Wednesday, December 9, 2009

சூப்பர் ஸ்டாருக்கு ஒரு சூப்பர் வாழ்த்து...


2007 ல் நான் வெளியிட்ட "தலைவா தலைவா" தொகுப்பு பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்ததே.. இந்த ஆண்டு புதிதாக தலைவரின் பெரும்பாலான படங்களை கவிதை வடிவில் எழுதுமாறு ஒன்லி சூப்பர் ஸ்டார்.காம் சுந்தர் கேட்டுக் கொண்டார்...

கரும்புக்க(கா)ட்டைக் கண்டவனுக்கு எந்தக் கரும்புதான் பிடிக்காது.? எல்லாவற்றையுமே எடுத்து ருசிப்போம் என்று அனைத்து தமிழ்ப் படங்களையும் சில ஹிந்தி தெலுங்கு படப் பெயர்களையும் கோர்த்து இந்த பாமாலையை உருவாக்கி மிகச் சிறப்பான அறுபதாம் பிறந்தநாளுக்காக சூப்பர் ஸ்டாருக்காகவும், அவரை சுவாசிக்கும் ரசிகர்களுக்காகவும் சமர்ப்பிக்கிறேன்..
___________________________________________________________

வெள்ளித்திரை நட்சத்திர மண்டலத்தில்
அபூர்வ ராகங்கள் முழங்க
சூப்பராய் உதித்த ஸ்டார் நீ !

காலப்போக்கில்
உச்ச நட்சத்திரமாய் நீ மின்ன
மற்றவை எல்லாம்
மிச்ச நட்சத்திரங்களாய் மாறிப் போயின !
ஏன் தெரியுமா?
நட்சத்திரங்களில் நீ ஒரு
சிவப்பு சூரியன் என்பதால்தான்!

சந்திரன் சூரியனை அறிமுகப்படுத்தி
எங்காவது பார்த்திருக்கிறார்களா? ...
இங்கு
நடந்தது...

ஆம்
இந்த
பளீர் சூரியனை அறிமுகப்படுத்தியது -
ஒரு
பால சந்திரன்...!


நீ
அசாதாரணமான ஒரு
உச்சரிப்பை
அறிமுகப்படுத்தினாய் ! - அது
அத்தனை பேர் செவிகளிலும்
பைரவியாய் !


உன்
வல்லின மெல்லினங்களில்
வள்ளிசாய் வசப்பட்டோம் நாங்கள் !


உனக்கு
சரியாகத்தான் பெயர் வைத்தார்கள் -
ரசினி என்று !
ஆம் !
பார்க்கும்போதே
ரசி - நீ, ரசி - நீ என்று எல்லோரையும்
தூண்டுவதால்தான்
நீ
'ரசினி' ஆனாய் போலும் !



யார்க்கும் நான் அடிமை இல்லை
இது
நான் போட்ட சவால்!
ஆனால்
என்றைக்கு நீ
என்னை வாழ வைத்த தெய்வம் என்று
உச்சிக்கு உயர்த்தினாயோ -
அன்று முதல்
உன் அன்புக்கு நான் அடிமை ஆனேன்..!





ஆயிரம் ஜென்மங்கள் காத்திருந்து
வணக்கத்துக்குரிய காதலிக்கு
அக்னி சாட்சியாய்
மூன்று முடிச்சு போட்டு
மாப்பிள்ளை ஆனாய் நீ !
அது உனக்கு
இறைவன் கொடுத்த வரம் !
அதனால்தானோ என்னவோ
இன்றைக்கும் உனக்கு
இளமை ஊஞ்சலாடுகிறது!




அவள் அப்படித்தான் என்று
நீ ஒதுக்கி விட்டுப்போன
நீலாம்பரிகளும் சண்டிரமுகிகளும் ஏராளம் !
அவர்கள் மாறினார்களா என்று தெரியாது !
அதே சமயம்
உன்னால்
அன்னை ஓர் ஆலயம் என்று
உணர்ந்தவர்கள் ஏராளம் ஏராளம் !


நான் மகான் அல்ல என்று நீ
அடிக்கடி சொன்னாலும்
உன்னால் ஆன்மீகப் பாதையில்
அடிஎடுத்தவர்கள் ஆயிரக்கணக்கில் !



நீ
உன்மீது அடிக்கடி விழும்
நன்றி மறந்த கற்களைத் தடுக்க
மௌனம் என்னும் கேடயத்தை
மட்டுமே கைக்கொள்ளும்
அஹிம்சைத் தளபதி !

ரகுபதி ராகவ ராஜாராம் இசைத்து
ராம் ராபர்ட் ரஹீமிடம் வேற்றுமை பார்க்காத
உனக்கு
சங்கர் சலீம் சைமனும் ஒன்றுதான்
ஜான் ஜானி ஜனார்த்தனும் ஒன்றுதான் !




ஊர்காவலனே,
எல்லாம் உன் கைராசி என்று
உன்னை நாடி வந்தோர்க்கு
நான் வாழ வைப்பேன் என
கைகொடுக்கும் கை ஆனாயே !
அதை என்றைக்கும்
நினைத்தாலே இனிக்கும் !


உன்
தலைமுடியில் வேண்டுமானால்
இடைவெளி சற்றே அதிகமாகி இருக்கலாம் !
ஆனால் உனக்கு
தலைமுறை இடைவெளி என்பது மட்டும்
கிடையவே கிடையாது !




இன்றைக்கும்
உன்னோடு சேர்ந்து ஆட
ப்ரியாக்களும் காயத்ரிக்களும்
தயாராக இருக்கிறார்கள் -
பதினாறு வயதினிலே !

உங்களுக்கெல்லாம் ஒரு விஷயம் தெரியுமா?

தமிழ்நாட்டில்
நான் சிகப்புமனிதன் என்று
கர்வப்பட்டு சுற்றிக்கொண்டிருந்த
போக்கிரி ராஜாக்களும், மாங்குடி மைனர்களும்
கடும் வெயிலில் நின்று
கறுத்துக் கொண்டிருக்கிறார்களாம் -
ஏனெனில்
இங்குள்ள பெண்களுக்கு
உன்னுடைய கறுப்புத்தான்
மிகவும் பிடித்த கலராம்...!


'ஜானி ஜானி' என்று கூப்பிட்டால்
இங்குள்ள குழந்தைகள்
'எஸ் பப்பா' என்பதில்லை -
படையப்பா என்கின்றனவாம் !


ஜஸ்டிஸ் கோபிநாத்தின்
தீர்ப்புக்கள் மட்டுமல்ல
எப்பொழுதும் இந்த
பெத்த ராயுடுவின் தீர்ப்பும்
சுத்தமாகத்தான் இருக்கும்..!
அதனால்தான் நீ
ஆந்திராவில்
மொத்த பேரையும்
உன் பின்னால்
சுத்த வைத்த
பெத்த ராயுடுவோ?

உனக்கு
சக கலைஞர்கள் வேண்டுமானால்
ஆயிரம் பேர் இருக்கலாம் !
ஆனால் எங்காவது
சம கலைஞர்கள் இருக்கிறார்களா?
எங்களுக்குத் தெரியவில்லை!
ஏனெனில் நீ
இலட்சத்தில் ஒருவன் !
இலட்சியத்தில் அரசன் !

மிஸ்டர் பாரத்தான உன்னைப் பார்த்து
தம்பிக்கு எந்த ஊரு என்று கேட்டவர்களிடம்
நாங்கள் தர்மயுத்தம்
செய்து வந்தோம் !


ஆனால்
இன்றைக்குத்தான்
பலபேருக்குத் தெரிந்தது
இந்த தங்கமகனின்
தாய் வீடு
நாச்சிக்குப்பம் என்று!



ஓஹோ !
அதனால் தான்
நீ
அன்றைக்கே
குப்பத்து ராஜா ஆனாயோ?

அன்றைய குப்பத்து ராஜா
இன்றைய ராஜாதி ராஜாவாகி
தென்னாப்பிரிக்காவில் கூட
அவன் கொடி பறக்குது !
இருந்தாலும் எங்கும்
எளியோர் இதயத்தில்
அந்த ராஜா சின்ன ரோஜாதான் !

சூப்பர் ஸ்டாரே,
நீ
குன்றுகளுக்கு மத்தியில்
ஒரு மலை !
அண்ணாமலை !

நீ
அருணாச்சலம் மட்டுமல்ல
கருணாச்சலமும்தான் !

நீ
குணத்திலும் பணக்காரனாகி பல
குசேலர்களை காத்த
தர்மதுரை !

நீ
எங்கோ உயரத்தில் இருந்தாலும்
அடியாழத்தில் இருந்து கொள்ளும்
சிதறாத முத்து !

நீ
ஏற்றி இறக்கும்
திரையுலக ஆடுபுலி ஆட்டத்தில்
என்றைக்கும்
பாயும் புலி !



நீ
அரசியல் சதுரங்கத்தில்
யாரும் செக் வைக்க முடியாத
தனிக்காட்டு ராஜா !

அதனால்தான்
இருபது ஆண்டுகளுக்கு முன்
நீ
வெறும் சிவா!
இன்றைக்கோ சிவாஜி !



மதுரையை ஆண்டவன் பாண்டியன் !
மக்கள் மனங்களை ஆளும்
நீயோ
அலெக்ஸ் பாண்டியன் !

நீ
புரட்டு தெரியாத முரட்டுக் காளை !
உன் கண்ணில் நீர் வழிந்தால்
பொறுக்காத காளியிடம்
நீ சக்தி கொடு
என்று கேட்டாய்!
அதனால்தான் அவள்
கோடிக்கணக்கில் உனக்காகத்
துடிக்கும் கரங்கள் தந்தாள்!

நீ
பொல்லாதவன் என்று
பொய்யர்கள்
புறம் சொல்வர் !
ஆனால் உன்னை
புரிந்தவர்களுக்குத் தெரியும் -
நீ
நல்லவனுக்கு நல்லவன்
நாட்டுக்கொரு நல்லவன் என்று!

நீ
உன் அடுத்த வாரிசை
எஜமானாக மட்டும்
அடையாளம் காட்டவில்லை !
நல்ல உழைப்பாளியாய் காட்டினாய் !




வீரா - வருவீரா என்று
உன்னை மன்னனாக்க பலபேர்
துடித்த போது - ஒரு
எந்திரன் போல ஆசைக்கு
விடுதலை கொடுத்து
எங்கோ தூரம் சென்று
மனிதனாய் நிமிர்ந்தாய் !

வாழ்க்கைப் பாடத்தைப்
புரட்டிப் படித்த
நீயா படிக்காதவன்?

அலாவுதீனின் அற்புத விளக்கே !
உன் வெளிச்சத்தில்
வீட்டுப் பாடம் படித்த
கலைஞர்கள் எத்தனை பேர் ?

உன் பாஷாவைப் பார்த்து பாஸான
கதாநாயகர்கள்தான் எத்தனை பேர்?

உன் சத்திய நெற்றிக்கண் எரித்த
மன்னிப்புத் தீயால்
காணாமல் போன கழுகுகள்தான்
எத்தனை எத்தனை?

மாவீரனே !
உன்னிடம்
தில்லுமுல்லு செய்யவோ
தப்புத்தாளங்கள் போடவோ
யாராலும் முடியாது !
ஏனெனில்
நீ
தர்மத்தின் தலைவன் !

நீ
எங்களுக்கு குரு
சிஷ்யன் பல சித்தர்களுக்கு !

நீ ஒரு நல்ல வேலைக்காரன் அல்லவா ?
அதனால்தான் உனக்காகக்
காத்திருக்கிறது -
ஒரு நல்ல வேலையும் -
அதற்காக காத்திருக்கிறது
ஒரு நல்ல வேளையும்!



இனி சில விந்தைகளைப் பார்ப்போமா?

அன்புள்ள ரஜினிகாந்த்தே !
நீ
காந்தம் போல கடந்து செல்கையில்
உலகெங்குமிருந்து எண்ண அலைகள்
ஒரே இடத்தில் மையம் கொள்வதால்
ராடார்கள் ஸ்தம்பிப்பதாக
கையைப் பிசைகிறார்களாம் மீனம்பாக்கத்திலே..!

சிவாஜி ராவ் கெயிக்வாட்டே,
இன்னும் இருபதாண்டுகள் கழித்தாவது
உன்னை
இரண்டாம் இடத்துக்கு தான்
அனுப்பவேண்டும் என்று
உன் வீட்டில்
இரண்டு வயது யாத்ரா
முரண்டு பிடிக்கிறானாம் !




கடத்தல் மன்னன் பில்லாவே !
நீ
சற்றே உஷாராக இரு !
உன்னால்
ஜப்பான் முதல் அமெரிக்கா வரை
பல இதயங்கள் களவாடப்பட்டு
இந்தியாவிற்கு இறக்குமதியாகின்றனவென்று
உன் மீது
ஒரு கண் வைத்திருக்கிறார்களாம்
சுங்க அதிகாரிகள் !




அவசர அடி ரங்காவே !
கொஞ்சம் ஜாக்கிரதையாக இரு !
ஆறிலிருந்து அறுபது வரை
எட்டுக்கோடி இதயங்களிலும்
அத்துமீறி நுழைந்து
இண்டு இடுக்கின்றி நீயே
ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக
கணக்கெடுக்கிறார்களாம்
காவல்துறையினர் !

சொக்க வைக்கும் சுல்தானே,
உன் வீச்சைக்
கட்டுப்படுத்த வேண்டுமென்றால்
புதிதாய் மன உச்சவரம்புச் சட்டம்தான்
கொண்டுவரவேண்டும் போலும் !

முள்ளும் மலரும் எதிலும் உண்டு என
உணர்ந்த அதிசய பிறவியே!

உனக்கு
சினிமா ஆன்மிகம் அரசியல் என்று
மூன்று முகம் !

இனி எந்த முகம் உனக்கு
என்று புவனமே கேள்விக்குறியோடு நிற்க
நீயோ
என் கேள்விக்கு என்ன பதில் என்று
ராகவேந்திரரையும் பாபாவையும் கேட்கிறாய் !

உனக்கு பதில் கிடைத்து
நீ சினிமா என்றால்
எங்களுக்கு நீ கவிக்குயில் !
நீ இசைக்கும் அபூர்வராகங்களின்
அடுத்த அவதாரத்தை நாங்கள் ரசிப்போம் !

மனதில் உறுதி வேண்டும் நீ
ஆன்மிகம் என்றால்
உன் காலடியில் ஆறு புஷ்பங்கள்
தூவிச் சொல்வோம்
நீயே எங்கள் மகாகுரு என்று !

நாடு காக்க அரசியல் காட்டில்
நீ
வேட்டையனாய் நுழைந்தால்
உன் கர்ஜனைக்குப் பின் அணி வகுக்கும்
ராணுவ வீரர்கள் நாங்கள் !

இது புதுக் கவிதையோ
எங்கேயோ கேட்ட குரலோ அல்ல
தாய் மீது சத்தியம்!

வாழ்க ரஜினி....

****************

குறிப்பு :

1. இது சர்வ நிச்சயமாக சூப்பர்ஸ்டார் ஸ்டாரை ரசிப்பவர்களுக்காக...!

2. இந்த கவிதையையும் என் பங்களிப்பின் பெரும்பகுதியையும் வெளியிட்டு சூப்பர் ஸ்டாரின் அறுபதாம் பிறந்தநாளில் மனம் நிறையச் செய்த எஸ் எஸ் மியூசிக் நிர்வாகத்திற்கும் இதற்காக பெருமுயற்சி எடுத்து ஊக்குவித்த ஒன்லி சூப்பர் ஸ்டார்.காம் நண்பர் சுந்தர் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. பங்குபெற்ற நண்பர்களுக்கு என் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

___________________________________________________________


படங்கள் : ஒன்லி சூப்பர் ஸ்டார் தளத்திலிருந்தும் இணையத்திலிருந்தும்

Monday, December 7, 2009

(09/12/2009) புதன் இரவு 9.30 மணிக்கு S.S.மியூசிக்கில் ரஜினியும் நானும்..


எஸ். எஸ் மியூசிக் தொலைகாட்சி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு டிசம்பர் ஏழாம் தேதி முதல் பன்னிரெண்டாம் தேதி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ரஜினி சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்து கொண்டாடப் போகிறது.

1. எங்கள் ரஜினி. (07-12-2009 திங்கள் இரவு 9.30 மணிக்கு)

உலகப்புகழ் பெற்ற ரஜினிகாந்தை பற்றி ரசிகர்களும் பிரபலங்களும் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி.

