Saturday, December 11, 2010

தலைவா நீ வாழ்க

இந்த ஆண்டு மிகை இல்லாமல் யதார்த்தமாக தலைவரைப் பற்றி எழுதவேண்டுமென்று நினைத்து ரசிக நண்பர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்..நாற்பதாண்டுகளுக்கு முன்
நீ
கண்டக்டர் -
ஆனால்
இன்றைக்கும்
உம் காந்தக்
கண் டக்கர் !

உனக்கு
எந்த ஸ்டேஜில்
நிறுத்த வேண்டும்
என்றும் தெரியும் !
எப்போது
"போலாம் ரைட்" என்று
டபுள் விசில்
கொடுக்கவேண்டுமென்றும்
தெரியும் !

நீ அகலக்கால் வைத்துவிட்டு பின்பு
யாசிப்பது இல்லை !
ஆனால்
வைத்த கால் அகலக்கூடாது
என்பதற்காக நிறைய
யோசிப்பது உண்டு !

நீ
உன் முதுகில்
குத்தும்
அம்புகளையும்
நம்புபவன் !
எவர்
நட்டமடைந்தாலும்
மனம்
வெம்புபவன் !

உன்
யதார்த்தமான
சிரிப்புக்குக் கூட
ஏதேதோ அர்த்தம்
கற்பிக்கப்படும் !

உன்
சாதாரண
வார்த்தைகளுக்குக் கூட
பொழிப்புரைகளும் தெளிவுரைகளும்
பொங்கி வரும் !

நீ
வம்பே வேண்டாமென
விட்டுக் கொடுத்தால்
வானம் பார்க்கும்
வாயில்லா ஜீவன்களுக்குப்
போட்டி வரும் !
வண்டி வண்டியாய்
பேட்டி வரும் !!


அதெப்படி
உன் அசைவில் உதிர்ந்த
கனிகளை மடியில்
கட்டிக் கொண்டே
கல்லெறியத்
துடிக்கின்றன
பல கைகள் ?

அது ஏன்
உன் வாக்கு ஸ்தானத்தை
மட்டுமே
உற்று நோக்குகின்றன
பல்லாயிரம்
ஏழாம் பார்வைகள் ?

நீ
நின்றால் குற்றம்
உட்கார்ந்தால் குற்றம்
என்று
பல பேர் குதிக்கிறார்கள் !

ஏனென்றால்
அவர்களுக்குப் பயம்
நீ
ஒருநாள்
நிற்க வேண்டிய இடத்தில்
நின்று
அமர வேண்டிய இடத்தில்
அமரப் போகிறாய் என்று !

நீ
வெற்றி மாலைகளை
தோள்களில் ஏற்பதில்லை !

ஏனெனில்
கணப் பொழுதில் அவற்றை
உன் சகாக்களின்
கழுத்துக்கு
மாற்றி இருப்பாய் !

உன் சகாக்களோ
தோல்வியையே
ருசித்ததில்லை !

ஏனெனில்
இமைப்பொழுதில்
முன்னே வந்து
சூழ்ச்சிக் கத்திகளை
நீ மட்டும்
மார்பில் சுமப்பாய்..!

இதில் அதிசயம்
ஏதுமில்லை !
ஏனெனில்
நீ அந்த
அருணாச்சல நீலகண்டனின்
பக்தன் அல்லவா ?

எங்கள் தலைவனே !
நீ
கூட்டமான பேருந்திலும்
இப்படி நுழைந்து
அப்படி வெளியேறி விடுவேன்
என்று இனியும்
பெருமைப்பட்டுக் கொள்ளாதே !!

உள்ளே நுழைந்த
நீ
வெளியேற முடியாத
இடம் ஒன்று உள்ளது...
அது

எங்கள் இதயம் !!!

வாழ்க ரஜினி....

Friday, December 10, 2010

பாரதிக்கு கழுதைகள் பிடிக்குமாம்சிந்து நதியின் மிசை நிலவினிலே
தில்லி நன்னாட்டிளம் பெண்களுடனே
ஆங்கில டேப்புகளில் பேரங்கள் பேசி
ஸ்பெக்ட்ரங்கள் விற்று விளையாடி வருவோம்..

ஆஆஆஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆ

கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்
குடோன்களில் அழுகவைத்து தூக்கி எறிவோம்
சிங்க மராட்டியர் தம் மிரட்டல் கொண்டு
ஏழை பிஹாரி கைகால் மாறு கொள்வோம்

சிங்களத் திமிரினுக்கும் பாலமமைப்போம்
சேதுவை உடைத்திடவும் திட்டமிடுவோம்
வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்
வருடங்கள் தோறும் உயிர் பறிப்போம்

-------------

கழுதைகளே இன்றைக்கு என்னை மன்னியுங்கள்


-----------

படம் : பாரதி திரைப்படப் பாடல் , இணைய காணொளியில் இருந்து


ஈ.ரா

பாரதிகவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி

_______________________________________________________

நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்

_______________________________________________________

சொல்லடி, சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்
வல்லமை தாராயோ ? – இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே.!
_________________________________________________

தேடிச் சோறு நிதந்தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?

____________________________________________________

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே - இதை
வந்தனை கூறி மனதில் இருத்தி என்
வாயுற வாழ்த்தேனோ - இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?

__________________________________________________


- பாரதி

Wednesday, November 10, 2010

கமல் கலைஞர் சந்திப்பும் மஞ்சள் சால்வையும்

எப்போவுமே சீரியஸா எழுதுறதுனால ஒரு சேஞ்சுக்கு இந்த பதிவு,,
சும்மா ஜாலிக்குத் தான், யாரும் சீரியஸ் ஆகாதீங்க...Friday, November 5, 2010

ரஜினி என்னும் சாதாரண மனிதரின் பேட்டிதனியார் தொலைக்காட்சிகள் வந்து இந்த பதினைந்து ஆண்டுகளில் அமிதாப் முதல் அனுஷ்கா அத்தனை பேரும் பல சேனல்களில் திரும்பிய பக்கமெல்லாம் பல பேட்டிகளில் தோன்றும் காலத்தில், தனிப்பட்ட முறையில் எந்த தொலைக்காட்சிக்கும் பேட்டி தருவதில்லை (தொன்னூறுகளில் தூர்தர்ஷன் தவிர ) என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருந்த சூப்பர் ஸ்டார், சன் நிறுவனத்திற்கு கொடுத்த வாக்கிற்காக முதல் முறையாக ஒரு தனிப்பட்ட பேட்டியை இந்த தீபாவளி விருந்தாகக் கொடுத்தார்.

