Tuesday, October 27, 2009

செவப்புத் தோல் - சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009

ரொம்ப நேர அமைதிக்குப் பின் கோபாலே தொடர்ந்தான்.."நாளைக்கு காலையில சுரேஷ் வீட்டுக்குப் போகப் போறேன். அவனும் அவங்க அப்பா அம்மாவும் டவுனுக்கு கலியாணத்துக்குப் போறாங்களாம். சரோ மட்டும்தான் வீட்ல இருப்பா. இத விட்டா எனக்கு வேற சான்ஸ் கிடைக்காது. நாளைக்கே மேட்டர முடிக்கப் போறேன்"

அடப்பாவி! சுரேஷ்தான் காலையில இருந்து இங்க வரவேயில்லையே, உனக்கு யார்டா
இதைச் சொன்னா?

"ஏண்டா அவன் சொல்லலேன்னா என்ன? பால் வாங்கப் போனப்போ சரோவே என்கிட்டே சொன்னா தெரியுமா?"

"டேய்! அவ பாவம் சின்னப்பொண்ணுடா! உன்னோட கேவலமான புத்தி தெரியாம வெள்ளந்தியா உளறி இருக்கா. எனக்கென்னமோ நீ பண்ணப்போற லூசுத்தனத்தால அந்தப் பொண்ணுக்கு அடி விழுகப் போகுதோன்னு தோணுது. அவன் இல்லாதப்போ உன்ன ஏன் உள்ள சேர்த்தேன்னு சுரேஷ் அவளைத்தான் வெளுக்கப் போறான். ஐயோ பாவம்" என்று வருத்தப்பட்டான் சுந்தர்.

"டேய் நான் மட்டும் என்ன பிறவியிலேயே கெட்டவனா? எனக்கு என்னமோ அந்த சிவப்புத்தோலப் பார்க்கும் போதெல்லாம், என் கூடவே இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்னு ஏக்கமா இருக்குடா! தூங்கும்போது கூட அந்த நினைப்பாவே இருக்குடா. தயவு செஞ்சு என்ன மாத்தாதீங்கடா.." என்றான் கோபால்.

"அது சரி, ஊருல செவப்பா சிலித்துக்கிட்டு திரியுறதுங்க எல்லாத்துக்கும் அந்த களை வருமா? அதது பொறப்பு அப்படி, ஜாதிடா ஜாதி..!" என்றான் பிரபு.

"டேய் பிரபு, நீ வேற அவன ஏத்தி விடாதடா... சாதியாம் சாதி!" என்று பொருமினான் சுந்தர்.

"இப்ப கடைசியா என்னதாண்டா சொல்றீங்க?" கோபால் நான்கு நண்பர்களையும் பார்த்து எரிச்சலுடன் கேட்டான்..

"எங்ககிட்ட கேட்டா? உன் இஷ்டம்..நீ அப்படித்தான் செய்வேன்னு ஒத்தக்கால்ல நிக்கிற. இதெல்லாம் சரியில்லன்னு நாங்க ஆயிரம் வாட்டி சொல்லியும் நீ முடிவை மாத்திக்கல! அப்புறம் ஏன் எங்க கிட்ட கேட்கிற?- இது கோபு..

"டேய், எத செஞ்சாலும் ஜாக்கிரதையா செய்யு..சுரேஷ் அது மேல உசிரையே வச்சுருக்கான்..நீ மட்டும் இப்படி பிளான் பண்றது அவனுக்கு தெரிஞ்சா நம்ம எல்லாரையுமே பொலி போட்டுருவான்!" எச்சரித்த குரலில் சொல்லிவிட்டுத் திரும்பிக் கொண்டான் கார்த்தி.

சுந்தர் வாயையே திறக்க வில்லை.. அவன் பாட்டிற்கு ஒவ்வொரு கல்லாக எடுத்து குட்டையில் போட்டுக்கொண்டிருந்தான்.

பிரபு கோபாலிடம் லேசாக பேச ஆரம்பித்தான், "மச்சி, இது ரொம்ப தப்புடா, சுரேஷ் நம்ம பிரென்டுடா, நமக்காக என்னெல்லாம் செஞ்சிருப்பான்? உன்னையும் ஒரு நண்பன்னு மதிச்சு வீட்டுக்குள்ள சேர்த்துக்கிட்டு திரியுறான், அவனுக்கு நீ நம்பிக்கைத் துரோகம் பண்ணலாமா? என்ன மாதிரி படிப்ப விட்டுட்டு வேலைக்குப் போறவன் கூட ஒழுங்கா இருக்கானுங்க, உன் புத்தி என்னவோ இப்படி போகுதே? இது ரொம்ப தப்புடா"...

"இத பாரு, ரெண்டு வயசு பெரியவன்னா நீ அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுடிவியே? யார் வேணா என்ன வேணா சொல்லுங்க.. நான் ஒண்ணு மேல ஆசை வச்சுட்டா அதை அடையாம விடமாட்டேன்.. என்ன நடந்தாலும் சரி.. நான் என் முடிவை மாத்திக்க மாட்டேன்.."

அப்படி என்னடா ஆசை? உனக்கு அவ்வளவு ஆத்திரம்னா நாளைக்கு நான் வேலைக்கு போகும்போது ஒரு இருநூறு ரூபா எடுத்துட்டு கூட வா, நானே இத விட சிவப்பா, ஒரு நல்ல குட்டியா அரேஞ்சு பண்ணித் தாரேன்.

"தோடா... வந்துட்டாரு கொலம்பஸ் வழி காட்டுறதுக்கு! கம்முனு போ, அப்புறம் ஏதாவது வாயில வந்துரும்". கோபாலுக்கு கோபம் வந்தவுடன் எல்லோரும் வாயை மூடிக் கொண்டார்கள்..

"இதுக்கு மேலயும் உங்க கிட்ட பேசிட்டு இருந்தா நான் நல்லவன் ஆயிடுவேன் போல இருக்கு. ஆள விடுங்கடா நாளைக்கு சாயந்திரம் பார்க்கலாம்" என்று சைக்கிளை எடுத்தான் கோபால்..

மறுநாள் காலை. கோபால் மெதுவாக சுரேஷ் வீட்டை நெருங்கினான். ஜன்னல் வழியே பார்த்தான். வீட்டுக்குள் யாருமே இல்லை. மெதுவாக சைடு வழியே வேலியை ஒட்டியவாறு கொல்லைப்புறம் நோக்கிச் சென்றான். அங்கே சரோ குளித்துக் கொண்டு இருந்தாள். அவளும் அவனோட ஸ்கூல்தான். கோபாலும் சுரேஷும் + 1 . இவள் பத்தாம் வகுப்பு. ரொம்ப அமைதியான பெண். கோபால் யோசித்தான். சரோவின் சம்மதத்தைப் பெற்று விட்டால் வீண் பிரச்சினை இருக்காதே.. யாருக்கும் தெரியாமல் அடைந்து விடலாம். கடைசியாக ஒருமுறை பேசிப் பார்க்கலாமா என்று நினைத்தான். சில நொடிகள்தான் அந்த சிந்தனை.. அடுத்த கணமே "இவளுக்கோ விவரம் பத்தாது, நாம் பாட்டு இவளிடம் ஆசையை சொல்லப் போக அவள் சுரேஷிடமோ அப்பா அம்மாவிடமோ சொல்லிவிட்டால் அப்புறம் நம்மை வீட்டுப் பக்கமே சேர்க்க மாட்டார்கள்; பந்தோபஸ்தும் அதிகமாகிவிடும்.. அப்புறம் என்றைக்குமே கிடைக்காமப் போயிடும் என்று ஒரு முடிவுக்கு வந்து காத்திருக்க ஆரம்பித்தான்.

