முடியாது !

ஏற்கனவே 
பூத்துக் குலுங்கும் 
சோலைகளைப் பார்த்த பின்பு 
நமது குறுஞ்செடியும் 
துளிர்க்குமென்னும் 
நம்பிக்கை  விதை 
நெஞ்சில் முளைத்தது !

சோலையில் இடம் 
வேண்டுமானால், உன் 
சொகுசை மற ! - முதலில் 
உன் செடியை உணர் 
என்று சொல்லப்பட்டது !

காலை நான் நீரிட்டால் 
மாலை நீ நீரிடு என்று 
கரிசனத்துடன் 
கட்டளை இட்டது !

முடியுமா என்ற 
மலைப்புடன் 
முதல் குவளை நீரைச் 
சேர்ந்தே ஊற்றினோம் !

நாட்கள் நகர்ந்தன !

நாளொரு மேனி 
பொழுதொரு வண்ணம் என்பார்கள் !
உண்மைதான் !
இந்தச் செடிக்கு 
நாளொரு பாடம் - 
பொழுதொரு செயல்முறை 
என 
போதிக்கப்பட்டது !

அப் போதனை 
செடிகளுக்கு மட்டுமல்ல 
கொண்டு வந்த 
விவசாயிகளுக்கும் 
சேர்ந்தே கூடத்தான் !

சில காலத்திலேயே 
பதியனிடப்பட்ட  மலர்ச்செடிகளைப் 
பக்குவமாய்த் 
துளிர்க்கச் செய்தீர் !

வேர்களை 
சோர்வு, தன்னிரக்கம் , சுயமின்மை 
என்னும் பூச்சிகள் அண்டாவண்ணம் 
'கண்டிப்பு ' என்னும் 
பூச்சு செய்தீர் !

வேண்டு மட்டும் 
விலைமதிப்பில்லா 
அறிவு ஒளியை 
விலை இல்லாமலேயே 
விரும்பித் தந்தீர் !

இந்தச் செடிகளில் 
இனி எத்தனையெத்தனை 
நல்ல உள்ளங்கள் 
எத்தனை முறை 
நீரூற்றினாலும் 
நீங்கள் ஊற்றிய 
நன்னீரின் ஈரப்பதம் 
நாளும் குறையாது !

ஏன் தெரியுமா ?

நீரை உறிஞ்சும் 
வித்தை என்பதையே 
நீர்தானே 
இச்செடிகளுக்குக் 
கற்றுத் தந்தீர் !

தட்டிக் கொடுத்து 
வளர்த்த பிள்ளையை 
கட்டிக் கொடுத்து 
அனுப்பும்
தந்தையும் தாயும் 
கண் கலங்க - 
பெற்றவரைப் பிரிந்து செல்லும் 
பிள்ளைகள் போல 
இங்கே 
பெற்றவர்களே 
பிள்ளைகளாய் மாறி 
நிற்கிறோம் !

எடுத்த கைகள் 
வணங்கிச் செல்லவோ 
விழி துடைக்கவோ 
என்று புரியாமல் 
ஏக்கத்துடன் நிற்கிறோம் !

அம்மா - 
உங்கள் ஓட்டம் 
அசாதாரணமானது!
ஓய்வென்பதே 
ஒருபோதும் அறியாதது!

விருட்சமாய் வளர்ந்து நீங்கள் 
தோட்டமாய், தோப்பாய் 
ஏன் 
அடர்காடாய் 
உலகெங்கும் 
நிறையட்டும்!

ஓசை மட்டுமே 
எழுப்பிக் கொண்டிருக்கும் 
குருவிகளும் குயில்களும் 
சிட்டுக்களும் வண்ணத்துப் பூச்சிகளும் 
வார்த்தைச்  சத்தங்களையும் 
தங்கள் 
சந்தங்களில் சேர்க்கட்டும் !

இவைகளின் குரல்கள் 
ஒன்றாய் மேலெழும்பி 
விண்ணை முட்டட்டும் !

இறைவன் - இவ் 
விளையாட்டை 
முற்றிலும் நிறுத்தும்வரை 
இப்புவியில் நும் பணி 
சிறக்கட்டும் !

சொன்னதை சொல்லுமாம் 
கிளிப்பிள்ளை என்பார்கள் !
சொல்லிச் சொல்லி 
எங்கள் கிளிப் பிள்ளைகளை 
சுயமாகவும் 
சொல்ல வைத்த பெருமை 
சுடராக  ஒளிரட்டும் !

சமுதாயமே !

"ஐயோ !,சத்தம் போடாதீர்கள் !
என் பிள்ளை எழுந்திடுவான் "
என்று சிறு ஊசிச் சத்தத்திற்கும் 
புலம்பித் தீர்க்கும் 
தாய்மாரையே  நீ 
கண்டிருப்பாய் !

"ஐயா ! ஏதாவது ஒரு 
சத்தம் கேட்டு என் பிள்ளை 
எழுந்திருக்காதா?" என்று 
ஒவ்வொரு நாளும் 
தூங்காமல் ஏங்கிய 
தாய்மாரை உனக்குத் தெரியுமா ?

கிலுகிலுப்பையையும் டமாரத்தையும் 
வெறும் அசையும் பொருளாய் 
மட்டுமே பாவிக்கும் 
மணிகளின் மன வலி தெரியுமா ?

"Early Invention" என்று ஒன்று 
தேவை என்பதை 
"Early" யாகவே invent செய்த 
இப்பள்ளி 
அரை நூற்றாண்டை நெருங்கி 
ஆதரவு தந்தது !