கரன் ஜோஹார் போன்றவர்களுக்கும், வட இந்திய மீடியா ஜாம்பவான்களுக்கும் கூட கிடைக்காத மாபெரும் வாய்ப்பு சன் டிவியின் விஜய்சாரதிக்கு கிடைத்தது. படம் சம்பந்தப் பட்ட பேட்டியாகவே இது அமைந்ததால் பெரும்பாலும் கேள்விகள் எந்திரன் சார்ந்ததாகவே இருந்தன.

எந்திரன் தயாரிப்பாளர்கள், படத்தின் வெற்றி சாதனைகள், தமிழ் திரையுலகின் மைல்கல் என்ற எல்லாவற்றையும் தாண்டி, ரஜினி என்ற சாதாரண மனிதரின் பேச்சாகவே இந்த நிகழ்வு முழுதும் இருந்தது.

எந்திரனில்
என் திறன் மட்டும் இல்லை
இது
எம் திறன்
என்று
சொல்லாமல் சொன்னார் சூப்பர் ஸ்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு முன் "எந்திரன் உருவான விதம்" மட்டும் ஒளிபரப்பாகவில்லை என்றால், இந்த மனிதர் பட்ட கஷ்டம் வெளியே தெரியாமலே இருந்திருக்கும்.. அவராக வாயைத் திறந்திருக்க மாட்டார். விஷயம் தெரியாதவர்கள் எல்லாம் ரஜினியும் எந்திரன் டீமும் பட்ட கஷ்டங்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடியாமலே போயிருந்திருக்கும்.

எல்லாம் கிராபிக்ஸ், கிராபிக்ஸ் என்று சொல்லிவிட்டு ரஜினி ஒன்றுமே செய்யாதது போல் பேசி வந்த அனைவரின் வாய்க்கும் ஒரு நவ்டால் பூட்டு (நன்றி கிரி. சிங்கப்பூர்) போடப்பட்டு விட்டது. அதற்காக சன் டிவிக்கு ஒரு நன்றி.

உடல் ரீதியாக தலைவர் எவ்வளவு கஷ்டப் பட்டிருக்கிறார் என்பது இப்போதுதான் தெரிந்தது. உடம்பெல்லாம் வலிக்கிறது என்று தன்னிடம் குறிப்பிட்டதாக சில நாட்களுக்கு முன் வைரமுத்து கூறியபோது அவ்வளவாக நமக்குப் புரியவில்லை. இப்பொழுதுதான் அந்த வலி நமக்கு தெரிந்தது. சும்மா இப்படி அப்படி என்று ஸ்டைல் மட்டுமே காட்டிக் கைதட்டலை பெற முடிந்த ஒரு மாபெரும் கலைஞன் இப்படி தன்னை வருத்திக் கொண்டதைப் பார்த்த போது அவரது தொழில் பக்தியும், கடும் உழைப்பும் கண்கலங்கச் செய்தது. அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு இவர் அத்தியாவசியப் பாடம் என்று உணரச் செய்தது.

சூப்பர்ஸ்டார் "எல்லா புகழும் இறைவனுக்கே " என்று கூறி ஆரம்பித்த உடன் , விஜய் சாரதி இது ஏ.ஆர். ரகுமான் சொன்னதைப் பின்பற்றியா என்று கேட்டதற்கு சற்றும் தயங்காமல் "ஆமாம்" என்று சொல்லி சிரித்தார் ரஜினி. ரஜினி ரசிகர்கள் அல்லாதவர்களைக் கூட டி.வி முன் நிமிர்ந்து உட்கார வைத்த நேர்மையான பதில் அது!

தான் இந்த படத்திற்காக பட்ட சிரமங்கள் குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளவே இல்லை சூப்பர் ஸ்டார். உதாரணமாக இரண்டு மணி நேரம் மேக்கப் போட்டதை பற்றி குறிப்பிட்ட போது, மேக் அப் வுமன் பானு, ஜஸ்ட் ரெண்டு மணி நேரத்தில் முடித்து விடுவார் என்று பாராட்டினார்.

சில காட்சிகளைப் பற்றி விஜய்சாரதி புகழ்ந்தபோது, "நைஸ் இல்ல?, நல்லா இருந்தது இல்ல? என்று ஒரு குழந்தை போல ரஜினி மகிழ்ந்தது உண்மையாக இருந்தது.

அவரது பல பதில்கள் சுவாரஸ்யத்தின் உச்சம் என்றால் மிகையல்ல.

முதலில் ஷங்கர் தன்னை வில்லனாக மட்டும் நடிக்க கூப்பிடுகிறார் போலும் என்று நினைத்து பின்னர் ஹீரோ ரோபோவே நீங்கள்தான் என்ற போது "இந்த வயதில் என்னால் நடிக்க முடியுமா ?" என்று தான் கேட்டதாக அவர் வெளிப்படையாக கூறிய போது எல்லோரும் அசந்து போயிருப்பார்கள். இந்த மனிதருக்குத்தான் எத்தனை நெஞ்சுரம்? தன்னோடு நடித்த ஐஸ்வர்யா ராய்க்கு நன்றி தெரிவித்ததாகட்டும், படம் பார்க்கும் மற்றவர்களை நாம் கஷ்டப் படுத்தக்கூடாது என்று யோசித்ததாகக் கூறியதாகட்டும், ரஜினி எந்த அளவிற்கு தன்னை மிகச் சாதாரணனாக நினைக்கிறார் என்பதை தெளிவாகக் காட்டியது. இத்தனைக்கும் ஐஸ்வர்யா ராயின் முந்தைய தமிழ் படங்கள் எதுவும் மிகப் பெரிய வெற்றியைப் பெறவில்லை. (அவரது முந்தைய ஜோடிகள், பிரசாந்த், பிரகாஷ் ராஜ், அப்பாஸ் (கொஞ்சூண்டு மம்முட்டி), பிருதிவிராஜ் ஆகியோர் ).