ஒரு கண் கிணற்றடியிலும் இன்னொரு கண் வாசலிலும் வைத்து இருந்தான். சரோ திரும்புகிற மாதிரி இல்லை. என்ன செய்வது என்று கையைப் பிசைந்து கொண்டிருந்த போது, சரோ குளித்து விட்டு மெதுவாக திரும்பியவள் கோபாலைப் பார்த்தே விட்டாள்.
அன்று விடியற்காலையிலேயே சுந்தர் அவளிடம் கோபாலின் திட்டத்தைப் பற்றி சொல்லி உஷார்ப்படுத்தி இருந்ததால் சடாரென்று ஒரு முடிவுக்கு வந்தாள். துணியை நன்கு தோளிலும் இடுப்பிலும் சுற்றிக் கொண்டு, அருகில் இருந்த மூங்கில் கம்பை எடுத்துக் கொண்டாள்.

"டேய் கோபாலு, நீ எதுக்கு வந்திருக்கன்னு எனக்கு தெரியும். மரியாதையாப் போயிடு! நீ இப்படிப்பட்ட ஈனப் பயன்னு தெரியாம நானே உன்கிட்ட வந்து எங்க வீட்ல யாரும் இருக்க மாட்டாங்கன்னு சொல்லிட்டேனே..! இன்னும் ஒரு அடி எடுத்து வச்சியின்னா மரியாதை கெட்டுரும்..உனக்கு என்னப் பத்தி முழுசா தெரியாது...கோபம் வந்தா நான் பத்ரகாளி ஆயிடுவேன்.." என்று இரைந்தாள்.

கோபால் இனியும் நேரம் கடத்தினால் வம்பு வளரும்.. ஆனது ஆகட்டும் என்று முன்னால் ஓடினான். ஒரே தள்ளு.. சரோ துணி தோய்க்கும் கல்லைப் பிடித்துக் கொண்டு கவிழ அவன் கொண்டு வந்திருந்த கைப்பையில் இருந்து கிழிக்கப்பட்ட பாதி பெட்ஷீட்டுடன் முன்னேறினான்.. இவ்வளவு நேரம் டேய் கோபாலு என்று சொல்லிக் கொண்டிருந்த சரோ இப்போது "கோபால் அண்ணா, வேணாம்னா, விட்டுருன்னா, அண்ணன் வந்து நீயே இப்படி பண்ணிட்டேன்னு தெரிஞ்சா உடைஞ்சு போயிடும்!" என்று அவன் கால்களைப் பிடித்தாள்.

கோபால் மசியவில்லை.. அடச்சே என்று ஒரே தள்ளில் அவளை எட்டி உதைக்க அவள் மீண்டும் இரண்டடி தள்ளி விழுந்தாள்.. விழுந்த வேகத்தில் நெற்றியிலும் முழங்காலிலும் சிராய்ப்பு ஆகி கண்களில் தாரை தாரையாய் அழுகை வந்து கண்களை மூடிக் கொண்டாள்.. ஒரு நொடி கழிவது ஒரு கணம் போல் இருந்தது. கால்களில் வலி உயிர் போனது.

கண்ணைத் திறந்த போது கோபால் பெட்ஷீட்டையும் பையையும் மார்போடு அணைத்துக் கொண்டு சந்தோஷத்தையும் வருத்தத்தையும் ஒரே நேரத்தில் முகத்தில் காட்டியபடி அவள் காதருகே வந்து "சாரி சரோ, என்ன மன்னிச்சுரு! இனிமே இந்த பக்கமே நான் வரமாட்டேன்" என்று சொல்லிவிட்டு ஓடி ஓடி ஓடியே போய் விட்டான்.

கிணற்றடியிலே அரைமணி நேரம் பிரமை பிடித்தவள் போல் அமர்ந்திருந்தாள் சரோ. மெதுவாக எழுந்து தேம்பித்தேம்பி அழுதவாறே அழுக்கான உடையுடன் ஹாலில் வந்து அமர்ந்து கொண்டாள். சற்று நேரத்தில் வீட்டில் எல்லோரும் வந்து விட்டார்கள். நடந்தது அத்தனையும் அழுதுகொண்டே அவள் சொல்லச் சொல்ல, அம்மாவுக்கும் சுரேஷுக்கும் ஆத்திரம் எகிறியது..பள்ளிக்கூட வாத்தியாரான சுரேஷின் அப்பா மட்டும் எதுவும் பேசாமல் நாற்காலியில் உம்மென்று அமர்ந்திருக்க, மீனாட்சி ஆரம்பித்தாள்,

"அந்த பயல பார்க்கும்போதே நினைச்சேன்... எவ்வளவு அன்பா பழகினோம்... அந்தப் பரதேசி புத்தியை காட்டிட்டான்..அவன் கண்ணை பார்க்கும் போதே களவாணித்தனம் பளிச்சுன்னு இருந்துச்சு.. நான் ஒரு மடச்சி, அவன் சுரேஷ் இல்லாதப்ப பார்த்து அடிக்கடி வாரதும், பிஸ்கட்டு என்னா, பாலு என்னான்னு கொண்டாறதும், அப்படியே கிணத்தடியில இருந்து முழிச்சு முழிச்சு முளுங்குரா மாதிரி பார்க்கிறதும் எனக்கு உரைக்காமப் போச்சே.. பாவிப்பய வெள்ளிக்கிளைமையும் அதுவுமா நிறைஞ்ச வீட்டுல இப்படி கைய வச்சுப்புட்டானே..அவன் விளங்குவானா, அவன் அப்பன் புத்திதான் அவனுக்கும் இருக்கும்! நீங்க போயி அவன் அப்பன் ஆயி கிட்ட நாலு வார்த்தை நாக்கப் பிடுங்குறமாதிரி கேட்டுட்டு வாங்க, இப்படியா ஒரு நாதாரிய வளர்ப்பீங்கன்னு?" மீனாட்சியின் குரல் தெருக்கோடி வரை கேட்டது..

சுரேஷின் அப்பா மாணிக்கம் எவ்வளவோ சமாதானம் செய்தும் அவளை அடக்க முடியவில்லை...

இயல்பிலேயே அமைதியான மாணிக்கத்துக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.."ஏண்டி, அவ என்னடி வளர்க்கறது? நீ என்ன கிழிச்ச? இந்த தொர ரோட்டுல போற தெரு நாயை எல்லாம் கிணத்தடி வரை கூட்டியாந்து குலாவுவாராம்.அதுங்கள பார்க்க வேற நாயிங்கலாம் வருமாம்.. இதுங்க பண்ற கள்ளத்தனத்துக்கு எல்லாம் நான் பஞ்சாயத்துக்குப் போவணுமா? அவன் அம்மா ஒரு பஜாரி, நான் போயி இதக் கேட்டா, நீ யோக்கியமா, உன் மவன் யோக்கியமான்னு என்கிட்டயே கேப்பா! சனியன் ஒழியுதுன்னு விட்டுத்தள்ளு" என்று துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு வாசலில் போய் அமர்ந்து விட்டார்..