'அம்மா என்று அழைக்காத 
உயிரில்லையே' என்ற 
வார்த்தை பொய்த்து விடுமோ 
என்று ஏங்கிக் கிடக்கையில் 
மூன்று வயதில் 
"அம்மா! " என்று அந்த 
உயிர் அழைத்தது !
பல அம்மாக்களுக்கு 
அப்போதுதான் 
உயிரே வந்தது !

அப்பிள்ளை -
ஒருவரிப் பாடம் முடித்தது !
ஆத்திச் சூடி மொத்தம் 
முடித்த உணர்வு 
அத்தாய்க்கு !

அப்பிள்ளை -
இரு வரிப் பாடம் முடித்தது !
1330 குறள்  அனைத்தும் படித்த  
உணர்வு அத்தாய்க்கு !

அப்பிள்ளை -
மூன்று வரிப் பாடம் முத்தாய் முடித்தது !
திரிகடுகம் முற்றும்  முடித்த 
உணர்வு அத்தாய்க்கு !

அப்பிள்ளை -
நான்கு வரிப்  பாடம் முடித்தது !
நாலடியாரை நயம்படப்  படித்த 
உணர்வு அத்தாய்க்கு !

அப்பிள்ளை -
ஐந்து வரிப்பாடம் முடித்தது !
ஐம்பெருங்காப்பியம் அனைத்தும் 
கரைத்துக் குடித்த உணர்வு 
அத்தாய்க்கு !

மிகைப்படுத்தவில்லை !

அம்மா என்று அழைக்கவே 
அத்தனை காலம் எடுத்த பிள்ளை 
இத்துனை முன்னேற்றம் கண்டால் 
இதை விட வேறென்ன வேண்டும் ?

'கற்றது கை மண்  அளவு' என்பார்கள் !
கை மண்ணை வைத்துக் கூட 
கற்றுக் கொடுக்க முடியும் என்று 
என்றாவது நினைத்திருக்கிறீர்களா ?

நின்றால் பாடம் நடந்தால் பாடம் 
அமர்ந்தால் பாடம் உண்டால் பாடம் 
உறக்கம் பாடம் என்று 
சொல்லப்பட்ட போது 
இது என்ன 
பாடாய் இருக்கிறதே என்று 
முதலில் நினைத்தோர் 
இம்முறை 
வெற்றிப் பாட்டாய் 
ஒலிக்கத் தொடங்கிய பின்தான் 
அதன் 
அருமை உணர்ந்தோர் !

ஒரு  கல்விச் சாலை  செய்தல் 
ஆயிரம் ஆலயம் செய்தலுக்கு ஒப்பாம் !
இங்கோ
ஆயிரமாயிரம் கல்விச்சாலைகளுக்கு 
ஈடு - ஒரு 
பால வித்யாலயா என்றால் 
சற்றும் மிகையல்ல !

உங்கள் பாடங்கள் -
வண்ணங்கள் பற்றி மட்டுமல்ல !
வளர்ச்சியைப் பற்றியும் தான் !

உங்கள் பாடங்கள் -
வடிவங்கள்  பற்றி மட்டுமல்ல !
விடிவுகளை ப் பற்றியும் தான் !

உங்கள் பாடங்கள் -
இலக்கங்கள் பற்றி மட்டுமல்ல !
அடைய வேண்டிய 
இலக்குகள்  பற்றியும் தான் !

உங்கள் பாடங்கள் -
எழுத்துக்கள்  பற்றி மட்டுமல்ல !
மீண்டும் மீண்டும் துவளாமல் 
எழுதுவது  பற்றியும் தான் !

உங்கள் பாடங்கள் 
வார்த்தைகள் - வாக்கியங்கள் பற்றி மட்டுமல்ல !
வாழ்க்கையைப் பற்றியும்தான் !

நீங்கள் கொடுத்திடும் 
படிப்பினை 
படிப்பு இணை அற்றது !

நீங்கள் காட்டிடும்  
அக்கறை -
எக்கறையும்  இல்லாதது !

நீங்கள் செய்திடும் 
தொண்டு - 
இவ்வுலகம் 
கண்டு இராதது !

'நான் - நாளை 
ஆசிரியையிடம் சொல்லிவிடுவேன்'
என்று 
பிள்ளைகள் 
பெற்றோரைச்  செல்லமாய் 
மிரட்டிப் பார்த்திருக்கிறீர்களா ?
நாங்கள் பார்த்திருக்கிறோம் !

தலைமை ஆசிரியை 
அக்கறையுடன் தவறுகளைச் 
சுட்டிக் காட்டும் போது  
தரை நோக்கிப் 
பயந்து நிற்கும் 
தாய்மாரையும் தந்தைமாரையும் 
கண்டிருக்கிறீர்களா ?
இங்கு காண்பீர்கள் !

விவரம் புரியாத வயதில் 
ஆசிரியரின் உறவை விட 
விவரம் புரிந்த பின் 
விதிவசத்தால் ஏற்பட்ட 
உறவு - வரமாகும் என்பதை 
உணர்ந்தோம் !

தெய்வம் கை விட்டதோ என்று 
மாதாவும் பிதாவும் கை பிசைந்த போது 
கை கொடுக்கத் துணையாய் வந்த 
குரு ! - நீங்கள் 
எந்நாளும் இப்பிள்ளைகட்குத் 
தெய்வத்தின் 
உரு !

ஐந்தில் வளையாதது 
ஐம்பதில் வளையாது என்பர் !
அதுபோல் 
ஐந்தில் கேட்காதது 
ஐம்பதில் கேட்பது கடினமென 
உணர்த்தி 
ஐந்திலேயே அனைத்தும் 
கேட்க வைத்தீர் !