ஷங்கர் ஷங்கர் ஷங்கர்...இதுதான் ரஜினி அதிகமாக உச்சரித்த வார்த்தை! ஒரு புதுமுக நடிகர் எப்படி இயக்குனருக்கு பயந்து, மரியாதை செலுத்தி பேசுவார்களோ அதை விட பல மடங்கு அதிகமாக ஷங்கரை புகழ்ந்து தனக்கு இதில் மிகச் சிறிய பங்கு இருப்பதாகவே கூறினார்.

படத்தின் ஹை லைட்டான "மே மே " காட்சியைக்கூட தன்னை விட ஷங்கர் நன்றாக செய்வார் என்று அவர் கூறிய போது நான் ஒரு நிமிடம் ஸ்டன் ஆகிவிட்டேன். எனக்கு தெரிந்து மற்ற எந்த பெரிய நடிகர்களும் இந்த அளவிற்கு தன் இயக்குநர்களைப் பற்றி பேசி பார்த்ததேயில்லை. இத்தனைக்கும் ஒரு படம் வெற்றி பெற்றால் திரும்பிய சேனல்களில் எல்லாம் சோபாவில் உட்கார்ந்து கொண்டு நம் ரிமோட்டின் சாபத்தை வாங்கி இருப்பார்கள். இவரோ படம் வெளியாகி அனைத்து சாதனைகளும் படைத்த பிறகு வந்து அமைதியாகப் பேசுகிறார்.

ஒரு டென்ஷனான காட்சியை முடித்தவுடன், கேரவனுக்கு அவசரமாக சென்று ஒரு டீய சாப்பிட்டுட்டு தம் அடிச்சுட்டு வந்தேன் என்று அவர் அசால்ட்டாக சொல்லி விட்டு உடனேயே ஐயோ சொல்லலாமா என்று நாக்கை கடித்து ஒரு எக்ஸ்ப்ரச்ஷனுடன் சிரித்துக் கொண்டே சைடில் கேமராவைப் பார்த்தாரே... அப்போது குளோபல் ஸ்டார் எல்லாம் தெரியவில்லை, சாதாரணமாக ஒரு பெயிண்டரோ, கார்பெண்டரோ, நம் சக நண்ப ஊழியரோ நம்முடன் பேசியதாகத் தான் தெரிந்தது. அடுத்த நிமிடம், விஜய்சாரதி நீங்கள் ஏன் இப்போது படங்களில் சிகரெட் பிடிப்பதில்லை என்று கேட்ட போது, அதான் பிடிக்கக் கூடாது என்று சொல்லி விட்டார்களே, இட்ஸ் குட் என்றார்.. (கடவுளே, தலைவர் சீக்கிரம் இதை குறைத்து கொண்டு நல்ல ஆயுளுடன் ஆரோக்கியமாக நீண்ட நாள் இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டேன்) .

ஒவ்வொரு நடிகருக்கும் அவர் கடைசியாக நடித்த படம் தான் அளவுகோல். அது சரியாகப் போகவில்லை என்றால் மதிப்பில்லை. தான் இருப்பதால் மட்டுமே ஒரு படம் வெற்றி பெற்று விடாது. சிறந்த இயக்குனர், பாடல்கள், தொழில் நுட்பம் எல்லாம் அமைந்தால் தான் ஒரு படம் வெற்றி பெறும். ஒரு படத்தின் வெற்றிக்கு அறுபது சதவீதம் திட்டமிடுதலும், நூறு சதவீதம் ஆண்டவன் அருளும் தான் காரணம் என்று கூறிய சூப்பர் ஸ்டார் ஹைலைட்டாக என்றைக்கும் வெற்றி மட்டுமே நிரந்தரமானதல்ல, இப்போது எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது அதனால் புகழ் கிடைத்திருக்கிறது, அடுத்த படம் சரியாக போகவில்லை என்றால் அவ்வளவுதான் என்று கூறியபோது அவர் எந்த அளவிற்கு நிதானமாக இருக்கிறார் என்று தெரிந்தது.

தசாவதாரத்தில் கமல் பத்து வேடங்களில் நடித்ததற்கு முன் தான் மூன்று வேடங்களில் நடித்தது ஒன்றுமே இல்லை என்று அவர் சொன்ன போது, அவர் பெருந்தன்மையை நினைத்து வியந்தேன் . தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தன் நண்பர் கமலை புகழ்ந்து பேசுவதில் ஆகட்டும் தன் படக் காட்சிகளில் கமல் பற்றிய வசனம் வைப்பதில் ஆகட்டும் (முத்து - பெரிய கமலஹாசன் என்று நினைப்பு, சிவாஜி - சும்மா கமலஹாசன் மாதிரி ஆகறேன் பாரு, எந்திரன் - கமலஹாசன் போன் நம்பர் தான் எல்லோருக்கும் தெரியுமே) தான் எந்த அளவிற்கு கமலை நேசிக்கிறேன் என்று சூப்பர் ஸ்டார் நிரூபித்து வருகிறார். இந்த அளவு உண்மையாக ஈகோ இல்லாமல் வேறு யாராவது இருக்க முடியுமா என்று தெரியவில்லை.

தன் வேகம் தான் தனக்கு பாலச்சந்தரிடம் வாய்ப்பு வாங்கித் தந்தது என்று சொல்லி விட்டு தான் கண்டக்டராக இருந்தபோது கூட வேகமாக டிக்கெட் கொடுப்பேன் என்று தன் பழைய வாழ்க்கையை நினைவு கூர்ந்தபோது, என்ன என்றே சொல்லத் தெரியாத ஒரு உணர்வு மனதில் தோன்றி ஒரு நெகிழ்ச்சி ஏற்பட்டதை மறுக்க முடியாது!

சூப்பர் ஸ்டாரிடம் ஒரு கதை சொல்லுமாறு கேட்ட போது, ஒரு அரசன் எப்படி ஐந்தாண்டுகளில் புதிய அரசாங்கத்தை உருவாக்கி மரணத்தில் இருந்து தப்பினான் என்று நம் நண்பர் சுந்தர் பகிர்ந்த கதையைக் கூறி ஆச்சர்யப்படுத்தினார். வாழ்த்துக்கள் சுந்தர்!

