Monday, August 10, 2009
ஆடி அட்டகாசம்
ஒவ்வோராண்டும் ஆடி மாதம் வந்தால் போதும், அம்மன் பெயரால் வசூல் வேட்டையும் காதைப் பிளக்கும் ஒலிபெருக்கிகளும் மக்களை அச்சத்துக்குள்ளாக்குகின்றன. தேர்வுக்குப் படிக்கும் மாணவர்கள், வயதானவர்கள், நோயாளிகள் ஆகியோரைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் அதிகாலை முதல் இரவு வரை தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் பாடல்களை ஒலிபரப்பி மக்களைத் தொடர்ந்து அவதிக்குள்ளாக்குகிறார்கள்.
புனல் ஒலிபெருக்கி தடை செய்யப்பட்டு இருந்தும், ஒலியின் அளவு குறித்த வரைமுறைகள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் அறிவிக்கப்பட்டிருந்தும் இதைப் பற்றி யாரும் சட்டை செய்வதில்லை. தொடர்ந்து மூன்று நான்கு நாட்கள் இடைவெளியின்றி பாடல்களைப் போட்டு விட்டு, அது போதாதென்று நள்ளிரவு வரை சினிமா இசைக்கச்சேரிகளையும் நடத்தி அதையும் தவறாது ஒலிபரப்புகிறார்கள். கலை நிகழ்ச்சி என்ற பெயரில் சில இடங்களில் குருவி குடைந்த கொய்யாப் பழம் போன்ற ஆபாச நடனங்களும் இந்த திருவிழாவில் அடக்கம்..
ஒவ்வோர் ஊரிலும் பெரிய மனிதர்களே கோயில் விஷங்களில் நேரடியாக ஈடுபடுவதாலும், திடீர் பக்தி முரட்டு இளைஞர்களால் கோயில்கள் சூழப்படுவதாலும் யாரும் இந்த அவலத்தை எதிர்ப்பதில்லை; மனதிற்குள் புழுங்கி வெளியே சிரிக்கிறார்கள்.
இன்றைய பாடலாசிரியர்களும், கேசட் வெளியீட்டாளர்களும், பாடகர்களும் கைக்கு வந்தவற்றை எல்லாம் எழுதி வாய்க்கு வந்தவற்றைப் பாடி பேரிரைச்சல் கொண்ட இசைக்கருவிகளைப் பயன்படுத்தி கடவுளையும் பக்தியையும் கொச்சைப் படுத்தி காசு பார்க்கிறார்கள்.
சில இடங்களில் ஒரே பகுதியில் இரண்டு மூன்று கோயில்கள் இருந்தால் அப்பகுதிவாசிகள் தொலைந்தார்கள் என்றே கொள்ளலாம். ஒவ்வொரு வாரமும் ஒரு கோயில்காரர்கள் ஒலிபெருக்கி மூலம் தங்கள் கடமையைக் கண்ணும்கருத்துமாகச் செய்து மக்களைத் துன்புறுத்துவதை தடையின்றி நடத்துகிறார்கள். கோயில்கள் மட்டுமன்றி கிறிஸ்தவ ஆலயங்களும் மசூதிகளும் கூட இந்த போட்டியில் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று மல்லுகட்டுகிறார்கள்...
மற்ற விஷயங்களுக்கு எல்லாம் பேருக்காகவாவது ஏதாவது நடவடிக்கை எடுக்கும் அரசாங்கமும் காவல் துறையும், அரசியல் கட்சிகளும் இது குறித்து தெரிந்திருந்தும் ஏதும் செய்வதில்லை; ஏனெனில் தேர்தல் காலங்களில் அவர்களும் இதைத்தானே செய்கிறார்கள்.
உச்ச பட்ச இரைச்சலே இங்கு இசையாகிறது; உண்மையிலேயே அம்மனை நெஞ்சாரத் தொழுது கூழ் வார்க்கும் பக்தர்கள் கூட இந்த இரைச்சலுக்குத் தங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டு சகித்துக் கொள்ள தயாராகி விட்டார்கள்.. பூனைக்கு மணி கட்ட யாரும் இல்லாததால் தவறு என்று தெரிந்திருந்தும் இந்நிகழ்வு தடையின்றி தொடர்கிறது..
(பி. கு. நான் முன்பு இருந்த ஏரியாவில் இதே பிரச்சினைகளுக்காக விழாக்குழுவினரிடம் (????) மல்லுக்கட்டி, கெஞ்சி - மிஞ்சி கொஞ்சம் சவுண்டை குறைத்துக் கொள்ளுமாறு செய்தேன்...இப்போ இருக்கும் பகுதியில் சமீப காலம் வரை புது கோயில் எதுவும் உருவாகவில்லை; விரைவில் யாராவது புண்ணியவான் ஆட்டையைப் போடுவான் என்று நினைக்கிறேன்)
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
hai e.vey.ra
please go back your olden days when your in vinayakar temple devottee that time you also done like this dam things... than vinai thannai sudum.
ராம்ஸ் அவர்களே,
காது கிழியும் போட்டோ மிகவும் அருமை.
நீங்கள் எழுதிய பதிவு இன்றைய சமூகத்திற்கு மிகவும் தேவையான ஒன்று. ஆனால், அது நீங்கள் கூறியுள்ள காரணங்களாலேயே (காது ஜவ்வு கிழியும் அளவுக்கு சத்தம்) "செவிடன் காதில் ஊதிய சங்காக" ஆகி விடுவதற்கும் வாய்ப்பு உண்டு.
எனினும், ஒரு நல்ல பதிவை தைரியமாக எழுதிய உமக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.
அன்புடன் அருண்
வருகைக்கு நன்றி ராஜேந்திரன்.....
பின் குறிப்பை படித்தீர்களா என்று தெரியவில்லை.....
(பி. கு. நான் முன்பு இருந்த ஏரியாவில் இதே பிரச்சினைகளுக்காக விழாக்குழுவினரிடம் (????) மல்லுக்கட்டி, கெஞ்சி - மிஞ்சி கொஞ்சம் சவுண்டை குறைத்துக் கொள்ளுமாறு செய்தேன்...
தொடர்ந்து இரண்டு வருடங்கள் அவர்களிடம் கெஞ்சியதால், குடியிருப்பு பகுதிகளில் ஒலிபெருக்கிகள் வைக்கப்படாமல் கோயிலை ஒட்டியே மெயின் ரோட்டில் மட்டும் வைக்கப்பட்டது... நான் தொடர்ந்து ஒளியை குறைக்குமாறு வற்புறுத்துவேன் என்பதை சவுண்ட் சர்விஸ் - கற்பகம் அண்ட் கோ வைக் கேட்டால் சொல்வார்கள்... (சுமார் 30 ஆண்டுகள் பழைமை பெற்ற அந்த கோயிலே தற்போது தூக்கப்பட்டது வேறு விஷயம்)
தங்கள் கருத்துக்கு நன்றி.. தொடர் வருகையை வரவேற்கிறேன்....
நல்ல ஆழமான கருத்துக்கள். இது மாதிரி விஷயங்களை நம்ம குறைச்சுகிட்டு அந்த காசுக்கு ஏழைகளுக்கு உதவலாமே.
அதுவும் உங்க ஏரியா பற்றி சொல்லவே வேண்டியதில்லை ;-)
வணக்கம் கிரி, சிங்கம் குகைக்கு வந்துடுச்சா? (அன்னிக்கு மழையில மாட்டிக் கொண்டேன் மேலும் திடீரென அவசர வேலை வந்து விட்டது... தங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை..)
Post a Comment