தோளுக்கு மிஞ்சினால் மட்டும் 
தோழன் அல்ல !
தோளில்  சுமக்கும் வயதிலும் கூட 
இப் பிள்ளைகள் 
தோழர்களே என்று 
தொலைநோக்குடன் 
கள்ளமில்லாப் 
பிள்ளை நட்பை 
பிசைந்து அளித்தீர் !

எம் பிள்ளைகள் இன்று 
கேட்பதற்கும் பேசுவதற்கும் 
Hearing Aid ஐ விட 
உங்கள் 
Hearing Aim தான் 
முக்கிய காரணி என்பதை 
நாளும் மறவோம் !

எதுவுமே புரியாமல் 
நச்சரித்த  பிள்ளைகளை 
நயமாய் 
உச்சரிக்கும் பிள்ளைகளாய் 
மாற்றியவர் நீவிர் !

சிறுதுளி பெருவெள்ளம் என்பர் !

மொழிவளம் என்னும் 
பெருவெள்ளச்  சாரத்தை 
சின்னஞ்சிறு காதுகளுக்கு 
ஏற்றார் போல் 
புதியதோர் புனல் கொண்டு 
சிறுதுளியாய் மாற்றிப் 
புகட்டியவர் நீவிர் !

இசைக்கு மொழி தேவையில்லை என்பர் !
எம் பிள்ளைகளின் 
மொழியே எமக்கு இசையென 
ஆன நிகழ்வு 
வெளியார்க்குப் புரியாது !

கடவுளைக் கண்டவர் 
விண்டிலர்;
விண்டவர் 
கண்டிலர் என்பர் !

இங்கோ...

கண்டவர் விண்டுவர்;
விண்டவர் நிச்சயம் கண்டவர்தாம் 
என்றுணர்ந்தோம் !

சேர்ந்து வடம் பிடிக்க 
இந்தத் தேர் 
நகர்கிறது மெதுவாய் ..

இனி 
ராஜ பாட்டையில் 
வேகமெடுக்கும் என்ற 
நம்பிக்கையில் 
பயணம் தொடர்கிறது !

வருங்காலத்தில் 
இப்பிள்ளைகளுக்கு 
வானம் வசப்படட்டும் !
எல்லைகள் - இனி 
இல்லாது போகட்டும் !

கதிரவன் 
விடியலுக்கு வித்திடுவது போல் 
இப்பள்ளி 
விடியலையே 
இறைவனுக்குப் 
படையலாக்கட்டும் !

எதிர்காலத்தில் 
எம் பிள்ளைகள் 
எம்மொழியிலும் பேசும் 
ஒவ்வொரு வார்த்தையும் 
நாளும் உரக்க ஒலிக்கும் 
உமக்கு 
'நன்றி ' என்னும் 
ஒரே பொருளுடன் மட்டும் !

ஆனால் - 
நிச்சயம் 
'நன்றி' என்னும் 
வார்த்தையே 
நாணம் கொள்ளும் 
இச்சேவைக்கு 
நான் - ஈடா? என்று ..

வாழ்க பால வித்யாலயா !
வாழ்க பால வித்யாலயா !

அன்புடன் 

ஈ. . ரா 

(அபிராமி அப்பா )
28-3-2016
9790902334 

Tuesday, July 28, 2015

புதிய தலைமுறைக்குப் பொறுப்பான போதிமரம் !




எதிர்க்கலாம் என்று எவரும்
நினைக்க முடியாத எங்கள் கலாம்.

நீர்
விதைகளையும் விழுதுகளையும் கோடிக்கணக்கில்
விட்டுச் சென்ற ஆல மரம்..

புதிய தலைமுறைக்குப் பொறுப்பான போதிமரம் !

இத் தேசத்தின் ஸ்தூலம் மறைந்த ஸ்தல விருட்சம் !

 நீர்
விழுந்து விடவில்லை !
விட்டுச் செல்ல மனம் இன்றி
வீற்றிருக்கின்றீர் இதயங்களில் ..

நீர்
தாடி மீசையோ மழுக்கிய தலையோ
தலை மறைப்போ காவியோ வெள்ளுடையோ மட்டும்
கொண்டிராத கொள்கை ஞானி !

மரங்கள் மறைகின்றனவே என்று நாங்கள்
கன்னத்தில் கை வைத்து புலம்ப மட்டுமே செய்தோம்..
நீரோ
உம் கைகளுக்குள் விதைகளை கொண்டு சென்று
செல்லும் வழி எல்லாம் தூவிச் சென்றீர் !

நீர்
புலம்பியதே இல்லை ! - ஏனெனில் 
உம் கண்களுக்கு எதிர்காலம் எப்போதுமே புலனானது ! 

நாங்கள் தொலைந்ததையே தேடிக் கொண்டிருந்த போது -
நீர்
தொலைவில் புதிதாய் அதையே கண்டு கொடுத்தீர்!

நீர்
அணு சக்தியை உள்ளே வைத்திருந்தும்
அன்பு சக்தியால் எங்களை ஆட்கொண்டீர்!

எப்பொழுதுமே
உம் புன்னகையின் கவர்ச்சி
முதல் முறை முகம் பார்க்கும் 
குழந்தையின் சிரிப்பைப் போலே
 கள்ளங்கபடமற்றது !

 நீர்
உம் கனவுகளை
மற்றவர் உறக்கத்திலும்
தோன்றச் செய்த
விந்தை விஞ்ஞானி !

அரசியலை நினைத்து நாங்கள் நொந்த போது
நீரோ
இதுதான் இன்றைய 'அரசு இயல்' என்று அதை
இயல்பாக எடுத்துக் கொண்டீர் !