மீனாட்சி முனங்கியவாறே சமையல் கட்டுக்குள் நுழைந்தாள்.

சரோ காயங்களுக்குத் தேங்காய் எண்ணெய் போட ஆரம்பித்தாள்..

சுரேஷ் மட்டும் லேசான அழுகையுடன் கிணற்றடிக்கு சென்றான்.. அங்கே கருப்பு நாய்க்குட்டியும் வெள்ளை நாய்க்குட்டியும் பயத்தில் ஒன்றோடு ஒன்று கட்டிக்கொண்டு ஒடுங்கிப் படுத்திருந்தன..

அவன் ஆசையாய் வளர்த்திருந்த சிவப்பு நாய்க்குட்டியை கோபால் தூக்கிக் கொண்டு போயிருந்தான்...

சர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டி

Wednesday, October 21, 2009

ஆசைப்படுங்கள் !


ஆசைப்பட
ஆசைப்படுங்கள் !
அன்புக்கு
ஆசைப்படுங்கள் !

நல்லவை
அனைத்திற்கும்
ஆசைப்படுங்கள்
நமக்கெனவே
எல்லாம் என
ஆசைப்படுங்கள்!

ஆசையின்றி
எதுவும் இங்கே
அசைவதில்லை!
ஆம் !
கருவிழியைக் காக்கும்
ஆசையே
கண்ணிமையின்
அசைவு!
காற்று - மரங்களின்
இல்லற ஆசையே
இலைகளின்
அசைவு!

ஆசைப்படாமல்
எதுவும் கிடைப்பதில்லை!
அப்படிக் கிடைத்தால் அது
என்றும் நிலைப்பதில்லை !

கற்றுக் கொள்ள
ஆசைப்படுங்கள்!- பின்னர்
கற்றதைக் கொடுக்க
ஆசைப்படுங்கள் !

நிலைத்து நிற்க
ஆசைப்படுங்கள்
நிலையாமையே நிலையென
நினைத்திருக்கவும்
ஆசைப்படுங்கள் !

குறிக்கோள்களை
குன்றுகளாளாய்க் குறுக்கிடாமல்
சிகரங்களை
சீக்கிரம் தொட ஆசைப்படுங்கள்!

குனிந்த தலைக்கும்
கூன் முதுகிற்கும்
விடைகொடுத்து
நிமிர்ந்த நெஞ்சுக்கும்
நேர்மைக்கும் ஆசைப்படுங்கள் !

சலிப்புக்களைச்
சாகடிக்கச் செய்து விட்டு
பிரமிப்புக்களுக்குப்
பிறப்பளிக்க ஆசைப்படுங்கள்!

தாயின் கருணைக்கு
ஆசைப்படுங்கள் !
தவழும் மழலையின்
தமிழ் கேட்க ஆசைப்படுங்கள்!

இளமையில் முயற்சிக்கு
ஆசைப்படுங்கள்!
முதுமையில் முதிர்ச்சிக்கு
ஆசைப்படுங்கள் !

வெற்றியின் ருசிகாண
தோல்விக்கு ஆசைப்படுங்கள்!
தோல்வியின் வலி மறைய
வெற்றிக்கு ஆசைப்படுங்கள் !

விடை காண முடியா
வினாக்களுக்கு ஆசைப்படுங்கள்
வினாக்கள் அனைத்திற்கும்
விடைகாண ஆசைப்படுங்கள்!

பிராணிகள் காட்டும்
பிரியத்திற்கு ஆசைப்படுங்கள்
பிறவிகளில் ஒன்று
அவையாக ஆசைப்படுங்கள்!

காதலுக்கு
ஆசைப்படுங்கள் !
காதலித்தால்
காத்திருக்க ஆசைப்படுங்கள் !

Tuesday, October 20, 2009

முத்தம்


மழலைக்கு கிடைத்திடும்
நித்தம் நித்தம்
மறுபடி வேண்டிடும்
நம்தம் சித்தம் !

அன்பு முத்தம்
அன்னையின் முத்தம் !
அவசர முத்தம்
காதலி முத்தம் !

மறந்திட முடியா
முதல் முதல் முத்தம்
படிக்கிற காலத்தில்
பிடித்தவள் முத்தம் !

கவலைகள் மறந்திட
கிடைத்திடும் முத்தம்!
கணவன் மனைவிக்கு
கட்டிலில் நித்தம் !

பிணக்குகள் தீர்கையில்
இணங்கிடும் முத்தம்
மருந்துக்கும் பார்க்காது
சுத்தம் பத்தம்!

முத்தம் என்பதும்
ஒருவகை யுத்தம் !
முடிவினில் ஜெயிப்பது
முனகலின் சத்தம் !

கடல் போல் பெருகிடும்
காதலின் வெள்ளம்
கமண்டலமாக்கி
அடக்கிடும் முத்தம் !

உதடுகள் இரண்டும்
உரசிடும் நேரம்
உள்ளத்தில் இருந்து
உடைந்திடும் பாரம் !

எதையோ தேடிட
எங்கும் வேர்க்கும் !
கண்களை மூடியும்
கருவிழி பார்க்கும் !

மீசை குத்திட
ஆசையும் மீறும் !
வெளிச்சம் மறைய
வெட்கம் தொலையும் !

உடல்தனில் எங்கும்
உரியவர் எச்சம்
ஊடலில் கிடைத்திட
உலகமே துச்சம் !

முத்தம் என்பது
முன்னுரை ஆகும் !
முடிவுகள் இன்றி
மோகத்தில் வேகும் !

சோகத்தை எல்லாம்
சுலபத்தில் கொல்லும்!
சொர்க்கத்தின் எல்லையை
சுலபமாய் வெல்லும் !

உச்சி மோர்கையில்
உறவுகள் பேணும் !
உதடுகள் சேர்கையில்
உச்சங்கள் காணும் !

முத்தம் என்பது -

கட்டிலை ஆக்கிடும்
போர்க்களம் ! - தரும்
போதையில் அது ஒரு
பீர்க்குளம் !

இளமை ஏக்கத்தின்
மொத்த முத்தம்!
இனிதாய்க் கொடுப்பதில்
என்ன குத்தம் ?

முத்தத்தில்
வகைகள் எத்தனை ?
முடிந்த பின்
எதற்கு நிந்தனை ?

டிஸ்கி : வால், இதுவாச்சும் வேலைக்கு ஆகுதா இல்லையா?

Monday, October 19, 2009

பயணங்கள்


பயணங்கள்
பலவிதம்
ஒவ்வொன்றும் ஒரு சுகம்
காண்கின்ற காட்சிகள்
கற்பிக்கும் அனுபவம் !

கருவறை தொடங்கியே
பூமிக்குப் பயணமே -
புரியாத புதிராக
புதியதோர் ஜனனமே !

