Tuesday, October 27, 2009

செவப்புத் தோல் - சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009

ரொம்ப நேர அமைதிக்குப் பின் கோபாலே தொடர்ந்தான்.."நாளைக்கு காலையில சுரேஷ் வீட்டுக்குப் போகப் போறேன். அவனும் அவங்க அப்பா அம்மாவும் டவுனுக்கு கலியாணத்துக்குப் போறாங்களாம். சரோ மட்டும்தான் வீட்ல இருப்பா. இத விட்டா எனக்கு வேற சான்ஸ் கிடைக்காது. நாளைக்கே மேட்டர முடிக்கப் போறேன்"

அடப்பாவி! சுரேஷ்தான் காலையில இருந்து இங்க வரவேயில்லையே, உனக்கு யார்டா
இதைச் சொன்னா?

"ஏண்டா அவன் சொல்லலேன்னா என்ன? பால் வாங்கப் போனப்போ சரோவே என்கிட்டே சொன்னா தெரியுமா?"

"டேய்! அவ பாவம் சின்னப்பொண்ணுடா! உன்னோட கேவலமான புத்தி தெரியாம வெள்ளந்தியா உளறி இருக்கா. எனக்கென்னமோ நீ பண்ணப்போற லூசுத்தனத்தால அந்தப் பொண்ணுக்கு அடி விழுகப் போகுதோன்னு தோணுது. அவன் இல்லாதப்போ உன்ன ஏன் உள்ள சேர்த்தேன்னு சுரேஷ் அவளைத்தான் வெளுக்கப் போறான். ஐயோ பாவம்" என்று வருத்தப்பட்டான் சுந்தர்.

"டேய் நான் மட்டும் என்ன பிறவியிலேயே கெட்டவனா? எனக்கு என்னமோ அந்த சிவப்புத்தோலப் பார்க்கும் போதெல்லாம், என் கூடவே இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்னு ஏக்கமா இருக்குடா! தூங்கும்போது கூட அந்த நினைப்பாவே இருக்குடா. தயவு செஞ்சு என்ன மாத்தாதீங்கடா.." என்றான் கோபால்.

"அது சரி, ஊருல செவப்பா சிலித்துக்கிட்டு திரியுறதுங்க எல்லாத்துக்கும் அந்த களை வருமா? அதது பொறப்பு அப்படி, ஜாதிடா ஜாதி..!" என்றான் பிரபு.

"டேய் பிரபு, நீ வேற அவன ஏத்தி விடாதடா... சாதியாம் சாதி!" என்று பொருமினான் சுந்தர்.

"இப்ப கடைசியா என்னதாண்டா சொல்றீங்க?" கோபால் நான்கு நண்பர்களையும் பார்த்து எரிச்சலுடன் கேட்டான்..

"எங்ககிட்ட கேட்டா? உன் இஷ்டம்..நீ அப்படித்தான் செய்வேன்னு ஒத்தக்கால்ல நிக்கிற. இதெல்லாம் சரியில்லன்னு நாங்க ஆயிரம் வாட்டி சொல்லியும் நீ முடிவை மாத்திக்கல! அப்புறம் ஏன் எங்க கிட்ட கேட்கிற?- இது கோபு..

"டேய், எத செஞ்சாலும் ஜாக்கிரதையா செய்யு..சுரேஷ் அது மேல உசிரையே வச்சுருக்கான்..நீ மட்டும் இப்படி பிளான் பண்றது அவனுக்கு தெரிஞ்சா நம்ம எல்லாரையுமே பொலி போட்டுருவான்!" எச்சரித்த குரலில் சொல்லிவிட்டுத் திரும்பிக் கொண்டான் கார்த்தி.

சுந்தர் வாயையே திறக்க வில்லை.. அவன் பாட்டிற்கு ஒவ்வொரு கல்லாக எடுத்து குட்டையில் போட்டுக்கொண்டிருந்தான்.