2. சிவாஜி ராவ் ரஜினியாய் உருவான விதம் (08-12-2009 செவ்வாய் இரவு 9.30 மணிக்கு )

இந்நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டாரைப் பற்றிய இதுவரை வெளிவராத உண்மைகளும் சுவாரசியமான தகவல்களும் இடம்பெறுகின்றன.

3. தீவிர ரஜினி ரசிகர்கள் (புதன் 09-12-2009 இரவு 9.30 மணிக்கு )

ஒரு தீவிர ரஜினி ரசிகர் - “ரஜினி கிராமம்” என்ற ஒரு கிராமத்தையே உருவாக்கியுள்ளார் என்பது போன்ற பல ஆச்சர்யமான விஷயங்களையும் வித்தியாசமான ரசிகர்களைப் பற்றியும் இந்நிகழ்ச்சியில் காணலாம்.

4. அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? (வியாழன் 10-12-2009)

நூறு சதவீத ஜனநாயக முறையில் “அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?” என்று மெரீனா, சத்யம், எதிராஜ் காலேஜ் போன்ற சென்னையின் முக்கிய இடங்களில் நடத்தப்பட்ட சர்வே முடிவுகள்

5. ரியல் ரஜினி Vs ரீல் ரஜினி - ஒரு விவாதம் (11-12-2009 வெள்ளி இரவு 9.30 மணிக்கு)

ரஜினி ரசிகர்களின் அனல் பறக்கும் விவாதம்

6. நாளைய ரஜினிகாந்த் ? (சனிக்கிழமை 12-12-2009 இரவு 9.30 மணிக்கு )

நிச்சயம் உங்களை இருக்கையின் நுனிக்கு வரவைக்கும் முற்றிலும் மாறுபட்ட பரபரப்பான நிகழ்ச்சி… காணத் தவறாதீர்கள்

திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவுதோறும் 9.30 மணிக்கு எஸ் எஸ் மியூசிக் பாருங்கள்.. தலைவரின் பிறந்தநாளைக் கொண்டாடுங்கள்.

(பி. கு. : 1. தலைப்பு என்னுடையது.. செய்தி எஸ் எஸ் மியூசிக் வெளியிட்டுள்ளது..

2. புதன் கிழமை நிகழ்ச்சியில் தலைவரைப் பற்றிய எனது புதிய கவிதையும் பேட்டியும் இடம் பெறுகிறது..

3. புதிதாய் ஒரு பெரிய கவிதை சொல்லி இருக்கிறேன் ... எவ்வளவு நேரம் போடுவார்கள் என்று தெரியாது... ஒருவேளை வெறும் " ஹேப்பி பர்த்டே ரஜினி சார்" மட்டும் போட்டாலும் ஆச்சர்யம் இல்லை.."


SUPERSTAR WEEK IN SS MUSIC

In December, if the world has reasons like Christmas and New Year to rejoice, India has yet another important occasion to mark. It’s the day when the nation saw the birth of a legend, who has almost been given the status of a God. He is the one who made women go weak in their knees with his unmatchable style, who made millions of fans go crazy with his sheer punch dialogues and who has essayed varied roles with ease. Yes, it’s the birthday of the Kollywood Superstar, Rajnikanth on December 12, Saturday. SS Music pays a tribute to this living legend by dedicating an entire week, Dec 7 to Dec 12 to the Baasha of the Kollywood where his life journey is unfolded on Special Shows, daily at 9:30 pm.

1. My Rajni….

Monday 7h December 9.30 PM

“Countless” is the unanimous reply when asked about the superstar’s fans. But no one would know the Kollywood King better than his fans and people who have worked closely with him. “My Rajni” is a special episode that would see his fans and celebrities share their insights on the global phenomenon Rajnikanth.

2. The Making of Rajni …

Tuesday 8h December 9.30 PM

He was born as Shivaji Rao Gaekwad on December 12, 1949 in Karnataka. He grew up to become a bus conductor. He caught the fancy of the bus travellers with his mannerisms of issuing tickets and blowing the whistle. “The Making of Rajni” is an exclusive that reveals facts, secrets and much more about the Superstar.

3. Rajni Fanatics ..

Wednesday 9h December 9.30 PM

“Rajni Fanatics” is a show that would leave your jaw dropped after knowing the incredible acts by Rajini’s fan to convey their love to him. From immolating themselves to building up a village in his name, they have tried it all.

4. Who is The Next Superstar?

Thursday December 10th 9.30 PM

It’s a 100% Democratic Hunt for the next superstar of Kollywood across the city. Everybody from college students to movie freaks, put forward the best of their acting skills to grab the coveted title of the ‘Next Superstar’.

5. Real Rajni vs Reel Rajni – A Talk Show

Friday11h December. 9.30 PM

How successful is Rajnikanth in balancing his onscreen and off screen image. Well wishers and fans get involved in an intense debate about their favorite side of Rajni… real or reel?

6. Future Rajnikanth

Saturday 12th December 9.30 PM

What’s the secret behind his success? Would he veer into Hollywood? What would he be 5 years from now? And most importantly, would he ever enter Politcs? The above are the most curious questions towards which Rajni has turned a deaf ear. But, for the first time they are answered. Wait till Saturday.

It’s going to be lotta fun. So, put on the party caps and join the birthday bash of our Thalaivar by tuning into SS Music this week from Dec 7 – 12, Monday to Saturday at 9:30 pm.

Tuesday, November 24, 2009

வரவில்லை


கடிதம் எழுத நினைத்தேன்
கை வரவில்லை!

கவிதை சொல்ல நினைத்தேன்
வாய் வரவில்லை !

நெருங்கி வர நினைத்தேன்
கால் வரவில்லை !

தூங்கையில் நினைத்தேன்
தூக்கம் வரவில்லை !

சாப்பிட நினைத்தேன்
பசி வரவில்லை !

இவை மட்டும்தானா
வரவில்லை ?

கடைசியில்
கிளம்பி நிற்கையில்
வந்து விடுவேன் என்று சொன்ன

நீயும்தான் வரவில்லை ........


படம் : இணையத்திலிருந்து

Friday, November 13, 2009

தொட்டாச் சிணுங்காக் காதல்


பொய்யான கோபங்களும்
சின்னச் சின்ன தாபங்களும்
அதீதமான வியப்புக்களும்
அபத்தமான பேச்சுக்களும்
ஆழமான தேடலும் கொண்ட
நிஜமான காதல் !

இது
நிழல் மனிதர்கள் தொடர்ந்தாலும்
நெருஞ்சி முற்கள் நெருடினாலும்
கருங்கற்கள் இடறினாலும்
காயம்பட்டு நொந்தாலும்
தொடர்ந்து செல்கின்ற
தொட்டாச் சிணுங்காக் காதல் !

அவள் பார்க்கிறாளா என்று அவன் பார்ப்பதையும்
அவன் பார்க்கிறானா என்று அவள் பார்ப்பதையுமே
தமக்குப்
பார்வை கிடைத்ததன்
பயனாக உணர்கிறார்கள் !

மாலையிலே பிரிந்து
மனைக்கு செல்கையில்
மனையில் ஏறி
மாலை சூடும் நாளை நினைத்து ஏங்குகிறார்கள் !

இரவுப் பொழுது
எப்படி நகரப் போகிறது என்று
பயந்து தூங்காமலே தூங்குகிறார்கள் !

அவன் யார் ? அவள் யார் ?
முழுவதும் அறியும் முன்னே
முன்னுரை வரைகிறார்கள் !

தன் வீடு எதிரியின் குகையாகிறது !
தன் சொந்தம் கொடும் பகையாகிறது!
எதிர் பால் நீ இருக்கையிலே
எதிர்ப்பார் தேவையில்லை என்கிறது !

பல்லியைப் பார்த்து அவள்
பயப்படுகையிலே
பல்லியைப் பிடித்து
பயில்வான் பேர் வாங்கி
பல்லிளிக்கத் தோன்றுகிறது !

இத்தனை வருடம் இல்லாமல்
திடீரென்று
காசு கொடுத்து
கிரீட்டிங் கார்டு வாங்கத் தோன்றுகிறது !

கவிதையென்ற பெயரில்
கன்னாபின்னாவென்று
கிறுக்கத் தோன்றுகிறது !

காதல் -
தோணக் கூடாததைஎல்லாம்
தோணச் செய்கிறது !
தோணுவதை எல்லாம்
தேடச் செய்கிறது !

யூத் விகடனில் படிக்க

படம் இணையத்திலிருந்து

Wednesday, November 4, 2009

ஏழைத் தாய்


வறுமை
தாங்க முடியவில்லை!

குடிகாரக் கணவன் !
கொலைப் பட்டினியில்
குழந்தைகள் !

டீக்கடைக்குக்
கடன் பாக்கி !
பால் டின் வாங்க
பணம் இல்லை !

இப்படி ஓர் வாழ்க்கை
இன்னும் தேவையா ?

இன்றே சாகிறேன்
தீக்குளித்து !

நாளை முதல்
மண்ணெண்ணெய்
விலை ஏறுகிறதாம் !

Tuesday, October 27, 2009

செவப்புத் தோல் - சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009

ரொம்ப நேர அமைதிக்குப் பின் கோபாலே தொடர்ந்தான்.."நாளைக்கு காலையில சுரேஷ் வீட்டுக்குப் போகப் போறேன். அவனும் அவங்க அப்பா அம்மாவும் டவுனுக்கு கலியாணத்துக்குப் போறாங்களாம். சரோ மட்டும்தான் வீட்ல இருப்பா. இத விட்டா எனக்கு வேற சான்ஸ் கிடைக்காது. நாளைக்கே மேட்டர முடிக்கப் போறேன்"

அடப்பாவி! சுரேஷ்தான் காலையில இருந்து இங்க வரவேயில்லையே, உனக்கு யார்டா
இதைச் சொன்னா?

"ஏண்டா அவன் சொல்லலேன்னா என்ன? பால் வாங்கப் போனப்போ சரோவே என்கிட்டே சொன்னா தெரியுமா?"

"டேய்! அவ பாவம் சின்னப்பொண்ணுடா! உன்னோட கேவலமான புத்தி தெரியாம வெள்ளந்தியா உளறி இருக்கா. எனக்கென்னமோ நீ பண்ணப்போற லூசுத்தனத்தால அந்தப் பொண்ணுக்கு அடி விழுகப் போகுதோன்னு தோணுது. அவன் இல்லாதப்போ உன்ன ஏன் உள்ள சேர்த்தேன்னு சுரேஷ் அவளைத்தான் வெளுக்கப் போறான். ஐயோ பாவம்" என்று வருத்தப்பட்டான் சுந்தர்.

"டேய் நான் மட்டும் என்ன பிறவியிலேயே கெட்டவனா? எனக்கு என்னமோ அந்த சிவப்புத்தோலப் பார்க்கும் போதெல்லாம், என் கூடவே இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்னு ஏக்கமா இருக்குடா! தூங்கும்போது கூட அந்த நினைப்பாவே இருக்குடா. தயவு செஞ்சு என்ன மாத்தாதீங்கடா.." என்றான் கோபால்.

"அது சரி, ஊருல செவப்பா சிலித்துக்கிட்டு திரியுறதுங்க எல்லாத்துக்கும் அந்த களை வருமா? அதது பொறப்பு அப்படி, ஜாதிடா ஜாதி..!" என்றான் பிரபு.

"டேய் பிரபு, நீ வேற அவன ஏத்தி விடாதடா... சாதியாம் சாதி!" என்று பொருமினான் சுந்தர்.

"இப்ப கடைசியா என்னதாண்டா சொல்றீங்க?" கோபால் நான்கு நண்பர்களையும் பார்த்து எரிச்சலுடன் கேட்டான்..

"எங்ககிட்ட கேட்டா? உன் இஷ்டம்..நீ அப்படித்தான் செய்வேன்னு ஒத்தக்கால்ல நிக்கிற. இதெல்லாம் சரியில்லன்னு நாங்க ஆயிரம் வாட்டி சொல்லியும் நீ முடிவை மாத்திக்கல! அப்புறம் ஏன் எங்க கிட்ட கேட்கிற?- இது கோபு..

"டேய், எத செஞ்சாலும் ஜாக்கிரதையா செய்யு..சுரேஷ் அது மேல உசிரையே வச்சுருக்கான்..நீ மட்டும் இப்படி பிளான் பண்றது அவனுக்கு தெரிஞ்சா நம்ம எல்லாரையுமே பொலி போட்டுருவான்!" எச்சரித்த குரலில் சொல்லிவிட்டுத் திரும்பிக் கொண்டான் கார்த்தி.

சுந்தர் வாயையே திறக்க வில்லை.. அவன் பாட்டிற்கு ஒவ்வொரு கல்லாக எடுத்து குட்டையில் போட்டுக்கொண்டிருந்தான்.

பிரபு கோபாலிடம் லேசாக பேச ஆரம்பித்தான், "மச்சி, இது ரொம்ப தப்புடா, சுரேஷ் நம்ம பிரென்டுடா, நமக்காக என்னெல்லாம் செஞ்சிருப்பான்? உன்னையும் ஒரு நண்பன்னு மதிச்சு வீட்டுக்குள்ள சேர்த்துக்கிட்டு திரியுறான், அவனுக்கு நீ நம்பிக்கைத் துரோகம் பண்ணலாமா? என்ன மாதிரி படிப்ப விட்டுட்டு வேலைக்குப் போறவன் கூட ஒழுங்கா இருக்கானுங்க, உன் புத்தி என்னவோ இப்படி போகுதே? இது ரொம்ப தப்புடா"...

"இத பாரு, ரெண்டு வயசு பெரியவன்னா நீ அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுடிவியே? யார் வேணா என்ன வேணா சொல்லுங்க.. நான் ஒண்ணு மேல ஆசை வச்சுட்டா அதை அடையாம விடமாட்டேன்.. என்ன நடந்தாலும் சரி.. நான் என் முடிவை மாத்திக்க மாட்டேன்.."

அப்படி என்னடா ஆசை? உனக்கு அவ்வளவு ஆத்திரம்னா நாளைக்கு நான் வேலைக்கு போகும்போது ஒரு இருநூறு ரூபா எடுத்துட்டு கூட வா, நானே இத விட சிவப்பா, ஒரு நல்ல குட்டியா அரேஞ்சு பண்ணித் தாரேன்.

"தோடா... வந்துட்டாரு கொலம்பஸ் வழி காட்டுறதுக்கு! கம்முனு போ, அப்புறம் ஏதாவது வாயில வந்துரும்". கோபாலுக்கு கோபம் வந்தவுடன் எல்லோரும் வாயை மூடிக் கொண்டார்கள்..

"இதுக்கு மேலயும் உங்க கிட்ட பேசிட்டு இருந்தா நான் நல்லவன் ஆயிடுவேன் போல இருக்கு. ஆள விடுங்கடா நாளைக்கு சாயந்திரம் பார்க்கலாம்" என்று சைக்கிளை எடுத்தான் கோபால்..

மறுநாள் காலை. கோபால் மெதுவாக சுரேஷ் வீட்டை நெருங்கினான். ஜன்னல் வழியே பார்த்தான். வீட்டுக்குள் யாருமே இல்லை. மெதுவாக சைடு வழியே வேலியை ஒட்டியவாறு கொல்லைப்புறம் நோக்கிச் சென்றான். அங்கே சரோ குளித்துக் கொண்டு இருந்தாள். அவளும் அவனோட ஸ்கூல்தான். கோபாலும் சுரேஷும் + 1 . இவள் பத்தாம் வகுப்பு. ரொம்ப அமைதியான பெண். கோபால் யோசித்தான். சரோவின் சம்மதத்தைப் பெற்று விட்டால் வீண் பிரச்சினை இருக்காதே.. யாருக்கும் தெரியாமல் அடைந்து விடலாம். கடைசியாக ஒருமுறை பேசிப் பார்க்கலாமா என்று நினைத்தான். சில நொடிகள்தான் அந்த சிந்தனை.. அடுத்த கணமே "இவளுக்கோ விவரம் பத்தாது, நாம் பாட்டு இவளிடம் ஆசையை சொல்லப் போக அவள் சுரேஷிடமோ அப்பா அம்மாவிடமோ சொல்லிவிட்டால் அப்புறம் நம்மை வீட்டுப் பக்கமே சேர்க்க மாட்டார்கள்; பந்தோபஸ்தும் அதிகமாகிவிடும்.. அப்புறம் என்றைக்குமே கிடைக்காமப் போயிடும் என்று ஒரு முடிவுக்கு வந்து காத்திருக்க ஆரம்பித்தான்.