விடியலைத் தேடியே
விண்மீன்கள் பயணமே -
விடியலில் தொடங்கிடும்
கதிரவன் பயணமே !

காலத்தைக் கா(கூ)ட்டிடும்
கடி முட்கள் பயணமே -
நில்லாது சுற்றிடும்
நிலத்தன்னைப் பயணமே !

கரைகளைத் தேடியே
கடலலைப் பயணமே -
கடல் தன்னில் கரையவே
நதிகளின் பயணமே !

தேவையின் காரணம்
பலரது பயணமே -
தேடுதல் நோக்கியே
சிலரது பயணமே !

இல்லறம் துவங்கிட
இளமையின் பயணமே -
இயற்கையை ரசித்திட
இன்னும் சில பயணமே !


சாதிக்கத் துணிந்தோர்க்கு
சாகின்ற வரைதன்னில்
சரித்திரம் படைக்கவே
சாகசப் பயணமே !

இருக்கின்ற இடம் விட்டு
இல்லாத இடம் தேடும்
தறிகெட்ட மனதிற்கு
முடிவில்லா பயணமே !

அலைகின்ற மனம் நிற்க
ஆன்மீகப் பயணமே
அமைதியை தந்திடும்
ஆழ்மனப் பயணமே !

Thursday, October 15, 2009

முயற்சி செய்


முயற்சி செய்
ஏனெனில்

முயற்சி
முன்னேற்றத்தின்
முதல் படி!
பிரகாசமான
வாழ்விற்குப்
பிள்ளையார் சுழி!

முயற்சி
குறிக்கோளின்
கூட்டாளி!
உனக்காகக்
குரல் கொடுக்கும்
பங்காளி!

முயற்சி
அதிர்ஷ்டத்தின்
அழைப்புமணி!
திறமைக்கோர்
திறவுகோல்!

முயற்சி
உழைப்புப் பயணத்தில்
உற்ற துணை!
சாதனைச் சக்கரத்தின்
அச்சாணி!

முயற்சி
திசையெங்கும் செல்லும்
தென்னையின் வேர்!
திருமகள் ஏறி வரும்
திவ்வியத் தேர்!

முயற்சி
வாழ்வின் வளம் காட்டும்
வழிக் கல்!
வெற்றிச் சாகுபடிக்கு
விதை நெல்!

முயற்சி
சோதனைப் பாதையில்
சுமை தூக்கும் ஒட்டகம்!
சோம்பல் அரக்கன்
நுழைய முடியா பெட்டகம்!

முயற்சி
நீ துவளும் நேரத்தில்
தோள் கொடுக்கும் தோழன்!
நீ வீழும் நேரத்தில்
தாங்கும் விழுது!

முயற்சி
இயலாமையை
ஏறி மிதிக்கும் யானை!
முயலாமையை
முறியடிக்கும் சேனை!

முயற்சி
முடக்கத்தை சுட்டுத்தள்ளும்
துப்பாக்கி!
தாழ்வு மனத்தைத்
தகர்த்தெறியும்
ஆர்டிஎக்ஸ்!

முயற்சி
அனுபவக் கட்டிடத்தின்
அஸ்திவாரம் !
ஆகாயத்திற்கும் உச்சிக்கும்
அடிவாரம்!

எனவே
முயற்சி செய் !
அல்லது
முயற்சி செய்யவாவது
முயற்சி செய் !

தீபாவளி கொண்டாடலாமா கூடாதா ?


தீபாவளியின் வரலாறு என்ன என்பது எல்லாம் பெரும்பாலும் உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்... அதைப் பற்றிய விமர்சனங்களுக்கும் சமீப காலமாக பஞ்சம் இல்லை.....தீபாவளியை ஏன் கொண்டாட வேண்டும் என்ற கேள்விக்கு என் சிற்றறிவிற்கு எட்டியபடி பதில் கூற முயற்சி செய்திருக்கிறேன்...

வட இந்தியாவில் இப்பண்டிகையை எதிர்த்தோ அல்லது மறுத்தோ என்றும் பெரிதாக செய்திகள் கிளம்புவதில்லை...ஆனால் தமிழகத்தில் மட்டும் சலசலத்துக் கொண்டிருக்கும் சில அறிவுக் கொழுந்துகளுக்கும், அவர்கள் கருத்தையும் அவர்களையும் ரசித்துக் கேட்பதால் மனமாற்றத்துக்கு உள்ளாகும் சிலருக்கும் இப்பதிவு....

தீபாவளி - கண்ணன் நரகனை கொன்று நரர்களை பெரும் தீமையில் இருந்து காத்த நாளாக தொன்று தொட்டு கூறப்படுகிறது...

தீபாவளி எதிர்ப்பாளர்கள் கூறுவது என்னவென்றால் கிருஷ்ணன் என்பவரும், அவர் சம்பந்தமான எல்லா விஷயங்களுமே கட்டுக்கதை என்றும் இவை எல்லாம் ஆரியர்கள் அல்லது பிராமணர்களால் அவர்கள் ஆதாயத்துக்காக புகுத்தப்பட்டது என்பதும் தான்....(எனக்கு தெரிந்தவரை, யாரும் தீபாவளிக்காக ஐயருக்கு காசோ அல்லது வேறு ஏதோ ஆதாயம் செய்வதாகவோ,அல்லது பட்டாசுத் தொழிலிலும், ஜவுளியிலும் ஐயர்களுக்கு பெரும்பங்கு இருப்பதாகவோ தெரியவில்லை)

ஆரிய திராவிட மாயை என்பது சுத்த பொய் என்று சில ஆண்டுகளுக்குப் முன் பி.பி.சி. ஆராய்ச்சி முடிவை வெளியிட்டபோது, அது பிரபலம் அடையவில்லை. அதே சமயம் பல ஆண்டுகளாக பொய்யாகப் பேசியவர்களும் அதை வழி மொழிந்தவர்களும் தலை குனியவும் இல்லை, உண்மையை உணரவும் இல்லை..
இப்படித்தான் டார்வினின் பரிணாமக் கொள்கை என்று நான் மாங்கு மாங்கென்று படித்து பள்ளியில் வரலாற்றில் முதல் மாணவனாகவும் இருந்தேன். இப்போ என்னடாவென்றால் அசால்ட்டாக அந்த தியரியே தவறு என்று சொல்கிறார்கள்..

சந்திரனில் பிராண வாயு (ஆக்சிஜன்) கிடையாது என்றார்கள்..அதே நேரம் H2O இல்லாமல் இப்போ எப்படி தண்ணீர் கிடைத்தது என்று தெரியவில்லை..

இது போன்ற விடை சொல்ல முடியா விஷயங்களை அப்படியே விட்டுவிடுவதே நல்லது..இன்றைய ஆராய்ச்சி முடிவை நாளை தவறு என்பார்..எது உண்மை எது பொய் என்று இதற்கெல்லாம் நேரத்தை செலவு செய்யாமல், நாமும் சந்தோஷமாக இருந்து மற்றவரையும் சந்தோஷமாக வைத்து இருந்தால் அதனால் எந்த பாதகமும் வந்து விடாது.

