Sunday, February 21, 2010

திடீர் தமிழ் ஆர்வலர்கள் & காரியம் சாதிக்கும் கொசுக்கள்


கவுண்டமணி சொல்வார் ‘மன்னன்’ படத்தில், இந்த தொழில் அதிபருங்க தொல்லை தாங்க முடியல என்று.. அதுபோலத்தான் இந்த திடீர் தமிழ் ஆர்வலர்கள் தொல்லையும்.. ஒரே நாளில் பேமஸ் ஆவது எப்படி என்று ரூம் போட்டு யோசித்தால், அதற்கு சினிமா ஹீரோவைப் பற்றி அவதூறாகப் பேசு என்று விடை கிடைக்கும்.. இன்டர்நேஷனல் அளவில் பெரிய ஆளாக வேண்டும் என்றால் கொஞ்சம் பெரிய ரூமாகப் போட்டு பத்திரிகைகாரர்களோடு சேர்ந்து யோசித்து ரஜினியைப் பற்றி அவதூறாகப் பேசு என்ற விடையும் கிடைக்கும்..இதுதான் இன்றைய நிலை..!

தமிழை வளர்ப்பதற்கான ஆக்கப் பூர்வமான செயல்களை தவிர அனைத்தையும் செய்வது தான் இந்த தமிழ் ஆர்வலர்கள் வேலை.

வீண் பரபரப்பை மனசாட்சியின்றி செய்தியாக்குபவர்களுக்கு - ஒரு விஷயத்தின் உண்மையை எழுத வேண்டும் என்று தோன்றவில்லையா? யார் யாருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.. செய்திகளை எப்படி செய்தியாக வெளியிட வேண்டும் என்று ஒரு அடிப்படை உணர்வு கூட இல்லாமல் தார்மீகத்தை எதற்கோ தர்மம் செய்து விட்டு பரபரப்புக்கு செய்திகளும் பேட்டிகளும் வெளியிட்டு சும்மா இருப்பவர்களை தூண்டி விடுவதுதான் பத்திரிகைகளின் லட்சியமா?

சில பேரைப் பற்றி எல்லாம் எழுதவேண்டும் என்று நினைத்தாலே…நமக்கு ..குமட்டுகிறது….! சாக்குவார் தங்கம் யார் என்றே நிறைய பேருக்குத் தெரியாது.. இவர் பெயரில் உள்ள ‘சாக்குவார்’ என்ற அர்த்தம் பொதிந்த தமிழ் வார்த்தையின் விளக்கத்தை தமிழ் கூறும் நல்லுலகும் தமிழ் ஆர்வலர்களும் தான் சொல்ல வேண்டும். நடக்கும் விஷயங்களைப் பார்த்தால் இந்த சண்டை நடிகர் இந்த முறை நிஜத்திலும் யாருக்கோ “டூப்” போட்டு தன் வேலையை ஆரம்பித்து இருக்கிறார் என்றே தோன்றுகிறது.

நேற்று கடைசியாக திரு. சாக்குவார் தங்கம் அவர்கள் இனி தமிழ் நாட்டில் வேறு மொழி நடிகர்கள் நடிக்கக் கூடாது என்றும் அப்படி நடித்தால் அந்த ஷூட்டிங்கில் முற்றுகை போராட்டம் செய்வோம் என்றும் சொல்லி இருக்கிறார்..

ஒருவேளை இப்படி கூட இனி பத்திரிகைகள் செய்தி வெளியிடலாம்… “சாக்குவார் தங்கத்தின் அறிவிப்பால் இனி என்ன செய்வது என்று அமிதாப் பச்சன், ஜாக்கி சான் போன்றவர்கள் கையைப் பிசைகிறார்களாம்! லண்டன் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருக்கும் தமிழர்கள் அய்யய்யோ இனி நாங்கள் எல்லா படங்களையும் பார்க்க முடியாதா என்று கதறுகிறார்களாம். !”

“இந்திக்குப் போன முருகதாஸ், பிரபுதேவா, அசின், திரிஷா எல்லோரும் சாகுவார் தங்கம் என்ன செய்வாரோ என்று, அலறுகிறார்களாம் . .. வெளி நாட்டில் சிம்பொனி இசைத்த இளையராஜாவும், தெரியாமல் ஆங்கிலப் படத்துக்கு இசை அமைத்து ஆஸ்கர் வேறு வாங்கிவிட்டேனே என்று ஏ ஆர் ரகுமானும் பயப்படுகிறார்களாம். இனி தெலுங்கு ரீமேக் பண்ண முடியாதா? என்று நடிகர் விஜயும் கவலையில் இருக்கிறாராம். ”

என்ன கொடுமை சார் இது ?