பிரபு கோபாலிடம் லேசாக பேச ஆரம்பித்தான், "மச்சி, இது ரொம்ப தப்புடா, சுரேஷ் நம்ம பிரென்டுடா, நமக்காக என்னெல்லாம் செஞ்சிருப்பான்? உன்னையும் ஒரு நண்பன்னு மதிச்சு வீட்டுக்குள்ள சேர்த்துக்கிட்டு திரியுறான், அவனுக்கு நீ நம்பிக்கைத் துரோகம் பண்ணலாமா? என்ன மாதிரி படிப்ப விட்டுட்டு வேலைக்குப் போறவன் கூட ஒழுங்கா இருக்கானுங்க, உன் புத்தி என்னவோ இப்படி போகுதே? இது ரொம்ப தப்புடா"...

"இத பாரு, ரெண்டு வயசு பெரியவன்னா நீ அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுடிவியே? யார் வேணா என்ன வேணா சொல்லுங்க.. நான் ஒண்ணு மேல ஆசை வச்சுட்டா அதை அடையாம விடமாட்டேன்.. என்ன நடந்தாலும் சரி.. நான் என் முடிவை மாத்திக்க மாட்டேன்.."

அப்படி என்னடா ஆசை? உனக்கு அவ்வளவு ஆத்திரம்னா நாளைக்கு நான் வேலைக்கு போகும்போது ஒரு இருநூறு ரூபா எடுத்துட்டு கூட வா, நானே இத விட சிவப்பா, ஒரு நல்ல குட்டியா அரேஞ்சு பண்ணித் தாரேன்.

"தோடா... வந்துட்டாரு கொலம்பஸ் வழி காட்டுறதுக்கு! கம்முனு போ, அப்புறம் ஏதாவது வாயில வந்துரும்". கோபாலுக்கு கோபம் வந்தவுடன் எல்லோரும் வாயை மூடிக் கொண்டார்கள்..

"இதுக்கு மேலயும் உங்க கிட்ட பேசிட்டு இருந்தா நான் நல்லவன் ஆயிடுவேன் போல இருக்கு. ஆள விடுங்கடா நாளைக்கு சாயந்திரம் பார்க்கலாம்" என்று சைக்கிளை எடுத்தான் கோபால்..

மறுநாள் காலை. கோபால் மெதுவாக சுரேஷ் வீட்டை நெருங்கினான். ஜன்னல் வழியே பார்த்தான். வீட்டுக்குள் யாருமே இல்லை. மெதுவாக சைடு வழியே வேலியை ஒட்டியவாறு கொல்லைப்புறம் நோக்கிச் சென்றான். அங்கே சரோ குளித்துக் கொண்டு இருந்தாள். அவளும் அவனோட ஸ்கூல்தான். கோபாலும் சுரேஷும் + 1 . இவள் பத்தாம் வகுப்பு. ரொம்ப அமைதியான பெண். கோபால் யோசித்தான். சரோவின் சம்மதத்தைப் பெற்று விட்டால் வீண் பிரச்சினை இருக்காதே.. யாருக்கும் தெரியாமல் அடைந்து விடலாம். கடைசியாக ஒருமுறை பேசிப் பார்க்கலாமா என்று நினைத்தான். சில நொடிகள்தான் அந்த சிந்தனை.. அடுத்த கணமே "இவளுக்கோ விவரம் பத்தாது, நாம் பாட்டு இவளிடம் ஆசையை சொல்லப் போக அவள் சுரேஷிடமோ அப்பா அம்மாவிடமோ சொல்லிவிட்டால் அப்புறம் நம்மை வீட்டுப் பக்கமே சேர்க்க மாட்டார்கள்; பந்தோபஸ்தும் அதிகமாகிவிடும்.. அப்புறம் என்றைக்குமே கிடைக்காமப் போயிடும் என்று ஒரு முடிவுக்கு வந்து காத்திருக்க ஆரம்பித்தான்.