சமூகக் கால்வாய் நாறுகிறதே என்று
நாங்கள் கவலைப்பட்ட போது 
தூரத்தே தெரிந்த இளைஞர் கூட்டமென்னும்
காட்டு வெள்ளம் ஒருநாள் பாதை தேடி
புது நீராய்ப் பாயும் என்று நீர்
பொறுமையாய் நம்பி இருந்தீர் !

நீர்
நவீன இந்தியாவின் சிற்பி !
உம்மால் மட்டுமே இச்சிலையை வடிக்க முடியாதென
உணர்ந்து
கோடி உளிகளை
குழந்தைகள் கையில் கொடுத்தீர் ! 

உம்மை தந்தை என்றோ மாமா என்றோ
தாத்தா என்றோ நாங்கள் அடையாளம் காட்ட மாட்டோம்!
ஏனெனில்

நீர் எல்லா வயதினருக்கும் தோழனாவீர் !

உம் தலையில் எல்லா தலைமுறைக்கும்
தகவல் தகைந்து கிடந்தது!

அரசன் ஆட்சி செய்ய வேண்டியது
மண்ணை அல்ல மனங்களை என்பதை 
நீர் முற்றிலும் உணர்ந்தவர் !

முடிந்தவன் சாதிக்கிறான்
முடியாதவன் போதிக்கிறான்
என்பது பழமொழி .. ஆனால்
நீரோ 
சாதிக்கவும் செய்தீர்
போதிக்கவும் செய்தீர்..!

நீர் மதச்சார்பற்றவர் கிடையவே கிடையாது!
எல்லா மதத்தவற்கும் சார்பானவர் !

இன்றுதான் புத்தர் சிரித்தாரோ ? -
நீர் மீண்டும் அவரிடமே வந்து விட்டீர் என்று !!

இன்றுதான் இயேசு பிரான் கைகளை நீட்டினாரோ - உம்மை வாரி அரவணைக்க ?

இன்றுதான் இறைவன் சற்றே நகர்ந்து அமர்ந்தாரோ? - 
உமக்கும் இடமளிக்க?

நாங்கள் தவிக்கவில்லை !

நீர் உயர்ந்தவர்- அங்கேயே இரும் !!

மை லார்ட் ! இவர் எங்கள் கட்சிக்காரர் என்று
உலகமே உம்பக்கம் சாட்சி சொல்கிறது!!

இன்றுதான் தேசத்தையே
தேசியக்கொடி மூடியதைப் பார்க்கிறோம் !

உம் இதயம் இந்தியா இந்தியா
என்றே துடித்தது இறுதி வரை !

நீர் பிற நாடுகளையும்
புற நானூற்றைப் பேச வைத்தீர் !

நீர் திரும்பிய இடமெல்லாம்
திருக்குறளை திகட்டாமல் அளித்தீர் !

ஐயா
உம்மை மறத்தமிழன் என்றோ முதல் குடிமகன் என்றோ
ஆசான் என்றோ விஞ்ஞானி என்றோ கவிஞர் என்றோ
ஒரு கூட்டுக்குள் அடைக்க முடியாது !

 நீர்
பிரபஞ்சம் முழுதும் நிறைந்த பிரயாணி !

 நீர்
 வழிப்போக்கனாய் மட்டும் வாழாமல் 
செல்லும் வழியெல்லாம் புதிதாய்ச்
 செப்பனிட்டுக் கொண்டே சென்றவர் !

ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது !
ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாற்ற மட்டுமே முடியும் !

நீரோ பேராற்றல் !
நீரின்றி அமையாது உலகு !
நீர் நாங்களாக மாறி விட்டீர் !

உம் பயணத்தைத் தொடரும் -
எம் கனவுகளிலும் செயல்களிலும் !!!

 ஜெய் ஹிந்த் !! ஜெய் ஹிந்த் !! ​​

​​​​​​​​​​ உணர்வும் ஆக்கமும் --- ஈ. ரா. என்னும் சாமானியன் ! 9790902334

Monday, November 21, 2011

பதினொரு மாதங்கள் பதினொரு நாட்களுக்குப் பின்



பதினொரு மாதங்கள்
பதினொரு நாட்களுக்குப் பின்..
இந்தப்
பதியனில்
பதிக்கும் முயற்சி

இம்முறை
தொடர்ந்து
மலர வேண்டும்
என்ற எதிர்பார்ப்பு
உள்ளுக்குள்

காலச் சூழ்நிலையும்
காலன் நிகழ்த்திய
பேய்க் காற்றும்
ஓய்ந்து விட்டதுபோல்
ஓர் உணர்வு

தாழ் விலக்கி
வெளிவர
கதவருகில் துடிக்கும்
கனவுகள்

என்னத்தாலோ
கட்டுப்படுத்தப்பட்ட
சுருக்கு நெகிழ்ந்த
எண்ணத் தாள்கள்

துளிர்க்கத்
துடிக்கும்
தூரிகை முனை

இறைவா
இது தொடர்ந்திட
துணையாய்
தொடர்ந்திடு.

படம் : இணையத்திலிருந்து

Saturday, December 11, 2010

தலைவா நீ வாழ்க

இந்த ஆண்டு மிகை இல்லாமல் யதார்த்தமாக தலைவரைப் பற்றி எழுதவேண்டுமென்று நினைத்து ரசிக நண்பர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்..



நாற்பதாண்டுகளுக்கு முன்
நீ
கண்டக்டர் -
ஆனால்
இன்றைக்கும்
உம் காந்தக்
கண் டக்கர் !

உனக்கு
எந்த ஸ்டேஜில்
நிறுத்த வேண்டும்
என்றும் தெரியும் !
எப்போது
"போலாம் ரைட்" என்று
டபுள் விசில்
கொடுக்கவேண்டுமென்றும்
தெரியும் !