ஒரு கண் கிணற்றடியிலும் இன்னொரு கண் வாசலிலும் வைத்து இருந்தான். சரோ திரும்புகிற மாதிரி இல்லை. என்ன செய்வது என்று கையைப் பிசைந்து கொண்டிருந்த போது, சரோ குளித்து விட்டு மெதுவாக திரும்பியவள் கோபாலைப் பார்த்தே விட்டாள்.
அன்று விடியற்காலையிலேயே சுந்தர் அவளிடம் கோபாலின் திட்டத்தைப் பற்றி சொல்லி உஷார்ப்படுத்தி இருந்ததால் சடாரென்று ஒரு முடிவுக்கு வந்தாள். துணியை நன்கு தோளிலும் இடுப்பிலும் சுற்றிக் கொண்டு, அருகில் இருந்த மூங்கில் கம்பை எடுத்துக் கொண்டாள்.

"டேய் கோபாலு, நீ எதுக்கு வந்திருக்கன்னு எனக்கு தெரியும். மரியாதையாப் போயிடு! நீ இப்படிப்பட்ட ஈனப் பயன்னு தெரியாம நானே உன்கிட்ட வந்து எங்க வீட்ல யாரும் இருக்க மாட்டாங்கன்னு சொல்லிட்டேனே..! இன்னும் ஒரு அடி எடுத்து வச்சியின்னா மரியாதை கெட்டுரும்..உனக்கு என்னப் பத்தி முழுசா தெரியாது...கோபம் வந்தா நான் பத்ரகாளி ஆயிடுவேன்.." என்று இரைந்தாள்.

கோபால் இனியும் நேரம் கடத்தினால் வம்பு வளரும்.. ஆனது ஆகட்டும் என்று முன்னால் ஓடினான். ஒரே தள்ளு.. சரோ துணி தோய்க்கும் கல்லைப் பிடித்துக் கொண்டு கவிழ அவன் கொண்டு வந்திருந்த கைப்பையில் இருந்து கிழிக்கப்பட்ட பாதி பெட்ஷீட்டுடன் முன்னேறினான்.. இவ்வளவு நேரம் டேய் கோபாலு என்று சொல்லிக் கொண்டிருந்த சரோ இப்போது "கோபால் அண்ணா, வேணாம்னா, விட்டுருன்னா, அண்ணன் வந்து நீயே இப்படி பண்ணிட்டேன்னு தெரிஞ்சா உடைஞ்சு போயிடும்!" என்று அவன் கால்களைப் பிடித்தாள்.

கோபால் மசியவில்லை.. அடச்சே என்று ஒரே தள்ளில் அவளை எட்டி உதைக்க அவள் மீண்டும் இரண்டடி தள்ளி விழுந்தாள்.. விழுந்த வேகத்தில் நெற்றியிலும் முழங்காலிலும் சிராய்ப்பு ஆகி கண்களில் தாரை தாரையாய் அழுகை வந்து கண்களை மூடிக் கொண்டாள்.. ஒரு நொடி கழிவது ஒரு கணம் போல் இருந்தது. கால்களில் வலி உயிர் போனது.

கண்ணைத் திறந்த போது கோபால் பெட்ஷீட்டையும் பையையும் மார்போடு அணைத்துக் கொண்டு சந்தோஷத்தையும் வருத்தத்தையும் ஒரே நேரத்தில் முகத்தில் காட்டியபடி அவள் காதருகே வந்து "சாரி சரோ, என்ன மன்னிச்சுரு! இனிமே இந்த பக்கமே நான் வரமாட்டேன்" என்று சொல்லிவிட்டு ஓடி ஓடி ஓடியே போய் விட்டான்.

கிணற்றடியிலே அரைமணி நேரம் பிரமை பிடித்தவள் போல் அமர்ந்திருந்தாள் சரோ. மெதுவாக எழுந்து தேம்பித்தேம்பி அழுதவாறே அழுக்கான உடையுடன் ஹாலில் வந்து அமர்ந்து கொண்டாள். சற்று நேரத்தில் வீட்டில் எல்லோரும் வந்து விட்டார்கள். நடந்தது அத்தனையும் அழுதுகொண்டே அவள் சொல்லச் சொல்ல, அம்மாவுக்கும் சுரேஷுக்கும் ஆத்திரம் எகிறியது..பள்ளிக்கூட வாத்தியாரான சுரேஷின் அப்பா மட்டும் எதுவும் பேசாமல் நாற்காலியில் உம்மென்று அமர்ந்திருக்க, மீனாட்சி ஆரம்பித்தாள்,

"அந்த பயல பார்க்கும்போதே நினைச்சேன்... எவ்வளவு அன்பா பழகினோம்... அந்தப் பரதேசி புத்தியை காட்டிட்டான்..அவன் கண்ணை பார்க்கும் போதே களவாணித்தனம் பளிச்சுன்னு இருந்துச்சு.. நான் ஒரு மடச்சி, அவன் சுரேஷ் இல்லாதப்ப பார்த்து அடிக்கடி வாரதும், பிஸ்கட்டு என்னா, பாலு என்னான்னு கொண்டாறதும், அப்படியே கிணத்தடியில இருந்து முழிச்சு முழிச்சு முளுங்குரா மாதிரி பார்க்கிறதும் எனக்கு உரைக்காமப் போச்சே.. பாவிப்பய வெள்ளிக்கிளைமையும் அதுவுமா நிறைஞ்ச வீட்டுல இப்படி கைய வச்சுப்புட்டானே..அவன் விளங்குவானா, அவன் அப்பன் புத்திதான் அவனுக்கும் இருக்கும்! நீங்க போயி அவன் அப்பன் ஆயி கிட்ட நாலு வார்த்தை நாக்கப் பிடுங்குறமாதிரி கேட்டுட்டு வாங்க, இப்படியா ஒரு நாதாரிய வளர்ப்பீங்கன்னு?" மீனாட்சியின் குரல் தெருக்கோடி வரை கேட்டது..

சுரேஷின் அப்பா மாணிக்கம் எவ்வளவோ சமாதானம் செய்தும் அவளை அடக்க முடியவில்லை...

இயல்பிலேயே அமைதியான மாணிக்கத்துக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.."ஏண்டி, அவ என்னடி வளர்க்கறது? நீ என்ன கிழிச்ச? இந்த தொர ரோட்டுல போற தெரு நாயை எல்லாம் கிணத்தடி வரை கூட்டியாந்து குலாவுவாராம்.அதுங்கள பார்க்க வேற நாயிங்கலாம் வருமாம்.. இதுங்க பண்ற கள்ளத்தனத்துக்கு எல்லாம் நான் பஞ்சாயத்துக்குப் போவணுமா? அவன் அம்மா ஒரு பஜாரி, நான் போயி இதக் கேட்டா, நீ யோக்கியமா, உன் மவன் யோக்கியமான்னு என்கிட்டயே கேப்பா! சனியன் ஒழியுதுன்னு விட்டுத்தள்ளு" என்று துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு வாசலில் போய் அமர்ந்து விட்டார்..

மீனாட்சி முனங்கியவாறே சமையல் கட்டுக்குள் நுழைந்தாள்.

சரோ காயங்களுக்குத் தேங்காய் எண்ணெய் போட ஆரம்பித்தாள்..

சுரேஷ் மட்டும் லேசான அழுகையுடன் கிணற்றடிக்கு சென்றான்.. அங்கே கருப்பு நாய்க்குட்டியும் வெள்ளை நாய்க்குட்டியும் பயத்தில் ஒன்றோடு ஒன்று கட்டிக்கொண்டு ஒடுங்கிப் படுத்திருந்தன..

அவன் ஆசையாய் வளர்த்திருந்த சிவப்பு நாய்க்குட்டியை கோபால் தூக்கிக் கொண்டு போயிருந்தான்...

சர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டி

Wednesday, October 21, 2009

ஆசைப்படுங்கள் !


ஆசைப்பட
ஆசைப்படுங்கள் !
அன்புக்கு
ஆசைப்படுங்கள் !

நல்லவை
அனைத்திற்கும்
ஆசைப்படுங்கள்
நமக்கெனவே
எல்லாம் என
ஆசைப்படுங்கள்!

ஆசையின்றி
எதுவும் இங்கே
அசைவதில்லை!
ஆம் !
கருவிழியைக் காக்கும்
ஆசையே
கண்ணிமையின்
அசைவு!
காற்று - மரங்களின்
இல்லற ஆசையே
இலைகளின்
அசைவு!

ஆசைப்படாமல்
எதுவும் கிடைப்பதில்லை!
அப்படிக் கிடைத்தால் அது
என்றும் நிலைப்பதில்லை !

கற்றுக் கொள்ள
ஆசைப்படுங்கள்!- பின்னர்
கற்றதைக் கொடுக்க
ஆசைப்படுங்கள் !

நிலைத்து நிற்க
ஆசைப்படுங்கள்
நிலையாமையே நிலையென
நினைத்திருக்கவும்
ஆசைப்படுங்கள் !

குறிக்கோள்களை
குன்றுகளாளாய்க் குறுக்கிடாமல்
சிகரங்களை
சீக்கிரம் தொட ஆசைப்படுங்கள்!

குனிந்த தலைக்கும்
கூன் முதுகிற்கும்
விடைகொடுத்து
நிமிர்ந்த நெஞ்சுக்கும்
நேர்மைக்கும் ஆசைப்படுங்கள் !

சலிப்புக்களைச்
சாகடிக்கச் செய்து விட்டு
பிரமிப்புக்களுக்குப்
பிறப்பளிக்க ஆசைப்படுங்கள்!

தாயின் கருணைக்கு
ஆசைப்படுங்கள் !
தவழும் மழலையின்
தமிழ் கேட்க ஆசைப்படுங்கள்!

இளமையில் முயற்சிக்கு
ஆசைப்படுங்கள்!
முதுமையில் முதிர்ச்சிக்கு
ஆசைப்படுங்கள் !

வெற்றியின் ருசிகாண
தோல்விக்கு ஆசைப்படுங்கள்!
தோல்வியின் வலி மறைய
வெற்றிக்கு ஆசைப்படுங்கள் !

விடை காண முடியா
வினாக்களுக்கு ஆசைப்படுங்கள்
வினாக்கள் அனைத்திற்கும்
விடைகாண ஆசைப்படுங்கள்!

பிராணிகள் காட்டும்
பிரியத்திற்கு ஆசைப்படுங்கள்
பிறவிகளில் ஒன்று
அவையாக ஆசைப்படுங்கள்!

காதலுக்கு
ஆசைப்படுங்கள் !
காதலித்தால்
காத்திருக்க ஆசைப்படுங்கள் !

Tuesday, October 20, 2009

முத்தம்


மழலைக்கு கிடைத்திடும்
நித்தம் நித்தம்
மறுபடி வேண்டிடும்
நம்தம் சித்தம் !

அன்பு முத்தம்
அன்னையின் முத்தம் !
அவசர முத்தம்
காதலி முத்தம் !

மறந்திட முடியா
முதல் முதல் முத்தம்
படிக்கிற காலத்தில்
பிடித்தவள் முத்தம் !

கவலைகள் மறந்திட
கிடைத்திடும் முத்தம்!
கணவன் மனைவிக்கு
கட்டிலில் நித்தம் !

பிணக்குகள் தீர்கையில்
இணங்கிடும் முத்தம்
மருந்துக்கும் பார்க்காது
சுத்தம் பத்தம்!

முத்தம் என்பதும்
ஒருவகை யுத்தம் !
முடிவினில் ஜெயிப்பது
முனகலின் சத்தம் !

கடல் போல் பெருகிடும்
காதலின் வெள்ளம்
கமண்டலமாக்கி
அடக்கிடும் முத்தம் !

உதடுகள் இரண்டும்
உரசிடும் நேரம்
உள்ளத்தில் இருந்து
உடைந்திடும் பாரம் !

எதையோ தேடிட
எங்கும் வேர்க்கும் !
கண்களை மூடியும்
கருவிழி பார்க்கும் !

மீசை குத்திட
ஆசையும் மீறும் !
வெளிச்சம் மறைய
வெட்கம் தொலையும் !

உடல்தனில் எங்கும்
உரியவர் எச்சம்
ஊடலில் கிடைத்திட
உலகமே துச்சம் !

முத்தம் என்பது
முன்னுரை ஆகும் !
முடிவுகள் இன்றி
மோகத்தில் வேகும் !

சோகத்தை எல்லாம்
சுலபத்தில் கொல்லும்!
சொர்க்கத்தின் எல்லையை
சுலபமாய் வெல்லும் !

உச்சி மோர்கையில்
உறவுகள் பேணும் !
உதடுகள் சேர்கையில்
உச்சங்கள் காணும் !

முத்தம் என்பது -

கட்டிலை ஆக்கிடும்
போர்க்களம் ! - தரும்
போதையில் அது ஒரு
பீர்க்குளம் !

இளமை ஏக்கத்தின்
மொத்த முத்தம்!
இனிதாய்க் கொடுப்பதில்
என்ன குத்தம் ?

முத்தத்தில்
வகைகள் எத்தனை ?
முடிந்த பின்
எதற்கு நிந்தனை ?

டிஸ்கி : வால், இதுவாச்சும் வேலைக்கு ஆகுதா இல்லையா?

Monday, October 19, 2009

பயணங்கள்


பயணங்கள்
பலவிதம்
ஒவ்வொன்றும் ஒரு சுகம்
காண்கின்ற காட்சிகள்
கற்பிக்கும் அனுபவம் !

கருவறை தொடங்கியே
பூமிக்குப் பயணமே -
புரியாத புதிராக
புதியதோர் ஜனனமே !

விடியலைத் தேடியே
விண்மீன்கள் பயணமே -
விடியலில் தொடங்கிடும்
கதிரவன் பயணமே !

காலத்தைக் கா(கூ)ட்டிடும்
கடி முட்கள் பயணமே -
நில்லாது சுற்றிடும்
நிலத்தன்னைப் பயணமே !

கரைகளைத் தேடியே
கடலலைப் பயணமே -
கடல் தன்னில் கரையவே
நதிகளின் பயணமே !

தேவையின் காரணம்
பலரது பயணமே -
தேடுதல் நோக்கியே
சிலரது பயணமே !

இல்லறம் துவங்கிட
இளமையின் பயணமே -
இயற்கையை ரசித்திட
இன்னும் சில பயணமே !


சாதிக்கத் துணிந்தோர்க்கு
சாகின்ற வரைதன்னில்
சரித்திரம் படைக்கவே
சாகசப் பயணமே !

இருக்கின்ற இடம் விட்டு
இல்லாத இடம் தேடும்
தறிகெட்ட மனதிற்கு
முடிவில்லா பயணமே !

அலைகின்ற மனம் நிற்க
ஆன்மீகப் பயணமே
அமைதியை தந்திடும்
ஆழ்மனப் பயணமே !

Thursday, October 15, 2009

முயற்சி செய்


முயற்சி செய்
ஏனெனில்

முயற்சி
முன்னேற்றத்தின்
முதல் படி!
பிரகாசமான
வாழ்விற்குப்
பிள்ளையார் சுழி!

முயற்சி
குறிக்கோளின்
கூட்டாளி!
உனக்காகக்
குரல் கொடுக்கும்
பங்காளி!

முயற்சி
அதிர்ஷ்டத்தின்
அழைப்புமணி!
திறமைக்கோர்
திறவுகோல்!

முயற்சி
உழைப்புப் பயணத்தில்
உற்ற துணை!
சாதனைச் சக்கரத்தின்
அச்சாணி!

முயற்சி
திசையெங்கும் செல்லும்
தென்னையின் வேர்!
திருமகள் ஏறி வரும்
திவ்வியத் தேர்!

முயற்சி
வாழ்வின் வளம் காட்டும்
வழிக் கல்!
வெற்றிச் சாகுபடிக்கு
விதை நெல்!

முயற்சி
சோதனைப் பாதையில்
சுமை தூக்கும் ஒட்டகம்!
சோம்பல் அரக்கன்
நுழைய முடியா பெட்டகம்!

முயற்சி
நீ துவளும் நேரத்தில்
தோள் கொடுக்கும் தோழன்!
நீ வீழும் நேரத்தில்
தாங்கும் விழுது!

முயற்சி
இயலாமையை
ஏறி மிதிக்கும் யானை!
முயலாமையை
முறியடிக்கும் சேனை!

முயற்சி
முடக்கத்தை சுட்டுத்தள்ளும்
துப்பாக்கி!
தாழ்வு மனத்தைத்
தகர்த்தெறியும்
ஆர்டிஎக்ஸ்!

முயற்சி
அனுபவக் கட்டிடத்தின்
அஸ்திவாரம் !
ஆகாயத்திற்கும் உச்சிக்கும்
அடிவாரம்!

எனவே
முயற்சி செய் !
அல்லது
முயற்சி செய்யவாவது
முயற்சி செய் !