மதம் என்பது ஒரு வழி, ஆனால் அதை விட ஆன்மிகம் மிக முக்கியமானது.. எல்லாவற்றையும் விட அது மிகவும் கடினமானது... குரு அருள் இருந்தால் மட்டுமே அதை அடைய முடியும் என்று மிகத் தெளிவாக அவர் கூறிய போதும் தியானம் ஒரு அமைதி நிலையையும், தெளிவான முடிவெடுக்க உதவியையும் தரும் என்று சொன்ன போதும், உண்மையான ரசிகர்களுக்கு இதை விட ஒரு வழிகாட்டுதலைத் தர முடியாது என்பது புரிந்தது.

பேட்டி எடுத்தவரிடம் ரொம்ப ஆழமான கேள்விகளைக் கேட்கிறீர்கள்.. ஆன்மீகத்தில் நான் முதல் படியைத்தான் வைத்திருக்கிறேன்.. அது மாபெரும் பயணம் என்று சொன்ன போது இந்த மனிதர் நிச்சயம் அந்த லட்சியத்தை அடைவார் என்று தோன்றியது.

உண்மையில் மனதிற்கு மிகவும் நிறைவாக இருந்தது. ஹேப்பி திவாளி சூப்பர் ஸ்டார்.

Friday, October 1, 2010

தேசப் பிதா


நீ
பாரெங்கும்
போரின் பந்தத்தை
வேரறுக்க
போர்பந்தரில் பிறந்த
புனிதக் குழந்தை !

நீ
சென்ற நூற்றாண்டின்
சிராவணன் !
அதிசயமாய் வந்த
அரிச்சந்திரன் !

நீ
கொடுத்த
வாக்கையே
வாழ்க்கையாய்க்
கொண்டவன்!
நீர் காற்று மட்டுமே
நெடுநாள் உணவாய்
உண்டவன் !

நீ
கறுப்பர் இனத்துக்கு
கடவுள் தந்த
பிரதிநிதி !
கருணை குணத்திலோ
கடவுளின்
பிரதி நீ !

உனது
ஒற்றை பார்வை
பல
துப்பாக்கிகளை
துவளச் செய்தது !

உனது
வெற்று மார்போ
பல
பீரங்கிகளை
மழுங்கச் செய்தது !

காலாற
நடந்து விட்டு வரலாம்
என்பர் பல பேர் !
நீயோ
நடந்து கொண்டே
இருந்ததால்
உன் கால்களை
என்றைக்கும்
ஆற விட்டதே இல்லை !

நங்கையரின்
எழில் கூந்தலும்
நாணித் தலைகவிழும்
உன்
மொட்டைத் தலையின்
கவர்ச்சி கண்டு !

ஒரு
சாம்ராஜ்யத்தையே
அசாதாரணமாய்
அடிபணிய வைத்த
உன்
பொக்கைச் சிரிப்பு
போக்ரானை விட
வலிமையானது..!

ஆட்டுப் பாலும்
அரைக்கடலையுமே
உனக்கு
ஆகாரம் !
ஆனாலும் இன்றைக்கும்
அகிம்சையின் வெற்றிக்கு
நீயே
ஆதாரம் !

நீ
நித்தியம்
அனுபவித்த
சோதனை எல்லாம்
உனக்கல்ல -
சத்தியத்திற்கே !

நீ
உன்னைப் பற்றிய
உண்மைகளை
ஒளிவு மறைவின்றி
உலகிற்குச் சொன்னவன் !
என்றைக்கும்
ஒடுக்கப்பட்ட
மக்களின்
ஒரே ஒரு மன்னவன் !

நீ
அன்பை மதமாக்கி
அருளின்
வழி நின்றாய் !
அடித்தட்டு சனங்களை
அரியின் சனம் என்றாய் !

நீ
அரியாசனம் தன்னை
அடுத்தவர்க்கு தந்தாய் !
அறியா சனத்திற்கும் நீ
அன்பான தந்தாய் !

உன் மனம்
தெளிந்த குளம் போல்
இருக்கிறதே என்ற
பொறாமையில்
மதக் கல்லை
விட்டெறிந்து
பதம் பார்த்தவர்கள்
எம் முன்னோர் !

ஊருக்கே உப்பிட்ட
உன்னை மறந்து
உண்டு கொழுத்து
உப்பி(வி)ட்டோர்
எம் தலைவர் !

அதனால்தானோ
என்னவோ
எங்கள்
நெஞ்சுக்குள்ளே
இருக்க வேண்டிய நீ
சற்றே தள்ளி

சட்டைப் பைகளில்
கசங்கலாய் ...... !

-----------

ஈ. ரா

(மீள் பதிவு.. படம் : இணையம் )

Thursday, July 29, 2010

எரிமலையை எட்ட நின்று பார்க்கலாம், ஏற முடியுமா ?


ஏதாவது பெயர் வேண்டுமென
ஆசைப்பட்டால்
அதற்குப் பெயர்
பெயர் ஆசை..!
சூப்பர் ஸ்டார் பெயர்
வேண்டுமென்றால்
அதற்குப் பெயர்
பேராசை என்று
இப்போது
தெரிந்திருக்கும் - பலருக்கு !

இனி
எந்திரனின்
சாதனைகளுக்கு முன்
வாலாட்ட யாரும்
எந்திரிக்கவே முடியாது..!

பணம் போட்டவர்களை
போண்டியாக்கும்
பாப்பர் ஸ்டார்களுக்கு
மத்தியில்
இந்த தங்க மகன்
மட்டும்தான்
நிஜமான
சூப்பர் ஸ்டார் !

பட்டையைக் கிளப்புற பட்டம்
படையப்பனுக்கு மட்டும்தான்..!
அவர் வேண்டுமானால்
அதை
சட்டை போல
கழட்டிப் போடலாம்!
அது அந்த
மனிதனின் பெருந்தன்மை !

அதை
மற்றவர்கள் பார்க்கலாம்..
அணிந்து கொள்ள முடியாது !
அப்படி முயன்றால்
அதற்குப் பெயர்
சட்டை அல்ல
சேட்டை !...

சூப்பர் ஸ்டார் என்பது
நடிப்பினால் வந்ததல்ல !
அது
வாழும் முறையின்
படிப்பினால் வந்தது..!
பல முறை
பல பேரின்
பொறாமைத் தீயினால்
வெந்தது..!