அதே போல இங்கு தமிழ் நாட்டில் சில பேருக்கு ஒரு வினோத நோய் உண்டு... அது என்னவென்றால் அசுரன் என்று கூறப்பட்டால் அது தென்னவர்களை குறிப்பிடுவதாகவும், கடவுளர்களும், தேவர்களும் வடபுலத்தவர்கள் என்பதும்தான் அது... அதன் காரணமாக ராவணன் தமிழன், நரகன் தமிழன், ராமனும் கிருஷ்ணனும் வேற்றான் என்று மூளை சலவை செய்ய முயற்சிப்பார்கள்... அதனால் மக்களுக்கு வாழ்த்து கூட சொல்ல மாட்டர்கள்.... மற்றவர்களின் பண்டிகைகளுக்கு மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு வாழ்த்துவார்கள்... இவர்கள் வாழ்த்து தேவையில்லை என்பது வேறு விஷயம்.. ஆனால் நாம் இதை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமே இதை எழுதுகிறேன்...

நல்லவன் - தேவ குணம் கொண்டவன். தீயவன் அசுர குணம் கொண்டவன். இதில் ஜாதி மத பேதம் இல்லை. நமக்குள் நல்லகுணமும் இருக்கும்; தீய குணமும் இருக்கும் இரண்டில் தீயதை விடுத்து நல்லதை கொள்ளலே இந்த கதைகளின் சாராம்சம்...

ஒரு வாதத்திற்கே வைத்துக் கொண்டாலும், முருகனும் சிவனும், அரங்கனும், தென்னவர்கள் தானே? தமிழ்ச் சங்கங்களும் அதன் தலைமையும் அவர்களால் அழகுபடுத்தப் பெற்றது தானே?
வடக்கே வாழ்ந்த கம்சன், துரியோதனன், சகுனி போன்றோர் அசுரர்கள் என்று விளிக்கப்படாவிடினும் அவர்கள் தீயசக்தியாகவேதானே உருவகப்படுத்தப்பட்டனர்? கிருஷ்ணன் கொன்ற சகடாசுரனும் இன்ன பல அசுரர்களும் வட இந்தியர்கள் தானே? எனவே இந்த விழாவை வடக்கு தெற்கு என்று பிரிக்கும் சூழ்ச்சிகளுக்கு இரையாகாமல், ஐயமின்றி, சந்தோஷமாக கொண்டாடுங்கள்....

இந்த தீபாவளியின் கதையை வேண்டுமானால் நம்பாமல் போங்கள்.. ஆனால் தீமை என்பதை அழிக்க வேண்டும், நன்மை மலர வேண்டும் என்ற உள்ளர்த்ததையாவது உணருங்கள்... அதிலும் முக்கியமாக கிருஷ்ணனும் அவன் மனைவி சத்ய பாமாவும், அச்சுறுத்தும் தீயசக்தியாகிய நரகாசுரன், தம் மகனே ஆயினும் அவனை அழித்து உலக நன்மை ஒன்றையே கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகிறார்கள்...

பாசத்தினால், தவறுகளுக்கு துணை போகக் கூடாது, சத்தியத்தின் பக்கம் நின்று, தர்மத்தைக் காத்து, அதர்மத்தை அழிக்க வேண்டும் என்பது எவ்வளவு உயர்ந்த கருத்து? அதிலும், தவறு செய்தவனே, தண்டனைக்குப் பின் மனம் திருந்தி, இன்று மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று வேண்டுவது எவ்வளவு உன்னதம்?

காலத்தினால், பண்டிகையின் உள்ளர்த்தங்களும் நோக்கங்களும் அடிபட்டுப் போனாலும், புத்தாடை அணிதல், பட்டாசு வெடித்தல், இனிப்பு உண்ணுதல் போன்ற மகிழ்வூட்டும் பழ்க்கங்களாவது நடை முறையில் உள்ளனவே... அதை தொடர்வோமே, நண்பர்களே.....

சில பேருக்கு சில நேரங்களில் என்ன தீபாவளி கொண்டாட்டம்? காசை விரயம் ஆக்குகிறோம்? எவ்வளவோ பேர் கஷ்டப்படும்போது நமக்கென்ன புத்தாடை? என்று தோன்றும். ஆனால் அவர்கள் தீபாவளி அன்று வேண்டுமானால் புத்தாடை வாங்காமல் இருப்பார்கள் மற்ற பல சாதாரண நாட்களில் மிக விலை உயர்ந்த ஆடைகளை அணிவார்கள்; தேவையற்ற பல செலவுகளை செய்வார்கள்... (நானும் முன்னர் சில காலம் அதில் அடக்கம்)

நீங்கள் அந்த உணர்வில் இருந்தீர்களேயாயின், தயவு செய்து, விலை குறைந்த உடையை உங்களுக்கு எடுத்துக் கொள்ளுங்கள்... உங்களுக்கு தெரிந்த அல்லது தெரியாத பல ஏழை சிறார்களுக்கு உங்களால் முடிந்த செலவில் உடைகளையும், பட்டாசுகளையும், இனிப்புக்களையும் வாங்கித் தாருங்கள்... அந்தக் குழந்தைகளுக்கு, இந்த சிறு செயல்களில் கிடைக்கும் இன்பம் அளவிட முடியாது அவர்களுக்கு ஆராய்ச்சி செய்யத் தெரியாது... ... பல பேர் சந்தோஷமாக இருக்கும் போது அவர்களும் சந்தோஷமாக இருந்தால், அது உங்களுக்கு நிச்சயம் மன நிறைவையும் புண்ணியத்தையும் தரும்......

குறைந்த சத்தமுடைய பட்டாசு, மத்தாப்புகளை ஏற்றி கொண்டாடுங்கள் குதூகலமாக...

ஆம், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்.....தீபத்தின் ஒளியைக் காண்போம்...

Sunday, October 11, 2009

தினமலர் - திரைத்துறை மோதல் - ரஜினி பேச்சு..


தினமலர் - நடிகைகள் விவகாரத்தில் ரஜினி பேசிய விவகாரத்தில் லேசாக புகைய வைக்கலாம் என்று நினைத்தவர்களுக்கு இந்த முறை வாய்ப்பு கிடைக்கவில்லை.. அப்படியும் லேசான முனகல்களை சிலர் வெளியிடத்தான் செய்தார்கள்.. ரெண்டு வேளை சோத்துக்கு விபசாரம் செய்வதை நியாயப் படுத்தலாமா ரஜினி? என்று ஐயங்கள் எழுந்தன.. ரஜினியைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு அவர் என்ன சொல்ல நினைக்கிறார் என்பது புரிந்து விடும்.. புரியவில்லை என்றாலும், அவர் நல்லதைத்தான் சொல்லிஇருப்பார்.. அது இப்போ நமக்கு புரியாது என்று அதை அப்படியே ஏற்றுக்கொள்பவர்களும் உண்டு...

