Tuesday, February 23, 2010

"நெல் ஆடிய நிலமெங்கேவும் என் காவிரிக்கரை கண்ணீரிலும் "

சில நாட்களுக்கு முன் நண்பர் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்து விட்டுப் பின் அப்படத்தின் "நெல் ஆடிய நிலமெங்கே ? பாடலைக் குறுந்தகட்டில் விரும்பி கேட்ட போது, அப்பாடலின் சில வரிகள் என் நெஞ்சை தொட்டது..

அவை கிட்டத்தட்ட நான் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன் "இளைஞர்களின் புனித பூமி" தேசிய இலக்கிய கருத்தியல் மாத இதழில் எழுதிய "காவிரிக்கரை கண்ணீரில்" கவிதையை நினைவுபடுத்தியது..

நான், 2004 ஆம் ஆண்டில் நிலவிய கடும் பஞ்சத்தின் போது காவிரி விவசாயிகள் கண்ணீர் விட்டழுவது போல் அக்கவிதையை அமைத்திருந்தேன்.. இப்படத்தில் அதே கருத்து சோழரின் வேதனையை (கதைப்படி) வெளிப்படுத்துவதாகவும் அமைந்தது ஒரே சிந்தனையின் வெளிப்பாடான விந்தை என்று நினைக்கிறேன்.

நல்ல காலமாய் மாரிக் கடவுள் நம் மண்ணின் பக்கம் சில ஆண்டுகளாய் அன்பைப் பொழிவதால் இது போன்ற கவிதைகள் எழுத வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்படாததற்கு கடவுளுக்கும் காவிரித் தாய்க்கும் நன்றி செலுத்துகிறேன்..

உங்கள் ஒப்புமைக்கு இங்கே அக்கவிதையை வெளியிடுகிறேன்.
__________________________________________________________


கானல் நீராய்
காவிரி நீர் ......
என்று வருமென்று
ஏங்கும் விவசாயி !

பூமி வெடிப்புக்களின்
பூதாகாரச் சிரிப்பு
தொண்டைத் துக்கத்தை
விழுங்கி விட்டது !

மனதுக்குள்
குமுறும் எரிமலை !
விழியிரண்டில்
கண்ணீர்த் திவலை !

மூன்று போகம்
விளைந்த மண்
இன்றோ..
மூக்கறுந்த
மூளியாய் !

வியர்வைத்துளிகள்
விழுந்த நிலத்தில்
கண்ணீர்த் துளிகள்
காலம் காலமாய் ...

நொய்க் கஞ்சியும்
நோய் நொடியுமே
ஆதார ஜீவன்களின்
ஆசைத் தோழர்கள் !

தீயிட்டு வளர்த்த
தலைவர்கள் பின்னே
திக்குத் தெரியாமல்
திணறும் உழவன்....

யானை கட்டி
போரடித்த மண்ணில்
பூனையின் உணவுக்கும்
போட்டா போட்டி !

வானம் வெறித்து
வெளியே தெறிக்கும்
விழிகள்...

பஞ்சால் அல்ல
பஞ்சத்தால் அடைபட்ட
செவிகள் !

கதிர் வாசனை
மறந்ததால்
மற்றதை நுகர
மனமில்லா நாசி...

உக்கிர வெயிலால்
உணர்ச்சியற்று
மரத்த உடம்பு ..

ஆம்
பசி மயக்கம் என்னும்
இலவச ஆசானிடம்
புலனடக்கம்
கற்றுக் கொண்டோம் !

கைரேகையை விட
கணிசமாய்க்
கவலை ரேகைகள்
எங்கள் முகத்தில் !

அரை சாண் அளவீடே
அதிகமென்று
அடங்கிப் போன
உதரம்..

ஒட்டிய கன்னம்
ஒடிந்த தேகம் ..
இவைதான் எம்
அடையாளம்
இது யாருக்கு
அவமானம் ?

பொன்னைத் திருடிய
காலம் போய்
மண்ணைத் திருடும்
மனிதப் பேய்கள் !

வறண்ட பூமியை
வாழ வைக்காத
வறட்டுத்தனமான
பிடிவாத பூதங்கள்..

பிரச்சினைகளைப்
பெரிதாக்கும்
படித்த பிசாசுகள்...

அணை நிரம்பும்
ஆபத்தில் மட்டுமே
அன்பு காட்டும்
அண்டை சகோதரன்....

பாமரனைச் சுற்றி
பயங்கரக் கூட்டம்!
ஆடம்பரப் போராட்டங்கள் ..
அர்த்தமற்ற விவாதங்கள்....
அடையாளம் தொலைந்த
அரசியல்வாதிகள்....

எங்கெங்கு காணினும்
சக்தியடா...
ஏர் பிடிக்க எமக்கில்லை
சக்தியடா...

அரசாங்கங்களே..
இனியாவது
விருப்ப ஓய்வுத் திட்டங்களை
உம் ஊழியர்களோடு
நிறுத்துங்கள்...
விருப்பமில்லா ஓய்வினை
விவசாயி மீது
திணிக்காதீர்கள்..

தலைவர்களே..
உங்கள்
சொத்துக்களின் ஒரு துளி
எமக்குத் தாருங்கள்
சோத்தையாவது
கண்ணில் காண்கிறோம்;

கட்சிகளே..
உங்கள்
வீணாய்ப் போன
கொடிகளைத் தாருங்கள்
கோவணமாக்கி
மானம் காக்கிறோம்....!



7 comments:

ராஜ நடராஜன் said...

அழகான கவிதை!வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

நல்ல கவிதை.

//நல்ல காலமாய் மாரிக் கடவுள் நம் மண்ணின் பக்கம் சில ஆண்டுகளாய் அன்பைப் பொழிவதால் இது போன்ற கவிதைகள் எழுத வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்படாததற்கு கடவுளுக்கும் காவிரித் தாய்க்கும் நன்றி செலுத்துகிறேன்..//

உங்கள் கவிதை கேட்டுவிட்டிருக்கிறது கடவுளுக்கும் காவேரி அன்னைக்கும். இந்நிலை தொடரப் பிரார்த்திப்போம்.

Radhakrishnan said...

மிகவும் அழகிய கவிதை.

அண்ணாமலையான் said...

வாழ்த்துக்கள்...

ஈ ரா said...

நன்றி ராஜ ராஜன்
நன்றி ராமலக்ஷ்மி
நன்றி ராதாக்ருஷ்ணன்
நன்றி அண்ணாமலையான்.

மதுரை சரவணன் said...

வாழ்த்துக்கள். நல்லக் கவிதைகள் காலத்தால் நிலைத்து நிற்கும்.

அன்புடன் நான் said...

கவிதை அழகு.... வாழ்த்துக்கள்.

Post a Comment