ஒரு கண் கிணற்றடியிலும் இன்னொரு கண் வாசலிலும் வைத்து இருந்தான். சரோ திரும்புகிற மாதிரி இல்லை. என்ன செய்வது என்று கையைப் பிசைந்து கொண்டிருந்த போது, சரோ குளித்து விட்டு மெதுவாக திரும்பியவள் கோபாலைப் பார்த்தே விட்டாள்.
அன்று விடியற்காலையிலேயே சுந்தர் அவளிடம் கோபாலின் திட்டத்தைப் பற்றி சொல்லி உஷார்ப்படுத்தி இருந்ததால் சடாரென்று ஒரு முடிவுக்கு வந்தாள். துணியை நன்கு தோளிலும் இடுப்பிலும் சுற்றிக் கொண்டு, அருகில் இருந்த மூங்கில் கம்பை எடுத்துக் கொண்டாள்.

"டேய் கோபாலு, நீ எதுக்கு வந்திருக்கன்னு எனக்கு தெரியும். மரியாதையாப் போயிடு! நீ இப்படிப்பட்ட ஈனப் பயன்னு தெரியாம நானே உன்கிட்ட வந்து எங்க வீட்ல யாரும் இருக்க மாட்டாங்கன்னு சொல்லிட்டேனே..! இன்னும் ஒரு அடி எடுத்து வச்சியின்னா மரியாதை கெட்டுரும்..உனக்கு என்னப் பத்தி முழுசா தெரியாது...கோபம் வந்தா நான் பத்ரகாளி ஆயிடுவேன்.." என்று இரைந்தாள்.

கோபால் இனியும் நேரம் கடத்தினால் வம்பு வளரும்.. ஆனது ஆகட்டும் என்று முன்னால் ஓடினான். ஒரே தள்ளு.. சரோ துணி தோய்க்கும் கல்லைப் பிடித்துக் கொண்டு கவிழ அவன் கொண்டு வந்திருந்த கைப்பையில் இருந்து கிழிக்கப்பட்ட பாதி பெட்ஷீட்டுடன் முன்னேறினான்.. இவ்வளவு நேரம் டேய் கோபாலு என்று சொல்லிக் கொண்டிருந்த சரோ இப்போது "கோபால் அண்ணா, வேணாம்னா, விட்டுருன்னா, அண்ணன் வந்து நீயே இப்படி பண்ணிட்டேன்னு தெரிஞ்சா உடைஞ்சு போயிடும்!" என்று அவன் கால்களைப் பிடித்தாள்.

கோபால் மசியவில்லை.. அடச்சே என்று ஒரே தள்ளில் அவளை எட்டி உதைக்க அவள் மீண்டும் இரண்டடி தள்ளி விழுந்தாள்.. விழுந்த வேகத்தில் நெற்றியிலும் முழங்காலிலும் சிராய்ப்பு ஆகி கண்களில் தாரை தாரையாய் அழுகை வந்து கண்களை மூடிக் கொண்டாள்.. ஒரு நொடி கழிவது ஒரு கணம் போல் இருந்தது. கால்களில் வலி உயிர் போனது.

கண்ணைத் திறந்த போது கோபால் பெட்ஷீட்டையும் பையையும் மார்போடு அணைத்துக் கொண்டு சந்தோஷத்தையும் வருத்தத்தையும் ஒரே நேரத்தில் முகத்தில் காட்டியபடி அவள் காதருகே வந்து "சாரி சரோ, என்ன மன்னிச்சுரு! இனிமே இந்த பக்கமே நான் வரமாட்டேன்" என்று சொல்லிவிட்டு ஓடி ஓடி ஓடியே போய் விட்டான்.

கிணற்றடியிலே அரைமணி நேரம் பிரமை பிடித்தவள் போல் அமர்ந்திருந்தாள் சரோ. மெதுவாக எழுந்து தேம்பித்தேம்பி அழுதவாறே அழுக்கான உடையுடன் ஹாலில் வந்து அமர்ந்து கொண்டாள். சற்று நேரத்தில் வீட்டில் எல்லோரும் வந்து விட்டார்கள். நடந்தது அத்தனையும் அழுதுகொண்டே அவள் சொல்லச் சொல்ல, அம்மாவுக்கும் சுரேஷுக்கும் ஆத்திரம் எகிறியது..பள்ளிக்கூட வாத்தியாரான சுரேஷின் அப்பா மட்டும் எதுவும் பேசாமல் நாற்காலியில் உம்மென்று அமர்ந்திருக்க, மீனாட்சி ஆரம்பித்தாள்,