அவர்
கட்டாந்தரையில்
துண்டை விரித்துப் படுப்பார்..!
வாங்கிய காசுக்கு
தன்னையே பொரித்துக் கொடுப்பார்..!

அவர்
அசதிகள் மறைய
வசதிகள் கேட்பதில்லை !
வசதிகள் வந்தும் - பழைய
வாழ்வை மறப்பதில்லை !

அவருக்கு
தூக்கம் வரும்
மரத்தடியில் !
ஏனென்றால் -
துக்கம் இல்லை
அவர்
மனத்தடியில் !

அவருக்கு
தூக்கம் வரும்
தெருவோரத்திலும்!
ஏனென்றால் -
ஏக்கம் அவரிடம்
இல்லை
ஒரு ஓரத்திலும் !

அவர்
என்றைக்கும்
நினைக்காத வார்த்தை
நான் !
அதனால்தான் அவர்
இன்றைக்கும்
உண்மையான
டான் !

அவருக்கு
ஒரே ஒருவன்தான் முதலாளி !
ஆனாலும்
இன்றைக்கும் அவர்
எழுந்து நிற்பார் -
பணம் போட்ட மனிதனைப்
பார்த்து..!

குருநாதர்களைப்
பார்க்கையில் -
அவர் கண்கள்
பாதங்கள் தேடும்..!
கூட்டங்கள்
புகழ்கையில் -
அவர் கால்கள்
இமயத்திற்கு ஓடும் !

அவர் ஒரு
கடினமான பாதையை
மற்றவர்களுக்காக
ராஜபாட்டையாக்கிக்
கொடுத்திருக்கிறார். !

தனிமனிதனாக
தனி வழிகளை
உருவாக்கித் தந்திருக்கிறார் !

அந்த சாலையின் நிழலில்
வேண்டுமானால்
சொகுசாக உங்கள்
பயணங்களைத்
தொடருங்கள் !
அல்லது புதிதாய் ஏதேனும்
பாதையைக் காணுங்கள்..!

அதை விடுத்து
நன்றி மறந்து
பள்ளம் தோண்டாதீர்கள்..!
தோண்டினால்
நீங்கள் வெட்டிய குழியில்
நீங்களே விழுவீர்கள் !
எதிர்காலம் உங்களை
ஏளனப்படுத்தும்..!

உலக அரங்கில்
தமிழ்த்திரையை
திரும்பிப் பார்க்க வைத்தவர் அவர் !
அவர் முதுகிலேயே
சவாரி செய்து விட்டு
பச்சைக் குதிரை விளையாடலாம் என்று
நினைக்காதீர்கள்..!

அவர்
பச்சைக் குதிரை அல்ல
போர்க்குதிரை !
ஒரு முறை சிலிர்த்தால்
சிதறிப் போவீர்கள் !

ரஜினியின் காலத்தில்
சக கலைஞனாக இருப்பதில்
பெருமைப்படுங்கள் !
சம கலைஞனாகி விடலாம் என்று
கனவு காணாதீர்கள்..!
ஏனெனில் ரஜினி ஒரு
சரித்திரம்!


எரிமலையை எங்கிருந்தோ பார்க்கலாம்.
ஏறி நின்று பார்க்கலாமா?
சூரியனை எட்டிப் பார்க்கலாம்..
எட்டிப் பிடிக்க நினைக்கலாமா?


சிறு பிள்ளைகளே !
உங்கள் தந்தை காலம் முதல்
உங்கள் பிள்ளைகள் காலம் வரை
இன்றைக்கும் அவருக்கு
இரண்டாம் இடம் என்றால்
என்னவென்றே தெரியாது!
அவருக்கு நீங்கள்
மாற்று என்றால்
பாவம் நீங்கள் -
மன நலம் குன்றியவர்கள்தான்!

ஆசைப்பட்டு ஆசைப்பட்டு
தூக்கத்தை தொலைக்காதீர்கள் !
இனியாவது நிம்மதியாய்த்
தூங்குங்கள் ! - நாளை
எழுந்திருக்கும்போது
நீங்களே நீங்களாய்ச்
சுயமாய் நடங்கள் !
இல்லையேல்
உங்களுக்கு
தூக்கத்தில் நடக்கிற வியாதி என்று
தூற்றப் போகிறார்கள்...!


படம் : நன்றி : சிம்பிள் சுந்தர்

Wednesday, July 7, 2010

என் அபிக்கு ஒரு தாலாட்டு


உன் பாதங்களின்
சுத்தச் சிவப்பால் நாணிய
காலைச்சூரியன் - உன்னை
மேகங்களூடே
ஒளிந்து பார்க்கிறான் !

தன்னைக்காட்டி
உனக்கு அமுதூட்டும் நாள்
விரைவில் வர ஏங்கி தன்னை
அழகுபடுத்திக்கொண்டு
வீட்டு மாடத்தில்
பவுர்ணமிச் சந்திரன்
தவமாய்க் கிடக்கிறான் !

உன் பொக்கை வாயில்
பற்கள் முளைக்கும் வரைதான்
தங்கள் பந்தா என்று
விண்மீன்கள் எல்லாம்
இப்பொழுதே
மின்னிக்கொள்கின்றன !


உனக்கு கதகதப்பாய்
இருக்கவேண்டும் என்பதற்காகவே
தென்மேற்குக் காற்று மேலெழும்பி
லேசாய் கதிரவனைத்
தொட்டுத் திரும்புகிறது...!

உனக்கு அடைமழை பிடிக்காது என்பதால்
முகில்கள் எல்லாம் சல்லடையாகி
வானத்து நீரை மெலிதாய்
வடிகட்டி
இளம்சாரலாய்த் தருகின்றன !

நீ தூக்கத்தில் சிரிக்கையில்
கண்ணன் பூ காட்டுவதாக
பாட்டி சொன்னாள்! -
எனக்கென்னவோ
பதியனில் இருக்கும்
அரும்புகள் எல்லாம்
உன்னைப் பார்த்து
சிரிக்கவே மலர்வது போல்
தோன்றுகிறது..!

நீ சேட்டை செய்கையில்
அத்தை அல்லிப்பூ செண்டாலோ
மாமன் மல்லிப்பூ செண்டாலோ
அடிப்பதில்லை..
ஏனென்றால்
இவள் எங்கள் கூட்டம்
என்று
அல்லிகளும் மல்லிகளும்
குழைந்து நிற்கின்றன !