உண்மையிலேயே தொழிலாளர்கள் மீதும் தமிழர்கள் மீதும் மிகுந்த அக்கறை கொண்ட நடிகர்கள் ரஜினியும் அஜித்தும் என்பது சினிமா உலக நல்லவர்கள் எல்லோருக்கும் தெரியும். பித்தளைகளுக்கும், மேலுக்கு முலாம் பூசி மினுக்குபவர்களுக்கும் இதுதான் வயிற்றெரிச்சல். என்னடா செய்வது என்று பார்த்த போது வசமாகக் கிடைத்தது “கலைஞருக்கு நன்றி சொல்லிய விழா” விவகாரம். இந்த விழாவில் மட்டுமல்ல, இதற்க்கு முன் கலைஞர் இந்த திட்டத்தை அறிவித்த போதே கூட அதே மேடையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நிலம் கொடுக்க முன்வந்த போது திரையுலகினர் இடம் சரியில்லை என்றதால் கிடைக்காமல் போனதையும், அதனால் இம்முறை விட்டு விடக் கூடாது என்று அறிவுறுத்தினார் ரஜினி. கலைஞரை மேடையில் வைத்துக் கொண்டே நடிகர் திலகம் சிலை திறப்பு விழாவில், நடிகர் விஜயகாந்த் தேர்தலில் வெற்றி பெற்றதற்குப் பாராட்டினார். இந்த முறையும் இலவசத் திட்டங்கள் ஏராளம் அறிவித்துள்ள முதல்வர் முன்னிலையிலேயே “ஓசியில் கிடைக்கிறது என்று யாரும் எதற்கும் அலையாதீர்கள்! “வசதியுள்ளவர்கள் கை நீட்டாதீர்கள்! விலகி உண்மையில் நலிந்தவர்களுக்கு வழி விடுங்கள் ! அதுதான் நியாயம்” என்று நேரிடையாக சொல்லி விட்டார். இதுதான் ஓசியில் வீடு வாங்கவும், இதில் வேறு ஏதாவது திட்டம் போட்டு சுருட்டலாம் என்று நினைத்தவர்களுக்கும் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கும் என்று தோன்றுகிறது.

நடிகர் அஜித் நடிகர்களின் நிலையை அங்கே போட்டு உடைத்தார் என்றால், நடிகர் ரஜினிகாந்த் சந்தேகமில்லாமல் ஒட்டு மொத்த தொழிலாளர்களின் சந்தேகத்தையும் குமுறலையும் போட்டு உடைத்தார். நியாயமாக தொழிலாளர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கூற வேண்டிய விஷயத்தை, கடைசி வரையில் யாரும் பேசாததால் நடிகர் ரஜினி மட்டும் உண்மையான அக்கறையோடு அன்றைக்கு அவர்களுக்காக குரல் கொடுத்தார். தொழிலாளர்களுக்கு ரஜினியின் பேச்சில் உள்ள நியாயம் தெரியும். அவர்களும் அதைத்தான் எதிர்பார்த்தார்கள்.

வெறும் பேச்சில் மட்டும் அல்லாமல் ஏற்கனவே பல முறை தொழிலாளர்களுக்கு லட்சக்கணக்கில் செலவு செய்து வருபவர் ரஜினி. கடைசியாக குசேலன் படம் வந்த போது எத்தனையோ பிரச்சினைகள், நஷ்டம் என்றெல்லாம் வந்தபோது கூட, தன் பணத்தில் இருந்து படத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு ஒரு சிறு விழாவில், ஒரு பெரும் தொகையை (இருபது லட்சம்) உதவியாக அளித்தார். இனி வரும் படங்களிலும் தருவதாக உறுதியளித்தார். இது போன்ற விஷயங்களில் இருந்தே யாருக்கு தொழிலாளர்கள் மேல் உண்மையான அக்கறை என்று தெரியும்.

ரஜினி அவர்கள் பத்திரிகைகளுக்கு காசு தருவதோ, படம் வரும்போது வீண் செலவு செய்வதோ கிடையாது. ஆனால் அவர் நின்றால் செய்தி, நடந்தால் செய்தி என்று போட்டு காசு பார்ப்பவர்கள் பல பத்திரிகைகள்.. இதில் முத்தாய்ப்பான சிலர்தான் நன்றி மறந்து இது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டு பிரச்சினைகளை தூண்டி விட்டு ஆதாயம் தேடுகிறார்கள்.

நம்மை உறுத்தும் மற்றொரு விஷயம்…ரஜினிக்கு கண்டனம் என்று கூறியிருக்கும் அறிக்கையில் நடிகர் சங்கம் கையெழுத்திட்டு இருப்பதுதான். .. குகநாதனுக்கு கண்டனம் என்று சொல்லி பெப்ஸி அமைப்பினர் கையெழுத்து போடுவார்களா? சேகரனுக்கு கண்டனம் என்று சொல்லி விநியோகஸ்தர் சங்கத்தினர் கையெழுத்து போடுவார்களா? சாக்குவார் தங்கத்துக்கு கண்டனம் என்று சொல்லி ஸ்டன்ட் நடிகர்கள் போடுவார்களா?

இவர்கள் ரஜினியை மட்டும் அவமானப்படுத்தவில்லை..! அவரைத் தொடர்ந்து கைத்தட்டிய ஆயிரக்கணக்கான மக்களையும் தொழிலாளர்களையும் மற்ற நடிகர்களையும் அவமானப் படுத்தி இருக்கிறார்கள்..