நீ அகலக்கால் வைத்துவிட்டு பின்பு
யாசிப்பது இல்லை !
ஆனால்
வைத்த கால் அகலக்கூடாது
என்பதற்காக நிறைய
யோசிப்பது உண்டு !

நீ
உன் முதுகில்
குத்தும்
அம்புகளையும்
நம்புபவன் !
எவர்
நட்டமடைந்தாலும்
மனம்
வெம்புபவன் !

உன்
யதார்த்தமான
சிரிப்புக்குக் கூட
ஏதேதோ அர்த்தம்
கற்பிக்கப்படும் !

உன்
சாதாரண
வார்த்தைகளுக்குக் கூட
பொழிப்புரைகளும் தெளிவுரைகளும்
பொங்கி வரும் !

நீ
வம்பே வேண்டாமென
விட்டுக் கொடுத்தால்
வானம் பார்க்கும்
வாயில்லா ஜீவன்களுக்குப்
போட்டி வரும் !
வண்டி வண்டியாய்
பேட்டி வரும் !!


அதெப்படி
உன் அசைவில் உதிர்ந்த
கனிகளை மடியில்
கட்டிக் கொண்டே
கல்லெறியத்
துடிக்கின்றன
பல கைகள் ?

அது ஏன்
உன் வாக்கு ஸ்தானத்தை
மட்டுமே
உற்று நோக்குகின்றன
பல்லாயிரம்
ஏழாம் பார்வைகள் ?

நீ
நின்றால் குற்றம்
உட்கார்ந்தால் குற்றம்
என்று
பல பேர் குதிக்கிறார்கள் !

ஏனென்றால்
அவர்களுக்குப் பயம்
நீ
ஒருநாள்
நிற்க வேண்டிய இடத்தில்
நின்று
அமர வேண்டிய இடத்தில்
அமரப் போகிறாய் என்று !

நீ
வெற்றி மாலைகளை
தோள்களில் ஏற்பதில்லை !

ஏனெனில்
கணப் பொழுதில் அவற்றை
உன் சகாக்களின்
கழுத்துக்கு
மாற்றி இருப்பாய் !

உன் சகாக்களோ
தோல்வியையே
ருசித்ததில்லை !

ஏனெனில்
இமைப்பொழுதில்
முன்னே வந்து
சூழ்ச்சிக் கத்திகளை
நீ மட்டும்
மார்பில் சுமப்பாய்..!

இதில் அதிசயம்
ஏதுமில்லை !
ஏனெனில்
நீ அந்த
அருணாச்சல நீலகண்டனின்
பக்தன் அல்லவா ?

எங்கள் தலைவனே !
நீ
கூட்டமான பேருந்திலும்
இப்படி நுழைந்து
அப்படி வெளியேறி விடுவேன்
என்று இனியும்
பெருமைப்பட்டுக் கொள்ளாதே !!

உள்ளே நுழைந்த
நீ
வெளியேற முடியாத
இடம் ஒன்று உள்ளது...
அது

எங்கள் இதயம் !!!

வாழ்க ரஜினி....

Friday, December 10, 2010

பாரதிக்கு கழுதைகள் பிடிக்குமாம்



சிந்து நதியின் மிசை நிலவினிலே
தில்லி நன்னாட்டிளம் பெண்களுடனே
ஆங்கில டேப்புகளில் பேரங்கள் பேசி
ஸ்பெக்ட்ரங்கள் விற்று விளையாடி வருவோம்..

ஆஆஆஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆ

கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்
குடோன்களில் அழுகவைத்து தூக்கி எறிவோம்
சிங்க மராட்டியர் தம் மிரட்டல் கொண்டு
ஏழை பிஹாரி கைகால் மாறு கொள்வோம்

சிங்களத் திமிரினுக்கும் பாலமமைப்போம்
சேதுவை உடைத்திடவும் திட்டமிடுவோம்
வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்
வருடங்கள் தோறும் உயிர் பறிப்போம்

-------------

கழுதைகளே இன்றைக்கு என்னை மன்னியுங்கள்


-----------

படம் : பாரதி திரைப்படப் பாடல் , இணைய காணொளியில் இருந்து


ஈ.ரா

பாரதி



கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி

_______________________________________________________

நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்

_______________________________________________________

சொல்லடி, சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்
வல்லமை தாராயோ ? – இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே.!
_________________________________________________

தேடிச் சோறு நிதந்தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?

____________________________________________________

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே - இதை
வந்தனை கூறி மனதில் இருத்தி என்
வாயுற வாழ்த்தேனோ - இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?

__________________________________________________


- பாரதி

Wednesday, November 10, 2010

கமல் கலைஞர் சந்திப்பும் மஞ்சள் சால்வையும்

எப்போவுமே சீரியஸா எழுதுறதுனால ஒரு சேஞ்சுக்கு இந்த பதிவு,,
சும்மா ஜாலிக்குத் தான், யாரும் சீரியஸ் ஆகாதீங்க...











Friday, November 5, 2010

ரஜினி என்னும் சாதாரண மனிதரின் பேட்டி



தனியார் தொலைக்காட்சிகள் வந்து இந்த பதினைந்து ஆண்டுகளில் அமிதாப் முதல் அனுஷ்கா அத்தனை பேரும் பல சேனல்களில் திரும்பிய பக்கமெல்லாம் பல பேட்டிகளில் தோன்றும் காலத்தில், தனிப்பட்ட முறையில் எந்த தொலைக்காட்சிக்கும் பேட்டி தருவதில்லை (தொன்னூறுகளில் தூர்தர்ஷன் தவிர ) என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருந்த சூப்பர் ஸ்டார், சன் நிறுவனத்திற்கு கொடுத்த வாக்கிற்காக முதல் முறையாக ஒரு தனிப்பட்ட பேட்டியை இந்த தீபாவளி விருந்தாகக் கொடுத்தார்.

