Monday, August 10, 2009

சும்மாவா கிடைத்தது சுதந்திரம் ? (பகுதி 1)














அன்றொரு நாள் !

திருப்பூரிலே ஒருவன் ! - அகவை
இருபத்தெட்டே ஆன இளைஞன் !
தந்தை இறந்து சில நாட்களே ஆன சோகம் !
கைக்குழந்தையுடன் இளம் மனைவி !

அந்த வாலிபனுக்குச்
செய்தியொன்று வருகிறது!

தோழா நமது தேசத்திற்கு
நாசம் விளைவிக்கும்
மோசக்கார வெள்ளையர்களை
விரட்டியடிக்க கொடிப் போராட்டம் என்று !

அந்த இளைஞன் சிறிதும்
அஞ்சவில்லை !
வரமாட்டேன் என்று
கெஞ்சவில்லை !

சட்ட மறுப்பைக் காட்டிடச்
சட்டெனப் புறப்பட்டான் !
மனைவியைப் பார்க்கவில்லை !
மக்களையும் பார்க்கவில்லை !

"எங்கே நண்பர்கள்?
வாருங்கள் செல்வோம் ! - வஞ்சக
வெள்ளையனை வெல்வோம் ! "
என்று கூறி
தேசத்தின் சின்னமாம்
தேசியக் கொடியைத்
தோளிலே ஏந்திக் கொண்டு
தெருவிலே நடக்கின்றான் !

திரும்பிப் பார்த்தால்
அவன் பின்னே ஆயிரம் பேர்!
அத்தனை பேரும் தம்
கையிலே கொடிக்கம்புகளுடன் !

அவரவர் தோளிலே
கொடியினை ஏந்தி
அந்த வீரன் தலைமையிலே
கூடுகிறார்கள் ! -
கோபத்துடன் கூவுகிறார்கள் !

"ஒண்ட வந்தவனே
ஓடிப்போ !
ஓடிப்போ ! ஓடிப்போ ! ! "

"விடுதலை செய் விடுலை செய் !
காந்தியாரை விடுதலை செய் ! "

"பாரத தேசம் எங்களுக்கே
எங்களுக்கே எங்களுக்கே !

வியாபாரிக்கு இடமில்லை !
வெளியே போடா வெறும் பிள்ளை! "

விண்ணை முட்டின
வீர முழக்கங்கள் !
கொடிகளை ஏற்றுகிறார்கள் !
கொண்டாட்டம் போடுகிறார்கள் !

வருகிறான் வெள்ளைத்துரை -
வெறிகொண்ட ஊளையுடன் !

"கொடிகளை கீழே விடச்
சொல்லுங்கள் ! -
இல்லையேல் அவர்களைக்
கொல்லுங்கள் !!

அவனோடு வந்த
அடிமைப்பட்டாளம்
அடித்து நொறுக்குகிறது
அத்தனை பேரையும் !

கும்பிலிக் கூட்டத்தினர்
கொட்டமடிக்கிறார்கள் !
பெண்டிரையும் பெரியோரையும்
சிறுவரையும் கூடச்
சிதறடிக்கிறார்கள் !

கயவர்கள் கம்பினைச் சுழட்ட
கால்கள் பல முறிந்தன !
தடியர்கள் தடிகளை வீசிட
தலைகள் பல உடைந்தன !

இளைஞர் கூட்டம்
இடிக்கவில்லை ! - வெள்ளைத்
துரையைத் திருப்பி
அடிக்கவில்லை !
ஆங்கிலேயனை
மதிக்கவில்லை ! - அன்னைக்
கொடியை சிறிதும்
மடிக்கவில்லை !

அஞ்சாமல் எதிர்கொண்டனர்
அவர்கள் !

எம் உயிரே போனாலும்
எதிரிகளிடம் தரமாட்டோம்
என்றபடி
ஏந்தியிருந்தனர் கொடிகளையே !

கெட்டவர்களின் கோபம்
கட்டுக்கடங்கவில்லை !

"தலை மேலே தடியால் அடியுங்கள் !
தடுப்போரின்
தலைகளையே கிள்ளி எறியுங்கள் !"
ஆவேசமாய் உத்தரவிடுகிறான்
ஆங்கிலேயத் துரை !

முதலிலே நிற்கும் - நம்
இளைஞனின்
முதுகிலே விழுகிறது முதல் அடி !
ஒரு வெள்ளை மிருகம் அவன்
கைகளை உடைக்கிறது ..
மற்றொன்று அவன் கால்களை !

இளைஞன் சிறிதும் அழவில்லை !
இங்குமங்கும் விழவில்லை !
பிடியைச் சற்றும் விடவுமில்லை
கொடியும் கீழே விழவுமில்லை !

உச்சத்தில் வெறியேற
ஒரு வெள்ளை விலங்கு
அவன் தலையிலே
தடியினால் பலம் கொண்டு
தாக்குகிறது!

தடையேதும் இல்லாததால்
தலை கீழே சாய்கிறது !

உயிர்போகும் நேரத்திலே கூட
அவன் உதடுகள் உச்சரித்தது -

" வந்தே மாதரம் ! வந்தே மாதரம்!
வந்தே மாதரம் ! வந்தே மாதரம் ! "

அவனல்லவோ மனிதன் !
அவனல்லவோ வீரன் !
அவனல்லவோ இளைஞன் !
அவனல்லவோ இந்தியன் !
அவனல்லவோ குமரன் !
திருப்பூரின் குமரன் !
தேசபக்தியின் சிகரம் !

அவனுடைய பக்தியிலே
ஆயிரத்தில் ஒரு பங்கேனும்
நம்மிடம் இருந்தால் போதும்
நம் நாடு பிழைக்கும்;
நல்லோர் நினைவுகள் தழைக்கும் !
ஜெய்ஹிந்த் !

- ஈ ரா

3 comments:

mariselvam said...

Good now people are do the same things in the before freedom.

M Arunachalam said...

ராம்ஸ் அவர்களே,

மிக நல்ல கவிதை - மிக நல்ல விஷயம் - மிக அழகான முறையில் பதிவு செய்து படிப்பவர்கள் அனைவரையும் ஒரு நிமிடமாவது சிந்திக்க செய்து விட்டீர்கள்.

Hats Off to You.

அன்புடன் அருண்

snkm said...

சுதந்திரம் எவ்வாறு பெற்றோம் என்பதை புரிந்து கொள்ள இந்த கவிதைகள் உதவும்.!

Post a Comment