Wednesday, December 9, 2009

சூப்பர் ஸ்டாருக்கு ஒரு சூப்பர் வாழ்த்து...


2007 ல் நான் வெளியிட்ட "தலைவா தலைவா" தொகுப்பு பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்ததே.. இந்த ஆண்டு புதிதாக தலைவரின் பெரும்பாலான படங்களை கவிதை வடிவில் எழுதுமாறு ஒன்லி சூப்பர் ஸ்டார்.காம் சுந்தர் கேட்டுக் கொண்டார்...

கரும்புக்க(கா)ட்டைக் கண்டவனுக்கு எந்தக் கரும்புதான் பிடிக்காது.? எல்லாவற்றையுமே எடுத்து ருசிப்போம் என்று அனைத்து தமிழ்ப் படங்களையும் சில ஹிந்தி தெலுங்கு படப் பெயர்களையும் கோர்த்து இந்த பாமாலையை உருவாக்கி மிகச் சிறப்பான அறுபதாம் பிறந்தநாளுக்காக சூப்பர் ஸ்டாருக்காகவும், அவரை சுவாசிக்கும் ரசிகர்களுக்காகவும் சமர்ப்பிக்கிறேன்..
___________________________________________________________

வெள்ளித்திரை நட்சத்திர மண்டலத்தில்
அபூர்வ ராகங்கள் முழங்க
சூப்பராய் உதித்த ஸ்டார் நீ !

காலப்போக்கில்
உச்ச நட்சத்திரமாய் நீ மின்ன
மற்றவை எல்லாம்
மிச்ச நட்சத்திரங்களாய் மாறிப் போயின !
ஏன் தெரியுமா?
நட்சத்திரங்களில் நீ ஒரு
சிவப்பு சூரியன் என்பதால்தான்!

சந்திரன் சூரியனை அறிமுகப்படுத்தி
எங்காவது பார்த்திருக்கிறார்களா? ...
இங்கு
நடந்தது...

ஆம்
இந்த
பளீர் சூரியனை அறிமுகப்படுத்தியது -
ஒரு
பால சந்திரன்...!


நீ
அசாதாரணமான ஒரு
உச்சரிப்பை
அறிமுகப்படுத்தினாய் ! - அது
அத்தனை பேர் செவிகளிலும்
பைரவியாய் !


உன்
வல்லின மெல்லினங்களில்
வள்ளிசாய் வசப்பட்டோம் நாங்கள் !


உனக்கு
சரியாகத்தான் பெயர் வைத்தார்கள் -
ரசினி என்று !
ஆம் !
பார்க்கும்போதே
ரசி - நீ, ரசி - நீ என்று எல்லோரையும்
தூண்டுவதால்தான்
நீ
'ரசினி' ஆனாய் போலும் !யார்க்கும் நான் அடிமை இல்லை
இது
நான் போட்ட சவால்!
ஆனால்
என்றைக்கு நீ
என்னை வாழ வைத்த தெய்வம் என்று
உச்சிக்கு உயர்த்தினாயோ -
அன்று முதல்
உன் அன்புக்கு நான் அடிமை ஆனேன்..!

ஆயிரம் ஜென்மங்கள் காத்திருந்து
வணக்கத்துக்குரிய காதலிக்கு
அக்னி சாட்சியாய்
மூன்று முடிச்சு போட்டு
மாப்பிள்ளை ஆனாய் நீ !
அது உனக்கு
இறைவன் கொடுத்த வரம் !
அதனால்தானோ என்னவோ
இன்றைக்கும் உனக்கு
இளமை ஊஞ்சலாடுகிறது!
அவள் அப்படித்தான் என்று
நீ ஒதுக்கி விட்டுப்போன
நீலாம்பரிகளும் சண்டிரமுகிகளும் ஏராளம் !
அவர்கள் மாறினார்களா என்று தெரியாது !
அதே சமயம்
உன்னால்
அன்னை ஓர் ஆலயம் என்று
உணர்ந்தவர்கள் ஏராளம் ஏராளம் !


நான் மகான் அல்ல என்று நீ
அடிக்கடி சொன்னாலும்
உன்னால் ஆன்மீகப் பாதையில்
அடிஎடுத்தவர்கள் ஆயிரக்கணக்கில் !நீ
உன்மீது அடிக்கடி விழும்
நன்றி மறந்த கற்களைத் தடுக்க
மௌனம் என்னும் கேடயத்தை
மட்டுமே கைக்கொள்ளும்
அஹிம்சைத் தளபதி !