"அந்த பயல பார்க்கும்போதே நினைச்சேன்... எவ்வளவு அன்பா பழகினோம்... அந்தப் பரதேசி புத்தியை காட்டிட்டான்..அவன் கண்ணை பார்க்கும் போதே களவாணித்தனம் பளிச்சுன்னு இருந்துச்சு.. நான் ஒரு மடச்சி, அவன் சுரேஷ் இல்லாதப்ப பார்த்து அடிக்கடி வாரதும், பிஸ்கட்டு என்னா, பாலு என்னான்னு கொண்டாறதும், அப்படியே கிணத்தடியில இருந்து முழிச்சு முழிச்சு முளுங்குரா மாதிரி பார்க்கிறதும் எனக்கு உரைக்காமப் போச்சே.. பாவிப்பய வெள்ளிக்கிளைமையும் அதுவுமா நிறைஞ்ச வீட்டுல இப்படி கைய வச்சுப்புட்டானே..அவன் விளங்குவானா, அவன் அப்பன் புத்திதான் அவனுக்கும் இருக்கும்! நீங்க போயி அவன் அப்பன் ஆயி கிட்ட நாலு வார்த்தை நாக்கப் பிடுங்குறமாதிரி கேட்டுட்டு வாங்க, இப்படியா ஒரு நாதாரிய வளர்ப்பீங்கன்னு?" மீனாட்சியின் குரல் தெருக்கோடி வரை கேட்டது..

சுரேஷின் அப்பா மாணிக்கம் எவ்வளவோ சமாதானம் செய்தும் அவளை அடக்க முடியவில்லை...

இயல்பிலேயே அமைதியான மாணிக்கத்துக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.."ஏண்டி, அவ என்னடி வளர்க்கறது? நீ என்ன கிழிச்ச? இந்த தொர ரோட்டுல போற தெரு நாயை எல்லாம் கிணத்தடி வரை கூட்டியாந்து குலாவுவாராம்.அதுங்கள பார்க்க வேற நாயிங்கலாம் வருமாம்.. இதுங்க பண்ற கள்ளத்தனத்துக்கு எல்லாம் நான் பஞ்சாயத்துக்குப் போவணுமா? அவன் அம்மா ஒரு பஜாரி, நான் போயி இதக் கேட்டா, நீ யோக்கியமா, உன் மவன் யோக்கியமான்னு என்கிட்டயே கேப்பா! சனியன் ஒழியுதுன்னு விட்டுத்தள்ளு" என்று துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு வாசலில் போய் அமர்ந்து விட்டார்..

மீனாட்சி முனங்கியவாறே சமையல் கட்டுக்குள் நுழைந்தாள்.

சரோ காயங்களுக்குத் தேங்காய் எண்ணெய் போட ஆரம்பித்தாள்..

சுரேஷ் மட்டும் லேசான அழுகையுடன் கிணற்றடிக்கு சென்றான்.. அங்கே கருப்பு நாய்க்குட்டியும் வெள்ளை நாய்க்குட்டியும் பயத்தில் ஒன்றோடு ஒன்று கட்டிக்கொண்டு ஒடுங்கிப் படுத்திருந்தன..

அவன் ஆசையாய் வளர்த்திருந்த சிவப்பு நாய்க்குட்டியை கோபால் தூக்கிக் கொண்டு போயிருந்தான்...

சர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டி

19 comments:

M Arunachalam said...

Ee. Raa.,

Very Good Try. But, I could easily guess the 'twist' upfront. I think you have been bugged by "Kumudam Short Story" fever, right? Hope you recover from it soon.

வானம்பாடிகள் said...

நல்லா கொண்டு போனீங்க. நான் கண்டு புடிச்சிட்டேன் நாக்குட்டியாதான் இருக்கணும்னு.

பிரியமுடன்...வசந்த் said...