நீ சிணுங்கும் நேரம்
சில்வண்டுகள் தம்
ரீங்காரத்தை
நிறுத்துகின்றன..!

நீ செல்லமாய்
அடம்பிடிக்கையில்
பறவைகள்
சிறகடிக்காமல்
பதைபதைக்கின்றன !

என் பிரியமானவளே!

இவர்கள் பாவம்..
தம் வேலையைப் பார்க்கட்டும் -
நீ சமர்த்தாய்க்
கண்ணுறங்கு...!
கண்ணுறங்கு !ஈ. ரா

(இறைவன் அருளால் 19-06-2010 அன்று எனக்கு பெண் குழ்ந்தை பிறந்துள்ளது..தாயும் சேயும் நலம்.. )

(படம் இணையத்திலிருந்து )

Tuesday, February 23, 2010

"நெல் ஆடிய நிலமெங்கேவும் என் காவிரிக்கரை கண்ணீரிலும் "

சில நாட்களுக்கு முன் நண்பர் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்து விட்டுப் பின் அப்படத்தின் "நெல் ஆடிய நிலமெங்கே ? பாடலைக் குறுந்தகட்டில் விரும்பி கேட்ட போது, அப்பாடலின் சில வரிகள் என் நெஞ்சை தொட்டது..

அவை கிட்டத்தட்ட நான் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன் "இளைஞர்களின் புனித பூமி" தேசிய இலக்கிய கருத்தியல் மாத இதழில் எழுதிய "காவிரிக்கரை கண்ணீரில்" கவிதையை நினைவுபடுத்தியது..

நான், 2004 ஆம் ஆண்டில் நிலவிய கடும் பஞ்சத்தின் போது காவிரி விவசாயிகள் கண்ணீர் விட்டழுவது போல் அக்கவிதையை அமைத்திருந்தேன்.. இப்படத்தில் அதே கருத்து சோழரின் வேதனையை (கதைப்படி) வெளிப்படுத்துவதாகவும் அமைந்தது ஒரே சிந்தனையின் வெளிப்பாடான விந்தை என்று நினைக்கிறேன்.

நல்ல காலமாய் மாரிக் கடவுள் நம் மண்ணின் பக்கம் சில ஆண்டுகளாய் அன்பைப் பொழிவதால் இது போன்ற கவிதைகள் எழுத வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்படாததற்கு கடவுளுக்கும் காவிரித் தாய்க்கும் நன்றி செலுத்துகிறேன்..

உங்கள் ஒப்புமைக்கு இங்கே அக்கவிதையை வெளியிடுகிறேன்.
__________________________________________________________


கானல் நீராய்
காவிரி நீர் ......
என்று வருமென்று
ஏங்கும் விவசாயி !

பூமி வெடிப்புக்களின்
பூதாகாரச் சிரிப்பு
தொண்டைத் துக்கத்தை
விழுங்கி விட்டது !

மனதுக்குள்
குமுறும் எரிமலை !
விழியிரண்டில்
கண்ணீர்த் திவலை !

மூன்று போகம்
விளைந்த மண்
இன்றோ..
மூக்கறுந்த
மூளியாய் !

வியர்வைத்துளிகள்
விழுந்த நிலத்தில்
கண்ணீர்த் துளிகள்
காலம் காலமாய் ...

நொய்க் கஞ்சியும்
நோய் நொடியுமே
ஆதார ஜீவன்களின்
ஆசைத் தோழர்கள் !

தீயிட்டு வளர்த்த
தலைவர்கள் பின்னே
திக்குத் தெரியாமல்
திணறும் உழவன்....

யானை கட்டி
போரடித்த மண்ணில்
பூனையின் உணவுக்கும்
போட்டா போட்டி !

வானம் வெறித்து
வெளியே தெறிக்கும்
விழிகள்...

பஞ்சால் அல்ல
பஞ்சத்தால் அடைபட்ட
செவிகள் !

கதிர் வாசனை
மறந்ததால்
மற்றதை நுகர
மனமில்லா நாசி...

உக்கிர வெயிலால்
உணர்ச்சியற்று
மரத்த உடம்பு ..

ஆம்
பசி மயக்கம் என்னும்
இலவச ஆசானிடம்
புலனடக்கம்
கற்றுக் கொண்டோம் !

கைரேகையை விட
கணிசமாய்க்
கவலை ரேகைகள்
எங்கள் முகத்தில் !

அரை சாண் அளவீடே
அதிகமென்று
அடங்கிப் போன
உதரம்..

ஒட்டிய கன்னம்
ஒடிந்த தேகம் ..
இவைதான் எம்
அடையாளம்
இது யாருக்கு
அவமானம் ?

பொன்னைத் திருடிய
காலம் போய்
மண்ணைத் திருடும்
மனிதப் பேய்கள் !

வறண்ட பூமியை
வாழ வைக்காத
வறட்டுத்தனமான
பிடிவாத பூதங்கள்..

பிரச்சினைகளைப்
பெரிதாக்கும்
படித்த பிசாசுகள்...

அணை நிரம்பும்
ஆபத்தில் மட்டுமே
அன்பு காட்டும்
அண்டை சகோதரன்....

பாமரனைச் சுற்றி
பயங்கரக் கூட்டம்!
ஆடம்பரப் போராட்டங்கள் ..
அர்த்தமற்ற விவாதங்கள்....
அடையாளம் தொலைந்த
அரசியல்வாதிகள்....

எங்கெங்கு காணினும்
சக்தியடா...
ஏர் பிடிக்க எமக்கில்லை
சக்தியடா...

அரசாங்கங்களே..
இனியாவது
விருப்ப ஓய்வுத் திட்டங்களை
உம் ஊழியர்களோடு
நிறுத்துங்கள்...
விருப்பமில்லா ஓய்வினை
விவசாயி மீது
திணிக்காதீர்கள்..

