Wednesday, July 7, 2010

என் அபிக்கு ஒரு தாலாட்டு


உன் பாதங்களின்
சுத்தச் சிவப்பால் நாணிய
காலைச்சூரியன் - உன்னை
மேகங்களூடே
ஒளிந்து பார்க்கிறான் !

தன்னைக்காட்டி
உனக்கு அமுதூட்டும் நாள்
விரைவில் வர ஏங்கி தன்னை
அழகுபடுத்திக்கொண்டு
வீட்டு மாடத்தில்
பவுர்ணமிச் சந்திரன்
தவமாய்க் கிடக்கிறான் !

உன் பொக்கை வாயில்
பற்கள் முளைக்கும் வரைதான்
தங்கள் பந்தா என்று
விண்மீன்கள் எல்லாம்
இப்பொழுதே
மின்னிக்கொள்கின்றன !


உனக்கு கதகதப்பாய்
இருக்கவேண்டும் என்பதற்காகவே
தென்மேற்குக் காற்று மேலெழும்பி
லேசாய் கதிரவனைத்
தொட்டுத் திரும்புகிறது...!

உனக்கு அடைமழை பிடிக்காது என்பதால்
முகில்கள் எல்லாம் சல்லடையாகி
வானத்து நீரை மெலிதாய்
வடிகட்டி
இளம்சாரலாய்த் தருகின்றன !

நீ தூக்கத்தில் சிரிக்கையில்
கண்ணன் பூ காட்டுவதாக
பாட்டி சொன்னாள்! -
எனக்கென்னவோ
பதியனில் இருக்கும்
அரும்புகள் எல்லாம்
உன்னைப் பார்த்து
சிரிக்கவே மலர்வது போல்
தோன்றுகிறது..!

நீ சேட்டை செய்கையில்
அத்தை அல்லிப்பூ செண்டாலோ
மாமன் மல்லிப்பூ செண்டாலோ
அடிப்பதில்லை..
ஏனென்றால்
இவள் எங்கள் கூட்டம்
என்று
அல்லிகளும் மல்லிகளும்
குழைந்து நிற்கின்றன !

நீ சிணுங்கும் நேரம்
சில்வண்டுகள் தம்
ரீங்காரத்தை
நிறுத்துகின்றன..!

நீ செல்லமாய்
அடம்பிடிக்கையில்
பறவைகள்
சிறகடிக்காமல்
பதைபதைக்கின்றன !

என் பிரியமானவளே!

இவர்கள் பாவம்..
தம் வேலையைப் பார்க்கட்டும் -
நீ சமர்த்தாய்க்
கண்ணுறங்கு...!
கண்ணுறங்கு !



ஈ. ரா

(இறைவன் அருளால் 19-06-2010 அன்று எனக்கு பெண் குழ்ந்தை பிறந்துள்ளது..தாயும் சேயும் நலம்.. )

(படம் இணையத்திலிருந்து )

9 comments:

கிரி said...

ம்ம் நடத்துங்க! :-)

snkm said...

அருமை! தொடரட்டும் கவிதைகள், கட்டுரைகள்!

kppradeep said...

Many congratulations. Wait for three months and you will enjoy it even more.

ஈ ரா said...

thanks giri, snkm and pradeep ji

அபி அப்பா said...

வாழ்த்துக்கள் அன்பு அபிசெல்லத்துக்கு. ஆக வலையுலகில் இன்னும் ஒரு அபிஅப்பா:-)

ஈ ரா said...

நன்றி பாலா சார்

Raja said...

அபி யால் எங்களுக்கு ஒரு சூப்பர் கவிதை. ஈ.ரா வாழத்துக்கள்.

ஈ ரா said...

நன்றி ராஜா

cheena (சீனா) said...

அன்பின் ஈ.ரா - இம்மாதம் பிறந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாட இருக்கும் செல்லக்குட்டி அபிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - தாலாட்டு சூப்பர் ஈ.ரா. அல்லியும் மல்லியும் வேலை நிறுத்தம் செய்வதோடு மட்டுமல்ல எதிரியின் பக்கம் சாய்கின்றன - நல்ல கற்பனை வளம். நல்வாழ்த்துகள் ஈ.ரா - நட்புடன் சீனா

Post a Comment