ரகுபதி ராகவ ராஜாராம் இசைத்து
ராம் ராபர்ட் ரஹீமிடம் வேற்றுமை பார்க்காத
உனக்கு
சங்கர் சலீம் சைமனும் ஒன்றுதான்
ஜான் ஜானி ஜனார்த்தனும் ஒன்றுதான் !
ஊர்காவலனே,
எல்லாம் உன் கைராசி என்று
உன்னை நாடி வந்தோர்க்கு
நான் வாழ வைப்பேன் என
கைகொடுக்கும் கை ஆனாயே !
அதை என்றைக்கும்
நினைத்தாலே இனிக்கும் !


உன்
தலைமுடியில் வேண்டுமானால்
இடைவெளி சற்றே அதிகமாகி இருக்கலாம் !
ஆனால் உனக்கு
தலைமுறை இடைவெளி என்பது மட்டும்
கிடையவே கிடையாது !
இன்றைக்கும்
உன்னோடு சேர்ந்து ஆட
ப்ரியாக்களும் காயத்ரிக்களும்
தயாராக இருக்கிறார்கள் -
பதினாறு வயதினிலே !

உங்களுக்கெல்லாம் ஒரு விஷயம் தெரியுமா?

தமிழ்நாட்டில்
நான் சிகப்புமனிதன் என்று
கர்வப்பட்டு சுற்றிக்கொண்டிருந்த
போக்கிரி ராஜாக்களும், மாங்குடி மைனர்களும்
கடும் வெயிலில் நின்று
கறுத்துக் கொண்டிருக்கிறார்களாம் -
ஏனெனில்
இங்குள்ள பெண்களுக்கு
உன்னுடைய கறுப்புத்தான்
மிகவும் பிடித்த கலராம்...!


'ஜானி ஜானி' என்று கூப்பிட்டால்
இங்குள்ள குழந்தைகள்
'எஸ் பப்பா' என்பதில்லை -
படையப்பா என்கின்றனவாம் !


ஜஸ்டிஸ் கோபிநாத்தின்
தீர்ப்புக்கள் மட்டுமல்ல
எப்பொழுதும் இந்த
பெத்த ராயுடுவின் தீர்ப்பும்
சுத்தமாகத்தான் இருக்கும்..!
அதனால்தான் நீ
ஆந்திராவில்
மொத்த பேரையும்
உன் பின்னால்
சுத்த வைத்த
பெத்த ராயுடுவோ?

உனக்கு
சக கலைஞர்கள் வேண்டுமானால்
ஆயிரம் பேர் இருக்கலாம் !
ஆனால் எங்காவது
சம கலைஞர்கள் இருக்கிறார்களா?
எங்களுக்குத் தெரியவில்லை!
ஏனெனில் நீ
இலட்சத்தில் ஒருவன் !
இலட்சியத்தில் அரசன் !

மிஸ்டர் பாரத்தான உன்னைப் பார்த்து
தம்பிக்கு எந்த ஊரு என்று கேட்டவர்களிடம்
நாங்கள் தர்மயுத்தம்
செய்து வந்தோம் !


ஆனால்
இன்றைக்குத்தான்
பலபேருக்குத் தெரிந்தது
இந்த தங்கமகனின்
தாய் வீடு
நாச்சிக்குப்பம் என்று!ஓஹோ !
அதனால் தான்
நீ
அன்றைக்கே
குப்பத்து ராஜா ஆனாயோ?

அன்றைய குப்பத்து ராஜா
இன்றைய ராஜாதி ராஜாவாகி
தென்னாப்பிரிக்காவில் கூட
அவன் கொடி பறக்குது !
இருந்தாலும் எங்கும்
எளியோர் இதயத்தில்
அந்த ராஜா சின்ன ரோஜாதான் !

சூப்பர் ஸ்டாரே,
நீ
குன்றுகளுக்கு மத்தியில்
ஒரு மலை !
அண்ணாமலை !

நீ
அருணாச்சலம் மட்டுமல்ல
கருணாச்சலமும்தான் !

நீ
குணத்திலும் பணக்காரனாகி பல
குசேலர்களை காத்த
தர்மதுரை !

நீ
எங்கோ உயரத்தில் இருந்தாலும்
அடியாழத்தில் இருந்து கொள்ளும்
சிதறாத முத்து !

நீ
ஏற்றி இறக்கும்
திரையுலக ஆடுபுலி ஆட்டத்தில்
என்றைக்கும்
பாயும் புலி !நீ
அரசியல் சதுரங்கத்தில்
யாரும் செக் வைக்க முடியாத
தனிக்காட்டு ராஜா !