தீபாவளி கொண்டாடலாமா கூடாதா ?


தீபாவளியின் வரலாறு என்ன என்பது எல்லாம் பெரும்பாலும் உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்... அதைப் பற்றிய விமர்சனங்களுக்கும் சமீப காலமாக பஞ்சம் இல்லை.....தீபாவளியை ஏன் கொண்டாட வேண்டும் என்ற கேள்விக்கு என் சிற்றறிவிற்கு எட்டியபடி பதில் கூற முயற்சி செய்திருக்கிறேன்...

வட இந்தியாவில் இப்பண்டிகையை எதிர்த்தோ அல்லது மறுத்தோ என்றும் பெரிதாக செய்திகள் கிளம்புவதில்லை...ஆனால் தமிழகத்தில் மட்டும் சலசலத்துக் கொண்டிருக்கும் சில அறிவுக் கொழுந்துகளுக்கும், அவர்கள் கருத்தையும் அவர்களையும் ரசித்துக் கேட்பதால் மனமாற்றத்துக்கு உள்ளாகும் சிலருக்கும் இப்பதிவு....

தீபாவளி - கண்ணன் நரகனை கொன்று நரர்களை பெரும் தீமையில் இருந்து காத்த நாளாக தொன்று தொட்டு கூறப்படுகிறது...

தீபாவளி எதிர்ப்பாளர்கள் கூறுவது என்னவென்றால் கிருஷ்ணன் என்பவரும், அவர் சம்பந்தமான எல்லா விஷயங்களுமே கட்டுக்கதை என்றும் இவை எல்லாம் ஆரியர்கள் அல்லது பிராமணர்களால் அவர்கள் ஆதாயத்துக்காக புகுத்தப்பட்டது என்பதும் தான்....(எனக்கு தெரிந்தவரை, யாரும் தீபாவளிக்காக ஐயருக்கு காசோ அல்லது வேறு ஏதோ ஆதாயம் செய்வதாகவோ,அல்லது பட்டாசுத் தொழிலிலும், ஜவுளியிலும் ஐயர்களுக்கு பெரும்பங்கு இருப்பதாகவோ தெரியவில்லை)

ஆரிய திராவிட மாயை என்பது சுத்த பொய் என்று சில ஆண்டுகளுக்குப் முன் பி.பி.சி. ஆராய்ச்சி முடிவை வெளியிட்டபோது, அது பிரபலம் அடையவில்லை. அதே சமயம் பல ஆண்டுகளாக பொய்யாகப் பேசியவர்களும் அதை வழி மொழிந்தவர்களும் தலை குனியவும் இல்லை, உண்மையை உணரவும் இல்லை..
இப்படித்தான் டார்வினின் பரிணாமக் கொள்கை என்று நான் மாங்கு மாங்கென்று படித்து பள்ளியில் வரலாற்றில் முதல் மாணவனாகவும் இருந்தேன். இப்போ என்னடாவென்றால் அசால்ட்டாக அந்த தியரியே தவறு என்று சொல்கிறார்கள்..

சந்திரனில் பிராண வாயு (ஆக்சிஜன்) கிடையாது என்றார்கள்..அதே நேரம் H2O இல்லாமல் இப்போ எப்படி தண்ணீர் கிடைத்தது என்று தெரியவில்லை..

இது போன்ற விடை சொல்ல முடியா விஷயங்களை அப்படியே விட்டுவிடுவதே நல்லது..இன்றைய ஆராய்ச்சி முடிவை நாளை தவறு என்பார்..எது உண்மை எது பொய் என்று இதற்கெல்லாம் நேரத்தை செலவு செய்யாமல், நாமும் சந்தோஷமாக இருந்து மற்றவரையும் சந்தோஷமாக வைத்து இருந்தால் அதனால் எந்த பாதகமும் வந்து விடாது.

அதே போல இங்கு தமிழ் நாட்டில் சில பேருக்கு ஒரு வினோத நோய் உண்டு... அது என்னவென்றால் அசுரன் என்று கூறப்பட்டால் அது தென்னவர்களை குறிப்பிடுவதாகவும், கடவுளர்களும், தேவர்களும் வடபுலத்தவர்கள் என்பதும்தான் அது... அதன் காரணமாக ராவணன் தமிழன், நரகன் தமிழன், ராமனும் கிருஷ்ணனும் வேற்றான் என்று மூளை சலவை செய்ய முயற்சிப்பார்கள்... அதனால் மக்களுக்கு வாழ்த்து கூட சொல்ல மாட்டர்கள்.... மற்றவர்களின் பண்டிகைகளுக்கு மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு வாழ்த்துவார்கள்... இவர்கள் வாழ்த்து தேவையில்லை என்பது வேறு விஷயம்.. ஆனால் நாம் இதை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமே இதை எழுதுகிறேன்...

நல்லவன் - தேவ குணம் கொண்டவன். தீயவன் அசுர குணம் கொண்டவன். இதில் ஜாதி மத பேதம் இல்லை. நமக்குள் நல்லகுணமும் இருக்கும்; தீய குணமும் இருக்கும் இரண்டில் தீயதை விடுத்து நல்லதை கொள்ளலே இந்த கதைகளின் சாராம்சம்...

ஒரு வாதத்திற்கே வைத்துக் கொண்டாலும், முருகனும் சிவனும், அரங்கனும், தென்னவர்கள் தானே? தமிழ்ச் சங்கங்களும் அதன் தலைமையும் அவர்களால் அழகுபடுத்தப் பெற்றது தானே?
வடக்கே வாழ்ந்த கம்சன், துரியோதனன், சகுனி போன்றோர் அசுரர்கள் என்று விளிக்கப்படாவிடினும் அவர்கள் தீயசக்தியாகவேதானே உருவகப்படுத்தப்பட்டனர்? கிருஷ்ணன் கொன்ற சகடாசுரனும் இன்ன பல அசுரர்களும் வட இந்தியர்கள் தானே? எனவே இந்த விழாவை வடக்கு தெற்கு என்று பிரிக்கும் சூழ்ச்சிகளுக்கு இரையாகாமல், ஐயமின்றி, சந்தோஷமாக கொண்டாடுங்கள்....

இந்த தீபாவளியின் கதையை வேண்டுமானால் நம்பாமல் போங்கள்.. ஆனால் தீமை என்பதை அழிக்க வேண்டும், நன்மை மலர வேண்டும் என்ற உள்ளர்த்ததையாவது உணருங்கள்... அதிலும் முக்கியமாக கிருஷ்ணனும் அவன் மனைவி சத்ய பாமாவும், அச்சுறுத்தும் தீயசக்தியாகிய நரகாசுரன், தம் மகனே ஆயினும் அவனை அழித்து உலக நன்மை ஒன்றையே கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகிறார்கள்...

பாசத்தினால், தவறுகளுக்கு துணை போகக் கூடாது, சத்தியத்தின் பக்கம் நின்று, தர்மத்தைக் காத்து, அதர்மத்தை அழிக்க வேண்டும் என்பது எவ்வளவு உயர்ந்த கருத்து? அதிலும், தவறு செய்தவனே, தண்டனைக்குப் பின் மனம் திருந்தி, இன்று மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று வேண்டுவது எவ்வளவு உன்னதம்?

காலத்தினால், பண்டிகையின் உள்ளர்த்தங்களும் நோக்கங்களும் அடிபட்டுப் போனாலும், புத்தாடை அணிதல், பட்டாசு வெடித்தல், இனிப்பு உண்ணுதல் போன்ற மகிழ்வூட்டும் பழ்க்கங்களாவது நடை முறையில் உள்ளனவே... அதை தொடர்வோமே, நண்பர்களே.....

சில பேருக்கு சில நேரங்களில் என்ன தீபாவளி கொண்டாட்டம்? காசை விரயம் ஆக்குகிறோம்? எவ்வளவோ பேர் கஷ்டப்படும்போது நமக்கென்ன புத்தாடை? என்று தோன்றும். ஆனால் அவர்கள் தீபாவளி அன்று வேண்டுமானால் புத்தாடை வாங்காமல் இருப்பார்கள் மற்ற பல சாதாரண நாட்களில் மிக விலை உயர்ந்த ஆடைகளை அணிவார்கள்; தேவையற்ற பல செலவுகளை செய்வார்கள்... (நானும் முன்னர் சில காலம் அதில் அடக்கம்)

நீங்கள் அந்த உணர்வில் இருந்தீர்களேயாயின், தயவு செய்து, விலை குறைந்த உடையை உங்களுக்கு எடுத்துக் கொள்ளுங்கள்... உங்களுக்கு தெரிந்த அல்லது தெரியாத பல ஏழை சிறார்களுக்கு உங்களால் முடிந்த செலவில் உடைகளையும், பட்டாசுகளையும், இனிப்புக்களையும் வாங்கித் தாருங்கள்... அந்தக் குழந்தைகளுக்கு, இந்த சிறு செயல்களில் கிடைக்கும் இன்பம் அளவிட முடியாது அவர்களுக்கு ஆராய்ச்சி செய்யத் தெரியாது... ... பல பேர் சந்தோஷமாக இருக்கும் போது அவர்களும் சந்தோஷமாக இருந்தால், அது உங்களுக்கு நிச்சயம் மன நிறைவையும் புண்ணியத்தையும் தரும்......

குறைந்த சத்தமுடைய பட்டாசு, மத்தாப்புகளை ஏற்றி கொண்டாடுங்கள் குதூகலமாக...

ஆம், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்.....தீபத்தின் ஒளியைக் காண்போம்...

Sunday, October 11, 2009

தினமலர் - திரைத்துறை மோதல் - ரஜினி பேச்சு..


தினமலர் - நடிகைகள் விவகாரத்தில் ரஜினி பேசிய விவகாரத்தில் லேசாக புகைய வைக்கலாம் என்று நினைத்தவர்களுக்கு இந்த முறை வாய்ப்பு கிடைக்கவில்லை.. அப்படியும் லேசான முனகல்களை சிலர் வெளியிடத்தான் செய்தார்கள்.. ரெண்டு வேளை சோத்துக்கு விபசாரம் செய்வதை நியாயப் படுத்தலாமா ரஜினி? என்று ஐயங்கள் எழுந்தன.. ரஜினியைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு அவர் என்ன சொல்ல நினைக்கிறார் என்பது புரிந்து விடும்.. புரியவில்லை என்றாலும், அவர் நல்லதைத்தான் சொல்லிஇருப்பார்.. அது இப்போ நமக்கு புரியாது என்று அதை அப்படியே ஏற்றுக்கொள்பவர்களும் உண்டு...

எந்த ஒரு பிரச்சினைக்குமே ஒரு முடிவு என்பது இருக்கிறது.. நடிகர் ரஜினிகாந்தைப் பொறுத்தவரை பலகாலமாக அவரோ அல்லது அவது பேச்சோ தான் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு முடிவாக இருக்கும்… ஆம், அந்த மனிதன் வரும்வரை ஏதாவது ஒரு பிரச்சினை விஸ்வரூபமாக இருக்கும்; அந்த மனிதன் வந்து உள்ளொன்று வைத்து உதடொன்று உச்சரிக்காமல் மனதில் பட்டதை பட்டென்று சொல்லிவிட்டுப் போக, அந்த மூலப் பிரச்சினை அப்படியே மூழ்கடிக்கப்பட்டு, அதன் பக்க விளைவுகள் பக்காவாக அவரை நோக்கி திசை திருப்பப்படும்..

இது ரஜினிக்கு ஒன்றும் புதிதல்ல.. காவேரி பிரச்சினையா - அதன் மூலம் எங்கே என்று யாருக்கும் தெரியாது, அதன் முடிவோ எப்பொழுது வரும் என்றும் யாருக்கும் தெரியாது - ஆனால் சந்தடி சாக்கில் ஒரு மாதம் சீசனுக்கு ‘கன்னடக்கார ரஜினி’ என்று பட்டி தொட்டி எல்லாம் முழங்கினால் ஒட்டு மொத்தமாக எதிர்ப்புக்களை அவர் பக்கம் அனுப்பி விடலாம்.. ஊடகங்களுக்கும் திடீர் மொழிப் பற்றாளர்களுக்கும், விளம்பரப் பிரியர்களான அவரது சக கலைஞர்களுக்கும் கூட இதில் ஒரு குரூர திருப்தி கிடைக்கும். பிறகென்ன உச்ச நீதிமன்றமாவது, நடுவண் அரசாவது, வெங்காயம்..

ஹொக்கெநக்கல் பிரச்சினை தீருமா தீராதா என்பது பற்றி யாருக்கும் அக்கறை கிடையாது - ஆனால் ரஜினி உதைக்கனும்னு சொன்னதை பற்றி ஆராய்ச்சி கட்டுரைகளே வெளி வரும் அளவுக்கு பலருக்கு எழுத்தார்வம் விண்ணை முட்டும்.

அதே போலத்தான் - சமீபத்தில் நடந்த தினமலர் - நடிகைகள் விவகாரமும்.. இந்த முறையும் தன் மனதில் பட்ட சமூக அக்கறையையும், , பத்திரிகைகளின் தரம் குறித்த தன்னுடைய நியாயமான ஆதங்கத்தையும் இரண்டு பெண் பிள்ளைகளைப் பெற்ற ஒரு தகப்பன் ஸ்தானத்தில் இருந்து நேர்மையாக வெளிப்படுத்தி இருக்கிறார். தன்னை பத்திரிகைகளுக்கு எதிராக சித்தரிப்பது நடைபெறும் என்று தெரிந்தும் துணிந்தே நடுநிலையாகப் பேசினார்..

தினமலர் மீது ஏற்கனவே பலருக்கு காண்டு இருந்ததாலும், இது பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயமாயிற்றே, நாம் ஏதாவது சொன்னால் பூமராங்காகிவிடுமே என்ற பயத்தினாலும் நல்லகாலமாக இந்த முறை அந்த அளவிற்குப் பெரிதாக ஏதும் நிகழவில்லை..ஒருவேளை அவரது திரைப்படம் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டார்களோ என்னவோ..

பொதுவாக பாலியல் தொழில் என்பது விருப்பப்பட்டு வருவது இல்லை… பிறரது விருப்பத்திற்காக பெண்கள் பலி வாங்கப்படுவதே நடக்கிறது… அந்த அர்த்தத்தில்தான் பரிதாபப் பட்டு ரஜினி “சோத்துக்காக இவ்வளவு கஷ்டப்படுகிறார்களே ” என்று ஆதங்கப்பட்டார்… இந்த ஆதங்கம், பெண்ணின் சதையை மீறி உள்ளத்தை காணும் உண்மையான மனிதர்களின் ஆதங்கமும் கூட..

தற்காலத்தில் யாரும் தவறான உறவுகளையும், பாலியல் தொழிலையும் பெரிதாக முக்கியத்துவம் கொடுத்து நினைப்பது இல்லை - நேரடியாக அவர்களைப் பாதிக்கும் வரை !

எயிட்ஸ் விழிப்புணர்வு அமைப்பினர் கூட, பாதுகாப்பாக உறவு கொள் என்றுதான் சொல்கிறார்களே தவிர தகாத உறவைக்கொள்ளாதே என்று ஆணித்தரமாகக் கூறுவது இல்லை…. ஆக எல்லா மட்டத்திலும் கடுமையான தண்டனைகளை ஏற்படுத்தி, இந்த சமூக அவலத்தை முற்றிலுமாக நிறுத்தினால் மட்டுமே பெண்களை போகப் பொருளாக்கும் நிலை மாறும்..

முன்னெல்லாம் பெண்கள் ஆண்களுடன் அதிகமாக இணைந்து பணி புரியாத சூழல் நிறைந்த சமூகத்தில் நடிகைகள் என்றாலே ஒரு தவறான கண்ணோட்டத்தோடு பார்க்கும் பழக்கம் இருந்து வந்தது.. அதனால் பல வதந்திகள் காது மூக்கு வைத்து காற்றை விட வேகமாக பரப்பப்பட்டன.. ஒரு வேளை இப்படி இருக்குமோ, அப்படி இருக்குமோ என்றெல்லாம் பொதுஜனத்தை கற்பனையில் மிதக்க வைத்து சப்புக் கொட்டி விற்பனையை அதிகரிக்க வைக்கும் கிசுகிசுக்களை தரமானவை என்று பெயர் எடுத்த பத்திரிகைகள் கூட பிரசுரிக்கத் தொடங்கி நான்காம் தூணான தங்களின் அஸ்திவாரத்தை தாங்களே சுரண்டத் தொடங்கி விட்டன.

