Sunday, February 22, 2009

உயிரே உன் விலை என்ன?

உயிரே உன் விலை என்ன?

ஆயிற்று, நேற்றோடு ஏழாவது சுய உயிர் வதை. நான்கு பெண் பிள்ளைகளை பெற்ற ஒருவர், மனித சங்கிலி போராட்டத்தில் தன் உயிர் சங்கிலியை துண்டித்துக் கொண்டார்.

முத்துகுமார் என்னும் இளைஞர் முதலில் துவங்கி வைக்க இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இதற்கு முடிவு இருக்கிறதா என்ற அச்சம் தோன்றுகிறது.
அங்கே இலங்கையில் வேறு வழியே இல்லாத நிலையில் யுத்த களத்திலும், குண்டு மழையிலும் இழக்கின்ற உயிர்களாவது கதியே இல்லை என்ற நிலையிலும் அவர்களுக்கு ஜனநாயக ரீதியில் தலைவர்களை தண்டிக்க வழியே இல்லை என்ற நிலையிலும் ஏற்பட்டது.

ஆனால் இங்கோ, அரசியல் தலைவர்களின் தூண்டுதல்களாலும், ஊடகங்களின் அதீத பிரச்சாரத்தாலும், சுய இரக்கம் மேலிட தன்னம்பிக்கையும், எதிர்காலம் மாறும் என்ற நம்பிக்கையும் இல்லாத தன்மையில் உயிரை இழக்கிறார்கள். இவர்களை யார் இவ்வாறு தவறான பாதையில் வழிநடத்துவது? ஒட்டு மொத்த அரசியல்வாதிகளும் பத்திரிக்கை ஊடகங்களும் மற்றும் விஞ்ஞான வலைத்தளங்களும்தான்.

நண்பர்களே எல்லோருக்கும் தான் உணர்வு இருக்கிறது. உயிரை மாய்துத்தான் உணர்வை வெளிக்காட்ட முடியுமா என்ன? அப்படி நீங்கள் இறப்பதால் தலைவர்களும் மற்றவர்களும் மாறிவிடப் போகிறார்கள் என்று நீங்கள் நினைத்து இருந்தால் கண்டிப்பாக உங்கள் ஆத்மாவை இங்குள்ள அரசியல் வாதிகளும், இதை வைத்து பிழைப்பு நடத்துபவர்களும் சாந்தி அடைய விட மாட்டார்கள்.

இத்தனை ஆண்டுகாலம் இந்தியாவில் இருந்து, இங்கே தமிழ், தமிழ் என்று முழங்கும் அரசியல்வாதிகளைப் பற்றி நன்கு அறிந்து இருந்தும் நீங்கள் உங்கள் உயிரை மாய்த்துக் கொள்வது, உங்கள் மீது கோபம் கொள்ள வைக்கிறது.

அரசியல் தலைவர்களுக்கு என்ன, எங்கும் பற்றி எறிய ஆவேசமாக உரை நிகழ்த்தி விட்டு, அடுத்த நிகழ்ச்சிக்குப் போய் வீரம் காட்ட முடியும்.. எழுத்தாளர்களுக்கோ இன்றைய சூழ்நிலையில் உணர்ச்சியை தூண்டி எழுதி இந்த பிரச்சினை முடிந்ததும் நவரசத்தில் வேறொரு சுவையில் தங்கள் படைப்புக்களை கொடுக்க முடியும்.

ஆனால் உன்னை நம்பிய உன் குடும்பத்திற்கும், உன்னை படிக்க வைத்த பள்ளிக்கும், உனக்காக இந்த தேசம் கொடுத்த இயற்கை வளத்திற்கும், இதையெல்லாம் மீறி, உன் ஆட்சியாளனை நீ விரும்பினால் மாற்றலாம் என்று உனக்கு வழங்கப்பட்ட ஜனநாயகத்திற்கும் நீ என்ன கைம்மாறு செய்ய முடியும்?