தலைவர்களே..
உங்கள்
சொத்துக்களின் ஒரு துளி
எமக்குத் தாருங்கள்
சோத்தையாவது
கண்ணில் காண்கிறோம்;

கட்சிகளே..
உங்கள்
வீணாய்ப் போன
கொடிகளைத் தாருங்கள்
கோவணமாக்கி
மானம் காக்கிறோம்....!Sunday, February 21, 2010

திடீர் தமிழ் ஆர்வலர்கள் & காரியம் சாதிக்கும் கொசுக்கள்


கவுண்டமணி சொல்வார் ‘மன்னன்’ படத்தில், இந்த தொழில் அதிபருங்க தொல்லை தாங்க முடியல என்று.. அதுபோலத்தான் இந்த திடீர் தமிழ் ஆர்வலர்கள் தொல்லையும்.. ஒரே நாளில் பேமஸ் ஆவது எப்படி என்று ரூம் போட்டு யோசித்தால், அதற்கு சினிமா ஹீரோவைப் பற்றி அவதூறாகப் பேசு என்று விடை கிடைக்கும்.. இன்டர்நேஷனல் அளவில் பெரிய ஆளாக வேண்டும் என்றால் கொஞ்சம் பெரிய ரூமாகப் போட்டு பத்திரிகைகாரர்களோடு சேர்ந்து யோசித்து ரஜினியைப் பற்றி அவதூறாகப் பேசு என்ற விடையும் கிடைக்கும்..இதுதான் இன்றைய நிலை..!

தமிழை வளர்ப்பதற்கான ஆக்கப் பூர்வமான செயல்களை தவிர அனைத்தையும் செய்வது தான் இந்த தமிழ் ஆர்வலர்கள் வேலை.

வீண் பரபரப்பை மனசாட்சியின்றி செய்தியாக்குபவர்களுக்கு - ஒரு விஷயத்தின் உண்மையை எழுத வேண்டும் என்று தோன்றவில்லையா? யார் யாருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.. செய்திகளை எப்படி செய்தியாக வெளியிட வேண்டும் என்று ஒரு அடிப்படை உணர்வு கூட இல்லாமல் தார்மீகத்தை எதற்கோ தர்மம் செய்து விட்டு பரபரப்புக்கு செய்திகளும் பேட்டிகளும் வெளியிட்டு சும்மா இருப்பவர்களை தூண்டி விடுவதுதான் பத்திரிகைகளின் லட்சியமா?

சில பேரைப் பற்றி எல்லாம் எழுதவேண்டும் என்று நினைத்தாலே…நமக்கு ..குமட்டுகிறது….! சாக்குவார் தங்கம் யார் என்றே நிறைய பேருக்குத் தெரியாது.. இவர் பெயரில் உள்ள ‘சாக்குவார்’ என்ற அர்த்தம் பொதிந்த தமிழ் வார்த்தையின் விளக்கத்தை தமிழ் கூறும் நல்லுலகும் தமிழ் ஆர்வலர்களும் தான் சொல்ல வேண்டும். நடக்கும் விஷயங்களைப் பார்த்தால் இந்த சண்டை நடிகர் இந்த முறை நிஜத்திலும் யாருக்கோ “டூப்” போட்டு தன் வேலையை ஆரம்பித்து இருக்கிறார் என்றே தோன்றுகிறது.

நேற்று கடைசியாக திரு. சாக்குவார் தங்கம் அவர்கள் இனி தமிழ் நாட்டில் வேறு மொழி நடிகர்கள் நடிக்கக் கூடாது என்றும் அப்படி நடித்தால் அந்த ஷூட்டிங்கில் முற்றுகை போராட்டம் செய்வோம் என்றும் சொல்லி இருக்கிறார்..

ஒருவேளை இப்படி கூட இனி பத்திரிகைகள் செய்தி வெளியிடலாம்… “சாக்குவார் தங்கத்தின் அறிவிப்பால் இனி என்ன செய்வது என்று அமிதாப் பச்சன், ஜாக்கி சான் போன்றவர்கள் கையைப் பிசைகிறார்களாம்! லண்டன் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருக்கும் தமிழர்கள் அய்யய்யோ இனி நாங்கள் எல்லா படங்களையும் பார்க்க முடியாதா என்று கதறுகிறார்களாம். !”

“இந்திக்குப் போன முருகதாஸ், பிரபுதேவா, அசின், திரிஷா எல்லோரும் சாகுவார் தங்கம் என்ன செய்வாரோ என்று, அலறுகிறார்களாம் . .. வெளி நாட்டில் சிம்பொனி இசைத்த இளையராஜாவும், தெரியாமல் ஆங்கிலப் படத்துக்கு இசை அமைத்து ஆஸ்கர் வேறு வாங்கிவிட்டேனே என்று ஏ ஆர் ரகுமானும் பயப்படுகிறார்களாம். இனி தெலுங்கு ரீமேக் பண்ண முடியாதா? என்று நடிகர் விஜயும் கவலையில் இருக்கிறாராம். ”

என்ன கொடுமை சார் இது ?

உண்மையிலேயே தொழிலாளர்கள் மீதும் தமிழர்கள் மீதும் மிகுந்த அக்கறை கொண்ட நடிகர்கள் ரஜினியும் அஜித்தும் என்பது சினிமா உலக நல்லவர்கள் எல்லோருக்கும் தெரியும். பித்தளைகளுக்கும், மேலுக்கு முலாம் பூசி மினுக்குபவர்களுக்கும் இதுதான் வயிற்றெரிச்சல். என்னடா செய்வது என்று பார்த்த போது வசமாகக் கிடைத்தது “கலைஞருக்கு நன்றி சொல்லிய விழா” விவகாரம். இந்த விழாவில் மட்டுமல்ல, இதற்க்கு முன் கலைஞர் இந்த திட்டத்தை அறிவித்த போதே கூட அதே மேடையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நிலம் கொடுக்க முன்வந்த போது திரையுலகினர் இடம் சரியில்லை என்றதால் கிடைக்காமல் போனதையும், அதனால் இம்முறை விட்டு விடக் கூடாது என்று அறிவுறுத்தினார் ரஜினி. கலைஞரை மேடையில் வைத்துக் கொண்டே நடிகர் திலகம் சிலை திறப்பு விழாவில், நடிகர் விஜயகாந்த் தேர்தலில் வெற்றி பெற்றதற்குப் பாராட்டினார். இந்த முறையும் இலவசத் திட்டங்கள் ஏராளம் அறிவித்துள்ள முதல்வர் முன்னிலையிலேயே “ஓசியில் கிடைக்கிறது என்று யாரும் எதற்கும் அலையாதீர்கள்! “வசதியுள்ளவர்கள் கை நீட்டாதீர்கள்! விலகி உண்மையில் நலிந்தவர்களுக்கு வழி விடுங்கள் ! அதுதான் நியாயம்” என்று நேரிடையாக சொல்லி விட்டார். இதுதான் ஓசியில் வீடு வாங்கவும், இதில் வேறு ஏதாவது திட்டம் போட்டு சுருட்டலாம் என்று நினைத்தவர்களுக்கும் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கும் என்று தோன்றுகிறது.