கரன் ஜோஹார் போன்றவர்களுக்கும், வட இந்திய மீடியா ஜாம்பவான்களுக்கும் கூட கிடைக்காத மாபெரும் வாய்ப்பு சன் டிவியின் விஜய்சாரதிக்கு கிடைத்தது. படம் சம்பந்தப் பட்ட பேட்டியாகவே இது அமைந்ததால் பெரும்பாலும் கேள்விகள் எந்திரன் சார்ந்ததாகவே இருந்தன.

எந்திரன் தயாரிப்பாளர்கள், படத்தின் வெற்றி சாதனைகள், தமிழ் திரையுலகின் மைல்கல் என்ற எல்லாவற்றையும் தாண்டி, ரஜினி என்ற சாதாரண மனிதரின் பேச்சாகவே இந்த நிகழ்வு முழுதும் இருந்தது.

எந்திரனில்
என் திறன் மட்டும் இல்லை
இது
எம் திறன்
என்று
சொல்லாமல் சொன்னார் சூப்பர் ஸ்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு முன் "எந்திரன் உருவான விதம்" மட்டும் ஒளிபரப்பாகவில்லை என்றால், இந்த மனிதர் பட்ட கஷ்டம் வெளியே தெரியாமலே இருந்திருக்கும்.. அவராக வாயைத் திறந்திருக்க மாட்டார். விஷயம் தெரியாதவர்கள் எல்லாம் ரஜினியும் எந்திரன் டீமும் பட்ட கஷ்டங்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடியாமலே போயிருந்திருக்கும்.

எல்லாம் கிராபிக்ஸ், கிராபிக்ஸ் என்று சொல்லிவிட்டு ரஜினி ஒன்றுமே செய்யாதது போல் பேசி வந்த அனைவரின் வாய்க்கும் ஒரு நவ்டால் பூட்டு (நன்றி கிரி. சிங்கப்பூர்) போடப்பட்டு விட்டது. அதற்காக சன் டிவிக்கு ஒரு நன்றி.

உடல் ரீதியாக தலைவர் எவ்வளவு கஷ்டப் பட்டிருக்கிறார் என்பது இப்போதுதான் தெரிந்தது. உடம்பெல்லாம் வலிக்கிறது என்று தன்னிடம் குறிப்பிட்டதாக சில நாட்களுக்கு முன் வைரமுத்து கூறியபோது அவ்வளவாக நமக்குப் புரியவில்லை. இப்பொழுதுதான் அந்த வலி நமக்கு தெரிந்தது. சும்மா இப்படி அப்படி என்று ஸ்டைல் மட்டுமே காட்டிக் கைதட்டலை பெற முடிந்த ஒரு மாபெரும் கலைஞன் இப்படி தன்னை வருத்திக் கொண்டதைப் பார்த்த போது அவரது தொழில் பக்தியும், கடும் உழைப்பும் கண்கலங்கச் செய்தது. அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு இவர் அத்தியாவசியப் பாடம் என்று உணரச் செய்தது.

சூப்பர்ஸ்டார் "எல்லா புகழும் இறைவனுக்கே " என்று கூறி ஆரம்பித்த உடன் , விஜய் சாரதி இது ஏ.ஆர். ரகுமான் சொன்னதைப் பின்பற்றியா என்று கேட்டதற்கு சற்றும் தயங்காமல் "ஆமாம்" என்று சொல்லி சிரித்தார் ரஜினி. ரஜினி ரசிகர்கள் அல்லாதவர்களைக் கூட டி.வி முன் நிமிர்ந்து உட்கார வைத்த நேர்மையான பதில் அது!

தான் இந்த படத்திற்காக பட்ட சிரமங்கள் குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளவே இல்லை சூப்பர் ஸ்டார். உதாரணமாக இரண்டு மணி நேரம் மேக்கப் போட்டதை பற்றி குறிப்பிட்ட போது, மேக் அப் வுமன் பானு, ஜஸ்ட் ரெண்டு மணி நேரத்தில் முடித்து விடுவார் என்று பாராட்டினார்.

சில காட்சிகளைப் பற்றி விஜய்சாரதி புகழ்ந்தபோது, "நைஸ் இல்ல?, நல்லா இருந்தது இல்ல? என்று ஒரு குழந்தை போல ரஜினி மகிழ்ந்தது உண்மையாக இருந்தது.

அவரது பல பதில்கள் சுவாரஸ்யத்தின் உச்சம் என்றால் மிகையல்ல.

முதலில் ஷங்கர் தன்னை வில்லனாக மட்டும் நடிக்க கூப்பிடுகிறார் போலும் என்று நினைத்து பின்னர் ஹீரோ ரோபோவே நீங்கள்தான் என்ற போது "இந்த வயதில் என்னால் நடிக்க முடியுமா ?" என்று தான் கேட்டதாக அவர் வெளிப்படையாக கூறிய போது எல்லோரும் அசந்து போயிருப்பார்கள். இந்த மனிதருக்குத்தான் எத்தனை நெஞ்சுரம்? தன்னோடு நடித்த ஐஸ்வர்யா ராய்க்கு நன்றி தெரிவித்ததாகட்டும், படம் பார்க்கும் மற்றவர்களை நாம் கஷ்டப் படுத்தக்கூடாது என்று யோசித்ததாகக் கூறியதாகட்டும், ரஜினி எந்த அளவிற்கு தன்னை மிகச் சாதாரணனாக நினைக்கிறார் என்பதை தெளிவாகக் காட்டியது. இத்தனைக்கும் ஐஸ்வர்யா ராயின் முந்தைய தமிழ் படங்கள் எதுவும் மிகப் பெரிய வெற்றியைப் பெறவில்லை. (அவரது முந்தைய ஜோடிகள், பிரசாந்த், பிரகாஷ் ராஜ், அப்பாஸ் (கொஞ்சூண்டு மம்முட்டி), பிருதிவிராஜ் ஆகியோர் ).