தவறு செய்தவர்கள் நடிகையாக இருந்தாலும், நடிகராக இருந்தாலும் அல்லது வேறு யாராகவேனும் இருந்தாலும், ஆதாரம் இருந்தால் வெளியிடுவது பத்திரிகைகளின் புலனாய்வையும் நம்பகத்தன்மையும் பிரதிபலிக்கும்.. ஆனால் மேஜையில் உட்கார்ந்து கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டு, இஷ்டம் போல் எழுதினால், படிப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது… செய்தியில் சம்பந்தப் பட்டவர்களுக்கே அதன் வலி தெரியும்.. இந்த முறை மடியில் கனமில்லை மோதிப் பார்த்து விடலாம் என்று ஹோதாவில் இறங்கி விட்டார்கள் நடிகைகள்.. அவர்களுக்கு இன்னும் மகளிர் அமைப்புகளிடம் இருந்தோ சமூக ஆர்வலர்களிடம் இருந்தோ ஆதரவு கிடைக்கும் முன்பாகவே, சக கலைஞன் என்ற முறையிலும் சகோதரன் என்ற முறையிலும் முன்வந்து தன் கருத்தை ஆணித்தரமாகப் பதிவு செய்திருக்கிறார் ரஜினி..

ஒரு கொலைகாரனின் படத்தைப் போட்டால் மற்றவர்கள் உஷாராவர்கள்.. பிக்பாட்டின் படத்தைப் போட்டாலும் அவனை விட்டு ஒதுங்குவார்கள்.. ஆனால் விபசாரம் செய்தவரின் படத்தைப் போட்டால், அவரே திருந்தவேண்டும் என்று நினைத்தாலும் நெருங்கி தொல்லை கொடுப்பார்கள் பல பேர்.. ஆக இந்த குற்றத்தை மட்டும், தொடரச் செய்வது இன்னொருவரின் பங்களிப்பாகத் தான் இருக்கும்.. எனவேதான் அவர்களின் படம் வெளியிடப்பட்டால் அது மேலும் அக்குற்றத்தை தூண்டச் செய்யும் எனவே தவறு செய்தவர்களுக்கு படம் போடாமல் சட்ட ரீதியான தண்டனைகளை வாங்கிக் கொடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறார்...

அவர் ஆதாரத்துடன் சிக்கிய நடிகை புவநேஸ்வரியைப் பற்றி எதுவும் பேசவில்லை, அவருக்கு ஆதரவும் தெரிவிக்கவில்லை.. என்றைக்குமே சட்டத்தின் நிகழ்வுகளில் அவர் தலையிடுவதே இல்லை.. ஆதாரம் இல்லாமல் படத்துடன் நடிகைகளைப் பற்றி செய்தி வெளியிட்டது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்த்தவே ரஜினி ஆவேசமாகப் பேசியிருக்கிறார்… தன்னைப் பற்றி எத்தனையோ செய்திகள் வந்த போதும் அவற்றை மவுனமாக புறந்தள்ளும் ரஜினியால், தன் சக நடிகைகளைப் பற்றி அவதூறு பரப்பப் படும்போது அதை சகித்துக்கொள்ள முடியவில்லை…. கல்யாண வீட்டுக்குப் போகாவிட்டால் கூட இழவு வீட்டுக்குப் போயிடு என்று கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள்… அதற்க்கு அர்த்தம் என்ன வென்றால் நீ மகிழ்ச்சியில் பங்கெடுக்காவிட்டாலும் பரவாயில்லை - உன்னை சார்ந்தவனின் சங்கடத்திற்கு தோள் கொடு என்பது தான்…

இது ரஜினிக்கு நன்றாகத் தெரியும்.. தன்னுடையை சங்கடத்தை தன் சட்டையைப் போல் தான் மட்டுமே மாட்டிக் கொள்ளும் அவர், தன் சகாக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் தானே ஒரு போர்வையாகி விடுகிறார்….

அந்த அளவிலே அவருக்கு ஒரு பாராட்டு...

என்ன அந்த மேடையில் பல பேர் வழக்கம் போல் வரம்பு மீறி..வசை பாடி தங்களுக்கு கிடைத்து இருக்கவேண்டிய மரியாதையையும், அனுதாபத்தையும் தானே கெடுத்துக் கொண்டு விட்டார்கள்...இதையும் அவர் ஒரு அறிவுரையாக அவர்களுக்குக் கூறியிருக்கலாம்....

இன்றைய தேதியில், திரைத்துறையும் - பத்திரிக்கையும் அவர்கள் சம்பந்தப்பட்ட வியாபாரங்களின் இரண்டு கண்கள்.. ஆனால் இரண்டுக்கும் கேடராக்ட் ஆபரேஷன் பண்ண வேண்டும்...இரண்டின் வாசகர்கள் தான் அனுசரிக்கும் மனப்பான்மையை விட்டுவிட்டு துணிந்து புரையை எடுக்க வேண்டும்..

Thursday, October 8, 2009

திருமணத்திற்குப் பின் நாங்கள் பார்த்த முதல்படம்..



திருமணத்திற்கு முன்னாலேயே நான் சுப்ரமணியபுரம், நாடோடிகள், பசங்க எல்லாவற்றையும் நண்பர்களோடு பார்த்து விட்டதால் திருமணத்திற்குப் பின் உருப்படியான ஏதாவது படத்தை முதன் முதலில் பார்க்க வேண்டுமே என்று நினைத்து இருந்திருந்தேன்...நல்ல வேளையாக - உன்னைப் போல் ஒருவன் ரிலீசாகி நான் கவுரவமாக சொல்லிகொள்ளும்படி ஒரு படம் கிடைத்தது...அதற்காக முதலில் கமலஹாசனுக்கு ஒரு நன்றி..இதன் இந்தி மூலப் படத்தை நான் பார்த்து இல்லை எனவே என்னைப்பொறுத்தவரை இது ஒரு புதிய படமாகத் தான் தோன்றியது..

எனது சகோதரனுக்கும் சமீபத்தில் தான் திருமணம் ஆயிருந்ததால், நாங்கள் எல்லோரும் சேர்ந்தே தான் முதல் படம் பார்க்கவேண்டும் என்று விரும்பினோம்.. ஒரு வழியாக எல்லோரின் நேரமும் செட்டாகி கடந்த வார இறுதியில் படம் பார்ப்பது முடிவானது... நேரம் குறைவாக இருந்ததால், நகரின் உள்ளேயோ, மாயாஜால் போன்ற புற நகருக்கோ செல்ல முடியவில்லை.. திருவான்மியூர் ஜெயந்தியில் (இங்கே தான் நான் வாரா வாரம் ஏழெட்டு முறை பாஷா பார்த்தேன்.). உ.போ.ஒ. ஓடுவதாக பத்திரிகையில் பார்த்திருந்ததாலும், புதிதாக டிடிஎஸ் பண்ணிஇருப்பது எப்படி இருக்கிறது என்று பார்க்கும் ஆர்வத்தாலும் அங்கே சென்றால் - மேற்படி படத்தை எடுத்துவிட்டு, அங்கே போஸ்டரில் என்னைப்போல் ஒருவன்(??)பரத் ஆறுமுகமாக மிரட்டிக் கொண்டு இருந்தார்... எல்லோரிடம் மொக்கை வாங்கி கொண்டு, கணபதிராமில் நுழைந்தோம்... பால்கனி புல் ஆகிவிட்டது.. கீழ்தளத்திற்கு எங்கள் சகோதர சகோதரிகள், இரண்டு நண்பர்கள் உட்பட ஒன்பது பேர் டிக்கெட் எடுத்து நுழைந்தோம்.

படம் ஆரம்பிப்பதற்கு முன் சுருதி ஹாசன் பாடல் ஒன்று வந்தது.. படத்தில் பாடல்கள் இல்லை என்பதால் இந்த ஏற்பாடு போலும்... பாட்டு பரவாயில்லை.. அப்போது என் நண்பர் மெதுவாக என்னிடம் சுருதி அழகாக இருப்பதாகச் சொல்ல, நான் பதிலுக்கு "எனக்கு என் பொண்டாட்டியைத் தவிர யாரும் அழகில்லை " என்று கொஞ்சம் சத்தமாகவே சொல்ல, எங்கள் வரிசையில் ஒரு "ஓ" போட்டார்கள்..

படம் ஆரம்பித்ததில் இருந்தே ஒரு வித அமைதி... மோகன் லாலை ஒரு டாக்டர் நடிகர் சந்தித்து பிலிம் காட்டி, மொக்கை வாங்கும் காட்சியில் தியேட்டரில் பலத்த கைதட்டல்..அப்போது எனக்கு என்னவோ எழுந்து நின்று "ஏய்.. சைலன்ஸ்... படம் பார்த்துட்டு இருக்கோம்ல " என்று சொல்லத் தோன்றியது...

கமலகாசன், மோகன்லால் ஆகிய இருவரின் நடிப்பும் போட்டி போட்டு இருந்தது.. மோகன்லால் பல இடங்களில் பளிச்சிட்டிருந்தார்.. கடைசி காட்சி தவிர வேறெங்கும் இருவரும் நேரில் பார்த்து பேசாதது எனக்கு ஏமாற்றமே... தலைமை செயலாளராக லக்ஷ்மி, சரியான பாடி லாங்குவேஜ்.. கலைஞர் குரலில் முதல்வர் பாத்திரம் ..கமல் ஏன் இப்படி செய்திருக்கிறார் என்று பலர் விமர்சனம் செய்தாலும், எனக்கென்னவோ அது பொருத்தமாகவே தோன்றியது..(என்ன பாம் வைக்கிறேன்னு மிரட்டரானா? சரி நீங்களே பேசிடுங்க, நான் பேசினா சரியா வராது; எலக்ஷன்ல எதுவும் பிராப்ளம் வராதே? வசனம் : இரா. முருகன்.. )

மோகன்லால் டிவி காரர்களை திட்டும்போது செய்யும் உபதேசம், கமல் பாம் செய்வது பற்றி அறியும் முறைகளையும், பைகளை எப்படியெல்லாம் அனாமத்தாக வைக்கலாம் என்று விளக்கும்போது, வீணாகிறது.. எனிவே, பார்க்க வேண்டியவர்கள் பார்த்து உஷாரானால் போதும்..

அந்த இரண்டு போலீஸ ஆபீசர்களும் கண்ணிலேயே இருந்தார்கள்..

குஜராத் கேஸ், கோயம்புத்தூர் கேசுக்கு அப்புறம் வந்தது என்பதை மறந்து விட்டார்கள் போலும்..

விறுவிறுப்பான காட்சிகளும், போலீஸ் அதிகாரிகளின் துடிப்பான நடிப்பும் படத்தை மிகவும் ரசிக்க வைத்தது.. ஐ ஐ டி டிராப் அவுட் மாணவன் காட்சி சிறிதாக இருந்தாலும் சிரிக்க வைத்தது..

அந்த இந்து தீவிரவாதிக்கு, கரம்சந்த் என்ற பெயரை வைத்து இருந்தது வருந்தச் செய்தது...

ஒரு துயரமான சம்பவத்தை சொல்லி கமல் கண் கலங்கும் காட்சியில் கனமான வசனம் இல்லாதது ஒரு பெரும் குறை.. தேவர் மகன் சிவாஜியுடனான காட்சிகள், தெனாலியில் தன்னுடைய திருமணம் நின்றது மற்றும் தாயை இழந்தது போன்ற காட்சிகளில் மிகவும் ஒன்றி நடித்து இருந்த அவருக்கு இந்த காட்சி சரியான முறையில் இல்லையோ என்று தோன்றியது...

அப்புறம், கமிஷனர் யார் என்றே தெரியாது என்பது போன்ற ஒரு பார்வையை கமல் வெளிப்படுத்தி, பின் அவரது வேனை வைத்து அடையாளம் காண்பது சரியாகப் படவில்லை...

இது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் இருந்தாலும், திரைக்கதையும், கமல் - மோகன் லால் மற்றும் அனைத்து நடிகர்களின் திறமையாலும் படம் விறுவிறுப்பாகச் சென்றது..

கமலின் இளமைக்கு தான் என்ன ரகசியம் என்று தெரியவில்லை... மொத்தத்தில் உன்னைப் போல் ஒருவன் - எங்களை ரசிக்க வைத்தது .சிந்திக்கவும் வைத்தது...

Monday, October 5, 2009

தேசப்பிதா



நீ
பாரெங்கும்
போரின் பந்தத்தை
வேரறுக்க
போர்பந்தரில் பிறந்த
புனிதக் குழந்தை !

நீ
சென்ற நூற்றாண்டின்
சிராவணன் !
அதிசயமாய் வந்த
அரிச்சந்திரன் !

நீ
கொடுத்த
வாக்கையே
வாழ்க்கையாய்க்
கொண்டவன்!
நீர் காற்று மட்டுமே
நெடுநாள் உணவாய்
உண்டவன் !

நீ
கறுப்பர் இனத்துக்கு
கடவுள் தந்த
பிரதிநிதி !
கருணை குணத்திலோ
கடவுளின்
பிரதி நீ !

உனது
ஒற்றை பார்வை
பல
துப்பாக்கிகளை
துவளச் செய்தது !

உனது
வெற்று மார்போ
பல
பீரங்கிகளை
மழுங்கச் செய்தது !

காலாற
நடந்து விட்டு வரலாம்
என்பர் பல பேர் !
நீயோ
நடந்து கொண்டே
இருந்ததால்
உன் கால்களை
என்றைக்கும்
ஆற விட்டதே இல்லை !

நங்கையரின்
எழில் கூந்தலும்
நாணித் தலைகவிழும்
உன்
மொட்டைத் தலையின்
கவர்ச்சி கண்டு !

ஒரு
சாம்ராஜ்யத்தையே
அசாதாரணமாய்
அடிபணிய வைத்த
உன்
பொக்கைச் சிரிப்பு
போக்ரானை விட
வலிமையானது..!

ஆட்டுப் பாலும்
அரைக்கடலையுமே
உனக்கு
ஆகாரம் !
ஆனாலும் இன்றைக்கும்
அகிம்சையின் வெற்றிக்கு
நீயே
ஆதாரம் !

நீ
நித்தியம்
அனுபவித்த
சோதனை எல்லாம்
உனக்கல்ல -
சத்தியத்திற்கே !

நீ
உன்னைப் பற்றிய
உண்மைகளை
ஒளிவு மறைவின்றி
உலகிற்குச் சொன்னவன் !
என்றைக்கும்
ஒடுக்கப்பட்ட
மக்களின்
ஒரே ஒரு மன்னவன் !

நீ
அன்பை மதமாக்கி
அருளின்
வழி நின்றாய் !
அடித்தட்டு சனங்களை
அரியின் சனம் என்றாய் !

நீ
அரியாசனம் தன்னை
அடுத்தவர்க்கு தந்தாய் !
அறியா சனத்திற்கும் நீ
அன்பான தந்தாய் !

உன் மனம்
தெளிந்த குளம் போல்
இருக்கிறதே என்ற
பொறாமையில்
மதக் கல்லை
விட்டெறிந்து
பதம் பார்த்தவர்கள்
எம் முன்னோர் !

ஊருக்கே உப்பிட்ட
உன்னை மறந்து
உண்டு கொழுத்து
உப்பி(வி)ட்டோர்
எம் தலைவர் !

அதனால்தானோ
என்னவோ
எங்கள்
நெஞ்சுக்குள்ளே
இருக்க வேண்டிய நீ
சற்றே தள்ளி

சட்டைப் பைகளில்
கசங்கலாய் ...... !

Sunday, September 13, 2009

மறதி !



விவரம் புரியா வயதில்
கிடைத்த
தாயின் மடி சுகம் !

விரல் பிடித்து நடந்த
தந்தையின்
வியர்வை மணம் !

இறங்க மறுத்து
இறுக்கிப் பிடித்துக் கொண்ட
அக்காளின் இடுப்பு !

எதையோ பிடுங்கிக் கொண்ட போது
தம்பியிடமிருந்து வந்த
விசும்பல் சத்தம் !

இத்தனை
இளமைக்கால ரசனைகளும்
ஒரு நொடியில் மறந்து போயின! -

அவள்
விழியசைவைக் கண்டபோது !........

Friday, August 14, 2009

சும்மாவா கிடைத்தது சுதந்திரம்? (பகுதி 3)


ஒரு நாளில் கிடைத்ததா
உன்னத சுதந்திரம்?
இல்லை நண்பா ..
இதற்காக நாம் இழந்தது
இரண்டு நூற்றண்டுக்கும் மேல்!

வலிமையால் மட்டுமல்ல
பலர் அனுபவித்த
வலியால் வந்த
விடுதலை இது !