நடிகர் அஜித் நடிகர்களின் நிலையை அங்கே போட்டு உடைத்தார் என்றால், நடிகர் ரஜினிகாந்த் சந்தேகமில்லாமல் ஒட்டு மொத்த தொழிலாளர்களின் சந்தேகத்தையும் குமுறலையும் போட்டு உடைத்தார். நியாயமாக தொழிலாளர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கூற வேண்டிய விஷயத்தை, கடைசி வரையில் யாரும் பேசாததால் நடிகர் ரஜினி மட்டும் உண்மையான அக்கறையோடு அன்றைக்கு அவர்களுக்காக குரல் கொடுத்தார். தொழிலாளர்களுக்கு ரஜினியின் பேச்சில் உள்ள நியாயம் தெரியும். அவர்களும் அதைத்தான் எதிர்பார்த்தார்கள்.

வெறும் பேச்சில் மட்டும் அல்லாமல் ஏற்கனவே பல முறை தொழிலாளர்களுக்கு லட்சக்கணக்கில் செலவு செய்து வருபவர் ரஜினி. கடைசியாக குசேலன் படம் வந்த போது எத்தனையோ பிரச்சினைகள், நஷ்டம் என்றெல்லாம் வந்தபோது கூட, தன் பணத்தில் இருந்து படத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு ஒரு சிறு விழாவில், ஒரு பெரும் தொகையை (இருபது லட்சம்) உதவியாக அளித்தார். இனி வரும் படங்களிலும் தருவதாக உறுதியளித்தார். இது போன்ற விஷயங்களில் இருந்தே யாருக்கு தொழிலாளர்கள் மேல் உண்மையான அக்கறை என்று தெரியும்.

ரஜினி அவர்கள் பத்திரிகைகளுக்கு காசு தருவதோ, படம் வரும்போது வீண் செலவு செய்வதோ கிடையாது. ஆனால் அவர் நின்றால் செய்தி, நடந்தால் செய்தி என்று போட்டு காசு பார்ப்பவர்கள் பல பத்திரிகைகள்.. இதில் முத்தாய்ப்பான சிலர்தான் நன்றி மறந்து இது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டு பிரச்சினைகளை தூண்டி விட்டு ஆதாயம் தேடுகிறார்கள்.

நம்மை உறுத்தும் மற்றொரு விஷயம்…ரஜினிக்கு கண்டனம் என்று கூறியிருக்கும் அறிக்கையில் நடிகர் சங்கம் கையெழுத்திட்டு இருப்பதுதான். .. குகநாதனுக்கு கண்டனம் என்று சொல்லி பெப்ஸி அமைப்பினர் கையெழுத்து போடுவார்களா? சேகரனுக்கு கண்டனம் என்று சொல்லி விநியோகஸ்தர் சங்கத்தினர் கையெழுத்து போடுவார்களா? சாக்குவார் தங்கத்துக்கு கண்டனம் என்று சொல்லி ஸ்டன்ட் நடிகர்கள் போடுவார்களா?

இவர்கள் ரஜினியை மட்டும் அவமானப்படுத்தவில்லை..! அவரைத் தொடர்ந்து கைத்தட்டிய ஆயிரக்கணக்கான மக்களையும் தொழிலாளர்களையும் மற்ற நடிகர்களையும் அவமானப் படுத்தி இருக்கிறார்கள்..

ஆக இந்த முறையும் நடிகர் ரஜினிக்கு ஆதரவாக நடிகர் சங்கம் எதுவும் பேசவில்லை…! ரஜினியை வைத்து லட்சங்களை வாரிய சங்கங்களும் பேசவில்லை..!அடுத்து ஒரு மொக்கைபாய் என்று படம் எடுத்து ரஜினியிடமும் கமலிடமும் போய் தலையை சொறிவார்கள்! பத்திரிகையில் போட்டோ வந்து விட்டது நீங்க வந்து கோவப்பட்டாதான் எங்க கோவம் தெரியும்..தயவு செஞ்சு வந்து கோவப்படுங்க என்பார்கள். ! கமல் கம்மென்று போய் விடுவார். ரஜினியோ வந்து பேசி விட்டுப் போவார். இதுதான் நடக்கும்.. ஏன் என்றால் அந்த மனிதன் மன்னிக்கவே பிறந்த மன்னன்.. இதைத்தான் அவர் கடந்து வந்த பாதை காட்டுகிறது. ஆனால் அவர் ரசிகர்கள் அவர் அளவிற்கு பக்குவம் அடைய இன்னும் பல காலம் பிடிக்கும். அது வரை இது போன்று சலசலப்புக்கள் எழும்! கட்டுரைகளும் எழும்..!

தலைவா, ஈ யை அடிக்க இரும்பு வேண்டாம்.. ஆனால் தேவைப்படும்போது உறிஞ்ச வந்துவிட்டு காரியம் முடிந்ததும் காணாமல் போகும் கொசுக்களிடம் இருந்து தப்பிக்க இனியாவது நீங்கள் ஒரு வலையை வைத்துக் கொள்ள வேண்டும்.. ஏனென்றால் ஒவ்வொரு முறையும் அவர்கள் உம் ரத்தத்தை உறிஞ்சும்போது எங்களுக்கு வலிக்கிறது……

அன்புடன்
ஈ.ரா.

நன்றி திரு.சுந்தர்,
ஒன்லி சூப்பர் ஸ்டார்.காம்

...............

Friday, January 1, 2010

புத்தாண்டு வாழ்த்துக்கள்


நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

பதிவுலகிற்கு சிறு இடைவெளி கொடுத்திருப்பதால் அதிகம் தொடர இயலவில்லை...

அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...

சுவாமியே சரணம் ஐயப்பா..