அதனால்தான்
இருபது ஆண்டுகளுக்கு முன்
நீ
வெறும் சிவா!
இன்றைக்கோ சிவாஜி !மதுரையை ஆண்டவன் பாண்டியன் !
மக்கள் மனங்களை ஆளும்
நீயோ
அலெக்ஸ் பாண்டியன் !

நீ
புரட்டு தெரியாத முரட்டுக் காளை !
உன் கண்ணில் நீர் வழிந்தால்
பொறுக்காத காளியிடம்
நீ சக்தி கொடு
என்று கேட்டாய்!
அதனால்தான் அவள்
கோடிக்கணக்கில் உனக்காகத்
துடிக்கும் கரங்கள் தந்தாள்!

நீ
பொல்லாதவன் என்று
பொய்யர்கள்
புறம் சொல்வர் !
ஆனால் உன்னை
புரிந்தவர்களுக்குத் தெரியும் -
நீ
நல்லவனுக்கு நல்லவன்
நாட்டுக்கொரு நல்லவன் என்று!

நீ
உன் அடுத்த வாரிசை
எஜமானாக மட்டும்
அடையாளம் காட்டவில்லை !
நல்ல உழைப்பாளியாய் காட்டினாய் !
வீரா - வருவீரா என்று
உன்னை மன்னனாக்க பலபேர்
துடித்த போது - ஒரு
எந்திரன் போல ஆசைக்கு
விடுதலை கொடுத்து
எங்கோ தூரம் சென்று
மனிதனாய் நிமிர்ந்தாய் !

வாழ்க்கைப் பாடத்தைப்
புரட்டிப் படித்த
நீயா படிக்காதவன்?

அலாவுதீனின் அற்புத விளக்கே !
உன் வெளிச்சத்தில்
வீட்டுப் பாடம் படித்த
கலைஞர்கள் எத்தனை பேர் ?

உன் பாஷாவைப் பார்த்து பாஸான
கதாநாயகர்கள்தான் எத்தனை பேர்?

உன் சத்திய நெற்றிக்கண் எரித்த
மன்னிப்புத் தீயால்
காணாமல் போன கழுகுகள்தான்
எத்தனை எத்தனை?

மாவீரனே !
உன்னிடம்
தில்லுமுல்லு செய்யவோ
தப்புத்தாளங்கள் போடவோ
யாராலும் முடியாது !
ஏனெனில்
நீ
தர்மத்தின் தலைவன் !

நீ
எங்களுக்கு குரு
சிஷ்யன் பல சித்தர்களுக்கு !

நீ ஒரு நல்ல வேலைக்காரன் அல்லவா ?
அதனால்தான் உனக்காகக்
காத்திருக்கிறது -
ஒரு நல்ல வேலையும் -
அதற்காக காத்திருக்கிறது
ஒரு நல்ல வேளையும்!இனி சில விந்தைகளைப் பார்ப்போமா?

அன்புள்ள ரஜினிகாந்த்தே !
நீ
காந்தம் போல கடந்து செல்கையில்
உலகெங்குமிருந்து எண்ண அலைகள்
ஒரே இடத்தில் மையம் கொள்வதால்
ராடார்கள் ஸ்தம்பிப்பதாக
கையைப் பிசைகிறார்களாம் மீனம்பாக்கத்திலே..!

சிவாஜி ராவ் கெயிக்வாட்டே,
இன்னும் இருபதாண்டுகள் கழித்தாவது
உன்னை
இரண்டாம் இடத்துக்கு தான்
அனுப்பவேண்டும் என்று
உன் வீட்டில்
இரண்டு வயது யாத்ரா
முரண்டு பிடிக்கிறானாம் !
கடத்தல் மன்னன் பில்லாவே !
நீ
சற்றே உஷாராக இரு !
உன்னால்
ஜப்பான் முதல் அமெரிக்கா வரை
பல இதயங்கள் களவாடப்பட்டு
இந்தியாவிற்கு இறக்குமதியாகின்றனவென்று
உன் மீது
ஒரு கண் வைத்திருக்கிறார்களாம்
சுங்க அதிகாரிகள் !
அவசர அடி ரங்காவே !
கொஞ்சம் ஜாக்கிரதையாக இரு !
ஆறிலிருந்து அறுபது வரை
எட்டுக்கோடி இதயங்களிலும்
அத்துமீறி நுழைந்து
இண்டு இடுக்கின்றி நீயே
ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக
கணக்கெடுக்கிறார்களாம்
காவல்துறையினர் !

சொக்க வைக்கும் சுல்தானே,
உன் வீச்சைக்
கட்டுப்படுத்த வேண்டுமென்றால்
புதிதாய் மன உச்சவரம்புச் சட்டம்தான்
கொண்டுவரவேண்டும் போலும் !