இவர்களின்
இரத்தமே பாசனமானதால்
செம்மண்ணான
சமவெளிகள் ஏராளம் !

அவர்கள் இழந்த
மூச்சினால் தான்
நம்மால் இன்று
சுதந்திரக் காற்றைச்
சுவாசிக்க முடிகிறது !

நண்பர்களே
நாம் இனி எந்த
அந்நிய ஆதிக்கத்துக்கும்
அடிபணியத் தேவையில்லை !
எந்த அந்நியருக்குமெதிராக
கொடிபிடிக்கத் தேவையில்லை !

ஆனால் இன்றோ -
செம்மல்கள் வாங்கித் தந்த
சுதந்திரம்
செம்மறிகளிடம்!

உயிரையும் உடைமையும்
தியாகம் செய்தவர்களின்
வாரிசுகள்
இருக்குமிடம் தெரியாது !
ஆனால்
உண்டு கொழுத்த
ஊழல் பெருச்சாளிகள்
ஊர்வலமாய் !

அரசியல் மட்டுமல்ல
அதிகார வர்க்கமும் -
அன்னியரைக் காட்டிலும்
அந்நியமாய் !

கடமையைச் செய்யவே
கையூட்டு கேட்கும்
அற்ப அரசியல்
ஆலவிருட்சமாய் !

நேர்மையும் - கடமையும்
கூட்டு நுண் நோக்கியில்
மட்டுமே
காணத்தக்க அதிசயமாய் !

ஜன நாயகம்
பண நாயகமாகிப்
பல ஆண்டுகள் கழிந்து
பாமரன்
இன்னமும் பட்டினியில் !

புரியாத புள்ளி விவரங்கள்
புயல் போன்ற இலவசங்களால்
மறைக்கப்படுகின்றன !

தொலைநோக்கு இல்லா
தலைவர்கள் பின்னே
தொண்டர்கள் பல கோடி !

இந்நிலை மாறும் நாள்
என்னாளோ -
அந்நாள்தான்
பொக்கைக் கிழவரின்
புன்னகைச் சிரிப்பைப்
புதிதாய்க்
காணும் நாள் !

அந்நாள் தான்
அதர்மம் அடியோடு அழிந்து
தர்மம் தலையெடுக்கும்
தளிர் நாள் !
தன்னலமற்ற வழியில்
அணிவகுக்கும்
அருமை நாள் !

வேறுபாடு தொலைக்கும்
விடியல் நாள் !
சிங்க நாதம் முழங்கப் போகும்
சரித்திரப் பொன்னாள் !

நண்பர்களே -
நாம்தான் இத்தேசத்தை
தாங்க வேண்டிய
தூண்கள் !
இப்பாரத நாட்டின்
அஸ்திவாரம் மிகப்
பலமானது !
காலத்தால் வந்த
கரையான்கள்
கரைந்து போகும் நாள்
வெகு தொலைவில் இல்லை !

அந்நாளை நோக்கி
நடை கொள்வோம் !
அதற்கெதிரான
தடை வெல்வோம் !

மனதில் உறுதி கொள்வோம்
மறு வாழ்வு பெறுவோம்!
வாழ்க பாரதம் !
வாழ்க வையகம் !


(நிறைந்தது )
படங்கள் : இணையம்

Tuesday, August 11, 2009

சும்மாவா கிடைத்தது சுதந்திரம்?(பகுதி 2)

















இன்னோர் இடம் !

அங்கே ஓர்
தனவந்தர் ....
குணவந்தரும் கூட !

அவருக்குச் சொந்தமாய்
உண்டு
அலை ஏறும் கப்பல்கள்
ரெண்டு !

அவரால் அன்னியர்க்கு
மிக நட்டம் !
அதனால் போட்டார்கள்
ஒரு திட்டம் !

சேர்ந்து வியாபாரம் செய்ய
பேரம் பேசினர் !
அவரோ
தேய்ந்து போயினும்
தீவழி மறுத்தனர் !

அந்நியருடன்
வாணிபமும் செய்வதற்கில்லை
அற வழியிலிருந்து
அணு அளவும் நகர்வதுமில்லை என
சூளுரைத்தார் சொக்கத்தங்கம் !

கூடியது உதவாக்கரை
கோர்ட்டு !
இந்த தமிழனுக்கு
என்ன நெஞ்சழுத்தம் !
நமக்குப் போட்டியாக
இவன் கப்பல் விடுவதா ?

"அடையுங்கள் சிறையில் ! - அவன்
மனம் திருந்தும் வரையில் ! "
என்று கர்ஜிக்கிறான்
பரங்கி அநீதிபதி!

நம் தமிழரோ துவளவில்லை!
தீர்ப்பு கேட்டு அழுகவில்லை !
சிரித்துக் கொண்டே
சென்றார் சிறைக்கு - சின்னஞ்
சிறிய அறைக்கு !

கோடானு கோடி சொத்துக்களின்
கோமான் -
சீமையிலே கப்பல் விட்ட
சீமான் -
சிறையிலே கிடந்தார் ! - இருட்டு
அறையிலே இருந்தார்!

அத்துடன் நின்றதா
ஆணவக்காரர்களின் கொட்டம்?
இல்லை ! - இல்லவே இல்லை !
மாடு இழுக்கும்
செக்கைப் பார்த்தார்கள்!
இதை
மனிதன் இழுத்தால் என்ன என்று
மனதிலே நினைத்தார்கள்!

கூப்பிடு அவனை என்றார்கள் !
குனிந்து நிற்கச் சொன்னார்கள் !
நெஞ்சிலே உரத்துடன்
நின்றார் நம் தமிழர்!

மாணிக்கம் போன்ற மேதையை
மாடு போலப் பூட்டினார்கள்!
கப்பலோட்டிய கனவானைச்
செக்கிலேற்றிச் சிரித்தார்கள் !

ஐயகோ !
சிங்கம் நிகர் சிதம்பரனார்
செக்கினை இழுத்தார்!
அந்தக் காட்சி -
செக்குக்கே பொறுக்காமல்
கண்ணீரை விட்டது - எண்ணெயாக !
ஆம்!
கண்ணீரை விட்டது - எண்ணெயாக !

ஐயனே...

நீர் விட்ட மூச்சால்
எமக்கு பேச்சுரிமை கிடைத்தது....
உன் கரங்கள் காப்புக்
காய்ந்ததால்
எம் கரங்கள் எழுதிட உரிமை கிடைத்தது...

வருங்காலம் வாழ்ந்திட
தம் காலத்தையே
அர்ப்பணித்த நும் வாழ்க்கை
ஞாலத்தின் மாணப் பெரிதே!!!!!!!!

.... பகுதி மூன்று விரைவில்

Monday, August 10, 2009

சும்மாவா கிடைத்தது சுதந்திரம் ? (பகுதி 1)














அன்றொரு நாள் !

திருப்பூரிலே ஒருவன் ! - அகவை
இருபத்தெட்டே ஆன இளைஞன் !
தந்தை இறந்து சில நாட்களே ஆன சோகம் !
கைக்குழந்தையுடன் இளம் மனைவி !

அந்த வாலிபனுக்குச்
செய்தியொன்று வருகிறது!

தோழா நமது தேசத்திற்கு
நாசம் விளைவிக்கும்
மோசக்கார வெள்ளையர்களை
விரட்டியடிக்க கொடிப் போராட்டம் என்று !

அந்த இளைஞன் சிறிதும்
அஞ்சவில்லை !
வரமாட்டேன் என்று
கெஞ்சவில்லை !

சட்ட மறுப்பைக் காட்டிடச்
சட்டெனப் புறப்பட்டான் !
மனைவியைப் பார்க்கவில்லை !
மக்களையும் பார்க்கவில்லை !

"எங்கே நண்பர்கள்?
வாருங்கள் செல்வோம் ! - வஞ்சக
வெள்ளையனை வெல்வோம் ! "
என்று கூறி
தேசத்தின் சின்னமாம்
தேசியக் கொடியைத்
தோளிலே ஏந்திக் கொண்டு
தெருவிலே நடக்கின்றான் !

திரும்பிப் பார்த்தால்
அவன் பின்னே ஆயிரம் பேர்!
அத்தனை பேரும் தம்
கையிலே கொடிக்கம்புகளுடன் !

அவரவர் தோளிலே
கொடியினை ஏந்தி
அந்த வீரன் தலைமையிலே
கூடுகிறார்கள் ! -
கோபத்துடன் கூவுகிறார்கள் !

"ஒண்ட வந்தவனே
ஓடிப்போ !
ஓடிப்போ ! ஓடிப்போ ! ! "

"விடுதலை செய் விடுலை செய் !
காந்தியாரை விடுதலை செய் ! "

"பாரத தேசம் எங்களுக்கே
எங்களுக்கே எங்களுக்கே !

வியாபாரிக்கு இடமில்லை !
வெளியே போடா வெறும் பிள்ளை! "

விண்ணை முட்டின
வீர முழக்கங்கள் !
கொடிகளை ஏற்றுகிறார்கள் !
கொண்டாட்டம் போடுகிறார்கள் !

வருகிறான் வெள்ளைத்துரை -
வெறிகொண்ட ஊளையுடன் !

"கொடிகளை கீழே விடச்
சொல்லுங்கள் ! -
இல்லையேல் அவர்களைக்
கொல்லுங்கள் !!

அவனோடு வந்த
அடிமைப்பட்டாளம்
அடித்து நொறுக்குகிறது
அத்தனை பேரையும் !

கும்பிலிக் கூட்டத்தினர்
கொட்டமடிக்கிறார்கள் !
பெண்டிரையும் பெரியோரையும்
சிறுவரையும் கூடச்
சிதறடிக்கிறார்கள் !

கயவர்கள் கம்பினைச் சுழட்ட
கால்கள் பல முறிந்தன !
தடியர்கள் தடிகளை வீசிட
தலைகள் பல உடைந்தன !

இளைஞர் கூட்டம்
இடிக்கவில்லை ! - வெள்ளைத்
துரையைத் திருப்பி
அடிக்கவில்லை !
ஆங்கிலேயனை
மதிக்கவில்லை ! - அன்னைக்
கொடியை சிறிதும்
மடிக்கவில்லை !

அஞ்சாமல் எதிர்கொண்டனர்
அவர்கள் !

எம் உயிரே போனாலும்
எதிரிகளிடம் தரமாட்டோம்
என்றபடி
ஏந்தியிருந்தனர் கொடிகளையே !

கெட்டவர்களின் கோபம்
கட்டுக்கடங்கவில்லை !

"தலை மேலே தடியால் அடியுங்கள் !
தடுப்போரின்
தலைகளையே கிள்ளி எறியுங்கள் !"
ஆவேசமாய் உத்தரவிடுகிறான்
ஆங்கிலேயத் துரை !

முதலிலே நிற்கும் - நம்
இளைஞனின்
முதுகிலே விழுகிறது முதல் அடி !
ஒரு வெள்ளை மிருகம் அவன்
கைகளை உடைக்கிறது ..
மற்றொன்று அவன் கால்களை !

இளைஞன் சிறிதும் அழவில்லை !
இங்குமங்கும் விழவில்லை !
பிடியைச் சற்றும் விடவுமில்லை
கொடியும் கீழே விழவுமில்லை !

உச்சத்தில் வெறியேற
ஒரு வெள்ளை விலங்கு
அவன் தலையிலே
தடியினால் பலம் கொண்டு
தாக்குகிறது!

தடையேதும் இல்லாததால்
தலை கீழே சாய்கிறது !

உயிர்போகும் நேரத்திலே கூட
அவன் உதடுகள் உச்சரித்தது -

" வந்தே மாதரம் ! வந்தே மாதரம்!
வந்தே மாதரம் ! வந்தே மாதரம் ! "

அவனல்லவோ மனிதன் !
அவனல்லவோ வீரன் !
அவனல்லவோ இளைஞன் !
அவனல்லவோ இந்தியன் !
அவனல்லவோ குமரன் !
திருப்பூரின் குமரன் !
தேசபக்தியின் சிகரம் !

அவனுடைய பக்தியிலே
ஆயிரத்தில் ஒரு பங்கேனும்
நம்மிடம் இருந்தால் போதும்
நம் நாடு பிழைக்கும்;
நல்லோர் நினைவுகள் தழைக்கும் !
ஜெய்ஹிந்த் !

- ஈ ரா

ஆடி அட்டகாசம்



ஒவ்வோராண்டும் ஆடி மாதம் வந்தால் போதும், அம்மன் பெயரால் வசூல் வேட்டையும் காதைப் பிளக்கும் ஒலிபெருக்கிகளும் மக்களை அச்சத்துக்குள்ளாக்குகின்றன. தேர்வுக்குப் படிக்கும் மாணவர்கள், வயதானவர்கள், நோயாளிகள் ஆகியோரைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் அதிகாலை முதல் இரவு வரை தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் பாடல்களை ஒலிபரப்பி மக்களைத் தொடர்ந்து அவதிக்குள்ளாக்குகிறார்கள்.

புனல் ஒலிபெருக்கி தடை செய்யப்பட்டு இருந்தும், ஒலியின் அளவு குறித்த வரைமுறைகள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் அறிவிக்கப்பட்டிருந்தும் இதைப் பற்றி யாரும் சட்டை செய்வதில்லை. தொடர்ந்து மூன்று நான்கு நாட்கள் இடைவெளியின்றி பாடல்களைப் போட்டு விட்டு, அது போதாதென்று நள்ளிரவு வரை சினிமா இசைக்கச்சேரிகளையும் நடத்தி அதையும் தவறாது ஒலிபரப்புகிறார்கள். கலை நிகழ்ச்சி என்ற பெயரில் சில இடங்களில் குருவி குடைந்த கொய்யாப் பழம் போன்ற ஆபாச நடனங்களும் இந்த திருவிழாவில் அடக்கம்..

ஒவ்வோர் ஊரிலும் பெரிய மனிதர்களே கோயில் விஷங்களில் நேரடியாக ஈடுபடுவதாலும், திடீர் பக்தி முரட்டு இளைஞர்களால் கோயில்கள் சூழப்படுவதாலும் யாரும் இந்த அவலத்தை எதிர்ப்பதில்லை; மனதிற்குள் புழுங்கி வெளியே சிரிக்கிறார்கள்.


இன்றைய பாடலாசிரியர்களும், கேசட் வெளியீட்டாளர்களும், பாடகர்களும் கைக்கு வந்தவற்றை எல்லாம் எழுதி வாய்க்கு வந்தவற்றைப் பாடி பேரிரைச்சல் கொண்ட இசைக்கருவிகளைப் பயன்படுத்தி கடவுளையும் பக்தியையும் கொச்சைப் படுத்தி காசு பார்க்கிறார்கள்.


சில இடங்களில் ஒரே பகுதியில் இரண்டு மூன்று கோயில்கள் இருந்தால் அப்பகுதிவாசிகள் தொலைந்தார்கள் என்றே கொள்ளலாம். ஒவ்வொரு வாரமும் ஒரு கோயில்காரர்கள் ஒலிபெருக்கி மூலம் தங்கள் கடமையைக் கண்ணும்கருத்துமாகச் செய்து மக்களைத் துன்புறுத்துவதை தடையின்றி நடத்துகிறார்கள். கோயில்கள் மட்டுமன்றி கிறிஸ்தவ ஆலயங்களும் மசூதிகளும் கூட இந்த போட்டியில் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று மல்லுகட்டுகிறார்கள்...

மற்ற விஷயங்களுக்கு எல்லாம் பேருக்காகவாவது ஏதாவது நடவடிக்கை எடுக்கும் அரசாங்கமும் காவல் துறையும், அரசியல் கட்சிகளும் இது குறித்து தெரிந்திருந்தும் ஏதும் செய்வதில்லை; ஏனெனில் தேர்தல் காலங்களில் அவர்களும் இதைத்தானே செய்கிறார்கள்.


உச்ச பட்ச இரைச்சலே இங்கு இசையாகிறது; உண்மையிலேயே அம்மனை நெஞ்சாரத் தொழுது கூழ் வார்க்கும் பக்தர்கள் கூட இந்த இரைச்சலுக்குத் தங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டு சகித்துக் கொள்ள தயாராகி விட்டார்கள்.. பூனைக்கு மணி கட்ட யாரும் இல்லாததால் தவறு என்று தெரிந்திருந்தும் இந்நிகழ்வு தடையின்றி தொடர்கிறது..