எந்த ஒரு பிரச்சினைக்குமே ஒரு முடிவு என்பது இருக்கிறது.. நடிகர் ரஜினிகாந்தைப் பொறுத்தவரை பலகாலமாக அவரோ அல்லது அவது பேச்சோ தான் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு முடிவாக இருக்கும்… ஆம், அந்த மனிதன் வரும்வரை ஏதாவது ஒரு பிரச்சினை விஸ்வரூபமாக இருக்கும்; அந்த மனிதன் வந்து உள்ளொன்று வைத்து உதடொன்று உச்சரிக்காமல் மனதில் பட்டதை பட்டென்று சொல்லிவிட்டுப் போக, அந்த மூலப் பிரச்சினை அப்படியே மூழ்கடிக்கப்பட்டு, அதன் பக்க விளைவுகள் பக்காவாக அவரை நோக்கி திசை திருப்பப்படும்..

இது ரஜினிக்கு ஒன்றும் புதிதல்ல.. காவேரி பிரச்சினையா - அதன் மூலம் எங்கே என்று யாருக்கும் தெரியாது, அதன் முடிவோ எப்பொழுது வரும் என்றும் யாருக்கும் தெரியாது - ஆனால் சந்தடி சாக்கில் ஒரு மாதம் சீசனுக்கு ‘கன்னடக்கார ரஜினி’ என்று பட்டி தொட்டி எல்லாம் முழங்கினால் ஒட்டு மொத்தமாக எதிர்ப்புக்களை அவர் பக்கம் அனுப்பி விடலாம்.. ஊடகங்களுக்கும் திடீர் மொழிப் பற்றாளர்களுக்கும், விளம்பரப் பிரியர்களான அவரது சக கலைஞர்களுக்கும் கூட இதில் ஒரு குரூர திருப்தி கிடைக்கும். பிறகென்ன உச்ச நீதிமன்றமாவது, நடுவண் அரசாவது, வெங்காயம்..

ஹொக்கெநக்கல் பிரச்சினை தீருமா தீராதா என்பது பற்றி யாருக்கும் அக்கறை கிடையாது - ஆனால் ரஜினி உதைக்கனும்னு சொன்னதை பற்றி ஆராய்ச்சி கட்டுரைகளே வெளி வரும் அளவுக்கு பலருக்கு எழுத்தார்வம் விண்ணை முட்டும்.

அதே போலத்தான் - சமீபத்தில் நடந்த தினமலர் - நடிகைகள் விவகாரமும்.. இந்த முறையும் தன் மனதில் பட்ட சமூக அக்கறையையும், , பத்திரிகைகளின் தரம் குறித்த தன்னுடைய நியாயமான ஆதங்கத்தையும் இரண்டு பெண் பிள்ளைகளைப் பெற்ற ஒரு தகப்பன் ஸ்தானத்தில் இருந்து நேர்மையாக வெளிப்படுத்தி இருக்கிறார். தன்னை பத்திரிகைகளுக்கு எதிராக சித்தரிப்பது நடைபெறும் என்று தெரிந்தும் துணிந்தே நடுநிலையாகப் பேசினார்..

தினமலர் மீது ஏற்கனவே பலருக்கு காண்டு இருந்ததாலும், இது பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயமாயிற்றே, நாம் ஏதாவது சொன்னால் பூமராங்காகிவிடுமே என்ற பயத்தினாலும் நல்லகாலமாக இந்த முறை அந்த அளவிற்குப் பெரிதாக ஏதும் நிகழவில்லை..ஒருவேளை அவரது திரைப்படம் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டார்களோ என்னவோ..

பொதுவாக பாலியல் தொழில் என்பது விருப்பப்பட்டு வருவது இல்லை… பிறரது விருப்பத்திற்காக பெண்கள் பலி வாங்கப்படுவதே நடக்கிறது… அந்த அர்த்தத்தில்தான் பரிதாபப் பட்டு ரஜினி “சோத்துக்காக இவ்வளவு கஷ்டப்படுகிறார்களே ” என்று ஆதங்கப்பட்டார்… இந்த ஆதங்கம், பெண்ணின் சதையை மீறி உள்ளத்தை காணும் உண்மையான மனிதர்களின் ஆதங்கமும் கூட..

தற்காலத்தில் யாரும் தவறான உறவுகளையும், பாலியல் தொழிலையும் பெரிதாக முக்கியத்துவம் கொடுத்து நினைப்பது இல்லை - நேரடியாக அவர்களைப் பாதிக்கும் வரை !

எயிட்ஸ் விழிப்புணர்வு அமைப்பினர் கூட, பாதுகாப்பாக உறவு கொள் என்றுதான் சொல்கிறார்களே தவிர தகாத உறவைக்கொள்ளாதே என்று ஆணித்தரமாகக் கூறுவது இல்லை…. ஆக எல்லா மட்டத்திலும் கடுமையான தண்டனைகளை ஏற்படுத்தி, இந்த சமூக அவலத்தை முற்றிலுமாக நிறுத்தினால் மட்டுமே பெண்களை போகப் பொருளாக்கும் நிலை மாறும்..

முன்னெல்லாம் பெண்கள் ஆண்களுடன் அதிகமாக இணைந்து பணி புரியாத சூழல் நிறைந்த சமூகத்தில் நடிகைகள் என்றாலே ஒரு தவறான கண்ணோட்டத்தோடு பார்க்கும் பழக்கம் இருந்து வந்தது.. அதனால் பல வதந்திகள் காது மூக்கு வைத்து காற்றை விட வேகமாக பரப்பப்பட்டன.. ஒரு வேளை இப்படி இருக்குமோ, அப்படி இருக்குமோ என்றெல்லாம் பொதுஜனத்தை கற்பனையில் மிதக்க வைத்து சப்புக் கொட்டி விற்பனையை அதிகரிக்க வைக்கும் கிசுகிசுக்களை தரமானவை என்று பெயர் எடுத்த பத்திரிகைகள் கூட பிரசுரிக்கத் தொடங்கி நான்காம் தூணான தங்களின் அஸ்திவாரத்தை தாங்களே சுரண்டத் தொடங்கி விட்டன.

தவறு செய்தவர்கள் நடிகையாக இருந்தாலும், நடிகராக இருந்தாலும் அல்லது வேறு யாராகவேனும் இருந்தாலும், ஆதாரம் இருந்தால் வெளியிடுவது பத்திரிகைகளின் புலனாய்வையும் நம்பகத்தன்மையும் பிரதிபலிக்கும்.. ஆனால் மேஜையில் உட்கார்ந்து கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டு, இஷ்டம் போல் எழுதினால், படிப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது… செய்தியில் சம்பந்தப் பட்டவர்களுக்கே அதன் வலி தெரியும்.. இந்த முறை மடியில் கனமில்லை மோதிப் பார்த்து விடலாம் என்று ஹோதாவில் இறங்கி விட்டார்கள் நடிகைகள்.. அவர்களுக்கு இன்னும் மகளிர் அமைப்புகளிடம் இருந்தோ சமூக ஆர்வலர்களிடம் இருந்தோ ஆதரவு கிடைக்கும் முன்பாகவே, சக கலைஞன் என்ற முறையிலும் சகோதரன் என்ற முறையிலும் முன்வந்து தன் கருத்தை ஆணித்தரமாகப் பதிவு செய்திருக்கிறார் ரஜினி..