ஷங்கர் ஷங்கர் ஷங்கர்...இதுதான் ரஜினி அதிகமாக உச்சரித்த வார்த்தை! ஒரு புதுமுக நடிகர் எப்படி இயக்குனருக்கு பயந்து, மரியாதை செலுத்தி பேசுவார்களோ அதை விட பல மடங்கு அதிகமாக ஷங்கரை புகழ்ந்து தனக்கு இதில் மிகச் சிறிய பங்கு இருப்பதாகவே கூறினார்.

படத்தின் ஹை லைட்டான "மே மே " காட்சியைக்கூட தன்னை விட ஷங்கர் நன்றாக செய்வார் என்று அவர் கூறிய போது நான் ஒரு நிமிடம் ஸ்டன் ஆகிவிட்டேன். எனக்கு தெரிந்து மற்ற எந்த பெரிய நடிகர்களும் இந்த அளவிற்கு தன் இயக்குநர்களைப் பற்றி பேசி பார்த்ததேயில்லை. இத்தனைக்கும் ஒரு படம் வெற்றி பெற்றால் திரும்பிய சேனல்களில் எல்லாம் சோபாவில் உட்கார்ந்து கொண்டு நம் ரிமோட்டின் சாபத்தை வாங்கி இருப்பார்கள். இவரோ படம் வெளியாகி அனைத்து சாதனைகளும் படைத்த பிறகு வந்து அமைதியாகப் பேசுகிறார்.

ஒரு டென்ஷனான காட்சியை முடித்தவுடன், கேரவனுக்கு அவசரமாக சென்று ஒரு டீய சாப்பிட்டுட்டு தம் அடிச்சுட்டு வந்தேன் என்று அவர் அசால்ட்டாக சொல்லி விட்டு உடனேயே ஐயோ சொல்லலாமா என்று நாக்கை கடித்து ஒரு எக்ஸ்ப்ரச்ஷனுடன் சிரித்துக் கொண்டே சைடில் கேமராவைப் பார்த்தாரே... அப்போது குளோபல் ஸ்டார் எல்லாம் தெரியவில்லை, சாதாரணமாக ஒரு பெயிண்டரோ, கார்பெண்டரோ, நம் சக நண்ப ஊழியரோ நம்முடன் பேசியதாகத் தான் தெரிந்தது. அடுத்த நிமிடம், விஜய்சாரதி நீங்கள் ஏன் இப்போது படங்களில் சிகரெட் பிடிப்பதில்லை என்று கேட்ட போது, அதான் பிடிக்கக் கூடாது என்று சொல்லி விட்டார்களே, இட்ஸ் குட் என்றார்.. (கடவுளே, தலைவர் சீக்கிரம் இதை குறைத்து கொண்டு நல்ல ஆயுளுடன் ஆரோக்கியமாக நீண்ட நாள் இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டேன்) .

ஒவ்வொரு நடிகருக்கும் அவர் கடைசியாக நடித்த படம் தான் அளவுகோல். அது சரியாகப் போகவில்லை என்றால் மதிப்பில்லை. தான் இருப்பதால் மட்டுமே ஒரு படம் வெற்றி பெற்று விடாது. சிறந்த இயக்குனர், பாடல்கள், தொழில் நுட்பம் எல்லாம் அமைந்தால் தான் ஒரு படம் வெற்றி பெறும். ஒரு படத்தின் வெற்றிக்கு அறுபது சதவீதம் திட்டமிடுதலும், நூறு சதவீதம் ஆண்டவன் அருளும் தான் காரணம் என்று கூறிய சூப்பர் ஸ்டார் ஹைலைட்டாக என்றைக்கும் வெற்றி மட்டுமே நிரந்தரமானதல்ல, இப்போது எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது அதனால் புகழ் கிடைத்திருக்கிறது, அடுத்த படம் சரியாக போகவில்லை என்றால் அவ்வளவுதான் என்று கூறியபோது அவர் எந்த அளவிற்கு நிதானமாக இருக்கிறார் என்று தெரிந்தது.

தசாவதாரத்தில் கமல் பத்து வேடங்களில் நடித்ததற்கு முன் தான் மூன்று வேடங்களில் நடித்தது ஒன்றுமே இல்லை என்று அவர் சொன்ன போது, அவர் பெருந்தன்மையை நினைத்து வியந்தேன் . தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தன் நண்பர் கமலை புகழ்ந்து பேசுவதில் ஆகட்டும் தன் படக் காட்சிகளில் கமல் பற்றிய வசனம் வைப்பதில் ஆகட்டும் (முத்து - பெரிய கமலஹாசன் என்று நினைப்பு, சிவாஜி - சும்மா கமலஹாசன் மாதிரி ஆகறேன் பாரு, எந்திரன் - கமலஹாசன் போன் நம்பர் தான் எல்லோருக்கும் தெரியுமே) தான் எந்த அளவிற்கு கமலை நேசிக்கிறேன் என்று சூப்பர் ஸ்டார் நிரூபித்து வருகிறார். இந்த அளவு உண்மையாக ஈகோ இல்லாமல் வேறு யாராவது இருக்க முடியுமா என்று தெரியவில்லை.