(பி. கு. நான் முன்பு இருந்த ஏரியாவில் இதே பிரச்சினைகளுக்காக விழாக்குழுவினரிடம் (????) மல்லுக்கட்டி, கெஞ்சி - மிஞ்சி கொஞ்சம் சவுண்டை குறைத்துக் கொள்ளுமாறு செய்தேன்...இப்போ இருக்கும் பகுதியில் சமீப காலம் வரை புது கோயில் எதுவும் உருவாகவில்லை; விரைவில் யாராவது புண்ணியவான் ஆட்டையைப் போடுவான் என்று நினைக்கிறேன்)

Friday, August 7, 2009

கான்வென்ட் பிள்ளை - ஒரு தங்கிலிஷ் கவிதை (!)














தலை சீவி
தளுக்காய் பவுடர் வைத்து
ஹை கலர் யுநிபார்ம்மில்
காலர் பட்டன் போட்டு
டை கட்டி
பெல்ட் இறுக்கி
ஷூ மாட்டி
லேஸ் முடித்து
டிபன் பாக்ஸ்யில்
பிரட்டும் வெண்ணையும்
பிச்லரியும் வைத்து
செல்லப் பிள்ளையை
சீருந்தில் ஏற்றி
ஸ்கூலுக்கு அனுப்பினால் -
பையன்
பத்து மணியில் இருந்து
வெளியே முட்டி போட்டானாம்
ஹோம் வொர்க் செய்யவில்லை என்று..!

Wednesday, July 22, 2009

நான் சொன்ன பிறந்தநாள் வாழ்த்து













எனக்காகப் பிறந்தவளே!
எனக்குள்ளே இருப்பவளே!

உனக்கு மட்டும் ஏனடி
இத்தனை பளபளப்பு?
உனக்கு வாழ்த்து சொல்ல ஏனடி
இத்தனை குறுகுறுப்பு?

நீ பிறந்த இந்நாளின்
பிரகாசத்தினால் வருடத்தின்
மற்ற 364 நாட்களும்
மறைக்கப்பட்டு விட்டன!

நான் நினைக்கிறேன் -
உன்னைப் படைத்த அன்று மட்டும்
அந்த பிரம்மன் ஓவர் டைம்
செய்து இருப்பான் என்று!

நீ

பிறந்த நாள் துணி எடுக்க
கடைக்குச் செல்லும்போது
வேண்டாமென்று சொல்லவாவது - நீ
தம்மைத் தொட்டு தூக்க மாட்டாயா என்று
துணிகள் எல்லாமே ஏங்குகின்றன..

நீ

தம் பக்கம் திரும்பப் போவதில்லையே
என்ற ஏக்கத்தில் - தம்
பிறப்பை எண்ணி எண்ணி
நொந்து கொள்கின்றன -
ஜென்ட்ஸ் வாட்சுகள்.....

தாம் தேய்ந்து விட்டால் - உன்
கால்களை விட்டுப் பிரிய வேண்டுமே என்றெண்ணி
தேயாமலே நடக்கின்றன
உன் கால் செருப்புக்கள்!

நீ

வளைஎடுக்க கடைக்குச் செல்லும்போது
உன் கை அளவு சேரா வளையல் எல்லாம்
ஏக்கப் பெருமூச்சுடன்
வெளிநடப்பு செய்கின்றன.....

உனக்கு மெலிதான சங்கிலிதான் பிடிக்குமென்பதால்
தமக்கு சேதாரம் ஆனாலும் பரவாயில்லை என்று
தம்மைத் தாமே தேய்த்துக் கொள்கின்றன -
தடிமனான சங்கிலிகள்.....

இப்படி உயிரற்ற பொருட்கள் கூட
உன்னால் உயிர் பெறும்போது -
உயிருள்ள நான் எம்மாத்திரம்?

என்னால் முடிந்தது -

ஹாப்பி பர்த் டே.......

அன்புடன்

ஈ. ரா

பி. கு.: இது ஏதோஉணர்ச்சி வசப்பட்டு எழுதியது... எனவே இதைப் படித்து விட்டு பந்தா காட்டவோ, பிகு பண்ணவோ வேண்டாமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்!

Wednesday, July 15, 2009

கல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்



















வெள்ளைக் கதருக்குள்
கறுப்பாய்
ஒரு
பச்சைத் தமிழன் .

நீ
கல்விச்சாலையில்
கற்றது கைமண் அளவு
ஆனால்
கல்வி சாதனையில்
கடந்தது கடல் அளவு.

விருது நகரின் விழுது
வெள்ளந்தி மனது.

நீ
சம்சாரக் கடலில்
மூழ்காத
கட்டைப் பிரம்மச்சாரி.
உன்னிடம்
பந்தமும் இல்லை
பந்தாவும் இல்லை.

நீ
ஏழைக் குழந்தைகளுக்குக்
கூட்டானவன்
ஆனால்
ஏட்டுச் சுரைக்காய்களுக்கு
வேட்டானவன்.

பலமான அணைகளைப்
பரிசாகத் தந்தவன் - பல
பாலங்கள் கட்டத்
தானே
பாலமாய் இருந்தவன்.


அறம் பேசிய
உன் வாய்
புறம் பேசியதில்லை
அடுக்கு மொழி தெரியா
உன் நாக்கு என்றும்
தடம் புரண்டதில்லை.

வெட்டும் துண்டும் உன்
வார்த்தையில் மட்டும்தான்
வாழ்க்கையில் இல்லை.

நீ செவிக்கும் வயிற்றுக்கும்
சேர்ந்தே ஈய்ந்தவன்
சமுக நீதிக்கே
சருகாய்த் தேய்ந்தவன்.

உன்னிடம்
வார்த்தை ஜாலமும் கிடையாது
உனக்கு
வாரி சுருட்டவும் தெரியாது.

நீ
விடியலுக்கு வித்து
கல்விக் கதிரவன்
என்பதைக்
காலத்தே கண்ட
தொலை நோக்கி.

நீ
கையூட்டு பெறும்
அரசியல்வாதிகள்
தொடக்கூடாத
கையேடு.

நீ
நான்கு வேட்டி மட்டுமே
சொத்தாய்க் கொண்ட
நல்லவன்
நாடாளும் வித்தையில்
கரை கண்ட
வல்லவன்.

நீ
ஒரு நாளும்
தலை தாழ்ந்ததில்லை
அதனால்தானோ என்னவோ
உம்மைத் தோற்கடித்த நாங்கள்
இன்னமும்
தலை நிமிரவே இல்லை !!

Tuesday, July 7, 2009

எனது திருமணத்தை வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி..
















இறையருள் கூடித் தமிழுடன் கலந்து
உயிர் மெய்யாகி உலகை ரசித்திட
அன்பு என்னும் ஆய்தம் ஏந்தி
அடியவர் நங்கள் அடிஎடுக்கிறோம்!
தளிர் நடை பயிலும் சிறியவர் எம்தம்
பிழைகளை எல்லாம் மழலையாய் கொள்வீர்!

நாங்கள் -

குறுகிய எண்ணம் எனும் குறில் தவிர்த்து
அறத்திலும் திறத்திலும் நெடிலாய் நிமிர்ந்திட
ஒற்றும் குற்றும் ஒதுக்கியே தள்ளி
இரட்டைக் கிளவியாய் என்றும் வாழ்ந்திட
வையத்தில் உயர் உத்தமர் நும் தம்
வாழ்த்தினை எமக்குத் துணையாய்த் தருவீர் !

உணர்வும் ஆக்கமும்

மகா - ஈ ரா

Saturday, June 6, 2009

"குழல் கொடுமை - யாழ் கொடுமை"















குழல் கொடுமை யாழ் கொடுமை என்பர்
தம்மக்கள் குரல் மறையக் காண்கின்றவர்!

ஆண்மை இருக்கும் இறையே -
இனியாவது நாங்கள்
இறையாண்மைக்கு இரையாகாமல் காப்பாய்!

அன்றோ ஒரு காலம் உண்டு!
வனம் எல்லாம் வனப்புடனே நின்று!
இன்றும் ஒரு ஞாலம் உண்டு
இனம் மரிக்கக் காணாமல் கண்டு!

ஒன்பதுதான் கிடைத்தது - இனி
ஓய்வெடுக்கப் போகலாம்!
இருபத்தெட்டு கிடைத்தது - இனி
இலாக்காக்கள் கேட்கலாம்!
ஒன்றுமே கிடைக்கவில்லை - இனி
ஒப்பாரி வைக்க வேண்டாம்!
தனியாகவே வந்துவிட்டோம்- இனி
தமிழாவது மண்ணாவது?

பாவிகளா -
ஆதிமனிதனைப் போல்
அர்த்தமில்லா ஊளையோடே
இருந்து இருக்கலாம்!

பாழாய்ப்போன மொழியை நம்பாத
ஊமை சகோதரர்களே
உண்மையிலேயே உங்களைப்
பார்த்துப் பொறாமைப் படுகிறோம்!

நாங்கள் இப்போதெல்லாம்
வருத்தப்பட்டு பாரம் சுமப்பது இல்லை!
உயிரும், உற்றார் உடல்களும்
என்றைக்காவது பாரமாகுமா என்ன?

நாங்கள் இப்போதெல்லாம்
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
என்று நினைப்பது இல்லை! - ஒருவேளை
ஏதாவது நன்றாகவே நடந்தாலும்
அதைப் பார்ப்பதற்கு நாங்கள்
இருக்கப் போவதுமில்லை!

நாங்கள் இப்போதெல்லாம்
மேற்கு நோக்கி புனிதம் தேடி
யாத்திரிப்பதில்லை! - ஏனெனில்
எங்கள் வழி நெடுகிலும்
மனிதம் மண்ணுக்கு உள்ளேதான்
மலையாகக் கிடக்கிறது!

அழுத பிள்ளை பால் குடிக்குமாம்
உங்கள் ஊரில்! - இங்கோ
குழந்தைகள் அழுவது -
அம்மா நான் உயிரோடு இருக்கிறேன்
என்று உணர்த்திடவே!

பல நூறு ஆண்டுகள் முன்
போரிலே வென்ற மன்னர்
பகை நாட்டின் வயல் அழித்து
வெள்ளெருக்கும் ஆமணக்கும்
விதை விதைத்து - கோவேறு
கழுதைகளால் உழுதிட்டு
கடுஞ்சினத்தை தீர்ப்பனராம்!

இன்றும் பாவி மக்கள்
போரென்ற பேரினிலே
பார் முழுக்கப் பார்த்திடவே
இரு நாட்டின் இனம் அழித்து
ஈயத்தை இதயத்தில்
விதை விதைத்து - ஈனப்
பன்றிகளால் உழுதிட்டு
உயிர் அறுவடை செய்கின்றார்!

வாழ்க உங்கள்
விஞ்ஞான விவசாயம்!
வளர்க உங்கள்
நவீன யுகப் புரட்சி!

சங்க காலம் தொட்டு வரும்
சண்டை காலம் முடியவில்லை!
எங்க காலம் போயாச்சு! - எம்
பிள்ளையாச்சும் பிழைக்குமா?

எங்களுக்கு எல்லாம் ஒரே ஒரு
அற்ப மகிழ்ச்சி! -
இத்தலைமுறையில் யாருமிங்கே
வாழ்ந்து கெட்டவர் இல்லை!
நாங்களெல்லாம் - ஒரு நாள் கூட
நிம்மதியாக வாழாமலே கெட்டுவிட்டோம்!


---
அன்பு இல்லாத

ஈ ரா

தேவையில்லை














சில நேரங்களில் சில மனிதர்களை நினைத்தால் ஆத்திரமாக வரும்....அவர்களுக்காக இது....

போலிச் சிரிப்பு
தேவையில்லை!

வலுக்கட்டாயமாக
வரவழைத்துக்கொண்ட
வாய்ப்புன்னகை
தேவையில்லை!

கட்டித் தழுவி அரவணைக்கும்
கள்ளமுள்ள அன்பு
தேவையில்லை!

பத்துப் பேர் முன் பாராட்டி - பின்
புறம் பேசத்
தேவையில்லை!

மொத்தத்தில் எனக்கு உங்கள்
வாழ்த்தும் தேவையில்லை!
வைதலும் தேவையில்லை!

Thursday, June 4, 2009

தவறான பாடம்

சில நேரங்களில் நாம் எழுதியதே நேரடியாகவோ அல்லது சற்று ஒத்த நடையிலோ வேறு சிலராலும் எழுதப்பட்டு இருக்கக் கூடும்...

கீழே உள்ள வரிகள் பல ஆண்டுகளுக்கு முன் நான் எழுதியவை...

"தவறான பாடம்"


நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும்போது
ஆசிரியை தவறாகக் கற்றுக் கொடுத்து விட்டார்..
கண் பார்க்கும் - வாய் பேசும் என்று

ஆனால் -
இதென்னடி விந்தை ?

உன் கண்ணே பேசுகிறது?

Thursday, April 16, 2009

நான் முதல் நாள் பார்த்த முதல் படம்



நான் முதல் நாள் பார்த்த முதல் படம் "தளபதி". தீபாவளி அன்னிக்கு தளபதி பனியனை வாங்கி போட்ட ஒரே ஆள் எங்க ஏரியால நானாத்தான் இருப்பேன் .....

எட்டாவதோ என்னவோ படித்துக் கொண்டு இருந்த எனக்கு எப்படியாவது சீக்கிரம் தளபதியைபார்க்கனும்னு ஆசை.. எங்க வீட்ல தீபாவளி அன்னிக்கு எங்க அம்மாவோட அத்தை வீட்டுக்கு போக சொல்லி எங்க மாமாவோட அனுப்பிச்சாங்க.. தூர்தர்ஷன்ல ராக்கம்மா ஸ்பெஷல் புது பாட்டு போட்டா மிஸ் ஆயிடுமேன்னு வருத்தத்துல இருந்தாலும் பெரியவங்க சொன்னதுக்காக அங்க போனேன்.

அங்க போனா அவுங்க பையன், அப்போ சென்சார் போர்டுல எதோ போஸ்டிங்க்ல இருந்ததால மூணு டிக்கெட் ஸ்பெஷல் ஷோவ்க்கு இருக்குன்னாறு... பழம் நழுவி பால்ல விழுந்த மாதிரி அவசர அவசரமா வூட்லாண்ட்ஸ் சிம்பொனிக்கு ஓடினோம் ...

சரியா படம் ஆரம்பிக்கும்போது போயிட்டோம். எனக்கு தலை கால் புரியல.. ஏற்கனவே வெளிநாட்டில் ரெக்கார்ட் ஆன முதல் பாடல் அப்பிடி இப்பிடின்னு பெரிசா எதிர்பார்த்து இருந்த ராக்கம்மா பாடலுக்கு, நான் சற்றும் எதிர்பார்க்காத வகையில் தலைவர் கலாசலா டேன்ஸ் ஸ்டெப் வைக்க நான் எங்க மாமாங்களையும் மீறி விசில் அடிக்க ஆரம்பிச்சேன்...

தலைவர் ஒரு கெட்ட போலிசை நடு ரோட்டில வெட்டினப்ப ஷோபனாவை விட கதி கலங்கிட்டேன்... எனக்கு கொடுத்த பாப்கார்னைக்கூட தின்னாம முதல் முறையா ஆன்னு வாயப் பொளந்துட்டு ஸ்க்ரீனையே பார்த்துக்கிட்டு இருந்தேன்.. அப்புறம் தலைவர தலைகீழா கட்டி வச்சு அடிக்கும்போது எல்லாம் நொந்தே போயிட்டேன்.. சுந்தரி பாடலுக்கு தலைவரோட கொண்டையும், அந்த வார் கெட்டப்பும் பார்த்து அசந்து போயிட்டேன்.


அரவிந்த்சாமி, டிஎஸ்பி கிட்ட ரஜினி " இப்போ கைவைடா பார்க்கலாம், வைடான்னு சொல்றப்போ தியேட்டர்ல பறந்த விசிலை வர்ணிக்கவே முடியாது. அவர் பேசி முடிச்சதும் என்ன கத்தி முடிச்சுட்டீங்களா?ன்னு அ.சாமி கேட்டதும் எல்லோரும் அசிங்கமா திட்ட நானும் ஒரு ரவுசு விட்டேன்.

காட்டுக்குயிலு பாட்டுக்கு செம டான்ஸ்.. வீட்டுக்கு வந்தப்புறம் பாட்டு புக் வாங்கி நானும் என் தம்பியும் ரொம்ப நாள் அந்த பாட்ட யேசுதாஸ் மாதிரி ஒருத்தரும், எஸ்பிபி மாதிரி ஒருத்தரும் பாடி பக்கத்து வீட்டுக் காரங்களை நாராசமாய் நையப் புடைச்சிருக்கோம் .

