Tuesday, August 11, 2009

சும்மாவா கிடைத்தது சுதந்திரம்?(பகுதி 2)

















இன்னோர் இடம் !

அங்கே ஓர்
தனவந்தர் ....
குணவந்தரும் கூட !

அவருக்குச் சொந்தமாய்
உண்டு
அலை ஏறும் கப்பல்கள்
ரெண்டு !

அவரால் அன்னியர்க்கு
மிக நட்டம் !
அதனால் போட்டார்கள்
ஒரு திட்டம் !

சேர்ந்து வியாபாரம் செய்ய
பேரம் பேசினர் !
அவரோ
தேய்ந்து போயினும்
தீவழி மறுத்தனர் !

அந்நியருடன்
வாணிபமும் செய்வதற்கில்லை
அற வழியிலிருந்து
அணு அளவும் நகர்வதுமில்லை என
சூளுரைத்தார் சொக்கத்தங்கம் !

கூடியது உதவாக்கரை
கோர்ட்டு !
இந்த தமிழனுக்கு
என்ன நெஞ்சழுத்தம் !
நமக்குப் போட்டியாக
இவன் கப்பல் விடுவதா ?

"அடையுங்கள் சிறையில் ! - அவன்
மனம் திருந்தும் வரையில் ! "
என்று கர்ஜிக்கிறான்
பரங்கி அநீதிபதி!

நம் தமிழரோ துவளவில்லை!
தீர்ப்பு கேட்டு அழுகவில்லை !
சிரித்துக் கொண்டே
சென்றார் சிறைக்கு - சின்னஞ்
சிறிய அறைக்கு !

கோடானு கோடி சொத்துக்களின்
கோமான் -
சீமையிலே கப்பல் விட்ட
சீமான் -
சிறையிலே கிடந்தார் ! - இருட்டு
அறையிலே இருந்தார்!

அத்துடன் நின்றதா
ஆணவக்காரர்களின் கொட்டம்?
இல்லை ! - இல்லவே இல்லை !
மாடு இழுக்கும்
செக்கைப் பார்த்தார்கள்!
இதை
மனிதன் இழுத்தால் என்ன என்று
மனதிலே நினைத்தார்கள்!

கூப்பிடு அவனை என்றார்கள் !
குனிந்து நிற்கச் சொன்னார்கள் !
நெஞ்சிலே உரத்துடன்
நின்றார் நம் தமிழர்!

மாணிக்கம் போன்ற மேதையை
மாடு போலப் பூட்டினார்கள்!
கப்பலோட்டிய கனவானைச்
செக்கிலேற்றிச் சிரித்தார்கள் !

ஐயகோ !
சிங்கம் நிகர் சிதம்பரனார்
செக்கினை இழுத்தார்!
அந்தக் காட்சி -
செக்குக்கே பொறுக்காமல்
கண்ணீரை விட்டது - எண்ணெயாக !
ஆம்!
கண்ணீரை விட்டது - எண்ணெயாக !

ஐயனே...

நீர் விட்ட மூச்சால்
எமக்கு பேச்சுரிமை கிடைத்தது....
உன் கரங்கள் காப்புக்
காய்ந்ததால்
எம் கரங்கள் எழுதிட உரிமை கிடைத்தது...

வருங்காலம் வாழ்ந்திட
தம் காலத்தையே
அர்ப்பணித்த நும் வாழ்க்கை
ஞாலத்தின் மாணப் பெரிதே!!!!!!!!

.... பகுதி மூன்று விரைவில்

6 comments:

R.Gopi said...

நாங்கள் எல்லோரும் எது எதையோ பற்றி எழுதி கொண்டிருக்க நீங்கள் இங்கு அருமையாக "கொடி காத்த குமரன்" பற்றியும், வ.வு.சி. பற்றியும் எழுதி கொண்டிருக்கிறீர்கள்....

வாழ்த்துக்கள் ஈ.ரா....

வாழ்க கொடி காத்த "திருப்பூர் குமரன்"

செக்கிழுத்த செம்மல் "வ.வு.சிதம்பரனார்"

நன்றி ஈ.ரா....

M Arunachalam said...

ராம்ஸ் அவர்களே,

நல்ல பதிவு.

ஒரு விண்ணப்பம். கவிதை பாதியிலேயே நிறுத்தி விட்டீர்களோ என்பது போன்ற ஒரு தோற்றம். இதனை நல்ல முறையில் முடிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

அன்புடன் அருண்

ஈ ரா said...

நன்றி கோபி மற்றும் அருண்

பகுதி மூன்று இருக்கிறது அருண் சார்...

snkm said...

வருங்காலம் வாழ்ந்திட
தம் காலத்தையே
அர்ப்பணித்த நும் வாழ்க்கை
ஞாலத்தின் மாணப் பெரிதே!!!!!!!!

அருமையான வரிகள்! இவர் போல் இன்னும் எத்தனையோ பேர் செய்த செயல்களால் தான் இன்று பாரதம் தன் எழுச்சியை கண்டு கொண்டு இருக்கிறது!

ராமலக்ஷ்மி said...

//வருங்காலம் வாழ்ந்திட
தம் காலத்தையே
அர்ப்பணித்த நும் வாழ்க்கை
ஞாலத்தின் மாணப் பெரிதே!!!!!!!!//

இப்படி எத்தனையோ பேர் தம் வாழ்வை அர்ப்பணித்து வாங்கித் தந்த சுதந்திரத்தின் அர்த்தத்தை நாம் முழுமையாகப் புரிந்து நடந்திட வேண்டும் என்பதே என் அவா.

என் சுதந்திரதினப் பதிவையும் நேரம் வாய்க்கையில் பாருங்கள்: http://tamilamudam.blogspot.com/2009/08/blog-post_14.html

ஈ ரா said...

நன்றி சகோதரி...

//என் சுதந்திரதினப் பதிவையும் நேரம் வாய்க்கையில் பாருங்கள்: http://tamilamudam.blogspot.com/2009/08/blog-post_14.html//

படித்து பின்னூட்டமிட்டு உங்களின் எண்பத்தைந்தாவது துரத்தி ஆகி விட்டேன்

Post a Comment