எப்பொழுது நீ உயிரையே துச்சம் என நினைத்து விட்டாயோ, அப்பொழுதே நீ எதையும் சாதிக்கும் வலிமையை பெறுகிறாய். இந்த நெஞ்சுரத்துடன் நீ நினைத்தால் இந்த சமுதாயத்தில் நேர்மையாக எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் . உயிர் பயமும், குடும்ப சூழலும் மட்டுமே இங்கே பல பேருக்கு கைவிலங்குகள். அதையே நீ வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டால் பிறகு ஏன் கோழையைப் போல் இறக்க நினைக்கிறாய்?

இப்படி இறந்தவர்களை, மாவீரன் என்று சிலகாலம் கொண்டாடுவார்கள். உன் போல் இன்னும் சில பேர் இறந்தால் நீ மறக்கப்படுவாய். மிஞ்சி மிஞ்சி போனால் கேவலம் சில லட்சங்களும், நீ இறந்து சில ஆண்டுகளுக்கு உனக்கு அஞ்சலியும் கிடைக்கும். அதன் பிறகு வேறொரு பிரச்சினை வரும், இதே போல மீண்டும் தூபம் போடப்படும்... வேறு சில அப்பாவிகளுக்கு தீபம் ஏற்றப்படும். இந்த இழி நிலை தேவையா? உன் உயிர் அவ்வளவு இளப்பமா?

அரசியல்வாதிகளே, தமிழகத்தை ஸ்தம்பிக்க வைப்போம் என்றீர்கள், வைத்து விட்டீர்கள். இன்னுயிரை இழக்கத் தயாராகுங்கள் என்றீர்கள், அதை நம்பி சில பேர் இழந்தும் விட்டார்கள்... இன்னும் என்னதான் உங்கள் ஆசை?

உங்கள் கையில் ஆட்சி, அதிகாரம், பணம் எல்லாம் இருக்கிறது, உங்களாலேயே இதை தீர்க்க முடியவில்லை என்றால் சாதாரண மக்கள் நாங்கள் என்ன செய்வோம்? எங்களுக்கு விழிப்புணர்வு இருக்கிறது.. நிறையவே இருக்கிறது.. நீங்கள் மேடை போட்டு, தூண்டி எழுதி, அறிக்கை விட்டு எங்களை உசுப்ப வேண்டாம்.

நீங்கள் உண்மையிலேயே பிறந்ததற்கு வெட்கப்படாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால், ஒவ்வொரு கட்சியும் ஒரே நிலையை எடுங்கள். அரசியல் நிர்பந்தங்களுக்காக உங்கள் நிலையை மாற்றிக் கொண்டு நீங்கள் எல்லாவற்றையும் அனுபவித்துக் கொண்டு மக்களை பலிகடா ஆக்காதீர்கள்.

நண்பர்களே உங்களுக்கு வாக்குசீட்டு என்னும் ஓர் ஆயுதம் கொடுத்து இருக்கிறார்கள் - உங்கள் முன்னே ஓர் களமும் இருக்கிறது, அதுவும் விரைவில். அதுவரை காத்து இருங்கள். அதற்கும் முன் கேவலமான ஆயுதமான மண்ணெண்ணையும் பெட்ரோலையும் எடுக்காதீர்கள்.

இவர்களின் வெற்றுகூச்சல்களுக்கு செவிமடுக்காதீர்கள். உண்மையான அன்புடன், இறைவனிடம் அமைதிக்காக பிரார்த்தியுங்கள். உங்கள் உணர்வுகளை பிறரை நேசிக்கும் உதவியால் வெளிப்படுத்துங்கள்.

உலகம் பெரியது. கண் செவி கை கால் மனம் இழந்த எத்தனையோ மனிதர்கள், ஈழத்தில் மட்டும் அல்ல இங்கேயும் இருக்கிறார்கள், உங்கள் உயிர் வேண்டாம் எனில் அதை அவர்களுக்காக முழுவதும் வாழ்ந்து அர்ப்பணியுங்கள்....

ஜெய் ஹிந்த்.

ஈ ரா

No comments:

Post a Comment