ம் ரொம்ப நோகடிச்சுட்டீங்க...உங்களை...

பிரியமுடன்...வசந்த் said...

நச்சுன்னுதான் இருக்கு வாழ்த்துக்கள்

கலகலப்ரியா said...

அருமைங்க.. நான் என்னமோ மாங்காயோ.. மட்டையோ வரப்போறதுன்னு நினைச்சேன்.. ஆனா வெள்ளை நிறத்தொரு நாயும்... பிரம்மாதம்..! நாய்ன்னு முன்னாடியே சொல்லியும்.. மனசு மனுஷங்கலதான் நாயின்னு நினைக்குது.. என்ன கொடுமை ஈ ரா.. ! =))


enna ellaarum guess pannitten.. kandu pudichittennu solluraaynga.. athaan appave solliyaachchilla.. hihi.. escappu...!

ராமலக்ஷ்மி said...

கதையை கதையாகத்தான் பார்ப்பேன், அதிலென்ன சந்தேகம் உங்களுக்கு:)? வானம்பாடிகள் போலவே எனக்கும் பாதியிலே [நம்புங்க, முடிவைப் பார்க்காமதான்] ஊகிக்க முடிந்து விட்டது. ஆனாலும் நல்லாக் கொண்டு போயிருக்கீங்க கதையை. வாழ்த்துக்கள் ஈ.ரா.

ஈ ரா said...

//M Arunachalam said...

Ee. Raa.,

Very Good Try. But, I could easily guess the 'twist' upfront. I think you have been bugged by "Kumudam Short Story" fever, right? Hope you recover from it soon.//

நன்றி ஜி, குமுதம் சிறுகதைகள் படித்து ரொம்ப நாளாச்சு.. இப்போட்டியின் விதிமுறைப் படி எழுத முயற்சித்தேன்..

//வானம்பாடிகள் said...

நல்லா கொண்டு போனீங்க. நான் கண்டு புடிச்சிட்டேன் நாக்குட்டியாதான் இருக்கணும்னு.
//

நன்றி அண்ணே... உங்க கிட்ட எல்லாம் நம்ம பாட்சா பலிக்குமா? இருந்தாலும் பாரா மாறி இருந்ததால ரொம்ப ஈசியா இருந்து இருக்கும்.. இப்போ சரி பண்ணிட்டேன்...கொஞ்சம் பெட்டரா இருக்கும்னு நினைக்கிறேன்..

//பிரியமுடன்...வசந்த் said...

நச்சுன்னுதான் இருக்கு வாழ்த்துக்கள்//

அப்பாடி, நான் தப்பிச்சேன்... நன்றி பிரிய வசந்த்...

//கலகலப்ரியா said...

அருமைங்க.. நான் என்னமோ மாங்காயோ.. மட்டையோ வரப்போறதுன்னு நினைச்சேன்.. ஆனா வெள்ளை நிறத்தொரு நாயும்... பிரம்மாதம்..! //

நன்றிங்க..என் வயித்துல பால வார்த்தீங்க...

நாய்ன்னு முன்னாடியே சொல்லியும்.. மனசு மனுஷங்கலதான் நாயின்னு நினைக்குது.. என்ன கொடுமை ஈ ரா.. ! =))

enna ellaarum guess pannitten.. kandu pudichittennu solluraaynga.. athaan appave solliyaachchilla.. hihi.. escappu...!//

--)

//ராமலக்ஷ்மி said...

கதையை கதையாகத்தான் பார்ப்பேன், அதிலென்ன சந்தேகம் உங்களுக்கு:)? //

ஒரு முன்னெச்சரிக்கை தான்...

//வானம்பாடிகள் போலவே எனக்கும் பாதியிலே [நம்புங்க, முடிவைப் பார்க்காமதான்] ஊகிக்க முடிந்து விட்டது. //

ஐயோ வடை போச்சா??????

ஆனாலும் நல்லாக் கொண்டு போயிருக்கீங்க கதையை. வாழ்த்துக்கள் ஈ.ரா. //

சரி உங்க ஆறுதலைப் பரிசா நினைச்சுக்கறேன்...நன்றிங்க..