ஒரு கொலைகாரனின் படத்தைப் போட்டால் மற்றவர்கள் உஷாராவர்கள்.. பிக்பாட்டின் படத்தைப் போட்டாலும் அவனை விட்டு ஒதுங்குவார்கள்.. ஆனால் விபசாரம் செய்தவரின் படத்தைப் போட்டால், அவரே திருந்தவேண்டும் என்று நினைத்தாலும் நெருங்கி தொல்லை கொடுப்பார்கள் பல பேர்.. ஆக இந்த குற்றத்தை மட்டும், தொடரச் செய்வது இன்னொருவரின் பங்களிப்பாகத் தான் இருக்கும்.. எனவேதான் அவர்களின் படம் வெளியிடப்பட்டால் அது மேலும் அக்குற்றத்தை தூண்டச் செய்யும் எனவே தவறு செய்தவர்களுக்கு படம் போடாமல் சட்ட ரீதியான தண்டனைகளை வாங்கிக் கொடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறார்...

அவர் ஆதாரத்துடன் சிக்கிய நடிகை புவநேஸ்வரியைப் பற்றி எதுவும் பேசவில்லை, அவருக்கு ஆதரவும் தெரிவிக்கவில்லை.. என்றைக்குமே சட்டத்தின் நிகழ்வுகளில் அவர் தலையிடுவதே இல்லை.. ஆதாரம் இல்லாமல் படத்துடன் நடிகைகளைப் பற்றி செய்தி வெளியிட்டது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்த்தவே ரஜினி ஆவேசமாகப் பேசியிருக்கிறார்… தன்னைப் பற்றி எத்தனையோ செய்திகள் வந்த போதும் அவற்றை மவுனமாக புறந்தள்ளும் ரஜினியால், தன் சக நடிகைகளைப் பற்றி அவதூறு பரப்பப் படும்போது அதை சகித்துக்கொள்ள முடியவில்லை…. கல்யாண வீட்டுக்குப் போகாவிட்டால் கூட இழவு வீட்டுக்குப் போயிடு என்று கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள்… அதற்க்கு அர்த்தம் என்ன வென்றால் நீ மகிழ்ச்சியில் பங்கெடுக்காவிட்டாலும் பரவாயில்லை - உன்னை சார்ந்தவனின் சங்கடத்திற்கு தோள் கொடு என்பது தான்…

இது ரஜினிக்கு நன்றாகத் தெரியும்.. தன்னுடையை சங்கடத்தை தன் சட்டையைப் போல் தான் மட்டுமே மாட்டிக் கொள்ளும் அவர், தன் சகாக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் தானே ஒரு போர்வையாகி விடுகிறார்….

அந்த அளவிலே அவருக்கு ஒரு பாராட்டு...

என்ன அந்த மேடையில் பல பேர் வழக்கம் போல் வரம்பு மீறி..வசை பாடி தங்களுக்கு கிடைத்து இருக்கவேண்டிய மரியாதையையும், அனுதாபத்தையும் தானே கெடுத்துக் கொண்டு விட்டார்கள்...இதையும் அவர் ஒரு அறிவுரையாக அவர்களுக்குக் கூறியிருக்கலாம்....

இன்றைய தேதியில், திரைத்துறையும் - பத்திரிக்கையும் அவர்கள் சம்பந்தப்பட்ட வியாபாரங்களின் இரண்டு கண்கள்.. ஆனால் இரண்டுக்கும் கேடராக்ட் ஆபரேஷன் பண்ண வேண்டும்...இரண்டின் வாசகர்கள் தான் அனுசரிக்கும் மனப்பான்மையை விட்டுவிட்டு துணிந்து புரையை எடுக்க வேண்டும்..

Thursday, October 8, 2009

திருமணத்திற்குப் பின் நாங்கள் பார்த்த முதல்படம்..



திருமணத்திற்கு முன்னாலேயே நான் சுப்ரமணியபுரம், நாடோடிகள், பசங்க எல்லாவற்றையும் நண்பர்களோடு பார்த்து விட்டதால் திருமணத்திற்குப் பின் உருப்படியான ஏதாவது படத்தை முதன் முதலில் பார்க்க வேண்டுமே என்று நினைத்து இருந்திருந்தேன்...நல்ல வேளையாக - உன்னைப் போல் ஒருவன் ரிலீசாகி நான் கவுரவமாக சொல்லிகொள்ளும்படி ஒரு படம் கிடைத்தது...அதற்காக முதலில் கமலஹாசனுக்கு ஒரு நன்றி..இதன் இந்தி மூலப் படத்தை நான் பார்த்து இல்லை எனவே என்னைப்பொறுத்தவரை இது ஒரு புதிய படமாகத் தான் தோன்றியது..

எனது சகோதரனுக்கும் சமீபத்தில் தான் திருமணம் ஆயிருந்ததால், நாங்கள் எல்லோரும் சேர்ந்தே தான் முதல் படம் பார்க்கவேண்டும் என்று விரும்பினோம்.. ஒரு வழியாக எல்லோரின் நேரமும் செட்டாகி கடந்த வார இறுதியில் படம் பார்ப்பது முடிவானது... நேரம் குறைவாக இருந்ததால், நகரின் உள்ளேயோ, மாயாஜால் போன்ற புற நகருக்கோ செல்ல முடியவில்லை.. திருவான்மியூர் ஜெயந்தியில் (இங்கே தான் நான் வாரா வாரம் ஏழெட்டு முறை பாஷா பார்த்தேன்.). உ.போ.ஒ. ஓடுவதாக பத்திரிகையில் பார்த்திருந்ததாலும், புதிதாக டிடிஎஸ் பண்ணிஇருப்பது எப்படி இருக்கிறது என்று பார்க்கும் ஆர்வத்தாலும் அங்கே சென்றால் - மேற்படி படத்தை எடுத்துவிட்டு, அங்கே போஸ்டரில் என்னைப்போல் ஒருவன்(??)பரத் ஆறுமுகமாக மிரட்டிக் கொண்டு இருந்தார்... எல்லோரிடம் மொக்கை வாங்கி கொண்டு, கணபதிராமில் நுழைந்தோம்... பால்கனி புல் ஆகிவிட்டது.. கீழ்தளத்திற்கு எங்கள் சகோதர சகோதரிகள், இரண்டு நண்பர்கள் உட்பட ஒன்பது பேர் டிக்கெட் எடுத்து நுழைந்தோம்.

படம் ஆரம்பிப்பதற்கு முன் சுருதி ஹாசன் பாடல் ஒன்று வந்தது.. படத்தில் பாடல்கள் இல்லை என்பதால் இந்த ஏற்பாடு போலும்... பாட்டு பரவாயில்லை.. அப்போது என் நண்பர் மெதுவாக என்னிடம் சுருதி அழகாக இருப்பதாகச் சொல்ல, நான் பதிலுக்கு "எனக்கு என் பொண்டாட்டியைத் தவிர யாரும் அழகில்லை " என்று கொஞ்சம் சத்தமாகவே சொல்ல, எங்கள் வரிசையில் ஒரு "ஓ" போட்டார்கள்..