தன் வேகம் தான் தனக்கு பாலச்சந்தரிடம் வாய்ப்பு வாங்கித் தந்தது என்று சொல்லி விட்டு தான் கண்டக்டராக இருந்தபோது கூட வேகமாக டிக்கெட் கொடுப்பேன் என்று தன் பழைய வாழ்க்கையை நினைவு கூர்ந்தபோது, என்ன என்றே சொல்லத் தெரியாத ஒரு உணர்வு மனதில் தோன்றி ஒரு நெகிழ்ச்சி ஏற்பட்டதை மறுக்க முடியாது!

சூப்பர் ஸ்டாரிடம் ஒரு கதை சொல்லுமாறு கேட்ட போது, ஒரு அரசன் எப்படி ஐந்தாண்டுகளில் புதிய அரசாங்கத்தை உருவாக்கி மரணத்தில் இருந்து தப்பினான் என்று நம் நண்பர் சுந்தர் பகிர்ந்த கதையைக் கூறி ஆச்சர்யப்படுத்தினார். வாழ்த்துக்கள் சுந்தர்!

மதம் என்பது ஒரு வழி, ஆனால் அதை விட ஆன்மிகம் மிக முக்கியமானது.. எல்லாவற்றையும் விட அது மிகவும் கடினமானது... குரு அருள் இருந்தால் மட்டுமே அதை அடைய முடியும் என்று மிகத் தெளிவாக அவர் கூறிய போதும் தியானம் ஒரு அமைதி நிலையையும், தெளிவான முடிவெடுக்க உதவியையும் தரும் என்று சொன்ன போதும், உண்மையான ரசிகர்களுக்கு இதை விட ஒரு வழிகாட்டுதலைத் தர முடியாது என்பது புரிந்தது.

பேட்டி எடுத்தவரிடம் ரொம்ப ஆழமான கேள்விகளைக் கேட்கிறீர்கள்.. ஆன்மீகத்தில் நான் முதல் படியைத்தான் வைத்திருக்கிறேன்.. அது மாபெரும் பயணம் என்று சொன்ன போது இந்த மனிதர் நிச்சயம் அந்த லட்சியத்தை அடைவார் என்று தோன்றியது.

உண்மையில் மனதிற்கு மிகவும் நிறைவாக இருந்தது. ஹேப்பி திவாளி சூப்பர் ஸ்டார்.

Friday, October 1, 2010

தேசப் பிதா


நீ
பாரெங்கும்
போரின் பந்தத்தை
வேரறுக்க
போர்பந்தரில் பிறந்த
புனிதக் குழந்தை !

நீ
சென்ற நூற்றாண்டின்
சிராவணன் !
அதிசயமாய் வந்த
அரிச்சந்திரன் !

நீ
கொடுத்த
வாக்கையே
வாழ்க்கையாய்க்
கொண்டவன்!
நீர் காற்று மட்டுமே
நெடுநாள் உணவாய்
உண்டவன் !

நீ
கறுப்பர் இனத்துக்கு
கடவுள் தந்த
பிரதிநிதி !
கருணை குணத்திலோ
கடவுளின்
பிரதி நீ !

உனது
ஒற்றை பார்வை
பல
துப்பாக்கிகளை
துவளச் செய்தது !

உனது
வெற்று மார்போ
பல
பீரங்கிகளை
மழுங்கச் செய்தது !

காலாற
நடந்து விட்டு வரலாம்
என்பர் பல பேர் !
நீயோ
நடந்து கொண்டே
இருந்ததால்
உன் கால்களை
என்றைக்கும்
ஆற விட்டதே இல்லை !

நங்கையரின்
எழில் கூந்தலும்
நாணித் தலைகவிழும்
உன்
மொட்டைத் தலையின்
கவர்ச்சி கண்டு !

ஒரு
சாம்ராஜ்யத்தையே
அசாதாரணமாய்
அடிபணிய வைத்த
உன்
பொக்கைச் சிரிப்பு
போக்ரானை விட
வலிமையானது..!

ஆட்டுப் பாலும்
அரைக்கடலையுமே
உனக்கு
ஆகாரம் !
ஆனாலும் இன்றைக்கும்
அகிம்சையின் வெற்றிக்கு
நீயே
ஆதாரம் !

நீ
நித்தியம்
அனுபவித்த
சோதனை எல்லாம்
உனக்கல்ல -
சத்தியத்திற்கே !

நீ
உன்னைப் பற்றிய
உண்மைகளை
ஒளிவு மறைவின்றி
உலகிற்குச் சொன்னவன் !
என்றைக்கும்
ஒடுக்கப்பட்ட
மக்களின்
ஒரே ஒரு மன்னவன் !

நீ
அன்பை மதமாக்கி
அருளின்
வழி நின்றாய் !
அடித்தட்டு சனங்களை
அரியின் சனம் என்றாய் !

நீ
அரியாசனம் தன்னை
அடுத்தவர்க்கு தந்தாய் !
அறியா சனத்திற்கும் நீ
அன்பான தந்தாய் !

உன் மனம்
தெளிந்த குளம் போல்
இருக்கிறதே என்ற
பொறாமையில்
மதக் கல்லை
விட்டெறிந்து
பதம் பார்த்தவர்கள்
எம் முன்னோர் !

ஊருக்கே உப்பிட்ட
உன்னை மறந்து
உண்டு கொழுத்து
உப்பி(வி)ட்டோர்
எம் தலைவர் !

அதனால்தானோ
என்னவோ
எங்கள்
நெஞ்சுக்குள்ளே
இருக்க வேண்டிய நீ
சற்றே தள்ளி

சட்டைப் பைகளில்
கசங்கலாய் ...... !

-----------

ஈ. ரா

(மீள் பதிவு.. படம் : இணையம் )