முள்ளும் மலரும் எதிலும் உண்டு என
உணர்ந்த அதிசய பிறவியே!

உனக்கு
சினிமா ஆன்மிகம் அரசியல் என்று
மூன்று முகம் !

இனி எந்த முகம் உனக்கு
என்று புவனமே கேள்விக்குறியோடு நிற்க
நீயோ
என் கேள்விக்கு என்ன பதில் என்று
ராகவேந்திரரையும் பாபாவையும் கேட்கிறாய் !

உனக்கு பதில் கிடைத்து
நீ சினிமா என்றால்
எங்களுக்கு நீ கவிக்குயில் !
நீ இசைக்கும் அபூர்வராகங்களின்
அடுத்த அவதாரத்தை நாங்கள் ரசிப்போம் !

மனதில் உறுதி வேண்டும் நீ
ஆன்மிகம் என்றால்
உன் காலடியில் ஆறு புஷ்பங்கள்
தூவிச் சொல்வோம்
நீயே எங்கள் மகாகுரு என்று !

நாடு காக்க அரசியல் காட்டில்
நீ
வேட்டையனாய் நுழைந்தால்
உன் கர்ஜனைக்குப் பின் அணி வகுக்கும்
ராணுவ வீரர்கள் நாங்கள் !

இது புதுக் கவிதையோ
எங்கேயோ கேட்ட குரலோ அல்ல
தாய் மீது சத்தியம்!

வாழ்க ரஜினி....

****************

குறிப்பு :

1. இது சர்வ நிச்சயமாக சூப்பர்ஸ்டார் ஸ்டாரை ரசிப்பவர்களுக்காக...!

2. இந்த கவிதையையும் என் பங்களிப்பின் பெரும்பகுதியையும் வெளியிட்டு சூப்பர் ஸ்டாரின் அறுபதாம் பிறந்தநாளில் மனம் நிறையச் செய்த எஸ் எஸ் மியூசிக் நிர்வாகத்திற்கும் இதற்காக பெருமுயற்சி எடுத்து ஊக்குவித்த ஒன்லி சூப்பர் ஸ்டார்.காம் நண்பர் சுந்தர் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. பங்குபெற்ற நண்பர்களுக்கு என் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

___________________________________________________________


படங்கள் : ஒன்லி சூப்பர் ஸ்டார் தளத்திலிருந்தும் இணையத்திலிருந்தும்

22 comments:

Arun said...

Hi,

MySelf and my family saw your Kavithai in SS Music Yesterday. Your poem was awesome and we all were spellbound by your wordings correlated with Rajni Sir's movies.. FANTASTIC WORK FRIEND.. KEEP UP THE GOOD WORK.. PRESENT YOUR WORK to RAJNI SIR as a Book.Hope that by this time he might have seen you in SS Music.

Un pondra rasigargal erukum podhu avar yendrume RASIGA MUDHALVAN.. seekiram arasanai eruvarar nam pondra rasigargal thunaiyal.

Endrum Rajni Rasiganai,
Arun
arun.sak@gmail.com

கிரி said...

ஈரா வாழ்த்துக்கள் :-) எங்களுக்கு தான் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை.. வீடியோ விற்க்காக காத்திருக்கிறேன்! :-)

snkm said...

நல்ல கவிதை! கவிதைகள் எல்லோரும் முயற்சித்தாலும் நன்றாக அமைவது சிலருக்குத்தான்! நீயும் அதில் ஒருவன்! வாழ்க!

எல்லாம் சரிதான்! நாட்டுக்காக எவ்வளவோ செய்தாலும் அரசியலுக்குள் வந்து இன்னும் செய்ய வேண்டியதைச்செய்தால் பாரதம் தன்னுடைய வரலாற்றில் அவர் பெயரை ப்பொறித்துக்கொள்ளும்! அந்த நாளும் வரட்டும்! பாரதம் பொலிவு பெறட்டும்!

சிங்கக்குட்டி said...

இதுக்கு எல்லாம் முன் குறிப்பே அவசியமில்லை ஈ ரா.

கல கல கலக்கல் கவிதை அருமையான படங்கள்.

அப்படியே ஒரு விடியோ லிங்கையும் கொடுங்க.

முடிவில் கோர்வையாக பட பெயர்கள் சூப்பர் :-)

புலவன் புலிகேசி said...

தலைவர் கவிதை சூப்பரு...

தியாவின் பேனா said...

அருமை!

ஈ ரா said...

தங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி அருண்..