படம் ஆரம்பித்ததில் இருந்தே ஒரு வித அமைதி... மோகன் லாலை ஒரு டாக்டர் நடிகர் சந்தித்து பிலிம் காட்டி, மொக்கை வாங்கும் காட்சியில் தியேட்டரில் பலத்த கைதட்டல்..அப்போது எனக்கு என்னவோ எழுந்து நின்று "ஏய்.. சைலன்ஸ்... படம் பார்த்துட்டு இருக்கோம்ல " என்று சொல்லத் தோன்றியது...

கமலகாசன், மோகன்லால் ஆகிய இருவரின் நடிப்பும் போட்டி போட்டு இருந்தது.. மோகன்லால் பல இடங்களில் பளிச்சிட்டிருந்தார்.. கடைசி காட்சி தவிர வேறெங்கும் இருவரும் நேரில் பார்த்து பேசாதது எனக்கு ஏமாற்றமே... தலைமை செயலாளராக லக்ஷ்மி, சரியான பாடி லாங்குவேஜ்.. கலைஞர் குரலில் முதல்வர் பாத்திரம் ..கமல் ஏன் இப்படி செய்திருக்கிறார் என்று பலர் விமர்சனம் செய்தாலும், எனக்கென்னவோ அது பொருத்தமாகவே தோன்றியது..(என்ன பாம் வைக்கிறேன்னு மிரட்டரானா? சரி நீங்களே பேசிடுங்க, நான் பேசினா சரியா வராது; எலக்ஷன்ல எதுவும் பிராப்ளம் வராதே? வசனம் : இரா. முருகன்.. )

மோகன்லால் டிவி காரர்களை திட்டும்போது செய்யும் உபதேசம், கமல் பாம் செய்வது பற்றி அறியும் முறைகளையும், பைகளை எப்படியெல்லாம் அனாமத்தாக வைக்கலாம் என்று விளக்கும்போது, வீணாகிறது.. எனிவே, பார்க்க வேண்டியவர்கள் பார்த்து உஷாரானால் போதும்..

அந்த இரண்டு போலீஸ ஆபீசர்களும் கண்ணிலேயே இருந்தார்கள்..

குஜராத் கேஸ், கோயம்புத்தூர் கேசுக்கு அப்புறம் வந்தது என்பதை மறந்து விட்டார்கள் போலும்..

விறுவிறுப்பான காட்சிகளும், போலீஸ் அதிகாரிகளின் துடிப்பான நடிப்பும் படத்தை மிகவும் ரசிக்க வைத்தது.. ஐ ஐ டி டிராப் அவுட் மாணவன் காட்சி சிறிதாக இருந்தாலும் சிரிக்க வைத்தது..

அந்த இந்து தீவிரவாதிக்கு, கரம்சந்த் என்ற பெயரை வைத்து இருந்தது வருந்தச் செய்தது...

ஒரு துயரமான சம்பவத்தை சொல்லி கமல் கண் கலங்கும் காட்சியில் கனமான வசனம் இல்லாதது ஒரு பெரும் குறை.. தேவர் மகன் சிவாஜியுடனான காட்சிகள், தெனாலியில் தன்னுடைய திருமணம் நின்றது மற்றும் தாயை இழந்தது போன்ற காட்சிகளில் மிகவும் ஒன்றி நடித்து இருந்த அவருக்கு இந்த காட்சி சரியான முறையில் இல்லையோ என்று தோன்றியது...

அப்புறம், கமிஷனர் யார் என்றே தெரியாது என்பது போன்ற ஒரு பார்வையை கமல் வெளிப்படுத்தி, பின் அவரது வேனை வைத்து அடையாளம் காண்பது சரியாகப் படவில்லை...

இது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் இருந்தாலும், திரைக்கதையும், கமல் - மோகன் லால் மற்றும் அனைத்து நடிகர்களின் திறமையாலும் படம் விறுவிறுப்பாகச் சென்றது..

கமலின் இளமைக்கு தான் என்ன ரகசியம் என்று தெரியவில்லை... மொத்தத்தில் உன்னைப் போல் ஒருவன் - எங்களை ரசிக்க வைத்தது .சிந்திக்கவும் வைத்தது...

Monday, October 5, 2009

தேசப்பிதா



நீ
பாரெங்கும்
போரின் பந்தத்தை
வேரறுக்க
போர்பந்தரில் பிறந்த
புனிதக் குழந்தை !

நீ
சென்ற நூற்றாண்டின்
சிராவணன் !
அதிசயமாய் வந்த
அரிச்சந்திரன் !

நீ
கொடுத்த
வாக்கையே
வாழ்க்கையாய்க்
கொண்டவன்!
நீர் காற்று மட்டுமே
நெடுநாள் உணவாய்
உண்டவன் !

நீ
கறுப்பர் இனத்துக்கு
கடவுள் தந்த
பிரதிநிதி !
கருணை குணத்திலோ
கடவுளின்
பிரதி நீ !

உனது
ஒற்றை பார்வை
பல
துப்பாக்கிகளை
துவளச் செய்தது !

உனது
வெற்று மார்போ
பல
பீரங்கிகளை
மழுங்கச் செய்தது !

காலாற
நடந்து விட்டு வரலாம்
என்பர் பல பேர் !
நீயோ
நடந்து கொண்டே
இருந்ததால்
உன் கால்களை
என்றைக்கும்
ஆற விட்டதே இல்லை !

நங்கையரின்
எழில் கூந்தலும்
நாணித் தலைகவிழும்
உன்
மொட்டைத் தலையின்
கவர்ச்சி கண்டு !

ஒரு
சாம்ராஜ்யத்தையே
அசாதாரணமாய்
அடிபணிய வைத்த
உன்
பொக்கைச் சிரிப்பு
போக்ரானை விட
வலிமையானது..!

ஆட்டுப் பாலும்
அரைக்கடலையுமே
உனக்கு
ஆகாரம் !
ஆனாலும் இன்றைக்கும்
அகிம்சையின் வெற்றிக்கு
நீயே
ஆதாரம் !

நீ
நித்தியம்
அனுபவித்த
சோதனை எல்லாம்
உனக்கல்ல -
சத்தியத்திற்கே !

நீ
உன்னைப் பற்றிய
உண்மைகளை
ஒளிவு மறைவின்றி
உலகிற்குச் சொன்னவன் !
என்றைக்கும்
ஒடுக்கப்பட்ட
மக்களின்
ஒரே ஒரு மன்னவன் !

நீ
அன்பை மதமாக்கி
அருளின்
வழி நின்றாய் !
அடித்தட்டு சனங்களை
அரியின் சனம் என்றாய் !

நீ
அரியாசனம் தன்னை
அடுத்தவர்க்கு தந்தாய் !
அறியா சனத்திற்கும் நீ
அன்பான தந்தாய் !

உன் மனம்
தெளிந்த குளம் போல்
இருக்கிறதே என்ற
பொறாமையில்
மதக் கல்லை
விட்டெறிந்து
பதம் பார்த்தவர்கள்
எம் முன்னோர் !

ஊருக்கே உப்பிட்ட
உன்னை மறந்து
உண்டு கொழுத்து
உப்பி(வி)ட்டோர்
எம் தலைவர் !

அதனால்தானோ
என்னவோ
எங்கள்
நெஞ்சுக்குள்ளே
இருக்க வேண்டிய நீ
சற்றே தள்ளி

சட்டைப் பைகளில்
கசங்கலாய் ...... !