ஐயோ பாவம் அவன், வீட்ல பட்டாசு வெடிக்கறதுக்காக அத்தை வீட்டுக்கு வராதவன், நான் தளபதி பார்த்துட்டேன்னு ஒரு அணு குண்டைப் போட்டதும் ஆடிப் போயிட்டான்

இவ்விதமாய் என் முதல் நாள் முதல் பட அனுபவம் இனிதே நிறைந்தது.. அதன் பிறகு எல்லா ரஜினி படங்களையுமே முதல் நாளோ அல்லது முன்கூட்டியோ போடப்படும் ஸ்பெஷல் ஷோவிலோ பார்த்துவிடுவேன்.

பாஷா டிவிக்கள்ள பல முறை போட ஆரம்பிச்சப்புறம் தான் நான் தளபதியை டிவியில அடிக்கடி பார்க்குறதை நிறுத்தினேன்..

Sunday, February 22, 2009

உயிரே உன் விலை என்ன?

உயிரே உன் விலை என்ன?

ஆயிற்று, நேற்றோடு ஏழாவது சுய உயிர் வதை. நான்கு பெண் பிள்ளைகளை பெற்ற ஒருவர், மனித சங்கிலி போராட்டத்தில் தன் உயிர் சங்கிலியை துண்டித்துக் கொண்டார்.

முத்துகுமார் என்னும் இளைஞர் முதலில் துவங்கி வைக்க இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இதற்கு முடிவு இருக்கிறதா என்ற அச்சம் தோன்றுகிறது.
அங்கே இலங்கையில் வேறு வழியே இல்லாத நிலையில் யுத்த களத்திலும், குண்டு மழையிலும் இழக்கின்ற உயிர்களாவது கதியே இல்லை என்ற நிலையிலும் அவர்களுக்கு ஜனநாயக ரீதியில் தலைவர்களை தண்டிக்க வழியே இல்லை என்ற நிலையிலும் ஏற்பட்டது.

ஆனால் இங்கோ, அரசியல் தலைவர்களின் தூண்டுதல்களாலும், ஊடகங்களின் அதீத பிரச்சாரத்தாலும், சுய இரக்கம் மேலிட தன்னம்பிக்கையும், எதிர்காலம் மாறும் என்ற நம்பிக்கையும் இல்லாத தன்மையில் உயிரை இழக்கிறார்கள். இவர்களை யார் இவ்வாறு தவறான பாதையில் வழிநடத்துவது? ஒட்டு மொத்த அரசியல்வாதிகளும் பத்திரிக்கை ஊடகங்களும் மற்றும் விஞ்ஞான வலைத்தளங்களும்தான்.

நண்பர்களே எல்லோருக்கும் தான் உணர்வு இருக்கிறது. உயிரை மாய்துத்தான் உணர்வை வெளிக்காட்ட முடியுமா என்ன? அப்படி நீங்கள் இறப்பதால் தலைவர்களும் மற்றவர்களும் மாறிவிடப் போகிறார்கள் என்று நீங்கள் நினைத்து இருந்தால் கண்டிப்பாக உங்கள் ஆத்மாவை இங்குள்ள அரசியல் வாதிகளும், இதை வைத்து பிழைப்பு நடத்துபவர்களும் சாந்தி அடைய விட மாட்டார்கள்.

இத்தனை ஆண்டுகாலம் இந்தியாவில் இருந்து, இங்கே தமிழ், தமிழ் என்று முழங்கும் அரசியல்வாதிகளைப் பற்றி நன்கு அறிந்து இருந்தும் நீங்கள் உங்கள் உயிரை மாய்த்துக் கொள்வது, உங்கள் மீது கோபம் கொள்ள வைக்கிறது.

அரசியல் தலைவர்களுக்கு என்ன, எங்கும் பற்றி எறிய ஆவேசமாக உரை நிகழ்த்தி விட்டு, அடுத்த நிகழ்ச்சிக்குப் போய் வீரம் காட்ட முடியும்.. எழுத்தாளர்களுக்கோ இன்றைய சூழ்நிலையில் உணர்ச்சியை தூண்டி எழுதி இந்த பிரச்சினை முடிந்ததும் நவரசத்தில் வேறொரு சுவையில் தங்கள் படைப்புக்களை கொடுக்க முடியும்.

ஆனால் உன்னை நம்பிய உன் குடும்பத்திற்கும், உன்னை படிக்க வைத்த பள்ளிக்கும், உனக்காக இந்த தேசம் கொடுத்த இயற்கை வளத்திற்கும், இதையெல்லாம் மீறி, உன் ஆட்சியாளனை நீ விரும்பினால் மாற்றலாம் என்று உனக்கு வழங்கப்பட்ட ஜனநாயகத்திற்கும் நீ என்ன கைம்மாறு செய்ய முடியும்?

எப்பொழுது நீ உயிரையே துச்சம் என நினைத்து விட்டாயோ, அப்பொழுதே நீ எதையும் சாதிக்கும் வலிமையை பெறுகிறாய். இந்த நெஞ்சுரத்துடன் நீ நினைத்தால் இந்த சமுதாயத்தில் நேர்மையாக எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் . உயிர் பயமும், குடும்ப சூழலும் மட்டுமே இங்கே பல பேருக்கு கைவிலங்குகள். அதையே நீ வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டால் பிறகு ஏன் கோழையைப் போல் இறக்க நினைக்கிறாய்?

இப்படி இறந்தவர்களை, மாவீரன் என்று சிலகாலம் கொண்டாடுவார்கள். உன் போல் இன்னும் சில பேர் இறந்தால் நீ மறக்கப்படுவாய். மிஞ்சி மிஞ்சி போனால் கேவலம் சில லட்சங்களும், நீ இறந்து சில ஆண்டுகளுக்கு உனக்கு அஞ்சலியும் கிடைக்கும். அதன் பிறகு வேறொரு பிரச்சினை வரும், இதே போல மீண்டும் தூபம் போடப்படும்... வேறு சில அப்பாவிகளுக்கு தீபம் ஏற்றப்படும். இந்த இழி நிலை தேவையா? உன் உயிர் அவ்வளவு இளப்பமா?

அரசியல்வாதிகளே, தமிழகத்தை ஸ்தம்பிக்க வைப்போம் என்றீர்கள், வைத்து விட்டீர்கள். இன்னுயிரை இழக்கத் தயாராகுங்கள் என்றீர்கள், அதை நம்பி சில பேர் இழந்தும் விட்டார்கள்... இன்னும் என்னதான் உங்கள் ஆசை?

உங்கள் கையில் ஆட்சி, அதிகாரம், பணம் எல்லாம் இருக்கிறது, உங்களாலேயே இதை தீர்க்க முடியவில்லை என்றால் சாதாரண மக்கள் நாங்கள் என்ன செய்வோம்? எங்களுக்கு விழிப்புணர்வு இருக்கிறது.. நிறையவே இருக்கிறது.. நீங்கள் மேடை போட்டு, தூண்டி எழுதி, அறிக்கை விட்டு எங்களை உசுப்ப வேண்டாம்.

நீங்கள் உண்மையிலேயே பிறந்ததற்கு வெட்கப்படாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால், ஒவ்வொரு கட்சியும் ஒரே நிலையை எடுங்கள். அரசியல் நிர்பந்தங்களுக்காக உங்கள் நிலையை மாற்றிக் கொண்டு நீங்கள் எல்லாவற்றையும் அனுபவித்துக் கொண்டு மக்களை பலிகடா ஆக்காதீர்கள்.

நண்பர்களே உங்களுக்கு வாக்குசீட்டு என்னும் ஓர் ஆயுதம் கொடுத்து இருக்கிறார்கள் - உங்கள் முன்னே ஓர் களமும் இருக்கிறது, அதுவும் விரைவில். அதுவரை காத்து இருங்கள். அதற்கும் முன் கேவலமான ஆயுதமான மண்ணெண்ணையும் பெட்ரோலையும் எடுக்காதீர்கள்.

இவர்களின் வெற்றுகூச்சல்களுக்கு செவிமடுக்காதீர்கள். உண்மையான அன்புடன், இறைவனிடம் அமைதிக்காக பிரார்த்தியுங்கள். உங்கள் உணர்வுகளை பிறரை நேசிக்கும் உதவியால் வெளிப்படுத்துங்கள்.

உலகம் பெரியது. கண் செவி கை கால் மனம் இழந்த எத்தனையோ மனிதர்கள், ஈழத்தில் மட்டும் அல்ல இங்கேயும் இருக்கிறார்கள், உங்கள் உயிர் வேண்டாம் எனில் அதை அவர்களுக்காக முழுவதும் வாழ்ந்து அர்ப்பணியுங்கள்....

ஜெய் ஹிந்த்.

ஈ ரா

Monday, February 2, 2009

கான மயிலாட கண்டிருந்த வான்கோழிகள்....



அது ஒரு காலம்...

பாடகர்களும் நடன வித்தகர்களும் மட்டுமே திரைத்துறையில் சாதிக்க முடியும் என்று இருந்த நிலை..

அப்பொழுது மேற்கூறிய இரண்டிலுமே போதிய திறமை இல்லாத இரு பெரும் ஜாம்பவான்களாக எம்.ஜி இராமச்சந்திரனும் சிவாஜி கணேசனும், கால் பதித்து.. தமது நாடக அனுபவங்களை மட்டுமே அஸ்திவாரமாகப் போட்டு தமிழ் திரையுலகின் புதிய பரிமாணக் கட்டிடத்தை எழுப்பத் தொடங்கினார்கள்.

தங்களுக்கு என்று ஒரு தனிப் பாதையையும் திறமையையும் கொண்டிருந்த அந்த சிங்கங்கள் யாரையும் வழிகாட்டியாகக் கொள்ளவும் இல்லை.. யாரையும் பிரதி எடுக்கவும் இல்லை... இருதுருவங்களுக்கும் தனித்தனி எல்லை.. தனித்தனி சாம்ராஜ்யம்... என்று வகுத்து இருபது ஆண்டுகளுக்கும் மேல் திரையுலகின் மன்னர்களாக விளங்கினார்கள்.

எல்லா சகாப்தத்துக்கும் ஒரு வயதும் எல்லையும் உண்டு என்ற உலக நியதிப்படி அவர்களின் திரையுலக காலமும் எழுபதுகளின் ஆரம்பத்தில் நிறைவு பெறத் தொடங்கியது.. அந்த நேரத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப முயன்ற ஜெய் ஷங்கர், ரவி சந்திரன், முத்துராமன் போன்றவர்கள் நல்ல நடிகர்களாகவும் திறமைசாலிகளாகவும் இருந்த போதிலும் மக்கள் திலகத்தையும் நடிகர்திலகத்தையும் போல் முதல் இடங்களைப் பிடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா சக்தியாக இடம் பிடிக்க முடியவில்லை..

ஏறக்குறைய ஏழெட்டு ஆண்டுகள் இப்படி நகர்ந்த போது, தமிழ் திரையுலகம் பாலச்சந்தர், ஸ்ரீதர் போன்ற இயக்குனர்களின் கட்டுப்பாட்டில் வந்தது. நடிகர்களையும் மீறி இயக்கம் என்பதன் வலிமை உணரப்பட்டது. கதாநாயக துதி பாட்டில் இருந்து கதை அம்சத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. நல்ல கதைகளும், நல்ல நடிகர்களும் கிடைக்கப் பெற்றது தமிழ் திரையுலகம்..

இந்த சூழ்நிலையில் தான் கேபியால் பட்டை தீட்டப் பட்டார்கள் ரஜினியும், கமலும். என்னதான் திறமை சாலிகளாக இருந்தாலும், அவர்கள் இருவரும் ஒருவேளை பத்து ஆண்டுகள் முன்னாலேயே கதாநாயகர்களாக அறிமுகம் ஆகி இருந்தால் மக்கள் திலகத்துக்கும் நடிகர் திலகத்துக்கும் முன்னால் நிலைத்து நின்று இருக்க முடியுமா அல்லது அப்படியே இருந்தாலும் இவர்கள் திறமைக்கு அந்த தலைமுறை ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து இருப்பார்களா என்பதும் சந்தேகமே.

ஆண்டவன் அருளால் அவர்களுக்கு ஒரு சரியான இடைவெளி கிடைத்தது.. இரண்டு பெரும் நட்சத்திரங்களும் போதும் என்று அவர்களாகவே வேறு முறைக்கு தங்களை தயார் படுத்திக் கொண்ட பின், சில ஆண்டுகள் கழித்து வந்ததால், மக்கள் புதுமையை ஏற்றுக் கொள்ள ஒரு வாய்ப்பும் ஏற்பட்டது. இதை ரஜினி கமல் இருவருமே உணர்ந்து இருந்ததால், எந்த சூழ் நிலையிலும், தங்கள் முன்னோடிகளை பரிகசித்தோ அல்லது அவர்களை பின்பற்றியோ நடிக்காமல் புது வழியைக் கண்டார்கள்.. வெற்றியும் பெற்றார்கள்..

பல நேரங்களில் அவர்கள் இருவரின் ரசிகர்களின் மோதல்கள் நடைபெற்றன.. அது ஒன்றும் புதியது அல்ல.. ஏற்கனவே எம்ஜியார், சிவாஜி ரசிகர்கள் போடாத சண்டையும் அல்ல.... ஆனால் ரஜினியும் கமலும் என்றைக்கும் எம்ஜியார் - சிவாஜியுடன் போட்டி போட்டது இல்லை.. போட்டு இருக்கவும் முடியாது.. ஏனெனில் அவர்கள் வளர்ந்தார்கள், வளர்க்கப் படவில்லை... திரையில் ஆடினார்கள் - வாழ்க்கையில் பிறரால் ஆட்டுவிக்கப் படவில்லை..

தங்கள் திறமைக்கும் தகுதிக்கும் மீறி தாங்களே தங்களை அடுத்த எம்ஜியார் என்றோ அடுத்த சிவாஜி என்றோ சொல்லிக்கொள்ளவில்லை.. மக்களாகவே பார்த்து இவர் அவருக்கு மாற்று... என்று முடிவு செய்தார்கள்.. அவர்களின் இடங்கள் ஓரிருவரால் முடிவு செய்யப்படவில்லை... ஓரிரு படங்களாலும் முடிவு செய்யப்படவில்லை... ஓரிரு ஆண்டுகளினாலும் முடிவு செய்யப்படவில்லை...

ஆனால் இன்றைக்கும் ரஜினியின் சிவாஜி படத்தின் சாதனையையும் கமலது தசாவதாரத்தின் சாதனையையும் நெருங்கக் கூட முடியாத அல்லது நினைக்கக் கூட முடியாத நிலையில் இருக்கும் போதே அவர்களையும் தாண்டி, அதற்கும் முன்னால் இவர்கள் பிறந்தே இருக்காத காலத்தில் கொடி கட்டிப் பிறந்தவர்களின் பிம்பம் நான்தான் என்று தாங்களே தமுக்கடிக்கும் நடிகர்களை நினைத்தால் இவர்கள் எதோ மனோ வியாதியில் இருக்கிறார்களோ என்று பச்சாதாபம்தான் தோன்றுகிறது...

ரஜினியின் தோல்விப் படத்தை விட இவர்களின் வெற்றிப் பட வசூல் குறைவு என்பதும் தமிழ் நாட்டை தாண்டினால் இவர்கள் யாரென்றே தெரியாத நிலையில் இருக்கும் போதே இவர்களுக்கு இவ்வளவு ஆற்றாமை என்றால், தொடர்ச்சியாக ஒரு ஐந்து ஆண்டுகள் வெற்றி படங்களையே கொடுத்தால் இவர்கள் என்ன ஆட்டம் போடுவார்கள் என்று நினைத்து பாருங்கள்? ஒரு பழமொழி சொல்வார்கள், ஆட்டுக்கு வால் அளந்து வைத்தான் என்று. கடவுளுக்கும் தெரியும் மக்களுக்கும் தெரியும் யார் யாருக்கு எந்த இடம் எப்பொழுது கொடுக்கப் பட வேண்டும் என்று.. அதை விட்டு விட்டு வில்லை எடுத்தவன் எல்லாம் ராமன் ஆகி விடலாம், பறப்பது எல்லாம் பருந்து ஆகிவிடலாம் என்று நினைத்தால் காலம் உங்களைப் பார்த்து கை கொட்டிச் சிரிக்கும்..

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அலைந்தவர்களின் பட்டியலில் இன்னொரு அத்தியாயம் எழுதப்பட்டு பிற்கால சந்ததிக்கு, உங்களை அறியாமலே நீங்களே எப்படி வாழக்கூடாது என்பதற்கு ஒரு வழி காட்டியாகி விடுவீர்கள்... அதையாவது செய்து தொலையுங்கள், பிறந்ததுக்கு ஒரு பிரயோஜனமாவது இருக்கட்டும்....

அன்புடன்,

ஈ ரா