ஆக இந்த முறையும் நடிகர் ரஜினிக்கு ஆதரவாக நடிகர் சங்கம் எதுவும் பேசவில்லை…! ரஜினியை வைத்து லட்சங்களை வாரிய சங்கங்களும் பேசவில்லை..!



அடுத்து ஒரு மொக்கைபாய் என்று படம் எடுத்து ரஜினியிடமும் கமலிடமும் போய் தலையை சொறிவார்கள்! பத்திரிகையில் போட்டோ வந்து விட்டது நீங்க வந்து கோவப்பட்டாதான் எங்க கோவம் தெரியும்..தயவு செஞ்சு வந்து கோவப்படுங்க என்பார்கள். ! கமல் கம்மென்று போய் விடுவார். ரஜினியோ வந்து பேசி விட்டுப் போவார். இதுதான் நடக்கும்.. ஏன் என்றால் அந்த மனிதன் மன்னிக்கவே பிறந்த மன்னன்.. இதைத்தான் அவர் கடந்து வந்த பாதை காட்டுகிறது. ஆனால் அவர் ரசிகர்கள் அவர் அளவிற்கு பக்குவம் அடைய இன்னும் பல காலம் பிடிக்கும். அது வரை இது போன்று சலசலப்புக்கள் எழும்! கட்டுரைகளும் எழும்..!

தலைவா, ஈ யை அடிக்க இரும்பு வேண்டாம்.. ஆனால் தேவைப்படும்போது உறிஞ்ச வந்துவிட்டு காரியம் முடிந்ததும் காணாமல் போகும் கொசுக்களிடம் இருந்து தப்பிக்க இனியாவது நீங்கள் ஒரு வலையை வைத்துக் கொள்ள வேண்டும்.. ஏனென்றால் ஒவ்வொரு முறையும் அவர்கள் உம் ரத்தத்தை உறிஞ்சும்போது எங்களுக்கு வலிக்கிறது……

அன்புடன்
ஈ.ரா.

நன்றி திரு.சுந்தர்,
ஒன்லி சூப்பர் ஸ்டார்.காம்

...............

6 comments:

R.Gopi said...

ஜி

இந்த ஈனப்பிறவிகளை நினைத்து மனது கொதிக்கிறது...

அமைதியாய் ரஜினி இருக்கிறார் என்பதாலேயே இவர்களின் கொட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது...

அவரை அழை... வந்தால், மேடையில் வைத்து கன்னடக்காரன் என்று ரவுண்டு கட்டுவோம்... வரவில்லை என்றால் ”தமிழின துரோகி” என்று வேறு முறையில் கட்டம் கட்டுவோம் என்று எவ்வளவு பேர் கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறார்கள்...

இவ்வளவு வயத்தெரிச்சல் ஆகுமா என்று எனக்கு தெரியவில்லை... ஆயினும், சமீபத்திய நிகழ்வில் தெருப்பொறுக்கிகளை போன்ற கேவலமான குணமுடைய “டங்குவார் பித்தளை”, “வி.சி.டகால்டி நாதன்” போன்றவர்கள் தலைவரை தூற்றும்போது தான் மனதிற்கு நிரம்ப கஷ்டமாக இருக்கிறது...

அவரே அமைதியாக இருக்கிறாரே என்று நம்மால் அமைதியாக இருக்க முடியவில்லை...

ஆயினும், இதை போன்ற பல சோதனைகளை அனாயாசமாக தாண்டியவர் ரஜினி என்பதால், நாமும் நல்லதே நடக்கும் என்று கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம்...

Anonymous said...

nice

S Maharajan said...

தலைவா, ஈ யை அடிக்க இரும்பு வேண்டாம்.. ஆனால் தேவைப்படும்போது உறிஞ்ச வந்துவிட்டு காரியம் முடிந்ததும் காணாமல் போகும் கொசுக்களிடம் இருந்து தப்பிக்க இனியாவது நீங்கள் ஒரு வலையை வைத்துக் கொள்ள வேண்டும்.. ஏனென்றால் ஒவ்வொரு முறையும் அவர்கள் உம் ரத்தத்தை உறிஞ்சும்போது எங்களுக்கு வலிக்கிறது……

உண்மை தான் எண்ண செய்வது ஈ.ரா மன்னிக்கவே பிறந்த மனிதனுக்கு வெறியனாக இருக்கிறோமே..

அ.ஜீவதர்ஷன் said...

உண்மையான உள்ளக்குமுறல், உள்ளம் இன்னும் கொதித்துக்கொண்டுதான் இருக்கிறது, ஆனால் தலைவனின் முகத்தை நினைத்தால் கொதிப்பு அடங்கி அமைதி பிறக்கிறது, இது என்ன மாயம்?

M Arunachalam said...

Fantastic writing Ee.Raa. You have reflected the feelings of every true Rajini fan.

Pl keep writing often.

Arun

கிரி said...

ஈரா பக்காவா எழுதி இருக்கீங்க! வாழ்த்துக்கள் :-)

//நீங்க வந்து கோவப்பட்டாதான் எங்க கோவம் தெரியும்..தயவு செஞ்சு வந்து கோவப்படுங்க என்பார்கள்.//

:-)

Post a Comment