சென்ஷி said...

:)

நல்லா கதையை கொண்டு போயிருக்கீங்க. வாழ்த்துக்கள்!

R.Gopi said...

ஒரு அருமையான கதைகளத்தை தேர்ந்தெடுத்து, ஊகிக்க முடியாதபடி எடுத்து சென்றுள்ளீர்கள்...

நண்பர் அருண் அவர்களை லேசில் திருப்தி படுத்த முடியாது... அவரிடம் எனக்கு ஒரே ஒரு முறை, அதுவும் அந்த “தோப்பும்...புங்கை மரமும்.... பின்னே ஞானும்” என்ற எழுத்துக்கு கிடைத்தது... லேசில் யாரையும் பாராட்ட மாட்டார்...

புதுவித கதையுடன் கதை கோதாவில் குதித்த அண்ணன் ஈ.ரா. அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

ஈ ரா said...

//சென்ஷி said...
:)
நல்லா கதையை கொண்டு போயிருக்கீங்க. வாழ்த்துக்கள்!//

மிக்க நன்றி ஜி...முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்...

//R.Gopi said...

ஒரு அருமையான கதைகளத்தை தேர்ந்தெடுத்து, ஊகிக்க முடியாதபடி எடுத்து சென்றுள்ளீர்கள்...//

ரொம்ப தேங்க்ஸ்னா

// நண்பர் அருண் அவர்களை லேசில் திருப்தி படுத்த முடியாது... அவரிடம் எனக்கு ஒரே ஒரு முறை, அதுவும் அந்த “தோப்பும்...புங்கை மரமும்.... பின்னே ஞானும்” என்ற எழுத்துக்கு கிடைத்தது... லேசில் யாரையும் பாராட்ட மாட்டார்...//

கறேக்டுதானுங்க....ஆனா பிடிச்சு போச்சுன்னா, போன் பண்ணி கூட என்கரேஜ் பண்ணுவாரு நம்ப அண்ணாச்சி.. அதனால அவரு சொல்றபடி கொஞ்சம் இம்ப்ரூவ் பண்றது நல்லதுதான்னு நினைச்சுப்பேன்..

// புதுவித கதையுடன் கதை கோதாவில் குதித்த அண்ணன் ஈ.ரா. அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...//

நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்... நீங்கள் கொடுத்த தகவலின் பேரில்தான் நான் இதில் கலந்து கொள்ள முடிந்தது...

புலவன் புலிகேசி said...

கதை நன்றாக இருக்கிறது.வாழ்த்துக்கள்........

M Arunachalam said...

After the re-arrangement of the paras, now the story looks fine & the 'suspense' is maintained till the end. Good Luck to you.

தியாவின் பேனா said...

ஒரு நாயக்குட்டிக்கா
அருமையான நகர்வு

கிரி said...

விவகாரமான கதையா இருக்கே! ;-) இன்னும் உங்ககிட்ட எதிர்பார்க்கிறேன் ;-)

snkm said...

கதையெல்லாம் ஆரம்பிச்சாச்சா! நல்லது! வாழ்க!

வி.என்.தங்கமணி, said...

என் பதிவுவரை வந்து, படித்து கருது சொன்னதுக்கு நன்றி அன்பரே. உங்கள் கதை அருமை. வாழ்க வளமுடன். நேரமிருந்தால் www.vethathiri.org க்கு சென்று பாருங்கள் உங்களுக்கு பிடிக்கும் என நினைக்கிறேன்.

Bhuvanesh said...

நல்ல கதை அண்ணே.. வெற்றி பெற வாழ்த்துக்கள்..

சுவாசிகா said...

ஊகிக்க முடிந்தாலும் நல்லா நச்னுதான் முடிச்சிருக்கீங்க

வெற்றி பெற வாழ்த்துகள்

அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me

ஈ ரா said...

நன்றி சுவாசிகா, புவனேஷ், தங்கமணி,கிரி,அருண் ஜி,தியா, புலவர்

Post a Comment