கிரி, நன்றி.. வீடியோ கிடைத்தால் அப்லோட் செய்ய முயல்கிறேன்..

snkm, உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் எதிர்பார்ப்புக்கும் நன்றி....அந்த காலம் விரைவில் கனியட்டும்..

//சிங்கக்குட்டி said...

இதுக்கு எல்லாம் முன் குறிப்பே அவசியமில்லை ஈ ரா.//

எடுத்துட்டேன் ஜி, //

//கல கல கலக்கல் கவிதை அருமையான படங்கள். //

நன்றி புலவரே,

நன்றி தியாவின் பேனா

நன்றி நன்றி

ராமலக்ஷ்மி said...

படத்தின் பெயர்களை அழகாகக் கையாண்டிருக்கிறீர்கள்! ரசித்தேன். வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் தலைவருக்கும்:)!

அன்புடன்-மணிகண்டன் said...

வாவ்... தலைவரின் குணநலன்கள் அவர் நடித்தப் பெயர்களோடு ஒத்துப்போவது மிகச்சிறப்பு..
கலக்கல் கவிதை...

மதுரைக்காரன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...

வாழ்க ரஜினி...

எப்பூடி ... said...

கலக்கலா இருக்கு, தலைவர் பற்றி சும்மா பிரிச்சு மேஞ்சிருகிங்க,உங்க முதல் கவிதையும் படிச்சிருக்கன்,ரெண்டில எது பெஸ்ட் என்றால் ரெண்டு கண்ணில எது பெஸ்ட் என்பது போல் தான்.உங்க ப்ரோக்ராம் முடிஞ்சா அப்லோட் பண்ணுங்க .வாழ்த்துக்கள்

சிங்கக்குட்டி said...

ஈ ரா, தலைவரை பற்றி உங்கள் அற்புதமான இடுகைகளை கவுரவிக்கும் வகையில், என் பதிவில் உங்கள் இடுகைகளுக்கு ஒரு இணைப்பு கொடுத்து, http://singakkutti.blogspot.com/2009/12/blog-post_12.html என் நன்றியை தெரிவிப்பதில், நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

பூங்குன்றன்.வே said...

சமீபத்தில் இவ்வளவு பெரிய கவிதையை வாசித்ததாக நினைவு இல்லை.நீங்கள் ரஜினியின் மீது வைத்திருக்கும் அன்பும்,மரியாதையும் தெரிகிறது.
வாழ்த்துக்கள்.

Shankar said...

ராம்ஸ்...சான்ஸே இல்லை...இவ்வளவு பெரிய கவிதையைப் பொறுமையுடன் படிக்க வைத்தது தலைவரா இல்லை உமது எழுத்தா...
அருமை...அருமை...நண்பா...வாழ்த்துக்கள். டிசம்பர் 12, 1995 -மறக்க முடியாத நாட்களில் ஒன்று!

BOSS said...

உன்
தலைமுடியில் வேண்டுமானால்
இடைவெளி சற்றே அதிகமாகி இருக்கலாம் !
ஆனால் உனக்கு
தலைமுறை இடைவெளி என்பது மட்டும்
கிடையவே கிடையாது !

no chance
super super super

RAMesh Kumar SS said...

அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ இறைநிலை உணர்வில் நின்று "ரஜினி வாழ்க வளமுடன்" என்று வாழ்த்துகின்றேன்.

தர்ஷன் said...

கவிதை கலக்கல்
தலைவருக்கு வாழ்த்துக்கள்

ஈ ரா said...

நன்றி ராமலக்ஷ்மி
நன்றி மணிகண்டன்
நன்றி மதுரைக்காரர்
நன்றி எப்பூடி
நன்றி சிங்கக்குட்டி
நன்றி பூங்குன்றன்
நன்றி ஷங்கர்
நன்றி பாஸ்
நன்றி ரமேஷ்
நன்றி தர்ஷன்
நன்றி சிங்கக்குட்டி

அன்புடன் மலிக்கா said...

அழகான ஆழமாக கவிதை.. வாழ்த்துக்கள்..

வானம்பாடிகள் said...

உங்கள் உழைப்புக்கு பாராட்டு ஈ.ரா. சொல்லாடல் அழகு.

சிங்கக்குட்டி said...

புதுவருட வாழ்த்துகளுடன் உங்களுக்கு என் சிறிய பரிசு :-)

http://singakkutti.blogspot.com/2009/12/blog-post_25.html

ஈ ரா said...

மிக்க நன்றி தோழரே.. மகிழ்ச்சி.. புத்தாண்டு வாழ்த்துக்கள்..

தாமதத்திற்கு மன்னிக்கவும்..

Post a Comment